privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கலெக்டருக்கு நிர்வாகம் சொல்லித் தந்த மக்கள் !

கலெக்டருக்கு நிர்வாகம் சொல்லித் தந்த மக்கள் !

-

திருச்சி திருவெறும்பூர் பர்மா காலனி, திடீர் நகர் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட மக்களை உள்ளடக்கிய 300 குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள்.

1966-ம் ஆண்டு பர்மா அகதிகளுக்கும், வீடற்ற மக்களுக்கும் அப்போது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு.சொக்கலிங்கத்தால் இடம் வழங்கப்பட்டது. அருகிலுள்ள இடத்தில் வீடற்ற மக்கள் சிலரும் குடியேறி திடீர் நகர் என்று பெயரிட்டுள்ளார்கள். அந்த இடங்களில் தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி மூன்று தலைமுறையாக சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு குடிசையாகவும் ஓட்டு வீடுகளாகவும் கட்டி மக்கள் வசித்துவருகிறார்கள்.

போராடும் மக்கள்கடந்த மாதம் ரயில்வே அதிகாரிகள் சிலர், “இது ரயில்வே இடம். இடித்து அகற்றப் போகிறோம். ஓடிப் போய்விடுங்கள்”, என்று மிரட்டியுள்ளார்கள். தனித் தனியாக இருந்த மக்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழிகாட்டுதலின் பேரில் ரயில்வே துறையை எதிர்கொள்ள திடீர் நகர்-பர்மா காலனி குடியிருப்போர் நலச் சங்கமானார்கள்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உதவியுடன் ஒரு மாத காலம் அலைந்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியும் அந்த இடங்களின் வருவாய்த்துறை ஆவணங்களைப் பெற்றுப் பரிசீலித்தனர். அதன் மூலம், அந்த இடங்கள் 1927 முதல் 1986 வரையில் 35 பேரை கிராம மேனேஜர்களாக கொண்டு கூத்தைப்பார் கிராமத்தின் சொத்தாக இருந்துள்ளது தெரிய வந்தது. அதன் பிறகு அந்த இடத்தை வருவாய்த்துறையிடமிருந்து ரயில்வே பெற்றதாக எந்த ஆவணமும் இல்லை. ஆனாலும் 1987-ம் ஆண்டு யு.டி.ஆர். ஆவணத்தில் அடித்தல் திருத்தல்களுடன் ரயில்வே டிபார்ட்மென்ட் என்று சட்டவிரோதமாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்து மக்களிடம் கூறி அணிதிரட்டினோம்.

முதல் கட்ட போராட்டமாக பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்று தீர்மானித்தோம். 27.05.2013 அன்று காலையில் சுவரொட்டிகளில் போராட்ட அறிவிப்பைக் கண்ட உளவுத்துறை போலீசு, ”என்ன செய்யப்போகறீர்கள்? எதுவாயிருந்தாலும் சொல்லிவிட்டு செய்யுங்கள்”, என்று பதறியது.

காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு 1 கிலோ மீட்டர் தூரத்தில் கூடிய 200-க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி துவங்கி வைக்க, பர்மா காலனி-திடீர் நகர் குடியிருப்போர் நல சங்கச் செயலாளர் சகாயராஜ் தலைமையில் மக்கள் புறப்பட்டனர். ”மாவட்ட ஆட்சியரே, பட்டா வழங்கு”, என்றும் ”தமிழக அரசே, சட்ட விரோதமாக மிரட்டிய ரயில்வே அதிகாரிகளை சிறையில் தள்ளு” என்றும் விண்ணதிரும் முழங்கங்களோடு முன்னேறிய மக்கள் பேரணியை தடுக்க முடியாமல் தவித்தது போலீஸ். ”எங்களிடம் அனுமதி பெறாமல் ஏன் பேரணி செல்கிறீர்கள்?” என்று கேட்ட போலீசிடம்,”கேட்டால் நீங்கள் வழக்கமாக அனுமதி தருவதில்லை. அதனால் நாங்களும் அனுமதி கேட்கப் போவதில்லை”, என்று பதிலளித்துவிட்டு முன்னேறிச் சென்றனர்.

திருச்சி திருவெறும்பூர் பர்மா நகர்கலெக்டர் அலுவலக வாயிலில் நின்ற ஒரு பெண் எஸ்.ஐ, ”உள்ளே சென்று கலெக்டரைப் பார்க்க 4 பேரை மட்டும் தான் அனுமதிப்போம்”, என்று கூறி மக்களைத் தடுத்து நிறுத்தினார். உடனே அனைவரும் கலெக்டரை பார்க்க வேண்டும் என்று தரையில் அமர்ந்து முற்றுகையிட்டார்கள். விடாப்பிடியான போராட்டத்தை கண்ட போலிசார் பணிந்து போனார்கள். கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. கலெக்டரும் விசாரித்து பட்டா வழங்குவதாகவும் மிரட்டிய ரயில்வே துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தங்கள் குறைகளைக் கூறி தீர்த்துக்கொள்ளலாம் என்று நம்பி வந்த மக்களுக்கு கலெக்டர் அலுவலகத்திலேயே குடிக்க தண்ணீர் கூட இல்லை. அதனைக் கண்ட மக்கள் மூத்த வழக்கறிஞர் போஜக்குமார் தலைமையில், ”கலெக்டர் ஆபீஸில் கருப்பு டேங்க் காலியாயிருக்கு”, “மனு கொடுக்க வந்த மக்கள் தொண்டை காய்ஞ்சு கிடக்கு”, என்று முழக்கமிட்டார்கள். அதனைக் கேட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையரை அழைத்து ”மானம் போகுது”, என்று கடுப்படித்தார். அடுத்த ஐந்து நிமிடத்தில் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினார்கள். அதிகாரவர்க்கத்திடம் கெஞ்சிக் கேட்டால் எதுவும் கிடைக்காது, போராட்டம்தான் தீர்வுக்கான வழி என்று அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் புரிந்துகொண்டார்கள்.

மனித உரிமைப் பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் தண்டாயுதபாணி, ”மனு கொடுப்பது மட்டுமே வெற்றியை தந்துவிடாது. இது நம் போராட்டத்தின் முதல் கட்டம். இன்னும் விடாப்பிடியாக நாம் போராட வேண்டும்”, என்று உரையாற்றினார்.

மக்கள் போகும் போது, ”எப்போது தோழர் ரயிலை மறித்து போராடலாம்?”, என்று கேட்டுச் சென்றனர். மக்களுக்கு தங்கள் வலிமை புரிந்துவிட்டது. போராட்டமும் சூடு பிடித்துவிட்டது. அதிகார வர்க்கத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை உணர்ந்துள்ள மக்கள் இந்தக் கோரிக்கையுடன் அமைதியடைவார்களா என்ன?

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி

  1. அதிகாரவர்க்கத்திடம் கெஞ்சிக் கேட்டால் எதுவும் கிடைக்காது, போராட்டம்தான் தீர்வுக்கான வழி………………very true

  2. இந்த தூங்குமூஞ்சி மக்களுக்கு போராட கற்று கொடுங்கள் தோழர்களே. வாழ்த்துக்கள். ஆனால் தேவையானது கிடைக்கப் பெற்றவுடன் அனைவரும் மறுபடியும் சரக்கடிக்கப் போய் விடுவர். (சரக்கு என்று நான் குறிப்பிட்டது டாச்மாக்கில் கிடைப்பதை மட்டுமல்ல). போராட்டத்தின் கடுமையையும் இவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

    • கலெக்டர் ஆபீசில் பொதுமக்களுக்கு தண்ணீர் வைத்து நிர்வகிக்க வேண்டும் என்று போராட்டத்தின் மூலம் சொல்லி தந்தது மக்கள் தானே
      -ஆதி திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க