privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவிதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !

விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !

-

ரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ விவசாயிகளை வாழ்நாள் முழுவதும் தனக்கு அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறது என்பதையும், அதற்கு அரசின் சட்டங்களும், நீதி மன்றங்களும் உறுதுணையாக நிற்கின்றன என்பதையும் விளக்கும் ஒரு வழக்கு அமெரிக்காவில் நடந்துள்ளது.

வெர்னான் போமேன் என்ற அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிக்கும், மான்சாண்டோவிற்கும் இடையிலான வழக்கில் அமெரிக்க உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கு நவீனயுகத்தின் டேவிட் – கோலியாத் வழக்கு என்று வெர்னான் போமேனின் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டது.

பயிர்கள் களைக் கொல்லிகளால் பாதிப்படைவதிலிருந்து தடுப்பதற்காக பாக்டீரியாவின் (Agrobacterium tumefaciens) மரபணுவை உட்செலுத்தி மரபணு மாற்றம் செய்யப்பட்ட “ரவுண்ட்அப் ரெடி (Roundup Ready)” விதைகளை மான்சாண்டோ தயாரித்துள்ளது. மான்சாண்டோ இவ்வகை பயிர் விதைகளுக்கு ‘வடிவுரிமை’ வாங்கிவைத்துள்ளது. மான்சாண்டோவின் விதையை வாங்கும் விவசாயி ஆர்ஆர்-விதையை பயன்படுத்தி உண்டாகும் பயிரிலிருந்து அடுத்த முறை சாகுபடி செய்வதற்காக விதையை சேமித்து வைக்கக்கூடாது, ஒவ்வொரு முறையும் மான்சாண்டோவிடமே விதை வாங்க வேண்டும், என்ற சரத்து அடங்கிய காப்புரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

போமேன்
இண்டியானா விவசாயி வெர்னான் போமேன்

போமேன் 1999-ம் ஆண்டு முதல் மான்சாண்டோவின் தயாரிப்பான ‘ரவுண்ட்அப் ரெடி’ சோயா பீன்ஸ்-ஐ பயிரிட்டு வருகிறார். போமேன் தனது வயலில் வசந்த கால சாகுபடிக்கு மான்சாண்டோவிடமிருந்து வாங்கிய ’ஆர்ஆர் சோயாவை’ பயிரிட்டு, அறுவடைக்கு பின்னர் நிலத்தில் கோதுமை பயிரிட்டுள்ளார். அதன் பின் வருடத்தின் கடைசியில் குளிர்கால சாகுபடிக்கும் சோயாவையே பயிரிட்டுள்ளார். இந்த குளிர்கால சாகுபடியானது மகசூல் குறைவாக அளிக்கக் கூடியதாதலால் அவர் விலை குறைவான விதையை நாடியிருக்கிறார். உள்ளூரில் அவரிடமும் மற்ற விவசாயிகளிடமும் தானியங்களை கொள்முதல் செய்யும் தானிய கிடங்கியில் சோயா விதை வாங்கி அதை பயிரிட்டுள்ளார்.

இதை அறிந்த மான்சாண்டோ, போமேன் தனது வடிவுரிமை ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதாவது தன் விதையை ஒரு முறை பயன்படுத்தி விட்டால் அந்த விவசாயி வாழ்நாள் முழுவதும் தன்னிடமிருந்துதான் விதைகளை வாங்க வேண்டும் என்பது மான்சாண்டோவின் நியாயம். இவ்வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் போமேன், மான்சாண்டோ நிறுவனத்திற்கு 84,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ 45 லட்சம்) அபராதம் கட்டவேண்டும் என்று தீர்ப்பளித்தது. போமென் இத்தீர்ப்பை எதிர்த்து மாநில நீதிமன்றத்தில் (Federal court) மேல்முறையீடு செய்ததில் அங்கும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கை போமேன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை போய் ஒரு எளிய விவசாயி வாதிட முடிவது அமெரிக்க ஜனநாயகத்தின் மாண்பை காட்டுகிறது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், அந்த ஜனநாயகத்தின் சட்டங்கள் யாருக்குத் துணை நிற்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

போமேன் தான் காப்புரிமை ஒப்பந்தத்தை மீறவில்லை என்றும் அறுவடை செய்த தானியத்திலிருந்து விதைக்காக சேமித்து வைக்கவில்லை என்றும், உள்ளூர் தானிய கிடங்கியில் விலை கொடுத்து வாங்கிய பொருளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த தனக்கு முழு உரிமை இருப்பதாக வாதிட்டார். நமது விதைகளை பாதுகாப்போம் (SOS), உணவு பாதுகாப்பு மையம் (CFS)  போன்ற சமூக நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போமேனுக்கு ஆதரவளித்தனர். மான்சாண்டாவுக்கோ மைக்ரோ சாப்ட் உள்ளிட்ட பன்னாட்டு கம்பெனிகளும், தொழில் கூட்டமைப்புகளும் ஆதரவளித்தன.

எலினா ககன்
உச்சநீதிமன்ற நீதிபதி எலினா ககன்

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமோ போமேன் உள்ளூர் தானிய கிடங்கியிலிருந்து வாங்கிய சோயா விதைகளில் ஆர்ஆர் மரபணுக்கள் இருக்கலாம் என்று தெரிந்தே தான் வாங்கியிருக்கிறார் என்றும், இதன் மூலம் மான்சாண்டோவிற்கு தெரிந்தே நஷ்டம் ஏற்படுத்தியதுடன், அதன் வடிவுரிமையை மீறியிருக்கிறார் என்றும் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம்  கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்பை உறுதி செய்து அபராதம் கட்டவேண்டும் என போமேனுக்கு உத்தரவிட்டதன் மூலம் அமெரிக்க சொர்க்கத்தில் ஜனநாயகம் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான ஜனநாயகமே என்று உறுதிசெய்துள்ளது.

இதைப் போல் அமெரிக்காவின் 27 மாநிலங்களில் 410 விவசாயிகள் மற்றும் 56 சிறு வணிக நிறுவனங்களுக்கு எதிராக 142-க்கும் மேற்பட்ட காப்புரிமை மீறல் வழக்குகளை மான்சாண்டோ தொடுத்துள்ளதாக உணவு பாதுகாப்பு மையம் தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. இதில் மான்சாண்டோவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் மாசடைந்த (contaminated) அண்டை வயல் விவசாயிகளும் அடக்கம்.

அதாவது நீங்கள் உங்கள் வயலில் சாதாரண விதைகளை பயிரிட்டுள்ளீர்கள், உங்கள் பக்கத்து வயலின் விவசாயி மான்சாண்டோவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். காற்று, மற்றும் அயல் மகரந்த சேர்க்கையின் காரணமாக உங்கள் பயிர் மான்சாண்டோவின் மரபணுக்களால் மாசடைந்தால் நீங்கள் மான்சாண்டோவின் மீது வழக்கு தொடர முடியாது, மாறாக நீங்கள் காப்புரிமையை மீறியதாக மான்சாண்டோ வழக்கு தொடரும். ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையாக நடக்கும் மறுஉற்பத்தி முறைக்கு உங்களிடம் வடிவுரிமை இல்லை. ஆனால், அதன் விளைவுகளை கட்டுப்படுத்தும் உரிமையை மான்சாண்டோவிடம் சட்டங்கள் வழங்கியிருக்கின்றன.

உற்பத்தியும் மறு உற்பத்தியும் இயற்கையிலேயே நிகழ்பவை. அவை மனித சமூக வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கின்றன. மனித சமூகம் நாகரீகமடைந்ததில் பயிர்களை மறு உற்பத்தி செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டதும், அதை சார்ந்து விவசாயம் வளர்ந்ததும் முக்கிய பங்கு வகித்தன. பாரம்பரியமாக கோடிக்கணக்கான விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வரும் பயிர்களை மறு உற்பத்தி செய்யும் முறைக்கு இதுநாள் வரை யாரும் உரிமை கோரவுமில்லை, கோரவும் முடியாது.

அமெரிக்க உச்சநீதி மன்றம்
அமெரிக்க உச்சநீதி மன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசும் வெர்னான் போமேன்.

மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வடிவுரிமை என்ற பெயரால், உற்பத்திச் சங்கிலியை கட்டுப்படுத்தி விவசாயிகளின் பாரம்பரிய மறு உற்பத்தி உரிமையை மறுப்பதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றன. மனித குலம் அனைத்திற்கும் சொந்தமான அறிவை, வளத்தை கட்டுப்படுத்தி சட்ட நுணுக்கங்களால் பித்தலாட்டம் செய்கின்றன.

“பன்னாட்டு நிறுவனங்கள் எந்த விதையையும் செயற்கையாக உருவாக்கவில்லை. நிலவி வரும் வடிவுரிமை முறைமைகள் பொதுக் களத்தில் உள்ள, வாழ்வுக்கு இன்றியமையாத வளங்களை தனியார் நிறுவனங்கள் உரிமை கொண்டாட வகை செய்வதன் மூலம் மனித குலத்திற்கு கேடு விளைவிக்கின்றன” என்று நமது விதைகளை பாதுகாப்போம் அமைப்பைச் சேர்ந்த டெப்பி பார்க்கர் கூறியிருக்கிறார்.

கூடவே உற்பத்தியை தமது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மான்சாண்டோ செய்யும் தகிடுதத்தங்கள் மக்கள் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பவை. கடந்த ஆண்டு செய்யப்பட்ட சோதனையில் ஆர்ஆர் வகை சோளம் (NK603) கொடுக்கப்பட்ட எலிகளுக்கு புற்று நோய் கட்டிகள் வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க வாந்தியை அப்படியே நகலெடுக்கும் இந்தியாவிலும் இதே மான்சாண்டோ தான் பி.டி. பருத்தியை கொண்டுவந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்து வருவதுடன், விவசாயச் சந்தையில் பி.டி. கத்திரிக்காயை அறிமுகப்படுத்த காத்திருக்கிறது. பி.டி.கத்திரிக்காயை அறிமுகப்படுத்த முனைப்புடன் செயல்பட்ட மன்மோகன் – ஜெய்ராம் ரமேஷ் கும்பல் நாடு முழுவதும் நடந்த போராட்டங்களால் அதை சிறிது காலத்திற்கு தள்ளி வைத்திருப்பதுடன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் ஓராண்டு சிறை, லட்சக்கணக்கில் அபராதம் என சட்டமியற்றி மான்சாண்டோவுக்கு அடியாள் வேலையை செய்துள்ளது.

மான்சாண்டோவுக்கு எதிராக கடந்த மே 25 அன்று உலகம் முழுவதும் 36 நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்ற பேரணி, போராட்டங்கள் நடைபெற்றன. மக்கள் அணிதிரண்டு போராட்டங்களின் மூலம் இந்த கோலியாத்துகளின் அதிகார அமைப்புகளையும் நீதிமன்றங்களையும் நிர்ப்பந்திக்க வேண்டும். அப்படியும் நீதி கிடைக்கவில்லையெனில் கோலியாத்துகளின் தலைகளை –அரசு அமைப்புகளை- வெட்டி எறிவதைத் தவிர வேறு வழியில்லை.

மேலும் படிக்க