privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரசுப் பள்ளியில் வசதிகள் கோரி விவசாயிகள் போராட்டம் !

அரசுப் பள்ளியில் வசதிகள் கோரி விவசாயிகள் போராட்டம் !

-

னியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற அடிப்படையில் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் வசம் ஒப்படைத்து வருகின்ற சூழ்நிலையில், அதன் நெருக்கடியின் காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்களும் போராடிவரும் நிலையில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக தொடர்ந்து மக்களிடம் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் உழைக்கும் மக்களுக்கு சேவை செய்பவர்கள் அல்ல என பிரச்சாரம் செய்துவரும் வேளையில், “ஒவ்வொரு கிராமத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளை கட்டுவோம்” “அடிப்படை வசதிகளை பெறுவது முதல் விலை நிர்ணயிக்கும் உரிமை வரை தீர்மானிக்கும் அதிகாரத்தை எட்டுவோம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவெண்ணெய் நல்லூர் வட்டாரம் முழுக்க பிரச்சாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக

1. திருவெண்ணெய் நல்லூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் செயல்படுகின்ற ஆரம்ப பள்ளிகளை அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட பள்ளிகளாக மாற்றுவோம்.

2. இருவேல்பட்டு கிராமத்தில் செயல்படுகின்ற மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் சேவை செய்கின்ற அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவோம்.

3. விவசாயத்திற்கும், வீட்டு உபயோகத்திற்கும் தடையற்ற மின்சாரத்தை தர நிர்ப்பந்திப்போம்.

4. ஊரக வேலை வாய்ப்பை நமது வட்டாரத்தின் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் மாற்றுவோம்.

5. பெண்ணையாற்றில் நடக்கும் தண்ணீர் மற்றும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம்.

என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் முதல் கட்டமாக அரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் வகையில் வட்டாரத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமத் தொடக்கப்பள்ளிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பொய்கை அரசூர் கிராமத்தில் செயல்படுகின்ற தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை, குடிநீர் இல்லை, கழிப்பறை இல்லை, ஐந்து வகுப்புக்கும் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இருந்ததை கண்டறிந்து 10.06.2013 திங்களன்று விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக பள்ளி தொடங்கும் நாள் அன்றே முற்றுகை இடுவது என முடிவு செய்து அக்கிராமம் முழுவதும் ஒரு வீடு விடாமல் பள்ளி நிலையை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நமது தோழர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து ‘அடிப்படை வசதிகள் ஏதுமற்ற பள்ளிக்கூடத்தை முற்றுகை இடுவோம்’ என்ற தலைப்பில் செங்கொடி மற்றும் முழக்க அட்டைகளோடு, கோரிக்கை அடங்கிய பானரை பிடித்துகொண்டு பள்ளியை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டுக் கொண்டு, பறை ஓசையுடன் சென்று முற்றுகை இட்டோம். பள்ளிக்குள் நுழைய முயன்ற ஆசிரியர்களை பெற்றோர்கள், குழந்தைகள், ஊர்மக்கள் நமது தோழர்களோடு இணைந்து, தடுத்து நிறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அப்பொழுது ஆசிரியர்கள் ‘எங்களை பள்ளியை நடத்த விடுங்கள்’ என கெஞ்சினர். நமது தோழர்களோ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வரட்டும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என விவாதித்து கொண்டு இருக்கும்போதே எப்படியோ மோப்பம் பிடித்துகொண்ட காவல்துறையினர் வந்தனர். அவர்கள் நம் தோழர்களிடம் ‘ஏன் போராட்டம் நடத்தப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை, அப்படி தெரிவித்திருந்தால் கோரிக்கைகள் நிறைவேற நாங்களே அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்போம்’ என நைச்சியமாக பேசத்தொடங்கினர்.

அதை புரிந்து கொண்ட, பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நமது தோழர், ‘கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பள்ளி இப்படி சீரழிந்து கிடப்பதை ஊர் சார்பாகவும், கிராமசபை தீர்மானத்தின் மூலமாகவும் பலமுறை கொடுக்கப்பட்ட மனுக்கள் அதிகாரிகளின் குப்பைதொட்டியில் தான் நிரம்பின அதனால் எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை’ என்று பதில் சொன்னதும் உடனே கோபம் கொண்ட காவல் ஆய்வாளர், ‘விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் கலவரம் காரணமாக போடப்பட்ட 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது நீங்கள் இப்படி போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது’ என மிரட்ட முயற்சித்தார். ‘இந்த தடை உத்தரவு மாணவர்களின் அத்தியாவசியமான கல்வி உரிமைகளுக்கு பொருந்தாது’ என நமது தோழர்கள் வாதிட்டதும் சூடுபட்ட பூனைபோல் வாலை சுருட்டிகொண்ட போலீசு அதிகாரி மீண்டும் நமது தோழர்களிடம், ‘நீங்கள் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்’ என சட்டம் பேச ஆரம்பித்தார்.

நமது தோழர்களோ அதிகாரிகளின் மிரட்டல் பேச்சுக்கு பணிந்து போகாமல் ‘உங்கள் சட்டத்தை நீங்கள் நடைமுறை படுத்துங்கள் அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்’ என வாக்கு வாதத்தில் ஈடு பட்டுகொண்டிருக்கும்போதே, மாவட்ட கல்வி உதவி அதிகாரி வந்தார். அவரும் நமது தோழர்களிடம் ‘உங்கள் கோரிக்கையை மனுவாக கொடுங்கள் நாங்கள் எங்கள் மேல் அதிகாரிகளுக்கு கொண்டு செல்கிறோம்’ என்றார். நமது தோழர்களோ அதை மறுத்து ‘எங்களுடைய கோரிக்கையை உடனடியாக செய்து தரக்கூடிய அதிகாரம் கொண்ட குறைந்த பட்சம் ஊராட்சி ஆணையராவது வர வேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது’ என்று கூறி போராட்டம் தொடர்ந்தனர். சற்று நேரத்தில் ஆணையரும், விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரியும் அடித்து, பிடித்து கொண்டு வந்து சேர்ந்தனர். அதிகாரிகள் நமது தோழர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததின் பேரில் குறைந்த பட்ச திட்டம் நிறைவேறும் என்ற நிலைமையில், பள்ளியை திறக்க மக்கள் ஒப்புதலுடன் தோழர்கள் அனுமதித்தனர்.

பேச்சு வார்த்தையின் முடிவில் தண்ணீர் மற்றும் கழிப்பறையை இன்றைக்கே சரிசெய்வதென்றும், சுற்றுச்சுவரை இந்த மாத இறுதிக்குள் கட்டித் தருவதென்றும் தோழர்கள் மற்றும் ஊர்ப்பொது மக்கள் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக அறிவித்ததன் பேரில் போராட்டம் வெற்றிகரமாக ஒரு முடிவுக்கு வந்தது.

இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் மக்கள் ஆரம்பத்தில் நம்மோடு இணைய தயங்கினாலும், காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வந்ததும் அவர்கள் நம்மோடு நடத்திய வாதங்களும் நமது தோழர்கள் அதை துணிச்சலாக எதிர்கொண்ட விதத்தையும் பார்த்த ஊர்மக்கள் முற்றுகையில் நம்மோடு கலந்து கொண்டனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் ‘எத்தனையோ மனுக்கள், எத்தனையோ அதிகாரிகளை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து கொடுக்கப்பட்டது. அப்போததெல்லாம் நடவடிக்கை எடுக்க முன்வராத அதிகாரிகள் இந்த செவப்பு சட்ட கட்சிகாரங்க பின்னாடி மக்கள் ஒன்னு சேர்ந்ததும் அதிகாரிகள் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடிவருகிறார்கள். இனிமேலும் நம்மோட அடிப்படை தேவைகளுக்கு இதுபோன்ற போரட்டங்களை நடத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும்’ என்று சக மக்களிடம் பேசி கொண்டிருந்தார். சில மக்கள் பேசும்போது ‘நம்ம ஊரில் அஞ்சு வருசம் சேர்மன் பதவியில் இருந்தும் அவர் செய்யமுடியாத விசயத்தை வி.வி.மு காரங்க அஞ்சு மணிநேரத்துல போராடி செய்ஞ்சு குடுத்துட்டாங்க’ என்று பரவலாக பேசினார்கள். மேலும் நமது தோழர்களும் இது போன்ற போர்க்குணமான போராட்டத்தை எடுத்து செல்வதின் மூலம்தான் மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரமுடியும் என்ற நம்பிக்கையோடும், ஊக்கத்தோடும் கலைந்து சென்றனர்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவெண்ணெய் நல்லூர் வட்டாரம், விழுப்புரம் மாவட்டம்.
தொடர்புக்கு : 96555 87276