privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்அரசு பயங்கரவாதத்துக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி !

அரசு பயங்கரவாதத்துக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி !

-

த்தீஸ்கர் மாநிலத்தின் பாசிச பயங்கரவாத குண்டர் படைத் தலைவனாகிய மகேந்திரசிங் கர்மா மாவோயிஸ்டுகளின் கோடையிடித் தாக்குதலில் அழித்தொழிக்கப்பட்டுள்ளான். அவன் மட்டுமின்றி, துணை ராணுவப் படைகளைக் குவித்து பழங்குடியின மக்கள் மீது அரசு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட முன்னாள் உள்துறை அமைச்சரும் மாநில காங்கிரசுத் தலைவருமான நந்தகுமார் பட்டீல் உள்ளிட்டுப் பிரச்சார ஊர்தியில் சென்ற காங்கிரசுக் கட்சியினர் 27 பேர், கடந்த மே 25 அன்று தண்டேவாடா மாவட்டத்தின் வனப்பகுதியில் வழிமறிக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

“மனிதத் தன்மையற்ற கொடூரங்கள், படுகொலைகள், முடிவில்லாத பயங்கரவாதத்தை பஸ்தார் பழங்குடியின மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட சல்வாஜூடும் எனும் பாசிச குண்டர் படையின் தலைவன் எங்களால் அழித்தொழிக்கப்பட்டுள்ளான். ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் சல்வாஜூடும் குண்டர் படையாலும், அரசின் ஆயுதப் படைகளாலும் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே நாங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளோம்” என்று மாவோயிஸ்டு கட்சியின் சத்தீஸ்கர் மாநில தண்டகாரண்யா சிறப்புப் பிராந்தியக் கமிட்டி கடந்த மே26 அன்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.

சல்வாஜூடும் அட்டூழியம்.
தங்களது மண்ணை விட்டு வெளியேற மறுக்கும் பழங்குடியினரின் வீடுகளையும் தானியங்களையும் கொளுத்திய சல்வாஜூடும் குண்டர் படையின் பயங்கரவாத அட்டூழியம்.

2000-வது ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட, கனிம வளங்கள் நிறைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தைச் சூறையாடுவதற்காகவே,‘வளர்ச்சி’ என்ற பெயரில் பழங்குடியின மக்கள் அவர்களின் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் சூறையாடலுக்காக, பழங்குடியினரின் நிலங்களைப் பறித்து அவர்களை நாடோடிகளாக வெளியேற்றினால்தான் இந்த ‘வளர்ச்சி’ சாத்தியப்படும். மாவோயிஸ்டுகளும் பழங்குடியினரும் இந்த ‘வளர்ச்சி’யைத் தடுக்கிறார்கள். எனவேதான் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைகளைக் குவித்து, அவர்கள் மீது “காட்டுவேட்டை” என்ற பெயரில் பயங்கரவாதப் போரை அரசு தொடுத்து வருகிறது.

பழங்குடியின நிலப்பிரபு குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர கர்மா, 1978-இல் வலது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வாகவும், பின்னர் காங்கிரசில் சேர்ந்து 1996-இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதன் பிறகு அன்றைய பிரிக்கப்படாத ம.பி.யில் அஜித் ஜோகி அரசாங்கத்தில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராகவும், சத்தீஸ்கர் மாநிலம் உருவான பிறகு எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவனாகவும் இருந்தவன். 90-களின் இறுதியில் சத்தீஸ்கரில் கனிம வளங்களைச் சூறையாட கார்ப்பரேட் நிறுவனங்கள் களமிறங்கியபோது, அவற்றுக்கு விசுவாச புரோக்கராகச் செயல்பட்டுவந்த இவன், பழங்குடியினரைக் கனிம வளமிக்க அவர்களின் மண்ணிலிருந்து விரட்டியடிப்பதற்காகவே அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவோடும், காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் ஆசியோடும், 2005-இல் சல்வாஜூடும் குண்டர் படையைக் கட்டியமைத்தான். இப்பாசிச பயங்கரவாதக் குண்டர் படையினர் “சிறப்பு காவல் அதிகாரிகள்” என்று சத்தீஸ்கர் அரசால் அங்கீகரிக்கப்பட்டனர்.

சல்வாஜூடும் பயங்கரவாத கொலைகாரப் படையினரால் ஏறத்தாழ பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கோரமாகக் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீயிடப்பட்டுச் சாம்பலாக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டுள்ளனர். 50,000-க்கும் மேலான மக்கள் அவர்களது வாழ்விடங்களிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கட்டாய நிவாரண முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவற்றில், மகேந்திர கர்மா தானே தலைமையேற்று வழிநடத்திய சூறையாடல்களும் அட்டூழியங்களும் ஏராளம். இதனாலேயே இவன் “பஸ்தார் புலி” என்று ஆளும் கும்பலால் அழைக்கப்பட்டான்.

மகேந்திர கர்மா
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவோடும், காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் ஆசியோடும் கட்டியமைக்கப்பட்ட பாசிச பயங்கரவாத சல்வாஜூடும் குண்டர் படைத் தலைவர் மகேந்திர கர்மா.

நந்தினி சுந்தர் முதலான ஜனநாயக சக்திகள் உச்ச நீதிமன்றத்தில் சல்வாஜூடுமின் அட்டூழியங்களுக்கு எதிராக வழக்குகள் தொடுத்த பிறகு, சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் பழங்குடி இளைஞர்களை நக்சல்பாரிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி, சல்வாஜூடும் போன்ற அமைப்புகளைக் கலைக்குமாறு 2011-இல் உத்தவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால் சத்தீஸ்கர் மாநில அரசோ, சத்தீஸ்கர் துணைப்படை, சிறப்புத் துணைப்படை, கோயா கமாண்டோ படை என்று பெயர் மாற்றி அக்குண்டர் படையை இன்றும்கூட நடத்திக் கொண்டு வருகிறது. சல்வாஜூடும் செய் தநூற்றுக்கணக்கான கொலைகள், வழக்குகளாக நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

சத்தீஸ்கரில் கார்ப்பரேட் நலன்களுக்காக ஒரு உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டம் பழங்குடியினருக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை வலியுறுத்தி வழக்குகள் பதிவு செய்ததற்காக சத்தீஸ்கரின் காந்தியவாதியான ஹிமான்சு குமார் தண்டிக்கப்பட்டார். அவரது காந்திய ஆசிரமம் போலீசாரால் பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்டது. கரும் பச்சை நிறத்தில் ஆடைகளை விற்ற வியாபாரிகள் கூட நக்சல்பாரிகளுக்குச் சீருடை கொடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செயப்பட்டார்கள். சத்தீஸ்கரில் நிலவும் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய குற்றத்திற்காக பிரபல மருத்துவர் பினாயக் சென் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார். இந்த ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பும் பக்தியும் கொண்டுள்ள வலது கம்யூனிஸ்டு கட்சியினரே மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சத்தீஸ்கரில் சிறையிடப்பட்டுள்ளார்கள். வலது கம்யூனிஸ்டு தலைவர்களான பரதன், ராஜா போன்றோர் ஜனநாயக முறைப்படி பலமுறை கண்டனம் தெரிவித்தும், நீதி மன்றங்களில் மனு செய்தும் கூட அவர்களை சத்தீஸ்கர் அரசு விடுவிக்கவில்லை.

கடந்த 2011-ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் தொடரும் போலீசு அட்டூழியங்களைப் பற்றிய உண்மையைக் கண்டறியச் சென்ற மனித உரிமை ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ் சல்வாஜூடும் குண்டர்களால் தாக்கப்பட்டார். அது பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சத்தீஸ்கர் சென்ற மையப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது சத்தீஸ்கர் துணைப்படை என்று பெயர் மாற்றப்பட்டுள்ள சல்வாஜூடும் குண்டர் படையானது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இனி போதிய பாதுகாப்பு இல்லாமல் தாங்கள் விசாரணைக்குச் செல்ல இயலாது என்று மையப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இல்லாமல், மையப் புலனாய்வுத் துறை அதிகாரிகளே நடமாட முடியாத சத்தீஸ்கர் மாநிலத்தில் சாமானிய பழங்குடியின மக்களுக்கு எத்தகைய உரிமையும் நீதியும் கிடைக்கும் என்பதைச் சோல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில், அரசுத் தலைவரும், பிரதமரும், சோனியாவும், சத்தீஸ்கர் முதல்வரும் இதர அமைச்சர்களும் அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான மாவோயிஸ்டுகளின் பதிலடியை “ஜனநாயகத்தின் மீதான கொடிய தாக்குதல்” என்கின்றனர். கடந்த மே 17 அன்று பிஜாப்பூர் மாவட்டத்திலுள்ள எட்சமேட்டா கிராமத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்டு எட்டு அப்பாவி பழங்குடியினர் போலீசாராலும் துணை ராணுவப் படையினராலும் கோரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, அப்போது ஜனநாயகத்தைப் பற்றி இவர்கள் வாய் திறக்கவில்லையே, அது ஏன்? கடந்த ஜனவரி 20 முதல் 23 வரை அதே பிஜாப்பூர் மாவட்டத்தின் டோட்டி தும்னார், பிடியா ஆகிய கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளையும் பள்ளிக்கூடத்தையும் போலீசும் துணை ராணுவப் படைகளும் தீயிட்டுக் கொளுத்திய போது, அங்கே இவர்கள் கூறும் ஜனநாயகம் பூத்துக் குலுங்கியதா? சத்தீஸ்கரில் தொடரும் போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன்வந்த மாவோயிஸ்டு தலைவரான தோழர் ஆசாத்தை காட்டிலேயே வைத்து இந்திய அரசு சுட்டுக் கொன்றதே, இதுதான் ஜனநாயக மரபா?

அரசு பயங்கரவாதத்தையே ஜனநாயகமாகச் சித்தரிக்கும் ஆளும் கும்பலும் ஊடகங்களும் சத்தீஸ்கரில் முன்னைவிட மூர்க்கமாகத் தாக்குதலை ஏவிப் போராடும் மக்களையும் மாவோயிஸ்டுகளையும் ஒடுக்கத் துடிக்கின்றன. ஆனால், அரசு பயங்கரவாதம் சத்தீஸ்கரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய சிவப்பு பயங்கரவாதம் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும்.

– மனோகரன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________