Wednesday, February 21, 2024
முகப்புஉலகம்அமெரிக்காயார் இந்த ஸ்னோடன் ?

யார் இந்த ஸ்னோடன் ?

-

மெரிக்க அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அம்பலப்படுத்தல்களுக்கு காரணமானவரான எட்வர்ட் ஸ்னோடன் பெரும்பாலானோர் பொறாமைப்படும் வேலையில் இருந்தார். அமெரிக்க மத்திய அரசு வேலை, கணினி துறையில் வித்தகர், $2,00,000 (சுமார் ரூ 1.2 கோடி) சம்பளம், ஹவாயில் அவரது துணைவியுடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக வீடு என்று அமெரிக்க கனவை நனவாக்கிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் ஸ்னோடன்.

ஆனால், தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையில் ஒரு கெட்ட கனவு என்பதை பல ஆண்டுகளாகவே அவர் உணர ஆரம்பித்திருந்தார். உலகெங்கிலும் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் இணைய சுதந்திரத்தையும் மறுக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனது வசதியான வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்து அமெரிக்க அரசமைப்பை அம்பலப்படுத்த முடிவு செய்தார்.

அமெரிக்க சிறப்பு ராணுவப் படைகள்
அமெரிக்க சிறப்பு ராணுவப் படைகள்

29 வயதான ஸ்னோடன் வட கேரலினாவின் எலிசபத் நகரத்தில், 1983-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி பிறந்தவர். அவரது குடும்பம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைமையகம் இருக்கும் மேரிலாண்டுக்கு இடம் பெயர்ந்தது. உயர் நிலைப்பள்ளி பட்டயம் பெறுவதற்காக மேரிலாண்ட் சமூகக் கல்லூரியில் கணினித் துறை வகுப்புகளில் கலந்து கொண்டார். ஆனால், அவர் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.

2003-ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து சிறப்புப் படைகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு அனுப்பப்பட்டார். ஈராக்கில் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்வதில் தானும் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், போர் பற்றிய அவரது நம்பிக்கைகள் விரைவிலேயே சிதறடிக்கப்பட்டன. அவருக்கு பயிற்சி அளித்த ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலானோர் யாருக்கும் உதவுவதை விட ஈராக் மக்களை கொல்வதைப் பற்றியே ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

ஒரு விபத்தில் இரண்டு கால்களும் முறியவே, இராணுவத்திலிருந்து விலகினார். மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய பிரிவு ஒன்றில் பாதுகாவலராக வேலை கிடைத்தது. அங்கிருந்து சிஐஏவின் தகவல் தொடர்பு பாதுகாப்புத் துறையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்.

இணையம் பற்றிய அறிவும், மென்பொருள் உருவாக்கலில் இருந்த திறமையும் பள்ளி இறுதி வகுப்பைக் கூட முடித்திராத அவர் வெகு வேகமாக முன்னேற உதவின. 2007-ம் ஆண்டு சிஐஏ அவரை தூதரக ஊழியர் வேடத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவுக்கு அனுப்பியது. கணினி இணைய பாதுகாப்பிற்கான பொறுப்பில் இருந்த அவர் பல வகைப்பட்ட ரகசிய ஆவணங்களை பார்க்க முடிந்தது. அதன் மூலம் கிடைத்த விபரங்களும் கிட்டத்த 3 ஆண்டுகள் சிஐஏ அதிகாரிகளுடன் வேலை செய்த அனுபவமும், நடப்பவற்றின் நியாயத்தைப் பற்றிய கேள்விகளை அவர் மனதில் எழுப்பின.

அமெரிக்க உளவுத் துறையின் வேவு பார்க்கும் அறை
அமெரிக்க உளவுத் துறையின் வேவு பார்க்கும் அறை

ஒரு ஸ்விஸ் வங்கி அதிகாரியை குடிக்க வைத்து, குடிபோதையில் வண்டி ஓட்ட வைத்து, அவர் போலீசில் சிக்கியதும் அவருக்கு உதவுவதாக முன் வந்த ரகசிய உளவாளி மூலம் அவரை தமது நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது சிஐஏ. இது போன்ற பல நிகழ்வுகள் ஸ்னோடனை சோர்ந்து போக வைத்தன. அமெரிக்க அரசு அமைப்பு பற்றிய அவரது அடிப்படை நம்பிக்கைகள் சிதைந்து போயின. நல்லதை விட பல மடங்கு கெட்டது செய்யும் அமைப்பில் தான் பங்கேற்பதை அவர் புரிந்து கொண்டார். இந்த உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்தார்.

2008-ம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஓரளவு நம்பிக்கையூட்டியது. ஒபாமா நிர்வாகத்தில் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு சீர்திருத்தப்படும் என்று நம்பினார்.

2009-ம் ஆண்டு சிஐஏவை விட்டு விலகி ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள இராணுவ தளத்தில் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரிவில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். பூஸ் அலன், டெல் போன்ற நிறுவனங்களின் ஊழியராக தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பணி செய்தார். மாற்றப்படும் என்று அவர் நம்பிய கொள்கைகள் ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்வதை பார்த்து அவர் பெரிதும் ஏமாற்றமடைந்தார். மனித குல வரலாற்றிலேயே மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று அவர் கருதிய இணையத்தின் மதிப்பையும், அடிப்படை உரிமைகளையும் அமெரிக்க அரசின் வேவு பார்த்தல் அழித்து வருவதை உணர ஆரம்பித்தார்.

மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவரது உறுதி வளர்ந்தது. தவறுகள் நடப்பதைப் பார்க்கும் போது, “வேறு யாராவது வந்து நிலைமையை சரி செய்வார்கள் என்று காத்திருக்க முடியாது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தலைவர்கள் வருவார்கள் என்று காத்திருக்க முடியாது. நாமே செயல்படுவதுதான் தலைமைப் பண்பு” என்று புரிந்து கொண்டதாக கூறுகிறார் ஸ்னோடன். அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் வேவு பார்க்கும் நடவடிக்கைகள் எவ்வளவு விரிவானவை, அனைத்தும் தழுவியவை என்பதை புரிந்து கொண்டார். உலகில் நடக்கும் ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு செயல்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.

உடா கணினி மையம்
உடாவில் உள்ள அமெரிக்க உளவுத் துறை கணினி மையம்

அமெரிக்க உளவுத் துறை உலகெங்கிலும் உள்ள பொது மக்களை வேவு பார்ப்பது தொடர்பான ஆவணங்களை பத்திரிகைகளுக்கு வெளியிட அவர் முடிவு செய்தார். தனது நடவடிக்கைகளுக்காக தான் துன்புறுத்தப்படலாம் என்று அவருக்கு தெரிந்திருந்தது. ஆனால், தான் பெரிதும் நேசிக்கும் இந்த உலகை ஆண்டு கொண்டிருக்கும் ரகசிய சட்டங்கள், தடுத்து நிறுத்த முடியாத நிர்வாக அதிகாரம் போன்றவை சிறிதளவாவது அம்பலப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

“பணத்தை விட முக்கியமான பல விஷயங்கள் உள்ளன. எனக்கு பணத்தாசை இருந்தால் இந்த ஆவணங்களை பல நாடுகளுக்கு விற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணத்தை சம்பாதித்திருக்கலாம். ஆனால், அரசு அளவுக்கு மீறிய அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றின் மீது பொதுமக்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த அமைப்பில் பணி புரியும் என்னைப் போன்றவர்கள் பல வரம்பு மீறல்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதான் தன் நோக்கம்” என்கிறார் அவர்.

“நான் எந்தத் தவறும் செய்ய வில்லை என்று எனக்குத் தெரியும். அதனால், மறைந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், விவாதம் என்னை மையமாக கொண்டு நடக்கக் கூடாது. அமெரிக்க அரசின் செயல்களை மையமாக கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

ஸ்னோடன்
அமெரிக்காவால் வேட்டையாடப்படும் ஸ்னோடன்

இப்போது ஹாங்காங் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஸ்னோடன், யாராவது ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்று தன் அறைக் கதவுகளை தலையணைகளால் பொதிந்து வைக்கிறார். அவரது மடிக்கணினியில் பாஸ்வேர்ட் உள்ளிடும் போது தலையை ஒரு சிவப்புப் போர்வையால் போர்த்திக் கொள்கிறார். அவரது பயங்களுக்கு காரணம் இருக்கிறது. அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க உளவுத் துறையில் வேலை செய்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய, மிக ரகசியமான உளவு அமைப்பான அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் அவரை தேடிக் கொண்டிருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.

தன்னை கைது செய்து அனுப்புமாறு அமெரிக்க அரசு சீன அரசிடம் கேட்கலாம்; அல்லது சீன அரசு அவரை பிடித்து ரகசிய இடத்துக்கு கொண்டு போய் தகவல்களை கறக்க முயற்சிக்கலாம்; அல்லது திடீரென பிடித்துக் கட்டப்பட்டு, விமானத்தில் அமெரிக்காவுக்கு கடத்தப்படலாம். சிஐஏ மூலம் அவர் அழிக்கப்பட்டு விடலாம்; சிஐஏ உளவாளிகளோ, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பிற நாட்டு உளவாளிகளோ அவரை வேட்டையாட வரலாம். அல்லது ஹாங்காங்கின் புகழ்பெற்ற டிரையாட் எனப்படும் மாபியா கும்பல்களுக்கு பணம் கொடுத்து அவரை கொல்ல வைக்கலாம்.

அவரது ஹோட்டல் இருக்கும் அதே சாலையில்தான் ஹாங்காங் சிஐஏ அலுவலகம் (ஹாங்காங் அமெரிக்க தூதரகம்) உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு அமைப்பின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை ஒபாமா அரசு அடக்கி ஒழித்ததை ஏற்கனவே பார்த்திருக்கும் ஸ்னோடன், தான் தெரிந்தே இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார். அவரது குடும்பத்துக்கு இதனால் ஏற்படப் போகும் தொல்லைகளைக் குறித்து எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர் வருந்துகிறார். அதுதான் அவரை தூக்கம் இழக்கச் செய்கிறது.

வரலாறு முழுவதும் சர்வாதிகார, சுரண்டல் அமைப்புகளை கட்டி எழுப்பும் ஆளும் வர்க்கங்களுக்கான சவப்பெட்டி ஸ்னோடன் போன்ற சராசரி மனிதர்களால்தான் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடக்குமுறை சாம்ராஜ்யமும் தம் வீழ்ச்சி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

(இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழில் கிளென் கிரீன்வால்த், ஏவன் மெக்ஆஸ்கில், லாரா போய்ட்ராஸ் எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது)

 1. மனிதாபிமானமும்,மனசாட்சியும் ஒருங்கே அமைந்துவிட்டால் சங்கடந்தான்! அவருக்கு என் வாழ்த்துக்கள்!

 2. எகிப்து புரட்சிக்குப் பின் எல்லா நாடுகளும் கண்கானிப்புகளை தீவிரமாக்கி வருகிறது.இந்திய அரசு பலகோடி பொருள் செலவில் அனைத்து செல்போன்களின் backdoor எனப்படும் முறையில் நமது தகவல்களை சேகரிக்கிறது. Apple blackberry andriod போன்ற எல்லா smartphone களும் அதன் backdoor பற்றிய விவரங்களை கொடுத்தப்பின் தான் அதனை நம்நாட்டில் விற்பனை செய்யமுடியும்.Email encryption ன் private key பற்றிய விவரங்கள் அந்த நிறுவனங்கள் கொடுக்கவிடில் கடும் நடவடிக்கள் எடுக்கப்படும்

  windows operating system பயன்படுத்தும் தூனீசியாவில் அந்த அரசாங்கம் மக்களை வேவுபாக்க வழிசெய்யுமாறு கேட்டு அதன்படி microsoft நிறுவனம் அந்த நாட்டிற்கு வேவு பார்த்த்து..

  நமது இணையத்தில் பிரைவசி, கருத்து உரிமை எதுவும் இல்லை.. அப்படி வேண்டுமானால் linux or openbsd இயங்குதளங்களை பயன்படுத்தலாம்..

  • எல்லா ஆப்பரேட்டிங்க் சிஸ்டமும், எல்லா பிரவுசர்களும்,..அதன் தலைமையங்கள் யூஎஸ்ல் அமைந்துள்ளவை..அவை தயாரிக்கபடும்போதே வேவு பார்ப்பதற்கான சாத்தியகூறுகளுடன் தான் செய்யபடவேண்டும் என்பது கம்பனிகளுக்கு கொடுக்கப்படுள்ள கட்டளை ஆகும்.

   இதற்கு விதிவிலக்கு ஓப்ரா பிரவுசர் மட்டுமெ. ஆப்பரேட்ங் சிஸ்டம், லினிக்ஸ் உட்பட யூஸ்சிற்கு தகவல் தராத ஒஸ் எதும் இருப்பது போல் தெரியவில்லை.

   • தகவல் பாதுகாப்பு மொத்தமும்,..செக்கியூரிட்டி இஸ்யூ என சொல்லப்படும் பல விஷ்யங்கள் இதில் உள்ளன விண்டோஸ் xp காலத்திலேயெ அதாவது 2002-2003 லேயே இதற்கு அடித்தளமிடப்பட்டுவிட்டது..

    யாரும் தகவலை திருட முடியாமல் செய்யவேண்டும் என்றால்..அடிப்படையிலேயே பல மாறுதல்களை செய்து லினிக்ஸை பயர்வால் பயன்படுத்தலாம் ஆனால் அதற்கும் மிகுந்த பொறுமையும், புரொகிராமிங்க் திறமை அவசியம்.

    தனி நபர் முயன்றால் ஆண்டுகணக்கில் கூட நேரம் தேவைப்படும். அரசு ஏஜசிக்கள் முயன்றால் சில மாதங்களில் செய்து முடிக்கலாம்…

    அதிலும் பிரச்சனை என்னவென்றால், பெடோரா லினிக் 6 மாதங்களில் புதிய பதிப்பு வரும். அதற்கும் இதை செய்யவேண்டும். இது ஒரு தொடர்கதை தான்..

   • வினேத்.

    வின்டோஸ், மேக் போன்ற இயக்குதளகங்களின் sourcecode ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும். அதன் செக்குரிட்டி சர்டிபிகேட்டுகள் எல்லா அரசாங்கத்திடம் இருக்கும். அதனை வைத்து அவர்கள் எந்த கணிணியையும் விண்டோஸ் மேக் மென்பொருள்களால் கண்கானிப்புகளை மேற்கொள்ள முடியும்.

    IE safari and opera பிரவுசர்கள் closed source softwares இதன் கோடிங்களை பார்க்க முடியாது..

    Linux and OpenBSD போன்றவை opensource இயக்குதளங்கள் இவற்றின் கோடிங்கள் தனி மக்களால் உருவாக்கப்பட்டவை.
    இதன் செக்குரிட்டி சர்டிபிகேட்டுகள் உங்கள் கணிணியில் மட்டும் உருவாக்கப்படும்.. எந்தவொரு அராசாங்கத்திற்கும் கொடுக்கவேண்டாம்..

    ///யாரும் தகவலை திருட முடியாமல் செய்யவேண்டும் என்றால்..அடிப்படையிலேயே பல மாறுதல்களை செய்து லினிக்ஸை பயர்வால் பயன்படுத்தலாம் ஆனால் அதற்கும் மிகுந்த பொறுமையும், புரொகிராமிங்க் திறமை அவசியம்.தனி நபர் முயன்றால் ஆண்டுகணக்கில் கூட நேரம் தேவைப்படும். அரசு ஏஜசிக்கள் முயன்றால் சில மாதங்களில் செய்து முடிக்கலாம்…///

    நீங்க இன்னும் பழைய காலத்தில் இருக்கிங்க.. ubuntu fedora suse இவற்றில் செக்குரிட்டிகளை எளிதாக உருவாக்கலாம். ஆறு மாதத்திற்கு ஓரு முறை திரும்பத்திரும்ப செய்வது என்பது அபத்தமான ஓன்று..
    ubuntu தனது இயக்குத்தளத்திற்கு 5 வருடம் support கொடுக்கும். அப்படியே cd மூலம் update செய்ய விரும்பினால் ubuntu-alternate iso க்களை பயன்படுத்தலாம்.
    இதற்கு ஓரு மணிக்கு குறைவான நேரமே ஆகும்.

    • //..Linux and OpenBSD போன்றவை opensource இயக்குதளங்கள் இவற்றின் கோடிங்கள் தனி மக்களால் உருவாக்கப்பட்டவை…//

     //..வின்டோஸ், மேக் போன்ற இயக்குதளகங்களின் sourcecode ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும். அதன் செக்குரிட்டி சர்டிபிகேட்டுகள் எல்லா அரசாங்கத்திடம் இருக்கும்…//

     இந்த ஓப்பன் சோர்ஸ், க்ளோசுடு சோர்ஸ் விளையட்டெல்லாம் பொது மக்களுடன் தான். அரசின் உளவு அமைப்புக்கு எல்லா கோடும் ஒன்று தான். உளவுத்துறையின் உத்திரவுக்கு கட்டுபடாத கம்பெனி நடக்க முடியாது எள் என்றால் எண்ணையாக இருன்தால் மடுமே அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

     தமிழக அரசின் லேப்டாப் திட்டம் அறிவிப்பு நிலையில் இருந்தபோது அமரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் அம்மாவை சந்திததை நினைவுபடுத்தவும். லினிக்சுடன் கேமரா, வைபை இருந்த கணினியின் கான்பிகரேசன் குறைக்கப்படு விண்டோஸ் ஒரிஜினல், மற்றும் எம் எஸ் ஆப்பீஸ் ஸ்டூடன்ட் லைசன்ஸ்சுடன் லேப்டாப் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்க..

     இத்தகைய பல செயல்களுக்காக அரசு சொல்வதை கம்பனி செய்ய வேண்டும்.

     இன்னம் காமெடியான ஒரு விஷ்யம் இருந்தது விண்டோஸ் எக்ஸ் பியின் பயர்வால் உள் வரும் கனக்சன்களை மட்டும்தான் கட்டுப்படுத்தும். வெளிச்செல்லும் கனக்சன்களை அல்ல..

     அனைத்து விண்டோஸ் பதிப்பிலும் சப்போர்ட் யூசர் இருக்கும் அது நமது கட்டுப்பட்டில் வராதுக்.. அதை மைகுரோசாப்ட் விரும்பியபடி கையாள்வதில் எந்த தடையும் இல்லை. ுனவே விண்டோஸ் என்பது மைக்ரொசாப்டின் கட்டுபட்டில், மைக்ரோசாப்டோ உளவுத்துறையின் கட்டுப்பட்டில்….

     நேரடியாக கூறினால் மைக்ரோசப்ட், மற்றும் அனைத்து அமரிக்க கம்பனிகளின் சப்வேர் பயன்படுத்துவோர் நேரடியாக அமரிக்க உளவுத்துரையின் கட்டுப்பட்டில் இருக்கின்றனர்.

     //..இதன் செக்குரிட்டி சர்டிபிகேட்டுகள் உங்கள் கணிணியில் மட்டும் உருவாக்கப்படும்.. எந்தவொரு அராசாங்கத்திற்கும் கொடுக்கவேண்டாம்..

     நீங்க இன்னும் பழைய காலத்தில் இருக்கிங்க.. ubuntu fedora suse இவற்றில் செக்குரிட்டிகளை எளிதாக உருவாக்கலாம்…//

     செக்யூரிட்டி சர்ட்டிபிக்கட் என்பது உளவுபார்த்தலை தடுக்க பயன்படாது. அதன் வேலை ஒரு குறிப்பிட்ட சாப்ட்வேர், டிரைவர் அல்லது வெரப்சைட் நம்பகத்தன்மை கொண்டது தான். அதில் வைரஸ் மால்வேர் போன்ற பிரச்சன்னை இருக்க 99% வாய்ப்பு இல்லை. நீங்கள் பயன் படுத்தலாம் என்று வெரிசைன் போன்ற கம்பனிகள் ஆடிட்டிங்க் முடிந்தபிறகு தரும் பத்திரம்.

     தகவல் கசிவை தடுக்க நம்க்கு தேவை பயர்வால். இதிலும் 65500 போர்ட்டுகளையும் கண்கானிக்கும் பயர்வால், அதில் உள்வரும் வெளிச்செல்லும் அனைத்து தகவல் பாக்கெட்டுகளையும் கண்காணித்து நிறுத்த வேண்டும், இதில் ரா போர்ட் எனப்படும் ஏரியா பற்றி யாரும் பேசுவது கூட இல்லை.

     //..ஆறு மாதத்திற்கு ஓரு முறை திரும்பத்திரும்ப செய்வது என்பது அபத்தமான ஓன்று..//

     //..கு 5 வருடம் support கொடுக்கும். அப்படியே cd மூலம் update செய்ய விரும்பினால் ubuntu-alternate iso க்களை பயன்படுத்தலாம்.இதற்கு ஓரு மணிக்கு குறைவான நேரமே ஆகும்..//

     லினிக்ஸ் என்று பார்த்தால் சோர்ஸ் கோடு முழுவதையும் நீங்கள் படித்து திருத்தம் (Customization) செய்ய வேண்டும். லினிக்சின் கெர்னல் கோர் கஸ்டமைசேசன் செய்யப்படுவது முக்கியம்.

     நான் பணிபுரிந்த நிறுவனத்தைல் 2 வருடம் ரீஸ்ட்டர்ர்ட் செய்யாமல் இயங்கிய லினிக்ஸ் சர்வர் என்பது சாதரணம். லினிக்சின் தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது ஆனால், இந்த உளவு தகவல் அனுப்பப்டும் விஷயத்தில் லினிக்சின் தலைமையகமும் அமரிக்காவே. எனவே அவர்களீன் அமைப்பயும் முழுவதும் நம்பிவிட முடியாது.

     அதில் தான் அய்யா பிரச்சனையே… நீங்கள் மேற்சொன்னபடி கேர்னலின் சோர்ஸ் முதலாக அனைத்தயும் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தினால் மிக சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அப்டேட் செய்யுபோது கிடைக்கும் சோர்சில் அவர்களீன் சோர்ஸ் கோடு தான் இருக்கும் . உங்கள் கஸ்டமைசேசன் இருக்காது. எனவே நீங்கள் மறுபடியும் டவுண்லோடு செய்த புதிய வெர்சன் சோர்ஸில் உங்களின் கஸ்டமைசேசனை செய்யவேண்டும்.

     பெடோராவின் பதிப்பு என்பது பிரவரியிலும் செப்டம்பரிலும் ஆறு மாதம் ஒருமுறை தான்.

     • மன்னிக்கவும் நான் ubuntuவை பயன்படுத்துவதால் ஆறு மாதம் என்றதும். பெடொரா நினைவுக்கு வரவில்லை.

      Digital Certificates
      1. Device Drivers
      2. Email Encryption & Signing
      3. Code Sign
      4. Data Encryption

      இந்த Digital Certificates யின் private key ஆனது நம்மிடமும் நமது company and government organization மட்டும் வைத்து இருக்கும். இந்த Certificates களை நாம் உருவாக்க முடியாது. பணம் கொடுத்தால் அவர்கள் தருவார்கள்

      ஆனால் open source and free software foundation மென்பொருள்கள் மூலம் இந்த Certificates களை நாம்மால் மட்டுமே உருவாக்க முடியும். எனவே நமது private key நமக்கு மட்டுமே…

      Security Certificate , Verisign மட்டுமல்ல பல சேவைகள் நிறுவனங்கள் உள்ளது. எனது blackberry Email முகவரிக்கு Comodo certificate S/MIME வைத்துள்ளேன். இதன் private key ஆனது comodo மற்றும் government organization கள் decrypt செய்து படிக்கலாம். மற்ற நிறுவனங்கள் முடியது ஏன் நானே Gmail webmail login செய்தால் கூட..

      ஆனால் மற்ற லினக்ஸ் பயனாளர்களுடன் எனது முகவரிக்கு சொந்தமாக GPG எனப்படும் RSA 4096 முறையில் செந்தமாக email encryption certificate வைத்துள்ளேன். இதன் private key என்னிடம் மட்டும்தான் இருக்கும். எந்தவொரு நிறுவனங்களின் தலையிடு இருக்காது..

      அதைப் போல் ubuntu மற்றும் பிற distroக்களில் truecrpt பயன்படுத்தினால் உங்கள் hardsisk எல்லாம் encrypt செய்யப்படுவதால் நம் தகவல்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் உண்டு.இந்த செட்டிங் எல்லாம் openbsd யில் install செய்யும் போதே செய்துவிடும். நீங்கள் சென்ன raw ports இதில் கிடையாது..

      எல்லாவைகளுக்கும் மேலாக நமது private keyயை தொலைத்தால் நம் டோட்டாவை decrypt பண்ணவே முடியாது.

      நீங்கள் ஓவ்வொரு முறையும் புதிய வெர்சனை அதாவது பெடோரா 13,14,15 என்று பதிவிறக்கம் செய்து..Reinstall செய்வதாக நினைக்கிறேன். System update செய்வதில் இதுவரை customization பிரச்சனைகளை நான் சந்திக்கவில்லை. என்னுடைய ubuntu 12.04,12,10,13.04 என distro update செய்ததில் 12.04 வின் settings களை மட்டுமே குறிப்பாக GPG and Truecrpt certificate களை மாற்றியது இல்லை.. தற்போது 12.10 வை update செய்து 13.04 பயன்படுத்தும்போது ஓரு customize கூட பண்ணவில்லை..

      • //…Reinstall செய்வதாக நினைக்கிறேன். System update செய்வதில் இதுவரை customization பிரச்சனைகளை நான் சந்திக்கவில்லை..//

       ஜீ அவர்களின் கோடை அப்படியே பயன்படுத்தும்பொது நீஙக்ள் சொல்வது சரி.. சிஸ்டம் அப்டேட் பண்ணினால் போதும். பழய கோடிங்கின் ஏற்ப புதிய அப்டேட் இருக்கும், அதை அவர்களே டெஸ்டிங் முடித்து இன்ஸ்டெபிள் வெர்சனிலிலும் செக் செய்து தான் ஸ்டேபில் வெர்சன் தருவார்கள்.

       ஆனால் அவர்களின் கோடை கஸ்டமைஸ் பண்ணி பயன்படுத்தும்போது அப்டேட் செய்யப்பட்டல், புதிய வெர்சனில் அவர்கள் கோடும் பழய வெர்சனின் நமது கோடும் இருக்கும்போது எப்படி வேலை செய்யும் ? ஏனெனில் சிஸ்டம் ஆப்டேட் உதாரணமாக பிளாஸ் பிளேயர் பிளகின் கன்ட்ரோலை கஸ்டமைஸ் செய்திருந்திர்கள் என்றால், அவர்களின் பிரவுசர் கோடை அப்டேட் செய்தால் உங்கள் கஸ்டமைஸ்டு பிளகின் செயல் இழக்க வாய்ப்புண்டு…

       //..இந்த Digital Certificates யின் private key ஆனது நம்மிடமும் நமது company and government organization மட்டும் வைத்து இருக்கும். இந்த Certificates களை நாம் உருவாக்க முடியாது. பணம் கொடுத்தால் அவர்கள் தருவார்கள்..//

       ஹார்ட் டிஸ்க் டேட்டா டீகிர்ப்ட் செய்யபடுவது பற்றி மட்டுமல்ல, ஈமெயில், சாட் போனற எல்லாவற்றாஇயும் ரெக்கர்ட் செய்கிறார்கள். இது தான் இங்கே பிரச்சனை.

       ஒரு சிஸ்டத்தின் மொத்த இன் பவுன்ட், அவுட் பவுண்டு கனக்சன்கள் அனைத்தையுமே சினிப்பர் , வயர் சார்க் போன்ற டூல்களை பயன்படுத்தி பார்க்க முடியும். இதை நானே செய்து இருக்கிறென்.

       சிஸ்டம் வெர்க்கிங்கில் இருக்கும்போது நீங்கள் டீகிரிப்ட் செய்து வைக்கும் டேட்டவை அவர்கள் தேவைப்பட்டால் கையாள முடியும். அதுமட்டுமல்ல அனைத்து இன்கம்மிங்க் அவுட் கோயிங்க் டேட்டகளையும் எடுக்க முடியும்.

       இதை தவிர்க்க தான் லினிக்ஸ் கெர்னல் கோர் முதல் அனைத்து பாக்கேஜ்களயும், நமது கட்டுப்பட்டில் இருப்பது போல் கஸ்டமைஸ் செய்யவேண்டும் என கூறினேன்.

       இப்படி செய்யபடும் கஸ்டமைசேசன் அப்டேடால் மற்றப்படலாம். எனவே ஒவ்வொறு அப்டேலிலும் நம் கஸ்டமைசேசன் இருப்பதை உறுதி செய்தே ஆகவேண்டும்.

       அப்படி செய்தால் மட்டுமே நமது டேட்டாவை யாரும் காப்பிசெய்ய முடியாது என்பதை உறுதிப்படுத்திகொள்ள முடியும்.

 3. // வரலாறு முழுவதும் சர்வாதிகார, சுரண்டல் அமைப்புகளை கட்டி எழுப்பும் ஆளும் வர்க்கங்களுக்கான சவப்பெட்டி ஸ்னோடன் போன்ற சராசரி மனிதர்களால்தான் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடக்குமுறை சாம்ராஜ்யமும் தம் வீழ்ச்சி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. //

  சுரண்டல் அமைப்பு அரசியல் கட்சிகள் மூலம் எப்படி தன்னை தகவமைத்துக் கொள்ளும் என்பதை கார்டியனின் இன்னொரு கட்டுரையில் பாருங்கள்.. :

  http://www.guardian.co.uk/world/2013/jun/10/patriot-act-nsa-surveillance-review

  இப்போது குடியரசுக் கட்சியின் பல செனட்டர்களும் அவர்களே கொண்டுவந்த, வரையறுக்கமுடியாத, வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கும் பேட்ரியாடிக் சட்டத்தை ஒபாமா நிர்வாகம் இன்னும் அளவுக்கு மீறி பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி, அதிருப்தியில் உள்ள அமெரிக்க மக்களின் சுதந்திரத்தை மதிக்கும் காவலர்களாக காட்டிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்..! ஸ்னொடென் உயிருக்குத் துணிந்து என்.எஸ்.ஏ அமெரிக்க மக்களை வேவு பார்ப்பதை அம்பலப்படுத்தினாலும், தற்போது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் ஒபாமா நிர்வாகம் இருக்கிறது.. ஸ்னொடென் தியாகியாக இறந்தால் 2016-ல் ஜனநாயகக் கட்சி மண்ணைக் கவ்வும்..!

  • எல்லா பதிவுலையும் காமெடி பற்றாக்குறையை ஈடு செய்யும் கேன.. சாரி …KK வின் திறமைக்கு ஈடு இணை இல்லை…

 4. கிட்டத்தட்ட இவரைப் போன்று இன்னொருவரும் இருக்கிறார்…

  ஜான் பெர்கின்ஸ்

  “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க