privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் !

65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் !

-

அம்மா சாராயக் கடையை விரட்டியடிக்க
வி.வி.மு. தோழர்கள் தலைமையில சூளகிரி மக்களின் போராட்டம் வெற்றி!

board

சாராயக் கடையோட முதலாளி முதலமைச்சர் அம்மா !
அதை ஊருக்குள்ள கொண்டு போய் நடத்து என்பது நீதிபதி அய்யா !

சாலை விபத்துக்கள் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. அவற்றில் வாகன ஓட்டுனர்கள் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது ஒரு காரணம் என்பது பொது நிலைமை. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் குடிப்பதால்தான் விபத்துக்கள் நடக்கின்றன என்கிற கண்டுப்பிடிப்பையும் அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் சாராயக்கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்கிற தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தின் வாயிலிருந்து வெளிவந்தது.  குடிப்பதற்கு காரணம் டாஸ்மாக் சாராயக் கடைகள் என்றும், டாஸ்மாக் சாராயக் கடைகளையே மூடவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால் அதன் நேர்மையை பாராட்டலாம். ஆனால், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற இடங்களில் மேட்டுக்குடிகளுடன் உட்கார்ந்து சாராயம் குடிக்கும் உயர்’குடிமகன்’களாக நீதிபதிகள் இருப்பதால் குடிமகன்களைவிட குடிகாரர்கள் மீது பாசத்துடன் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதுவும் ஒரு வர்க்க பாசம்தான்! ஏனென்றால், அரசு சாராயக்கடை நடத்தும்போது, அரசு ஊழியர்களிடம் இந்தவகை பாசத்தைத்தான் எதிர்ப்பாக்க முடியும்.

நீதிமன்றத்திற்கு தெரியும், இந்த உத்தரவின் அடுத்தக் கட்டமாக டாஸ்மாக் சாராயக்கடைகள் ஊருக்குள்ளே செல்லும் என்பது. இதனால், குடிகாரர்களுக்கு சாதகமான ஒரு தீர்ப்பைக் கொடுத்து பொதுமக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கின்ற டாஸ்மாக் சாராயக் கடைகளை அருகில் உள்ள ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் வேலையில் தமிழக அரசு இறங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடியுள்ளனர். சில இடங்களில் போலீசு தடியடி நடத்தி மக்களை விரட்டியடித்துள்ளது. சில இடங்களில் மக்கள் போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். டாஸ்மாக் சாராயக் கடைகளை ஊருக்கு வரவிடாமல் தடுத்துமுள்ளனர்.

சூளகிரியில் டாஸ்மாக் சாராயக்கடை !

கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, ஒன்றியத் தலைநகரமான சூளகிரி ஒரு கிராம ஊராட்சி மட்டுமே! 2000 குடும்பங்கள் இருக்கும் இந்த ஊரில் 5 டாஸ்மாக் சாராயக் கடைகள் உள்ளன.  இதில் ஒன்றுதான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடை! நீதிமன்ற உத்தரவின் படி இந்த சாராயக் கடையை அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியான காமராஜர்நகரில் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை ரகசியமாக வைத்து நிறைவேற்றிவிடலாம் என தமிழக அரசும் போலீசும் முடிவு செய்து வைத்துள்ளன. ஆனால், எப்படியும் கடை வாடகைக்குப் பிடிக்க வந்ததால் அது அப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்துவிட்டது.

கோவிந்த ராஜ் வீடு
கோவிந்தராஜ் வீட்டு முன் திரண்ட மக்கள்

ஏற்கனவே, சூளகிரி காமராஜர் நகரில் இருமுறை டாஸ்மாக்  சாராயக் கடையை திறக்க முயற்சித்து அதனை அப்பகுதி வி.வி.மு. தோழர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் சாராயக் கடையை கொண்டுவர இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்னர் அப்பகுதி உழைக்கும் மக்களை வி.வி.மு. தோழர்கள் அணிதிரட்டினர்.

ஆ, சி(றி)யர்… எச்சரிக்கை!

ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசியரான கோவிந்தராஜ் என்பவர் தனது கடையை டாஸ்மாக் சாரயக் கடை கொண்டுவருவதற்காக ஒப்புக்கொண்டிருந்தார். இவரும் இவரது துணைவியாரும் ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்கள். இவரது மகளும் ஆசிரியர். இவரது மருமகன் ஒரு அரசு ஊழியர். இவர்கள்தான் டாஸ்மாக் சாராயக்கடைக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.  ஆம், முன்னாள் சாராய வியாபாரிகள் இன்று ‘கல்விவள்ளல்’களாக வலம் வரும் போது, முன்னாள் ஆசிரியர்கள் மட்டும் சாராயக் கடை நடத்தக்கூடாதா என்ன? தனியார்மயம் தாராளமயம் வந்த பின்னர், கல்வி ஒரு சரக்காகிவிட்ட நிலையில், கல்வி சரக்கை விற்பவர்கள், சாராய சரக்கை விற்பதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்! ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை இரண்டும் சரக்குதான்!

உடற்பயிற்சி ஆசிரியர் கோவிந்தராஜ் வீடுமுன்பு திரண்டிருந்த  மக்கள்

பொதுமக்கள் இவரது வீட்டிற்கு திரண்டு சென்று, “சாராயக் கடை வருவதற்கு அனுமதி கொடுத்துள்ளீர்களே, ஐயா” என்று மரியாதையுடன் கேட்டுள்ளனர். அவரது மனைவியோ, “உங்கள்ல யாருதான் குடிக்காதவங்க? நீங்கள் என்ன யோக்கியமா” என்று கேட்டுள்ளார். அப்பகுதி மக்களில் குடிப்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், அவர்கள் கூட சாராயக் கடை குடியிருக்கும் ஊருக்குள்ள வரக்கூடாது என்று கருதுகின்றனர். காரணம் சாராயம் குடிப்பது என்பது வேறு, கடை திறப்பது வேறு! ஏனென்றால், குடிப்பது என்பது அவர்களோடு முடிந்துவிடும். கடை திறப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

இந்திய ஜனநாயகம் என்பது ‘மனு’ தர்மம் !

சாராயக் கடை திறப்பதை எதிர்த்து போலீசில் சென்று மனு கொடுத்தனர். இப்பகுதியில் இருக்கும் ஓட்டுக் கட்சி பிரமுகர்கள் அனைவரும் இந்த மனுவில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர். அவ்வாறு போடும் போது, “என்ன செஞ்சாலும் முருகேசா, ஒண்ணும் நடக்காது. நாங்க வண்டி வண்டியா ஆளுங்கள அலைச்சிக்கிட்டு போயி கலெக்டர்கிட்ட மனு கொடுத்துவிட்டு வந்தோம்” என்றனர்.  போலீசிடம் சென்று மனு கொடுக்கும் போதோ மிரட்டல் மட்டும்தான் மிஞ்சியது.

குடும்பத்துடன்
குடும்பத்துடன் கலந்துக்கொண்டு போராடும் மக்கள்

போலீசுகாரர் ஒருவர், “இங்க பாரு, போலீசு ஸ்டேசன் பக்கத்துல கடை வரக்கூடாதுன்னு நாங்களும்தான் பேசிப்பார்த்தோம், ஆனால், எங்களாலேயே தடுக்க முடியல” என்று கூறியுள்ளார். மக்கள் அடக்கமாக சிரித்துக்கொண்டனர். “நீங்கள் போராட்டம் என்று ஏதாவது செய்தால், உங்களை கைது  செய்வோம்!” என்று மிரட்டியுள்ளார்.  “மனு கொடுப்பதாக இருந்தால் கலெக்டரிடம் சென்று கொடு” என்றார் போலீசுகாரர். “கலெக்டரிடம் மனு கொடுத்தாலும் பி.டி.வோ.விடம் மனு கொடுத்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் வருவதில்லை, போராட்டம் செய்யாதே  என்று சொல்லி, நீங்கள் தானே வர்றீங்க, வந்து விரட்டுறீங்க. அதுதான் உங்களிடம் முதலில் தெரிவித்துவிட்டோம்” என்று பதிலளித்துள்ளனர்.

“என்ன ஐயாகிட்டயே  எதுத்து பேசுறீயா?” என்று அதிகாரத்தைக் காட்டியுள்ளார் மற்றொரு போலீசுகாரர். மேலும், “கடையை காட்டுக்குள்ளவா தொறக்குமுடியும், ஊருக்குள்ள தொறந்தாதான் வியாபாரம் நடக்கும்” என்று தன் உண்மை முகத்தை காட்டியுள்ளார். “ஆமாம், முன்பெல்லாம் காட்டுல சாராயத்தை விற்றாலே கைது செய்யவீங்க, இப்ப  ஊருக்குள்ள விற்காதே என்று நாங்க சொன்னா நீங்க கைது செய்வேன்னு மிரட்டுறீங்க” என்று பொதுமக்களில் ஒருவர் கேட்க பிரச்சனையின் திசையை மாற்றினார் போலீசுகாரர்.

தினகரன்
தினகரன் செய்தி

ஏப்ரல் 1-ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் என்பார்கள்.  ஆனால், சூளகிரி மக்கள் தங்களது முட்டாள்தனத்தை கைவிட்டதினமும் இந்த நாள்தான். ஏனென்றால், மனு கொடுத்துவிட்டு வந்த இரு நாட்களுக்குப் பின்னர், தாசில்தார் நேரில் விசாரணைக்கு வந்தார். கலெக்டரிடம் மனு கொடுத்தது யார் என்று அழைத்தார். தோழர்.முருகேசன் குடும்பத்துடன் சென்று தாசில்தார் முன்னால் நின்றார். உடனே அவரிடம் ஒரு மனுகொடுக்க சிலர் கூறியதால், கலெக்டரிடம் கொடுத்த மனுவின் நகலை அவரிடமும் கொடுத்தனர். தாசில்தார் விசாரணைக்கு வந்ததைப் பார்த்தவுடன், இதெல்லாம் மனுவின் பவர் என்று மக்களில் சிலர் பேசிக்கொண்டனர். தாசில்தாரோ, தனது திருவாயைத் திறந்து சொன்ன முதல் வார்த்தையே, “இந்த  இடத்தில் ஒன்னும் பிரச்சனையில்லையே, டாஸ்மாக் திறக்கலாமே என்பதுதான்!” இதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டனர் மக்கள். அரசின் அங்கமெல்லாம் டாஸ்மாக் மயமாகியிருப்பதாக உணர்ந்து கொண்டனர் போலும்.

இத்துடன் நின்றுவிடவில்லை. “ஸ்கூல் அங்கதானே இருக்கு, இங்க எங்க ஸ்கூல் இருக்கு என்று கேட்டார்” ஆர்.ஐ. “பள்ளிக்கூட பசங்க எல்லாம் பிளேன்ல பறந்தா போவாங்க” என்று திருப்பிக் கேட்கத் தொடங்கினர். உடனே டாஸ்மாக் மாவட்ட மேனேஜர், “இந்த இடத்தில வேணாம்னா வேற இடத்தைக் காட்டு” என்று கேட்டார். பொதுமக்களில் மற்றொருவரோ, “இந்தக் கண்ணுல குத்தாதே என்று சொன்னால், அந்தக் கண்ணக் காட்டு என்று கேட்கிறாயே” என்று சீறினார்.

இத்துடன் விவாதம் தொடர அரசு அதிகார வர்க்கம் இடத்தை காலிசெய்து கொண்டது.  டாஸ்மாக் சாராயக் கடையை இந்த இடத்தில் கொண்டுவருவதில் அதிகாரிகள் உறுதியாக இருப்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை என்பது உணர்ந்து கொண்டனர்.

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அரசிடம் சொல்வார்கள் !
அரசே பிரச்சனை என்றால், போராடித்தான் தீர்க்க முடியும் !

இரவுக் காவல்
இரவெல்லாம் கடை முன்பே முகாமிட்டிருக்கும் மக்கள்

அதிகாரிகள் சென்றவுடன் மக்கள் அவர்களுக்குள் ஆவேசமாக பேசிக்கொண்டனர். இனி எவனையும் நம்பமுடியாது. எந்த அதிகாரியாவது கடையைத் திறக்க வந்தா அடிச்சே விரட்டனும் என்று குமுறலை வெளிப்படுத்தினர். அதிகாரிகள் பேசிவிட்டு சென்றதை பார்த்தவுடன் இனி எந்த நேரமும் இவர்கள் வந்து கடையைத் திறப்பார்கள் என்று புரிந்து கொண்டனர். இரவோடு இரவாக வந்து கடையை திறந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டனர். வி.வி.மு.வின் வழிகாட்டுதல் படி எல்லோரும் குடும்பத்துடன் டாஸ்மாக் கடை வரவிடாமல் தடுக்க அந்தக் கடையின் முன்பு முகாமிட்டனர். முதலில் இந்தப் போராட்டம், தினமும் இரவும் பகலும் நாள்முழுதும் வெயிலிலும் குளிரிலும் கடையின் முன்பு முகாமிட்டு தங்குவது என்று செயல்பட்டனர். அதன் பின்னர், அனுபவத்திலிருந்து ஷிப்ட் முறையைக் கொண்டுவந்தனர்.

மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கிய இந்த போராட்டம் 65 நாட்கள் தொடர்ந்தது. வி.வி.மு. சார்பாக சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்த பின்னர் போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்தது. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்து முசுலீம் என்ற வேறுபாடின்றி, சாதி வேறுபாடின்றி  அருகில் உள்ள எல்லா வீடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என  பலரும் இந்தப் போராட்டத்தில் ஊக்கமாக பங்கேற்றனர். வி.வி.மு. தலையில் நடந்த இந்தப் போராட்டத்தை பிற ஓட்டுக் கட்சிகளில் இருக்கின்றவர்களும் எங்களால செய்ய முடியலைன்னாகூட நீங்க செய்வது சரிதான் என்று ஆதரித்தனர்.

தமிழ் முரசு
தமிழ் முரசு செய்தி

இதன் பின்னர், தான் தமிழக அரசு டாஸ்மாக் திறக்கும் திட்டத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்தது. மக்களின் போராட்டங்களுக்கு புரட்சிகர அமைப்புகள்தான் உறுதியாகவும் நேர்மையாகவும் முன்னின்று செயல்படுவதாக அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.

மூன்றாவது முறையாக சூளகிரி-காமராஜர் நகரைச் சேர்ந்த மக்கள், டாஸ்மாக்கை வி.வி.மு.வின் தலைமையில் முறியடித்துள்ளனர். ஆனால், அரசு டாஸ்மாக் கடைகளை நடத்தும் வரை இந்த பிரச்சனை முடிவுக்கு வரப்போவதில்லை! மக்கள் போராட்டங்களும் இனி இந்த மாதிரி வடிவங்களுடன் நின்று விடப் போவதுமில்லை… டாஸ்மாக் கடைகளை மூடும் வரையில் வளர்ந்தே தீரும்! போராடிய சூளகிரி உழைக்கும் மக்களுக்கும், பொதுமக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்!

விவசாயிகள் விடுதலை முன்னணி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
தொடர்புக்கு : தோழர்.முருகேசன், காமராஜர் நகர், சூளகிரி, ஒசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்.

poster

தகவல் :
பு.ஜ செய்தியாளர், ஓசூர்.