privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !

குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !

-

2002-ல் நரோடா பாட்டியாவில் முஸ்லீம்களை படு கொலை செய்த கும்பலுக்கு ஆயுதங்கள் வழங்கி தூண்டி விட்டதற்காக 28 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் மாயா கோட்னானி மோடியின் அமைச்சரவையில் முன்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்தவர். மீன்பிடி ஒப்பந்தங்கள் வழங்குவதில் அரசுக்கு ரூ 400 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி. இவர்களுக்கு போட்டியாக தனக்கு சொந்தமில்லாத நிலத்தின் சொந்தக்காரரை மிரட்டி சுண்ணாம்புக் கல் வெட்டி விற்றவர் மோடியின் நீர்வளத் துறை அமைச்சர்.

குஜராத் கிரிமினல் அமைச்சர்கள்
குஜராத் கிரிமினல் அமைச்சர்கள் வரிசை (மாயா கோத்னானி, பாபு பொக்கிரியா, புருஷோத்தம் சோலங்கி)

ஊழல் நாற்றம் நாடு முழுவதும் வீசிய கர்நாடகா அரசிலோ, பூச்சியங்கள் அமைச்சர்களாக வளைந்து நிற்கும் தமிழ்நாட்டு அரசிலோ கூட இது போன்ற வெளிப்படையான கிரிமினல்கள் அமைச்சர்கள் ஆக்கப்படவில்லை. ஆனால், தர்மவான், நியாயவான், இரும்பு மனிதர் என்று போற்றப்படும் நரேந்திர மோடி கிரிமினல்களாக பொறுக்கி எடுத்து தனது அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறார் என்பதற்கு சமீபத்திய உதாரணம் குஜராத் நீர்வளத் துறை அமைச்சர் பாபு பொக்கிரியா.

கடந்த சனிக்கிழமை (ஜூன் 15-ம் தேதி) போர்பந்தர் நீதிமன்றம் ஒன்று குஜராத் மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் பாபு பொக்கிரியாவும் அவரது மூன்று உறவினர்களும் சட்ட விரோதமாக சுண்ணாம்புக் கற்களை தோண்டி விற்றதாக தீர்ப்பளித்திருக்கிறது. நீதிபதி பி வி பாண்டியா இந்த நான்கு பேருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறார். 1 வாரத்துக்குள் மேல் முறையீடு செய்யா விட்டால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

பாபு பொக்கிரியாவின் மனைவியின் உறவினரான பீமா ஒடேதரா என்ற ரவுடி, பீமா ஒடேதராவின் மகன் லக்ஷ்மன் ஒடேதரா, பாபு பொக்கிரியாவின் மகளின் மாமனார் பாரத் ஒடேதரா ஆகியோர் மற்ற 3 குற்றவாளிகள்.

இவர்கள் 4 பேரும் சேர்ந்து போர்பந்தரில் உள்ள சின்சர்க்கா கிராமத்தில் சவுராஷ்டிரா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்திலிருந்து ரூ 54 கோடி மதிப்பிலான சுண்ணாம்புக் கல்லை திருட்டுத்தனமாக வெட்டியிருக்கின்றனர். நிறுவனத்தின் மேலாளர் உமேஷ் பாவஸ்வர் 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு எதிராக புகார் கொடுத்திருந்தார். அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குவாரியில் பிடிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாபு பொக்கிரியா மற்றும் மற்ற மூவரின் சார்பில் அங்கு வேலை செய்வதாக வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இது தொடர்பான சம்மனை புறக்கணித்து சரணடைய மறுத்த பொக்கிரியாவை தலைமறைவு குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது. பொக்கிரியாவின் முன்பிணை மனு உச்சநீதிமன்றத்தால் 2007-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. ஆனால், மோடியின் குஜராத்தில் சட்டத்தின் மாண்பு நிலைநாட்டப்படும் அழகிற்கு உதாரணமாக பாபு பொக்கிரியா பொது இடங்களில் சுதந்திரமாக உலவி வந்தார். 2007-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு சற்று முன்பு இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார் பாபு பொக்கிரியா.

பாபு பொக்கிரியா
சவுராஷ்டிராவில் பாஜகவின் தாதா பாபு பொக்கிரியா

சுண்ணாம்புக் கல் திருடிய வழக்கில் தொடர்புடை பீமா ஒடேதரா இப்போது வேறு ஒரு கொலை வழக்கில் சிறையில் உள்ளார். மற்ற மூவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

2012-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த குஜராத் சட்ட மன்ற தேர்தலில் பாபு பொக்கிரியா மாநில காங்கிரஸ் தலைவரும் அப்போதைய சட்ட மன்ற உறுப்பினருமான அர்ஜூன் மோத்வாடியாவை தோற்கடித்து சட்டமன்றத்தில் நுழைந்தார். சவுராஷ்டிரா பகுதியில் வோட்டுகளை கைப்பற்றி அதிக இடங்களை பிடிக்க உதவிய அவரை நீர்வளத் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் நரேந்திர மோடி.

நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்து சிறைத்தண்டனை வழங்கியிருப்பதை தொடர்ந்து அமைச்சர் பதவியை தானாக ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், அதை கட்சிதான் (அதாவது நரேந்திர மோடிதான்) முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் பாபு பொக்கிரியா. பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐ கே ஜடேஜா, நீதிமன்றத்தின் உத்தரவை பரிசீலித்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்கிறார்.

2014 பொதுத் தேர்தலில் சவுராஷ்டிரா வட்டாரத்தில் காவிக் கட்சி வெற்றி பெறுவதற்கு பாபு பொக்கிரியாவின் சேவை தேவையாக இருப்பதால் பாரதீய ஜனதா கட்சியும், நரேந்திர மோடியும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். கர்நாடகாவில் காவி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அடுத்தடுத்து ஊழல் பூதங்கள் கிளம்பிய போதும் எடியூரப்பாவை முதலமைச்சராக தொடர்ந்து வைத்திருந்தது போல, பாபு பொக்கிரியா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து விட்டார் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரை அமைச்சராக நீடிக்க வைக்கலாம் என்பது பாரதீய ஜனதா கட்சியின் திட்டம் என்று சொல்லப்படுகிறது

கிரிமினல்களின் தலைவர் மோடி முதல் அமைச்சராக இருக்கும் போது கிரிமினல்கள்தான் அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் பாபு பொக்கிரியா. பிரதமருக்கான ஆசையில் முன்னணியில் இருக்கும் மோடிக்கு இந்த தீர்ப்பு முதல் வாழ்த்தாக அமைந்திருப்பது ஒரு நல்ல துவக்கம்தான்.

மேலும் படிக்க

  1. .//கிரிமினல்களின் தலைவர் மோடி முதல் அமைச்சராக இருக்கும் போது கிரிமினல்கள்தான் அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் பாபு பொக்கிரியா. பிரதமருக்கான ஆசையில் முன்னணியில் இருக்கும் மோடிக்கு இந்த தீர்ப்பு முதல் வாழ்த்தாக அமைந்திருப்பது ஒரு நல்ல துவக்கம்தான்.//.. மிகநல்ல முத்தாய்ப்பு!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க