Wednesday, February 21, 2024
முகப்புகலைகதைவர்க்கம் !

வர்க்கம் !

-

தோ ஒரு பிரபலமான வெளிநாட்டு கம்பெனிக்கு உடல்தானம் செய்தவன் போலிருந்தது அவனது தோற்றம். சட்டைப் பை, காலர், டீ சர்ட்டின் முன் பக்கம், பின் பக்கம் ஏன் மூச்சுக்காற்றைக் கூட கம்பெனி விளம்பரத்துக்கு இழுத்து விட்டவன் போல, ஒரு தினுசாக சுற்றுப்புறத்தை அருவெறுத்தவன் போல முகத்தைச் சுழித்துக்கொண்டு மூச்சு விட்டான்.வேறு வழியில்லாமல் இந்தப் பேருந்தில் ஏறியவன் போல. பேருந்துக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொண்டிருந்தார்கள் மக்கள். வெயிலுக்குத் தொப்பி, காலுக்கு கவர்ச்சியான ஷீ, நெஞ்சுப் பகுதியில் உள்ள டீ சர்ட் பட்டனில் ஸ்டைலாக தூளியாடிய கூலிங் கிளாஸ் என அனைத்து அம்சத்திலும் அவன், அந்த சிறு நகரப் பயணிகளிடம் வேறுபட்டுத் தெரிந்தான். மற்றவர்களைப் போலல்லாமல் நடை, உடை, உடல் மொழியில் மாறுபட்டு இருப்பதனாலேயே ஒரு விதத் தனித்துவமான பெருமிதமும் அவன் பார்வையில் மிதந்தது. அடித்துப் பிடித்து ஏறிய பயணிகளை நாகரிகமற்றவர்கள் போல் வெறித்துப் பார்த்து விட்டு, தனக்கான தனியிடத்தை இந்த உலகம் விட்டு வைத்திருக்கிறதா என்பது போல பேருந்துக்குள் நோட்டமிட்டான்.

பள்ளிப் பிள்ளைகள் அவனது தோற்றத்தையும், அவனது விலையுயர்ந்த தோள் பையையும் உற்றுப் பார்க்க, அவனது தசைக்கோளங்களில் பெருமிதம் ஏறியது. பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி, ஒன்றில் மட்டும் ஜன்னலோரம் ஒரு முதியவரும், பக்கத்தில் நரைத்த தலை, கலைந்த தாடியுடன் பழுப்பு வேட்டியை மடித்துக் கட்டிய வண்ணம், வாயைக் குதப்பிக் கொண்டு வெற்றிலை மணத்துடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் பக்கத்தில் மட்டும் ஒரு இடம் காலியாக இருந்தது. இதையும் விட்டால் தனது பெருமிதத்தின் சுமையை ஒன்றரை மணி நேரம் தாங்கிக்கொண்டு நிற்க முடியாது என்பதால், இருக்கிற இடத்தில் பக்கத்தில் உள்ள பெரியவருடன் ரொம்பவும் ஒட்டிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மடியில் பையை வைத்துக் கொண்டு பக்குவமாக அமர்ந்து கொண்டான். “சே! வேட்டிய அவிழ்த்து விட்டுட்டாவது உக்காரலாம். அழுக்கு பிடிச்ச காலோட அப்படியே உட்காந்திருக்காரு” என்று மனதில் எண்ணங்கள் ஓட அவரை ஒரு ஸ்கேன் பார்வை பார்த்துவிட்டு உடலைக் குறுக்கிக் கொண்டான்.

07-class-elder“தம்பி நல்லா உக்காருங்க! ” வாய் வழிய வாஞ்சையுடன் அவர் கொஞ்சம் தள்ளி இடம் கொடுத்தாலும், இந்த வெத்தல பாக்கு எச்சி தெறிக்குறதுக்கு பேசாமலே இருந்திருக்கலாம்! என்ற முகச்சுழிப்புடன் “ஓ.கே! ஓ.கே! ” என்று வெடுக்கென தலையாட்டிக் கொண்டான். பெரியவர் திரும்பவும் பேசுவதற்கான முகக்குறிப்பைப் பார்த்து விட்டவன், வேண்டுமென்றே வேறு பக்கம் முகத்தைத் திருப்பி நோட்டமிட்டான். திடீரென ஒரு சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சூழலை மென்று விழுங்குவது போல பற்களை அழுந்த அசைத்து சுவிங்கத்தைப் புரட்டி எடுத்தான். அவன் சுவிங்கத்தை எடுத்ததும், அதன் மேல் லாவகத்தையும் பக்கத்திலிருந்த பெரியவர் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். வெற்றிலை மெல்லும் பெரியவரின் வாயை யாரும் விசேசமாக வேடிக்கை பார்க்காமல், இடது பக்கத்தில் நின்றிருந்தவர் சுவிங்கம் மெல்லும் தன் வாயைப் பார்த்தது, உலகமே தன்னை உற்றுப் பார்ப்பது போல அவனுக்கு ‘கெத்து’ கொடுத்தது. மேலும் வெற்றிலைக்காக அசையும் வாயை விட சுவிங்கத்துக்காக அசையும் தனது வாய் நாகரிகத்தின் நுழைவாயில் என்பது போல கர்வம் பிறந்தது போலவும், சுவிங்கத்தை மென்றுகொண்டே சுற்றிலும் இருப்பவர்களை ஒரு மேல் பார்வை பார்த்துக்கொண்டான்.

பையின் சைடு ஜிப்பைத் திறந்து திடீரென கை அகலப் பொருளை எடுக்க, ஏதோ மந்திரவாதி திடீரென பைக்குள்ளிருந்து மண்டை ஓட்டை எடுத்தது மாதிரி திடுக்கிட்டும், ஆர்வத்துடனும் பக்கத்திலிருந்த பெரியவர் முதல் நின்றிருந்தவர்கள் வரை அதையே நோட்டமிட்டனர். கை அகல செல்போனின் டச் ஸ்கிரீனில் அவனது நுனிவிரல் விந்தை புரிய, “ஏய்! இங்க பார்ரா. என்னமோ வெத்தலைக்கு சுண்ணாம்பு தடவற மாதிரி இப்படி இப்படிங்குறாரு, என்னமா நிறம் மாறுது…” இவ்வளவு மாடர்னான செல் போனை ஒரு வெற்றிலையோடு உவமானம் சொல்ல, பக்கத்தில் வாய்திறந்தவரை ஒரு ‘மாதிரியாக’ பார்த்து விட்டு மேற்கொண்டு டச் ஸ்கிரீனை அலை அலையாக எழுப்பிக் கொண்டிருந்தான். “யா! ஆம் சங்கர். ஸாரி பார் த டிலே. நெக்ஸ் வீக், ஐ வில் அரேன்ஞ்ச். ஸ்யூர், யா யா! பை! தாங்க் யூ!” இந்த முறை டச் ஸ்கிரீனுக்கு பதில் பக்கத்தில் உள்ளவர்கள் அவனது ‘டச்’ உதடுகளை வேடிக்கைப் பார்த்தனர். பெரிய எடத்துப் புள்ள போல இருக்கு! என்றுபொல பொலவென்றுஆங்கிலம் உதிர்த்த அவனது வேகத்தைப் பார்த்து, “தம்பி! காரக்குடிங்களா? இல்ல வெளி நாட்லேந்து வாறிங்களா?” கேட்டது பெருமையாக இருந்தாலும், கேட்டவரின் தோற்றம் திருப்தியளிக்காதது போல, “நோ! ஜஸ்ட் எ விசிட்!” என்று இயல்பு போல பேசியவன், பிறகு உங்களுக்கு புரியாதில்ல என்பது போல பாவனை செய்தவன், “சும்மா, வேற வேலையா!” என்று நறுக்கென முடித்துக்கொண்டான்.

பேச்சும் புரியல, ஜாடையும் புரியல என்பது போல அவன் பார்க்காத போது அவனை சைடாக பார்த்துக் கொண்ட பெரியவர், நமக்கேன் வம்பு என்பது போல பேச முற்படாமல் வேறு பக்கம் பார்க்கலானார்.

07-class“எம்மாம் நெணல் கெடக்கும், ரோட்ல ஒரு மரம் தெரியுதா பாரு! வெக்க காத்து மூஞ்ச உரிக்குது!” பெரியவர் ஊரைப் பார்த்து பேச, “ஆமா ரோட்டோர வய வரப்பல்லாம், பிளாட்ட போட்டு புட்டானுவ, இருக்கற மரத்தயும் ரோட்ட அகலப்படுத்துறேன்னு வெட்டி சாய்ச்சிபுட்டானுவ. என்னா புல்லு, பூண்டு கெடக்கு? மொதல்ல வீடு மொழுவ மாடு சாணி போடுதா, சொல்லு? காலம் கெட்டுப்போயி, எல்லாம் ‘ஸ்பீடா’ போறானுவளாம், ஸ்பீடா! ” ஜன்னலோரப் பெரியவர் பதிலுக்கு விண்டு வைக்க, பெரிசு எதையோ குத்திக்காட்டுவது போல் உள்ளது என்று அவன் அதுவரை ஏறிடாத அவரை எட்டி ஒரு பார்வை பார்த்துக்கொண்டான்.

சிறிது நேரத்தில் அவனை வேடிக்கைப் பார்த்தவர்கள், ஆளாளுக்கு தனக்குள் செட்டு சேர்ந்து கொண்டது போல, தங்களுக்குள் பேசிக்கொண்டே வந்தார்கள். சாதாரண கிராமத்து மனிதர்களிடம் சகஜமாகப் பழகுவதற்கு அவனுக்கு மனதளவில் விருப்பம் இல்லாவிடினும், சிறிது நேரத்திற்கு அவனை யாருமே சட்டை செய்யாதது, தனிமைப்பட்டது போல் இருந்தது. அவனே உற்றுப் பார்த்தாலும், பக்கத்திலிருந்தவர்கள் அவர்கள் பாட்டுக்கு தமக்குள் பேசிக்கொண்டே, ஊர், வயல், தண்ணீர், விவசாயம், மழை என்று தேவையான விசயங்களை அலசி விவாதித்து வர, அதற்குள் கலந்து

பேசவும், விவரம் தெரியாமல் அந்நியப்பட்டது போல இருந்தது அவனது மனநிலை.

“தோ… தோ… இத பாரு! ஊரு வந்திருச்சி… அழாத… இந்தா மம்மு! சாப்புடு! தோ… பாப்பா பாரு… தோ…” என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்தினாலும் அந்தக் குழந்தை பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தது. ”தோடு பாரும்மா… அய்… பஸ்சு… ட்ரூ… வேகமாக போவுது பாரு! தோ… பழம்! சாப்பிடுறீ… தங்கம்! ” எதைக் கொடுத்தாலும் தூக்கிக் கடாசுவது போல கையை வீசி, காலை உதைத்து ஆ..ங்.. ஆங்… என்று ஊரைக்கூட்டியது குழந்தை. முன்னிருக்கையில் குழந்தை வீறிட்டு அழ, இந்தச் சந்தர்பத்தில் தானும் சக பயணிகளிடம் கலந்துகொள்வது போல, தானும் முயற்சியெடுத்தான் அவன், “ஹாய்… அழக் கூடாது… ந்தா செல் போன்… டச் ஸ்கிரீன் படம் பாரு…” அவன் மீண்டும் முயற்சித்து “இங்கவா!” எனக் கையை வேறு நீட்ட, அது முன்பைவிட இன்னும் பயந்து அலறியது போல கத்த, திடீரென பக்கத்திலிருந்த பெறியவர், “ஏன் ஆயி! எங்க செல்லம்ல, தங்க சம்பால்ல ரோ… ரோ… ரோ… அழக் கூடாது, ஏம்மா பிள்ளய இப்படி காத்தோரம் கொடு” என்றுவெற்றிலை பாக்கு மணக்க! எழுந்து இரு கரம் நீட்ட… அதுவரை குமுறி அழுத குழந்தை வெடுக்கென பெரியவர் கைக்கு அழுதுகொண்டே தாவியது, நரைத்த தாடியில் முகம் சேர்க்க, “அய்யய்யோ தங்கம்… அழுது முகமெல்லாம் வேர்த்திடுச்சே…” என்று அழுக்குத் துண்டில் குழந்தையைத் துடைக்க, அது செருமிக் கொண்டே, அவர் முகத்தை உற்றுப்பார்த்து சந்தேகத்துக்கிடமின்றி சேர்ந்து கொண்டது. பெரியவர் தாடியை விரல்களால் நீவிக்கொண்டே, அவனது மனம் வீசும், மழ மழவென்ற சேவிங் செய்த முகத்தையும், கைகளில் உள்ள காஸ்ட்லி பொருட்களையும் ஒருவித ஆராய்ச்சியுடன் குழந்தை உற்று நோக்கியது. பளிச்சென, பந்தாவான லைஃப் ஸ்டைல் உள்ள தன்னிடம் வராத குழந்தை, அந்த அழுக்கான பெரியவரிடம் தாவியதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானவன் போல் அவனும் குழந்தையையே உற்று நோக்கி யோசிக்க ஆரம்பித்தான்.

-சுடர்விழி
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

 1. நீங்க மாற்ற நினைப்பவை எத்தனை?. வெற்றிலை எச்சில் அடுத்தவர் மேல் தெரிப்பது உமக்கு சரி என படிகிறதோ?.நிருவனங்களில் வேலை செய்பவர்கள் ஒன்றும் சும்மா இருந்த்து விடவில்லை. நீங்க ஓட்டு போட்டு அதன் மூலம் பதவியையும் , பணத்தையும் அனுபவிப்பவர்களை விட, தங்களுடைய சொந்த அறியால் வேலைக்கு சென்றவர்கள்,நாட்டையோ, ஓரு மாநிலத்தையோ அல்லது ஒரு ஊரையாவது பசுமையானதாக ஆக்க முடிவு செய்து அதன்படி செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவது உமக்கு எப்படி எரிகிறது. முதலாளித்துவத்தை அழிக்கிறேன் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, ஆங்கிலம் பேசுபவரை பழிக்க உமக்கு என்ன அருகதை இருக்கிறது. தமிழ் பேசினால் லகரத்தில் பணம் வருமா?.அந்த குழந்தை நவீன ஆசாமியிடம் செல்ல தயங்கி பின் அழுததாம். வேண்டுமானால் நாம் ஒரு டெஸ்ட் வைப்போமா?. யாருகிட்டங்கானும் விடுரீங்க ரீலு. நல்லா புழுகுரீங்க. நீங்கள் எதிர்த்த முதலாளித்துவத்தில்தான் இந்தியாவே இயங்குகிறது. ஐம்பது சதவிகித இளைய தலைமுறை நவீன ஆசாமியாதான் வழ்கிறார்கள். உம்மால் மறுக்க முடியுமா?. வெட்டி வெலையை விட்டுட்டு போயி புள்ள குட்டிகளை படிக்க வைங்க கிராம ஆசாமி. 100, 500, 1000 வாங்கிட்டு ஓட்டு போடுரவனை திருத்துங்க நாடே திரிந்திடும்.

 2. சுடர்விழி…. தயவு செய்து இனிமே கதை எழுதி தொலைக்கப் போரேன்னு கிளம்பிடாதே…. இதுலே ஏதாவது அடிப்படை கருத்து இருக்குதா…. குழந்தைங்க அதுங்க இருக்கு சூழல்ல இருக்கும் ஆள்கிட்டே போறது சகஜம் தான்…சென்னையில் பிறந்து ஒரு வருடம் ஆன குழந்தை இந்த எழவெடுத்த கதையில் வர மாதிரி ஒரு கிழவன் இருந்து, அவன் கூப்பிட்டா, இரண்டு தெரு கேக்குற மாதிரி கூச்சல் போடும்… இது எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும்…. இத என்னவோ பெரிய படைப்பாளியாட்டம், சிட்டி பசங்களுக்கும், கிரமத்தானுக்கும் ஒரு நூறு வருட இடைவெளி விழுந்த மாதிரி கிறுக்கித் தொலைச்சிருக்கே… ஏன் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தவன் எவனும் இது மாதிரி டிரசும், கண்ணாடியும், செல்போனும் வச்சுக்கறது இல்லையா????? நீயும், உன் கதையும் சீக்கிரம் நாசமா போக……

  • யோவ் இந்தியன்,

   ஒரு கதைய படிச்சி அனுபவிக்கத் தெரியலையே ஒனக்கு. குழந்தைங்க அதுங்க இருக்கற சூழல்ல இருக்கும் ஆள்கிட்டே போறது சகஜம்தான்னுதான் கதையும் சொல்லுது. அதனால, நீ என்னதான் டப்பா தட்டினாலும், நாட்டில பெரும்பான்மையா இருக்கிற மக்கள் கிட்ட அதை வச்சுகிட்டு சீன் காட்டினா, தனியாத்தான் நிக்கணும்னு கதை சொல்லுது. இத புரிஞ்சுக்கறதுல ஒனக்கு என்னதான் பிரச்சனை?

 3. யோவ் வினவு…எப்போ மெட்டல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆள் பிடிக்க ஆரம்பிச்ச? இந்த கதைய கண்ணகி சிலை கிட்ட வெச்சு…சு.விழி கூட நீயும் குந்திக்க… எப்படியும் இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த கதைக்குத்தான்…. இனிமே நீ எதுக்கும் போராடவே தெவையில்லை…. ஒரே மைக், ஒரெ ஒரு ஆள், சும்மா இந்த கதைய திருப்பி, திருப்பி படிச்சுகிட்டே இருந்தேன்னு வச்சுக்க…. போராட்டம் நிச்சயமா வெற்றி தான்….

 4. இந்தியனின் இரண்டு கருத்தையும் வழிமொழுகிறேன்.

  இது அடிப்படையற்ற கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க