privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ஓசூரில் முதலாளித்துவ சதித்திட்டங்களை முறியடிப்போம் !

ஓசூரில் முதலாளித்துவ சதித்திட்டங்களை முறியடிப்போம் !

-

ஆர்ப்பாட்டம்ஓசூரில் சட்டவிரோத லேஆஃப்களை முறியடிப்போம்!
ஆட்குறைப்பு, ஆலைமூடல் போன்ற பயங்கரவாத சதித்திட்டங்களை தகர்த்தெறிவோம்!

என்கின்ற முழக்கத்தின் அடிப்படையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15.06.2013 மாலை 5மணியளவில் ராம்நகர் அண்ணாசிலை அருகே எழுச்சியோடு நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கத்தின் தலைவர் தோழர் செந்தில் தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் மற்றும் அவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர் தோழர் சின்னசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்கள் மற்றும் திரளான தொழிலாளர்கள் எழுச்சியுடன் கண்டன முழக்கங்களை விண்ணதிர முழங்கினர். திரளான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இவ்வார்ப்பாட்டத்தைக் கண்டு வாழ்த்திச் சென்றனர்.

தோழர் பரசுராமன் தனது கண்டன உரையில்,

“ஓசூர் அசோக் லேலண்டில் ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிவடைந்து ஓராண்டுக்கும் மேலே ஆகியும் இன்னும் ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதேவேளையில் தற்போது லேஆஃப், ஆட்குறைப்பு போன்ற நிர்வாகத்தின் தாக்குதல்களால் தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த சம்பளமும் பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். ஆதலால் இவர்கள் நிர்வாகத்தை எதிர்த்து போராடுகிறார்கள். எனவே இதனை ஆதரிக்கவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை.

இந்திய அரசாங்கத்தின் தொழிற்தகராறு சட்டம்-1947 அத்தியாயங்கள் 5-A, B-வில் சொல்லப்பட்டுள்ள சட்டவிதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அதனடிப்படையில் இந்த லேஆஃப்புகள் ஆலை நிர்வாகங்களினால் அறிவிக்கப்படவில்லை. ஏன்? எனென்றால் இந்த ஆலைநிர்வாகங்கள் வரைமுறையற்ற அளவிலே உற்பத்தியை செய்து ஏற்கனவே திணித்து வைத்திருக்கின்றன.

posterஓராண்டு முழுவதும் செய்யவேண்டிய ஒன்னேகால் லட்சம் வண்டியை ஒன்பதே மாதங்களில் செய்து முடித்து தேக்கி வைத்து விட்டான் என்பதுதான் அதனுடைய முன் நிபந்தனை. தேவையான உற்பத்தியை முன் கூட்டியே செய்து நிறைத்து வைத்து விட்டதனால்தான் தற்போது குறைந்தபட்ச சட்ட விதிமுறைகளையும் கூட அவன் பின்பற்ற தயாராகவில்லை. இதற்காகவும் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. அதற்காக இது அநீதி இல்லை என்ற அர்த்தத்தில் நாங்கள் இங்கே சொல்லவில்லை. அநீதிதான் என்ற போதிலும் இதற்காகவும் இங்கே நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை.

ஏன் இவன் சட்டத்தை மதிப்பதில்லை? ஏனென்றால்… சட்டத்தை துளியளவு கூட மதிக்காமல் சட்டவிரோதமாக இதே சங்கங்களின் எதிர்ப்பின்றியே சட்ட விரோத உற்பத்தி முறையை ஏற்கனவே அவன் புகுத்தி வைத்திருக்கிறான். அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட், ஏ.எல்.டி.எஸ், லாஜிஸ்டிக்ஸ் என்று பலவிதமான சட்டவிரோத உற்பத்திமுறையை புகுத்தி வைத்திருக்கிறான். காண்ட்ராக்ட் தொழிலாளர்கள், சி.எல் தொழிலாளர்கள், அப்பரண்டீசு- என அனைவரையும் உற்பத்தியில் ஈடுபடுத்துகிறான்.

இதுபோன்ற சட்டவிரோதமான வகையில் உற்பத்தி செய்து கொள்ளை லாபமீட்டி வருகிறான். இதெல்லாம் இல்லையெனில் சட்டபூர்வமாகவே உற்பத்தி செய்தானென்றால் தொழிலாளர்களுக்கு இப்போதைய இந்த நெருக்கடி இல்லை. இன்றைய நிலைமையில் தொழிலாளர்களை உட்கார வைத்தோ அல்லது அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவோ முடியும். அதற்கான நிதி ஆதாரங்கள் எல்லாம் இருக்கின்றன. இருந்த போதிலும் இந்த கேள்விகளை எழுப்பி இதற்கு நியாயம் கேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை.

அடுத்து கமாஸ் வெக்ட்ராவை எடுத்துக்கொண்டால்… அங்கேயும் 13 தொழிலாளர்கள் வேலைநீக்கம், லேஆஃப், மற்றும் சட்டவிரோத உற்பத்திமுறையை நடைமுறைப்படுத்துகிறான். லேலண்டில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்ட பெரிய தொழிற்சங்கம் மேற்கண்ட சட்டவிரோத உற்பத்திமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இங்கே கமாஸ் வெக்ட்ராவில் உள்ள தொழிற்சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறிதும் சமரசமின்றிப் போராடிவருகிறது. ஆனாலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்துகிறான். இரண்டு கம்பெனிகளிலும் நடக்கின்ற மறுகாலனியத் தாக்குதல் ஒன்றுதான். இதற்காகக் கூட இந்த ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், உடனடி அவசர அவசிய கடமை என்னவென்றால்… இப்படிப்பட்ட தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருக்கிற கம்பெனிகளான அசோக் லேலண்டு மற்றும் கமாஸ் வெக்ட்ரா ஆகிய இரண்டு கம்பெனிகளின் நிர்வாகங்கள் என்பவர்கள் யார்? அவற்றின் தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? என்பதுதான் இப்ப நாம் பேசப்படவேண்டிய விசயமாக இருக்கிறது. அந்தவகையிலே ஒரு அபாய சங்கை போல தொழிலாளர்களுக்கும் அவர்களை நம்பியுள்ள பிற உழைக்கும் மக்களுக்கும் அறிவிக்கும் வகையிலே நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

notice-1அசோக் லேலண்டு தொழிலாளர்கள் என்பவர் யார்?

ஓசூர் லேலண்டு தொழிலாளர்கள் என்பவர்கள் யாரென்றால் ..எந்தவொரு கம்பெனியில் பிரச்சினையென்றாலும் காலையில் தகவல் கிடைத்ததும் மாலையில் கேட் வசூல் செய்து நிதிதிரட்டிக் கொடுத்தும் அவர்களின் போராட்டத்திற்கு ஓடோடிச் சென்று ஊக்கமான ஆதரவு கொடுத்தும் வந்தவர்கள்தான் லேலண்டு தொழிலாளர்கள். அதுமட்டுமின்றி ஈழப் பிரச்சினையானாலும், ஓசூரில் எந்த ஒரு நல்வாழ்வுப் பிரச்சினையானாலும் ஓடோடி சென்று அதற்காக போராடியவர்கள்தான் இந்த லேலாண்டு தொழிலாளர்கள். ஆனால் இன்றோ ஒரு அடையாள உண்ணாவிரதம், தொடர் உண்ணாவிரதம், சார் ஆட்சியரிடம் மனு கொடுப்பது, குடும்பத்துடன் தர்ணா போன்ற சட்டபூர்வ அகிம்சை முறையிலான போராட்டங்களை மட்டுமே அறிவித்து நடத்தி வருகின்றனர்.

மற்ற கம்பெனிகளின் தொழிற்சங்கங்கள் இதனை கூட அறிவிக்க தயங்குகின்ற இவ்வேளையில் ஓசூரிலே ஒரு பெரிய தொழிற்சங்கம் என்பதாலே துணிச்சலுடன் அறிவிக்கின்றனர். ஆளும் வர்க்கமும் அரசும் இதன்மீது உடனடியாக தடை விதித்தால் பிரச்சனையாகி விடும் என அஞ்சியே அனுமதித்துவருகின்றனர் என்பதே உண்மை நிலை. இந்த நிலையைக் கூட விட்டு வைக்காமல் அதற்கும் வேட்டு வைக்கவே இப்போது அவர்கள் மீது லேஆப், ஆலைமூடல், ஆட்குறைப்பு என முதலாளிகளால் பெரும் தாக்குதல்கள் ஏவப்பட்டிருக்கிறது. நம்முடைய மூதாதையர்கள் முன்னோடிகள் என்பதால் அவர்கள் மீதான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். ஓசூர் தொழிலாளர்களுக்கு இதனை உணர்த்தியும் வருகிறோம். அடுத்து

அசோக் லேலண்டு முதலாளி என்பவன் யார்?

அசோக்லேலண்டு நிர்வாகம் என்பது யாரென்றால்.. இந்திய தரகு முதலாளிகள் சங்கத்தின் தலைவன், இந்திய அரசிடம் நேரிலே சென்று தனக்கு வேண்டிய அளவில் கொள்கை மாற்றங்களை அறிவித்து நடைமுறைப்படுத்திக் கொள்ளும் திறன் படைத்தவன். இதனைப் பற்றி அதிகம் விளக்க வேண்டிய தேவையில்லை, யாவரும் அறிந்ததே. இன்றைக்கு ஓசூரில் முதலாளிகளின் சங்கமான ஓசூர் எச். ஆர் அசோஷியேசனை வழிநடத்திச் செல்பவன்தான் இந்த அசோக் லேலண்டு நிர்வாகம். எனவே, லேலண்டு ஒரு முடிவை எடுத்தால் அதனை இங்கிருக்கும் எல்லா கம்பெனி நிர்வாகங்களும் பின் தொடர்ந்து செல்லும். அதற்கு அண்மைய உதாரணம் ஐ.என்.ஈ.எல், எக்ஸைடு, பைமெட்டல் பேரிங் போன்ற கம்பெனிகள் அதன் பின்னே அணிவகுத்து நிற்கின்றன. ஆதலால் லேலாண்டில் லேஆப், ஆட்குறைப்பு என்றால் அது மற்ற கம்பெனிகளில் நடத்தவிருக்கின்ற தாக்குதலுக்கு ஒரு முன்மாதிரி அதாவது லேலண்டு என்பது சோதனைச் சாலை. இது ஏதோ லேலண்டில் மட்டும் நடக்கின்ற தாக்குதல் என்று சுருக்கிப் பார்த்து விடக் கூடாது. இது முதல் விசயம். இரண்டாவதாக கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்கள் மீதான தாக்குதல்.

கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்கள் என்பவர் யார்?

கமாஸ் வெக்ட்ரா ஆலையில் இருக்கும் தொழிற் சங்கமானது போர்க்குண மிக்க போராட்டங்களை நடத்தி ஓசூர் மக்களின் மனதை வென்று அவர்களின் ஆதரவோடு அரசையும் நிர்வாகத்தையும் பணிய வைத்து உரிமைகளைப் போராடிப் பெற்ற புரட்சிகர தொழிற்சங்கம். இது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளைச் சங்கம். ஒரு ஆலையில் ஒரு தொழிலாளிக்குப் பிரச்சினை என்றாலும் எல்லா ஆலைத் தொழிலாளர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்ற வகையில் வர்க்க ஒற்றுமையை கட்டி வரும் தொழிற்சங்கம். இதனை வளரவிடக் கூடாது என்று ஒசூர் முதலாளிகள் ஒன்று திரண்டு மாதம் இரண்டு நாட்கள் இதற்காகவே கூடித் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறார்கள். இதற்கு அரசு பக்க மேளம் வாசித்துவருகிறது.

எனவே, இந்த இரண்டு தொழிற்சங்கங்களின் மீதான முதலாளிகளின் தாக்குதல் என்பது அடுத்தடுத்த பல கம்பெனிகளின் தொழிற்சங்கங்களுக்கு நேரவிருக்கின்ற தாக்குதலை முன்னறிவிப்பதாக உள்ளது. இது ஒரு சோதனைச் சாலையாக இவ்விரு ஆலைகளில் உள்ள தொழிற்சங்கங்கள் மீதான முதலாளிகளின் தாக்குதல் அமைந்துள்ளது. தற்போது நிரந்தரத் தொழிலாளர்கள் ஓரளவிற்கு கணிசமாக இருக்கின்ற லேலண்டிலே இனி நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லை என்றாகிவிட்டால்… ஓசூர் முழுவதற்கும் இனி இதே நிலைதான். இது ஒரு தொடக்கம் அல்ல, மாறாக முடிவின் ஓர் அறிவிப்பு! எனவே இதனை ஓசூர் தொழிலாளர்களுக்கு உணர்த்தி எச்சரிக்கும் வகையிலே இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். அந்த வகையிலே ஓசூர் தொழிலாளர்கள் எதிர் வர இருக்கும் ஆபத்தை உணர்ந்து இனியும் தன் வீடு, தன் பெண்டு என்றெல்லாம் சுருங்கி வாழாமல் விசாலமான பார்வையினை வரித்துக் கொண்டு எங்களுடன் இணைந்து கரம் கோர்த்துப் போராட அறை கூவி அழைக்கிறோம்”

என பேசி முடித்தார்.

notice-2அடுத்து தோழர் சின்னசாமி பேசுகையில்,

”முதலாளிகள் இல்லாமல் முதலாளிகளின் தொழிற்சாலைகள் இல்லாமல் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை எனும் வாதத்தை அம்பலப்படுத்திப் பேசினார். தொழிலாளர்கள் இல்லாமல் இவ்வுலகமே இயங்கமுடியாது. ஆனால் முதலாளி இல்லாமல் உலகம் இயங்கமுடியும். எனவே முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்ட தொழிலாளர்கள் கம்யூனிசத்தை கைக்கொள்வது என்பது தவிர்க்க முடியாதது. முதலாளித்துவம் கொல்லும், கம்யூனிசமே வெல்லும்!” என்ற தலைப்பில் எழுச்சிமிகு கண்டன உரையாற்றினார். இது பார்வையாளர்களை கவர்ந்திழுத்து உணர்வூட்டியதாக இருந்தது.

இவ்வார்ப்பாட்டம் ஓசூர் தொழிலாளர்களிடையே புதுநம்பிக்கையை விதைப்பதாக இருந்தது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி இவ்வமைப்பினர் ஆயிரக்கணக்கில் துண்டறிக்கை மற்றும் நூற்றுக்கணக்கில் சுவரொட்டிகள் ஒட்டியும் தெருமுனைப் பிரச்சாரம், ஆலை வாயில்களில் பிரச்சாரம் என வீச்சாக பிரச்சாரம் செய்திருந்தனர். அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை அப்படியே இங்கே தருகிறோம்.

அன்பார்ந்த தொழிலாளர்களே!

அசோக் லேலண்டு நிறுவனம் பல ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லேஆஃப் அறிவித்து வருகிறது. சந்தையில் தேக்க நிலை இருப்பதால்தான் லேஆப் அறிவித்துள்ளதாக லேலாண்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்கள் சொல்வது யதார்த்தம் என்றால் கீழ்க்கண்ட முறைகளைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பது சட்டம்.

  • லே-ஆஃப் அறிவிப்பதற்கு இந்திய தொழிற்தகராறு சட்டம் – 1947 அத்தியாயங்கள் 5-அ, ஆ வில் கூறப்பட்டுள்ள சட்ட முறைகளுக்குக் கட்டுப்பட்டு, தொழிலாளர் இணை ஆணையர் (சமரசம்), சென்னையிடம் லே-ஆஃப் செய்வதற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
  • இதனை, அவர் ஏற்றுக்கொண்டதற்கான அறிவிப்பை முறைப்படி தொழிலாளர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
  • மேற்கண்ட சட்டப் பிரிவின் கீழ் அரசு கேட்டுள்ள 23 கேள்விகளுக்கு பதிலை இணைப்பாக இணைத்திருக்க வேண்டும்.
  • கேள்வி எண்கள் 15, 17, 18, 19, 20, 21, 22 ஆகியவை மிகமிக முக்கியமானவை.
    கேள்வி எண் 15 – கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலுள்ள நிர்வாக, பொதுவான மற்றும் விற்பனை செலவு (முழுமையாக), மொத்த செலவீனத்தில் அதன் சதவீதம்.
    கேள்வி எண் 17- லே ஆஃப் கொடுப்பதால் ஆலைக்கு கிடைக்கும் கூடுதல் லாபம் (சேமிப்பு!).
    கேள்வி எண்18- நிர்வாக ஊதியம், விற்பனை ஊக்குவிப்பு செலவு மற்றும் பொது நிர்வாகச் செலவுகள் ஆகியவைகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு உண்டாக்க ஏதேனும் திட்டம் உள்ளதா என்பதைப் பற்றி.
    கேள்வி எண்19- கடந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி நாளன்று உள்ள கையிருப்பு சரக்கு வளத்தின் நிலை.
    கேள்வி எண்20- கடந்த 3 ஆண்டுகளிலுள்ள விற்பனை விவரங்கள் மற்றும் கடந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலுள்ள இனவாரியாக, மதிப்பு வாரியாக விற்பனை விவரங்கள்.
    கேள்வி எண்21- தற்போது திட்டமிடப்பட்டுள்ள பணி வழங்காமையின் காரணங்கள்.
    கேள்வி எண்22- தற்போது கருதப்பட்டுள்ள பணி வழங்காமையை தவிர்ப்பதற்காக குறிப்பாக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள்.

மேற்கண்ட கேள்விகளுக்கு லேலண்டு நிர்வாகம் பதிலளிக்கத் தயாராக இல்லை. காரணம், இது ஒரு சட்ட விரோதமான லே ஆஃப் என்று லேலண்டு நிர்வாகம் தெரிந்தே செய்துவருகிறது. சட்டவிரோத, தொழிலாளர் விரோத லே-ஆஃப்பின் நோக்கம் என்ன? இதன் உடனடி நோக்கம் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு ஒரு அற்பத்தொகை கொடுத்து பட்டை நாமம் போடவேண்டும் என்பதே! இதன் எதிர்கால நோக்கம், ஆட்குறைப்பு செய்வது! ஒரு பன்னாட்டு பகாசூர கம்பெனியாக வளர்வதற்காக லேலண்டு நிர்வாகம் இந்த தொழிலாளர் விரோத, சட்ட விரோத செயல்பாடுகளை செய்து வருகிறது!

சந்தையின் தேவையைவிட பல மடங்கு அதிகமான உற்பத்தியை லேலண்டு நிர்வாகம் செய்துள்ளது. இதற்கேற்ப சட்டவிரோதமான அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட், ஏ.எல்.டி.எஸ் உற்பத்தி முறை என்ற பல அடக்கு முறைகளை தொழிலாளர்கள் மீது திணித்து வைத்துள்ளது. இந்த பின்புலத்தை தனக்கு சாதகமாக வைத்துக் கொண்டுள்ளது. சந்தையில் மந்த நிலை என்பதும் இந்த மிகை உற்பத்தியின் விளைவே!

லேலண்டின் சட்ட விரோத லே-ஆஃப் என்பது இத்துடன் நின்று விடுவதல்ல. அடுத்து இது ஆட்குறைப்பு நடவடிக்கையையும் ஆலை மூடலையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், லேஆஃப் கொண்டு வருவதற்கு முன்னரே ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை தருவதை நிறுத்திக்கொண்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவிற்கே அலையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், லேலண்டின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும் லே ஆஃப்பையும் சாதகமாக்கிக் கொண்டு எக்ஸைடு, கார்போரண்டம், கமாஸ் வெக்ட்ரா உள்ளிட்ட பல ஆலை நிர்வாகங்கள் தொழிலாளர்களை மிரட்டி வருகின்றன. கமாஸ் வெக்ட்ரா நிர்வாகம் அறிவித்த சட்டவிரோத லேஆஃப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பு.ஜ.தொ.மு மூலமாக தடையாணைப் பெறப்பட்டது. ஆனால், கமாஸ் நிர்வாகமோ அதனை மதிக்காமல் கழிப்பறைக் காகிதத்தைப் போல தூக்கியெறிந்துவிட்டது. வட்டாட்சியரின் ஆலோசனைகளை மயிரளவிற்கும் மதிக்கவில்லை.

மொத்தத்தில், தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று கூறி ஒடுக்கி வருகின்ற அரசுக்கும் ஓட்டுக் கட்சிகளுக்கும் முதலாளிகளின் இந்த சட்ட விரோத அடக்கு முறைகள் தெரியாதல்ல. தெரியும். இருப்பினும் முதலாளிகளுக்கு விசுவாசமாக செயல்படக் காரணம், இந்த அரசும் சட்டமும் முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே உள்ளன. இதனால்தான் அதிகாரிகளும் சட்டமும் முதலாளிகள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதை ஆதரிக்கிறது. அதற்கு துணை போகிறது.

ஏற்கனவே, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளமும் போனஸ் உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக புகுத்தப்பட்டு வருகின்ற நிலையில் லே – ஆஃப் முறை வரைமுறையின்றி கொண்டுவருவது தொடர்ந்தால் எதிர்காலத்தில் சட்டவிரோத அடக்குமுறைகள் மேலும் அதிகரித்து தொழிலாளர்களாகிய நாம் பேசுவதற்கான குறைந்த பட்ச உரிமைகளைக்கூட இழக்க நேரிடும். போராடி பெற்ற சட்டபூர்வ உரிமைகளை போராடித்தான் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

ஆகையால், லேலண்டு, கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையையும் பிற ஆலைத் தொழிலாளர்கள் மீது அவ்வாலை நிர்வாகங்கள் தொடுத்து வருகின்ற லே-ஆஃப் உள்ளிட்ட அடக்குமுறைகளையும் முறியடிக்க ஓசூரில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.‎

  • சட்டவிரோத லே-ஆஃப்களை முறியடிப்போம்! எதிர்வர இருக்கும் ஆட்குறைப்பு, ஆலைமூடல் போன்ற சதித்திட்டங்களை தகர்த்தெறிவோம்!
  • ஒப்பந்தத் தொழிலாளர்களை கசக்கி பிழியும் நிரந்திரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு அரசும் சட்டமும் துணைபுரிவதை முறியடிப்போம்!
  • முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள், பதிவு எண் 24-KRI)
தொடர்புக்கு: எல் 416, ஏ.எஸ்.டி.சி பழைய அட்கோ, ஓசூர்.
செல்-97880 11784.

தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்