privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ராமதாஸ் கொடும்பாவி - பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!

ராமதாஸ் கொடும்பாவி – பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!

-

1. சென்னையில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசே
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்!
வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்!

உழைக்கும் மக்களே
சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்!

என்ற முழக்கங்களுடன் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – காஞ்சிபுரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

2. திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மையம் நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம்

  • இளவரசன் மரணம் தற்கொலையல்ல! ஆதிக்க சாதிவெறிப் படுகொலை!
  • திருச்சியில் நீதிமன்ற வாயிலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் எழுச்சிமிக்க போராட்டம்!
  • ராமதாஸ் படம், பா.ம.க கொடிகள் எரிப்பு!

ருமபுரியில் திவ்யா-இளவரசன் காதல் தம்பதியரைப் பிரித்த சாதி வெறியர்களின் கொடுஞ்செயலால் தமிழகமே குமுறிக்கொண்டிருந்த நிலையில் 04.07.2013 அன்று வந்து சேர்ந்த இளவரசனின் மரணச்செய்தி நம்மை அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியது. அதே நேரத்தில் சாதிவெறிக்கும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் பாடை கட்டுவதில் முன்கையெடுத்து இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த – பெரியார் பிறந்த இந்த மண்ணில் இன்று சாதி வெறி தலை விரித்தாடும் நிலையும் அதை தடுக்க முடியாத இயலாமையும் நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.

அனைத்து ஓட்டுச் சீட்டு கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் சாதிவெறி தலைவிரித்தாடும் நிலையில் ஜனநாயக சக்திகள் சோம்பிக்கிடக்க முடியாது; எதிர் வினை செய்தே தீர வேண்டும் என்ற வகையில் தமிழகத்தின் மவுனத்தை உடைக்கும் முயற்சியாக 05.07.2013 அன்று காலை 10 மணியளவில், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற வாயிலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் இரா.ஆதிநாராயணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், “இளவரசனின் மரணம் தற்கொலையல்ல; ஆதிக்க சாதிவெறிப் படுகொலையே” என்று வலியுறுத்தியதுடன், ஆதிக்க சாதி வெறி கொடூரன் ராமதாஸ் தலைமையிலான சமூக விரோத கும்பலைக் கைது செய்யவும், பா.ம.க, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைத் தடை செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் இராமதாசின் உருவப்படம் மற்றும் பாமக கொடிகளும் எரிக்கப் பட்டன.

  • பெரியார் பிறந்த மண்ணில் ஆதிக்க சாதிவெறியாட்டத்தை அனுமதியோம்!
  • ஆதிக்க சாதிவெறியர்கள் ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோரை கைது செய்!
  • பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை தடை செய்!

என்று முழக்கமிட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலமாக நாம் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்ட போது வழக்கறிஞர்கள் பலரும் தங்களை இப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டணர்.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த மக்களைப் பார்த்து, ”பாமக-வும் ராமதாசும் பதவி சுகம் அனுபவிக்க மக்கள் ரத்தம் சிந்தணுமா?”,என்று முழக்கமிட்டு கேள்வி எழுப்பியது அவர்களின் சிந்தனையைத் தூண்டியது. மேலும் சாதியையும் மனுநீதியையும் மக்களை திரட்டி அழித்தொழிப்போம் என்று உணர்வுபூர்வமாக நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் திருச்சி பகுதியில் சாதியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு முன்னோட்டமாக இருந்தது. காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய நம்மை முன்கூட்டியே வந்து கைது செய்ய காத்துக்கொண்டிருந்த போலீஸ் பட்டாளம் – இப்போராட்டத்திற்கு மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் வெளிப்பட்ட ஆதரவை கண்டு அடக்கிக்கொண்டது.

சாதி வெறிக்கு தனது தந்தையையும் தற்போது கணவனையும் பலி கொடுத்து தவிக்கிறார் திவ்யா. தனது தாயையும் தம்பியையும் இழந்து விடுவேனோ என்று அஞ்சுமளவுக்கு அச்சுறுத்தப்பட்ட அவர் தற்போது தன்னையும் இழந்து நிற்கிறார். சாதி வெறிக்கு மண்டியிட்டு பணிந்து போவதா? தமது ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தில் இளமை முறுக்கோடு எதிர்த்து நிற்பதா என்பது இன்று ஒவ்வொரு தமிழ் இளையோரின் முன்னும் நிற்கும் முக்கிய கேள்வி! பின்வாங்கி காட்டு மிராண்டி காலத்திற்கு செல்ல முடியாது. காட்டு மிராண்டிகளை காட்சி சாலையிலும் அவர்களின் காலத்திற்கொவ்வாத கலாச்சாரத்தை சவக்குழியிலும் வைக்க வேண்டிய அவசியம் எழுந்து விட்டது.

பதவிக்காகவும் பவிசுக்காகவும் கற்காலத்தை மீட்க துணிந்து விட்டது ஒரு கூட்டம்! சவாலை எதிர்கொள்ள இளைய சமுதாயமே எழுந்து நில்!

எதிர்காலக் கனவுகளை நெஞ்சில் தேக்கி புது வாழ்வு துவங்கிய அந்தத் தம்பதிகளை துவக்கம் முதலே துன்புறுத்தி மகிழ்ச்சியைக் குலைத்து அடுத்தடுத்து கொடுமைக்குள்ளாக்கி அதில் பட்டாசு வெடித்து இன்புறும் கயவர்களை எதிர்த்த சாதிவெறிக்கெதிரான இப்போராட்டத் தீ நாடு முழுவதும் பரவ வேண்டும். அந்த அப்பாவி சகோதரிக்கு நாம் காட்டும் ஆதரவுதான் எதிர் காலத்தில் மேலும் பல நிராதரவான திவ்யாக்கள் உருவாகாமல் தடுக்கும். இளம் உள்ளங்களின் இரத்தம் குடிக்கும் சாதி வெறிக் காட்டேரிகளை தமிழகத்தின் மண்ணிலிருந்தே துடைத்தொழிக்க வழி வகுக்கும். அந்த திசையில் தொடர்ந்து போராடுவோம்!

கவுரவக் கொலைகள், கட்டைப்பஞ்சாயத்து வகையறாக்களை தமிழக மண்ணிலிருந்தும் இந்திய மண்ணிலிருந்தும் விரட்டியடிப்போம் வாரீர் என அறைகூவியழைக்கிறோம். ஜனநாயக உள்ளங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஓரணி திரள வேண்டிய தருணமிது.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு, திருச்சிக் கிளை

3. கோவை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – பேரணி, ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் அமைப்புகள் 05.07.2013-ம் தேதி மாலை 5.30 மணியளவில் கோவை நீதி  மன்ற வளாகத்திலிருந்து தோழர் விளைவை ராமசாமி (பு.ஜ.தொ.மு செயலாளர்) தலைமையில் தோழர் ராஜன் ( பு.ஜ.தொ.மு தலைவர்), தோழர்  மணிவண்ணன் (ம.க.இ.க  செயலாளர்) தோழர்கள் உடன் 70 பேர் அணிதிரண்டு

  • ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு, முதலான வன்னிய சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலை குற்றத்தின்கீழ் கைது செய் !
  • வன்னிய சாதி சங்கத்தை தடை செய் !

என்று  முழக்கம்  இட்டபடி கோவை செஞ்சிலுவை  சங்கத்தை நோக்கி  பேரணியாக   சென்றனர் .

சாதி  சங்கங்கள் மட்டுமே போராடக்கூடிய நிலையில் வர்க்க ஒற்றுமையுடன் தொழிலாளர்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தது கோவை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. SRI,CRI,CPC, NTC தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலை சீருடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

காவல் துறை அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்தார்கள். அங்கு சாதி வெறியர்களை குறித்து ஒரு அரங்கு கூட்டம் நடத்தப்பட்டது.

செய்தி : கோபிநாத், கோவை.

4. உசிலம்பட்டி விவசாயிகள் விடுதலை முன்னணி தடையை மீறி ஆர்ப்பாட்டம்!

இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்களே !
பா.ம.க தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய்!

05.07.2013 மாலை 5.45 மணிக்கு இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்களே ! பா.ம.க தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய்!! எனும் மைய முழக்கத்தின்கீழ் விவசாயிகள் விடுதலை முன்னணியின் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையின் தடையை மீறி உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து வி.வி.மு தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் இடத்தின் அருகே ஆங்காங்கே நின்று சரியாக ஆர்ப்பாட்டம் நடக்கும் நேரத்தில் திடீரென கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் விண்ணதிர துவங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டதின் கூட்டத்தில் ஒருபுறம் காவல்துறை தடையை எதிர்கொண்டு தோழர் குருசாமி உசிலை வி.வி.மு செயலர் ஆற்றிய போர்க்குணமான உரையும் மறுபுறம் தோழர் சந்திரபோஸ் வி.வி.மு தலைமையில் தோழர்களின் விண்ணதிரும் முழக்கமும் பார்வையாளர்களை உணர்ச்சிபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் மாற்றியது. பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாவதைக் கண்டு காவல்துறை கைது நடவடிக்கையில் இறங்கியது. வி.வி.மு தோழர்கள் தங்களுக்குள் கைகள் கோர்த்துக்கொண்டு காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக பதிலடி கொடுத்த காட்சி உசிலைப்பகுதிக்கு புதிதாகவும் வி.வி.மு வின் போர்க்குணத்தை பறைசாற்றுவது போலவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

காவல்துறையின் தள்ளுமுள்ளுகளை சமாளித்தும் காவல்துறையின் அராஜகக நடவடிக்கையையும் அம்பலப்படுத்தியும் சுமார் 20 நிமிடம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இறுதியாக வி.வி.மு சார்பாக 11 பேர்களும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக 7 பேர்களும் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட முழக்கங்கள் முழங்கப்பட்டன

தமிழக அரசே
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்!
வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்!

உழைக்கும் மக்களே
சாதி வெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்!

தகவல்
பு.ஜ.செய்தியாளர்கள், உசிலம்பட்டி

5. கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம்

ருமபுரி இளவரசனின் மரணம் – கருவறுத்த பா.ம.க சாதி வெறிக்கு முடிவு கட்டுவோம்

சாதி மாற்றி காதல் செய்து மணம் புரிந்த தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல, அதற்கு பா.ம.க சாதி வெறியர்களே காரணம் என்றும், பா.ம.க, வன்னியர் சங்கத்தை தடைசெய்யக் கோரியும், கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அம்பேத்கார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் அனுமதி பெறவில்லை. உளவுப் பிரிவும், பத்திரிகைகளும் வந்து படம் எடுத்துக்கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாகவும் இருந்ததால் கிட்டத்தட்ட 1.45 மணிநேரம் வரை சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுக்கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகளின் பிரமுகர்களும் நமது நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தலித் இயக்கங்களும் இந்த செய்தியை குறித்து குழம்பிப் போன நிலையில் புரட்சிகர அமைப்புகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளவரசன் எப்படி சாகடிக்கப்பட்டார். அவர் சாவின் மர்மம் என்ன? இந்த பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்க சாதி வெறிக்கு நக்சல்பாரி வழியில் வர்க்க ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், சாதி மாறி காதலித்தால் நாய் நரியும் பிறந்திடுமா? சுற்றும் பூமி நின்றிடுமா? என்று கேள்வி எழுப்பியும், மானங்கெட்ட ராமதாசே, பா.ம.க சாதி வெறியர்களே சாதி பெருமை பேசும் நீங்கள் உங்கள் சாதிப்பெண்ணை வரதட்சணையின்றி திருமணம் செய்து கொள்ளத்தயாரா? என்ற கேள்விகளுடன் தோழர்களின் கண்டன உரை கணீர் என இருந்தது. பொது மக்கள் ஆர்வமுடன் கவனித்தனர்.

வன்னியர் சாதி வெறியர்களின் முகத்தில் காரி உமிழும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடனடியாக திட்டமிட்டு தமிழக அளவில் நாம் மட்டுமே செய்துள்ளோம். கல்லூரி மாணவர்கள் ஈழத்துக்காக போராடியது போல சாதி வெறிக்கெதிராக போராட வேண்டும் என்று கூறினார். உளவுத்துறை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார், மற்றபடி காவல் துறையினர் இந்த சரியான விஷயத்திற்கு எங்களது ஆதரவு என்கிற வகையில் அனுமதி வாங்காத நிலையிலும் கிட்ட திட்ட 1.45 மணி நேரம் வரை நடத்த அனுமதித்தனர். காவல் துறை வரவேயில்லை.

தலைமை : தோழர் கருணாமூர்த்தி, செயலாளர், பு.மா.இ.மு, கடலூர்.
கண்டன உரை :
தோழர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர், புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம், கடலூர்.
தோழர் கதிர்வேல், பு.மா.இ.மு., விருதை.
தோழர் நந்தா, இணைச் செயலாளர், கடலூர்

தகவல்
புரட்சிகரமாணவர் – இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.