privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க"அம்மா மினரல் வாட்டர்" தண்ணீர் தனியார்மய சூழ்ச்சி !

“அம்மா மினரல் வாட்டர்” தண்ணீர் தனியார்மய சூழ்ச்சி !

-

காற்றும் ஒளியும் போன்ற உயிரின் ஆதாரமும், உயிரினங்களின் உரிமையுமான தண்ணீரை, அரசாங்கமே விற்பனைப் பண்டமாக்கி புட்டியில் அடைத்து விற்று இலாபம் பார்க்கும் கேடுகெட்ட நடவடிக்கையை, மாபெரும் சாதனையைப் போல அறிவித்திருக்கிறார், ஜெயலலிதா.

“ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவேண்டும் என்ற நோக்கத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையங்களை அமைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று பிரகடனம் செய்துள்ளார்.

தண்ணீர் லாரி
‘அம்மா’ ஆட்சியில் குடிநீர்த் தட்டுப்பாட்டில் தவிக்கும் தலைநகரம்.

“மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே செல்வதாகவும், இதன் விளைவாக ஏழை, நடுத்தர மக்கள் செய்வதறியாது விழி பிதுங்கி தவிப்பதாகவும், தமிழக மக்களை வாழ வைக்கும் வகையிலும் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும்” இட்லிக் கடை, கத்தரிக்கா கடைக்கு அடுத்தபடி ‘அம்மா வாட்டரை’ அம்மாவின் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறதாம்.

இந்தப் “பாதுகாப்பான” குடிநீரின் விலை லிட்டர் பத்து ரூபாயாம். அரசு போக்குவரத்துக் கழகங்களின் பொறுப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுமாம். மொத்தம் பத்து இடங்களில் தண்ணீர் கம்பெனிகள் திறக்கப்படும் என்றும், எல்லா பேருந்து நிலையங்களிலும் ‘அம்மா வாட்டர்’ விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பு கூறுகிறது.

தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, கொள்ளை இலாபம் பார்க்க அனுமதிப்பதும், நீர்வளத்தை தனியார் முதலாளிகளின் தனியுடைமை ஆக்குவதும் மறுகாலனியாக்க கொள்கையின் விளைவுகள். தண்ணீர் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்துவதற்காகத்தான் “தேசிய நீர்க்கொள்கை – 2012” மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கொள்கை அறிவிக்கப்படுவதற்கு முன்னமே தமிழகத்தில் தண்ணீர் தனியார்மயக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. 2001-2006 -ல் ஜெ. அரசுதான் அன்றாடம் பல இலட்சம் லிட்டர் தாமிரவருணித் தண்ணீரை லிட்டர் ஒண்ணேகால் பைசா விலையில் கோகோ கோலா நிறுவனத்துக்கு கொடுக்க உத்தரவிட்டது. இன்று வரை இந்தத் தண்ணீர்க் கொள்ளை தொடர்ந்து வருகிறது.

05-private-waterசென்ற ஆட்சிக் காலத்தின் போது, திருப்பூரில் பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் திருப்பூருக்கு விநியோகம் செய்யும் உரிமையை பெக்டெல் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ஜெ. அரசு வழங்கியது. தற்போது திருப்பூரின் சாயப்பட்டறைகள் பல மூடப்பட்டு, திருப்பூர் தொழிலகங்களின் தண்ணீர் தேவை குறைந்து விட்டதால், நாள்தோறும் பத்து கோடி லிட்டர் பவானி தண்ணீரை அந்த பன்னாட்டுக் கம்பெனியிடமிருந்து அரசே வாங்கிக் கொள்ளும் என்றும், ஆயிரம் லிட்டர் ரூ. 4.50 என்று நிர்ணயிக்கப்பட்ட விலையை உயர்த்தி 21 ரூபாயாக கொடுக்கும் என்றும் தற்போது ஜெ. அரசு அறிவித்திருக்கிறது. வீராணத்திலிருந்து சென்னைக்குத் தண்ணீரைக் கொண்டுவரும் அரசுக்கு பவானியிலிருந்து திருப்பூருக்குத் தண்ணீர் கொண்டு வரத் தெரியாதாம். பவானித் தண்ணீரை பன்னாட்டுக் கம்பெனியிடமிருந்து அரசு விலை கொடுத்து வாங்குமாம். இந்த அயோக்கியத்தனத்துக்குப் பெயர்தான் தண்ணீர் தனியார்மயம்.

பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்குவதென்பது முடியாத காரியமோ பெரும் செலவு பிடிக்கும் விசயமோ அல்ல. தனியார் தண்ணீர் கம்பெனிகளின் கணக்குப்படியே ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு அவர்களுக்கு ஆகும் செலவு பத்து காசுதான். இந்த செலவும் இல்லாமல், இயற்கை முறையில் மிகவும் குறைந்த செலவில் தண்ணீரைச் சுத்திகரிக்கும் வழிகள் தமிழகத்திலேயே பல அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக மக்களுக்கு வழங்க முடியும் என்ற போதிலும், தண்ணீரைத் தனியார் மயமாக்க வேண்டும் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் காரணமாகத்தான் அரசு இதனைச் செய்ய மறுக்கிறது. பாட்டில் தண்ணீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இந்தியாவில் மொத்தம் 1200 இருப்பதாகவும், அவற்றில் 600 தமிழகத்தில்தான் உள்ளன என்றும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. காசிருப்பவனுக்குத்தான் தண்ணீர் என்ற கருத்தை மக்களே ஏற்கச் செய்யும் அளவுக்கு தண்ணீர் வியாபாரம் தமிழகத்தில் சகஜமாகிவிட்டது.

அதனால்தான் தண்ணீர் பஞ்சத்தால் தமிழகமே தவித்துக் கொண்டிருக்கும் சூழலிலும், தண்ணீரை உறிஞ்சி விற்பதற்கு முதலாளிகளைச் சுதந்திரமாக அனுமதித்து விட்டு, லிட்டர் பத்து ரூபாய்க்கு பாட்டில் தண்ணீர் விற்பதை விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எனப் பீற்றிக் கொள்கிறார் ஜெயலலிதா. அரசாங்கமே தண்ணீர் விற்பது என்பது தண்ணீர் மாஃபியாக்களின் தொழிலுக்கு அம்மா வழங்கும் ஆசி; அரசு வழங்கும் அங்கீகாரம். பல கோடி மக்கள் தாகத்தில், சில நூறு தண்ணீர்க் கொள்ளையர்கள் லாபம் பார்க்கும் பயங்கரவாதத்துக்கு மக்களைப் பணிந்து போக வைக்கும் சதிச்செயல்.

ஊருக்கு ஒரு இட்லிக் கடை திறப்பதும், காய்கறிக்கடை திறப்பதும், பாட்டில் தண்ணீர் தருவதும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அல்ல. மாறாக, “கட்டுப்படுத்த முடியாது” என்று ஒப்புக்கொள்ளும் நடவடிக்கைகள். “ஏன் கட்டுப்படுத்தவில்லை?” என்று அரசைக் கேட்க விடாமல் மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் நடவடிக்கைகள். பாதுகாக்கப்பட்ட குடிநீர் பத்து ரூபாய் என்பது, தண்ணீர் தனியார் மயத்தை ஊக்குவிக்கும் சூழ்ச்சி!

– தொரட்டி
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________