Friday, January 17, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மணல் கடத்தலை முறியடித்த விவசாயிகள் விடுதலை முன்னணி !

மணல் கடத்தலை முறியடித்த விவசாயிகள் விடுதலை முன்னணி !

-

கேரளாவுக்கான சட்டவிரோத மணல் கடத்தலை முறியடித்தது விவிமு!

முல்லைப்பெரியாற்று பிரச்சனையில் இன்றுவரை தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகமிழைத்து வரும் கேரளா அரசுக்கு எதிராக இப்பகுதி மக்களின் போராட்ட உணர்வு இன்னமும் அணையாத நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் சொரணையற்ற தமிழக அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் ‘நல்லாசியுடன்’ கிரிமினல் பேர்வழிகள் தொடர்ந்து கேரளாவுக்கு மணலை கடத்தி கொள்ளையடித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த வி.வி.மு. தோழர்கள் கடந்த 11.07.2013 அன்று மதிய வேளையில் 5 லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்லும் செய்தி அறிந்து கூடலூரில் பொதுமக்களை திரட்டி 5 லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர்.

விஷயமறிந்து பறந்து வந்த உள்ளூர் போலீசும்,நெடுஞ்சாலை ரோந்து போலிசும் ‘’ஓவர்லோடுக்காக 56,000 ரூபாய் அபதாரம் போட்டுவிட்டோம்.மணல் கொண்டு போவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவு வைத்துள்ளார்கள்.எனவே லாரிகளை மறிக்காதிர்கள்’ என்று சட்டம் பேசினார்கள்.

இதற்கு, வட்டார வி.வி.மு செயலாளர் தோழர். மோகன் , “தமிழகத்துக்கு எதிராக புதிய அணை கட்டத்தான் இந்த மணல் கேரளாவுக்கு போகுது, உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தால் கொடுங்கள் பார்ப்போம்” என்று கேட்டார். சட்டம் பேசிய போலீசு வாயை மூடிக்கொண்டது.

ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வருவாய் துறை அதிகாரிகள் ஒருவரும் இங்கு வராததால் லாரிகளை விடமுடியாது என்று மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.வேறுவழியின்றி லாரிகளை பாண்டிச்சேரிக்கே திருப்பி விட்டது போலீசு.

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மணல் எடுத்துச்செல்ல கூடாது என்ற சட்டம் தெரிந்திருந்தும், புதிய அணை கட்டத்தான் கேரள அரசு தமிழகத்திலிருந்து மணல் அள்ளி வருகிறது என்று தெரிந்திருந்தும் கேரளாவுக்கு மணல் அள்ளுவது தொடர்கிறது என்றால் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த திருட்டு நடக்க வாய்ப்பேயில்லை.

பகுதி மக்களின் ஆக்ரோசமான இப்போராட்டத்தின் வெற்றியானது மக்கள் விரோதிகளுக்கு விழுந்த செருப்படி. கேரளாவுக்கு மணல் கடத்துவது முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவது வரை செருப்படிகள் தொடரும்.

தகவல்,
விவசாயிகள் விடுதலை முன்னணி .
உத்தமபாளையம் வட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க