privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாசீனாவில் யுரேனியம் பதப்படுத்தும் ஆலை மூடல் !

சீனாவில் யுரேனியம் பதப்படுத்தும் ஆலை மூடல் !

-

தெற்கு சீனாவில் உள்ள குவாங்தோங் மாகணத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் 36,000 கோடி ருபாய்) செலவில் அமைக்கப்படுவதாக இருந்த யுரேனியம் (அணு உலைகளுக்கான எரிபொருள்) பதப்படுத்தும் ஆலை மக்கள் போராட்டங்களுக்கு பின் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்கு எங்கள் வீடுகளை திருப்பி தந்து விடுங்கள், நாங்கள் அணுக் கதிர் வீச்சுக்கு எதிரானவர்கள்” என்ற முழக்கத்துடன் போராடிய மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஜியாங்மென்
ஜியாங்மென் வீதிகளில் போராட்டம்.

கடந்த மார்ச் மாதம் சீன தேசிய அணுசக்தி கழகம் (சிஎன்என்சி ) குவாங்தோங் மாகாணத்தில் உள்ள ஹேஷான் நகர அரசுடன் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டது, அதன்படி அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளான யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹேஷான் நகரில் அமைப்பதாக திட்டமிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ஆலைக்குத் தேவையான இடத்தையும் ஒப்புதல்களையும் ஹேஷான் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தத் திட்டம் பற்றிய தகவல்களும், அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் குறித்த செய்திகளும் ஜூலை 4-ம் தேதி ஹெஷான் அரசால் வெளியிடப்பட்டது. அதன்படி ஆலைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வசிக்கும் மக்கள் அரசிடம் இடத்தை கொடுத்துவிட்டு வெளியேற வேண்டும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள், காலம் முழுவதும் ஆலையின் பாதிப்பை சுமக்க வேண்டும்.

இதை அறிந்த மக்கள் கொதித்தெழுந்தனர். கடந்த வெள்ளிக் கிழமை (ஜூலை 12ம் தேதி) ஜியாங்மென் நகர சாலைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் அணுவுலை எரிபொருள் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு தம் எதிர்ப்பை காட்டினார்கள், அந்த ஆலைக்கு எதிரான முழக்கங்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களாக வெடித்தன.

கடந்த சில ஆண்டுகளாகவே சீனா முழுவதும் அனல்மின் நிலையம், அணுமின் நிலையம் போன்றவற்றை அமைக்க மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதும் அதைத் தொடர்ந்து அந்த திட்டங்களை இடம் மாற்றம் செய்வது அல்லது நிறுத்தி விடுவது நடந்து வருகிறது. ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் அணு உலைக்கு எதிரான மனநிலை வளர்ந்திருப்பதும், இதர மின் உற்பத்தி திட்டங்களைப் பற்றிய விவாதங்கள், இயற்கை வளங்கள் பற்றிய அக்கறை, சுற்றுச்சூழலை பற்றிய தெளிவும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமும், பாதுகாக்கும் உணர்வும் வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சீன அரசின நிலையோ திருடனுக்கு தேள் கொட்டிய நிலை. கம்யூனிச அரசு எனும் போர்வையில், பன்னாட்டு முதலாளிகளுக்கு சீனாவை திறந்து விட்டாயிற்று. பெருகிவிட்ட எண்ணற்ற முதலாளிகளின் தொழிற்சாலைகள் இயங்க வேண்டும், அதற்கு மின்சாரம் வேண்டும்.

சீனாவின் மின் உற்பத்தி நிலக்கரி, அணு, நீர் இவற்றை பெரும்பாலும் சார்ந்திருந்தாலும், இவற்றால் கணிசமான அளவு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாற்றாக சீன தேசிய அணுசக்தி கழக விஞ்ஞானிகள் அணுசக்தியை முன் வைக்கிறார்கள். இது சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தாத எரிசக்தி என பரிந்துரைக்கிறார்கள். அதனால் சீன அரசும் இப்பொழுது இருக்கும் அணு மின் உற்பத்தியை வரும் பத்து ஆண்டுகளுக்குள் 5 மடங்கு அதிகரித்து விட வேண்டும் என திட்டமிட்டு வேலை செய்துக்கொண்டிருக்கிறது.

அதற்குத் தேவையான எரிபொருளான யுரேனியத்தை ஆண்டுக்கு 1,000 டன் அளவில் பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹேஷானில் கட்ட அரசு திட்டமிட்டிருந்த்து. ஆனால் ஹேஷான் மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து உடனடியாக அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹேஷான் மக்கள் அரசு, மக்கள் நலன் கருதி திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

இது நிச்சயம் மக்கள் போராட்டத்திற்க்கு கிடைத்த வெற்றி தான், ஆனால் தற்காலிகமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சீனாவில் பன்னாட்டு முதலாளிகளின் தேவைகளுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஒரு அரசு இந்தத் திட்டத்தை ஹேஷானில் இல்லையென்றாலும் வேறு ஒரு இடத்தில் நிறைவேற்றியே தீரும், ஏனென்றால் அரசின் குடுமி முதலாளிகளிடம் உள்ளது.

மேலும் படிக்க