முகப்புசெய்திவினவை வாசிப்பவர்கள் யார் ? - மருதன்

வினவை வாசிப்பவர்கள் யார் ? – மருதன்

-

என் பார்வையில் வினவு – 19 : மருதன்

மீபத்தில் சென்னையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய தாரிக் அலி, ‘இன்றைய சூழலில் தி கார்டியன் போன்ற வெகு சில இதழ்கள் மட்டுமே சீரியஸ் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. உலகளாவிய அளவில் மீடியா பொழுதுபோக்கை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகிறது!’ என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். பத்திரிகையுலகுக்கு மட்டுமல்ல தமிழ் இணைய உலகுக்கும்கூட இது பொருந்தும். இணையத்தை வெறும் பொழுதுபோக்கு கருவியாக மட்டுமே பயன்படுத்திவரும் பெரும்பாலானவர்கள் மத்தியில் வினவு ஓர் ஆறுதலளிக்கும் மாற்று சக்தியாகத் திகழ்கிறது.

வினவை வாசிப்பவர்கள் யார்? கட்டுரைகளுக்கு வரும் மறுமொழிகளை வைத்துப் பார்க்கும்போது நான்காக அவர்களை வகைப்படுத்தலாம் என்று தோன்றுகிறது. முதல் பிரிவினர், வினவு முன்வைக்கும் அரசியலைத் தீவிரமாக எதிர்க்கும் வலதுசாரி சிந்தனையாளர்கள் அல்லது ஆதரவாளர்கள். இரண்டாவது பிரிவினர் இடதுசாரிகள்; ஆனால் வினவின் ‘தீவிர அரசியலை’ நிராகரிப்பவர்கள். மூன்றாவது பிரிவினர், படிக்கும் ஆர்முள்ளவர்கள்; ஆனால் திட்டவட்டமான அரசியல் நிலைப்பாட்டை வந்தடையாதவர்கள். நான்காவது பிரிவினர், வினவின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்பவர்கள்.

வினவில் ஒரு புதிய கட்டுரை வெளியாகும் ஒவ்வொரு முறையும் இந்த நான்கு பிரிவினரும் ஆர்வத்துடன் அதனை வாசிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி வினவு என்ன சொல்கிறது என்பதை வைத்து அதற்கு உடன்பட்டோ அல்லது மாறுபட்டோ முடிவெடுக்கிறார்கள். வினவு சொன்னது தவறு என்று வாதிடுகிறார்கள். சரி என்று ஏற்கிறார்கள். சபிக்கிறார்கள். வசை பாடுகிறார்கள். மகிழ்கிறார்கள். தூற்றுகிறார்கள்.

ஆனால், தவிர்ப்பதில்லை. வினவின் சாதனை என்று நான் கருதுவது இதைத்தான். வினவு இணையத்தில் தவிர்க்கவியலாத ஒரு சக்தியாக அழுத்தந் திருத்தமாக வளர்ந்திருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் ஒரு பெரும் பிரிவினருக்கு வினவு அரசியல் உணர்வை ஊட்டியிருக்கிறது. அவர்களை உரையாட வைத்திருக்கிறது. கோபம் கொள்ள வைத்திருக்கிறது.சினிமா, கவிதை, காதல், அரட்டை என்று ‘லைட்டாக’ உலா வந்து கொண்டிருந்த பலரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்தியிருக்கிறது.

வினவின் கூர்மையான, சமரசமற்ற மார்க்சிய விமரிசன முறையைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும். மாஸ்கோ மொழிபெயர்ப்பு நூல்களை எடுத்து வைத்துக்கொண்டு மார்க்சியம் பயில விரும்பி தோற்றுப்போன பலருக்கு வினவின் எளிமையாக அணுகுமுறை நிச்சயம் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியிருக்கும்.

எனக்குத் தெரிந்து பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், சிறு பத்திரிகை ஆசிரியர்கள் என்று பலரும் வினவைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். இந்த வாசிப்பு அனுபவம் நிச்சயம் அவர்களுக்கு உதவியிருக்கும் என்று நம்புகிறேன்.

வினவில் இடம்பெறும் அனைத்து கட்டுரைகளையும் நான் தவறாமல் வாசித்துவிடுவேன். எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் பயன்படும் என்னும் எதிர்பார்ப்பில் சில ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

கீழ்வரும் விஷயங்களில் வினவு கவனம் செலுத்தவேண்டும்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ

சினிமா விமரிசனங்கள் வெளிவரும் அளவுக்குப் புத்தக விமரிசனங்களோ அறிமுகங்களோ வருவதில்லை. பொருளாதாரம், அரசியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, சமூகவியல் போன்ற துறைகளில் பல புதிய புத்தகங்கள், குறிப்பாக ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பல புதிய விவாதங்கள் இவற்றில் முன்னெடுக்கப்படுகின்றன. வினவு தன் வாசகர்களுக்கு இவற்றை அறிமுகம் செய்யவேண்டியது அவசியம்.

உதாரணத்துக்கு ஜொனாதன் ஸ்பெர்பர் என்பவர் மார்க்ஸின் புதிய வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை (Karl Marx A Nineteenth Century Life) எழுதியுள்ளார். தி கார்டியன் போன்ற இதழ்களில் இதைப் பற்றிய விவாதங்கள், விமரிசனங்கள் வெளிவந்திருக்கின்றன. மார்க்ஸ் வாழ்ந்த 19-ம் நூற்றாண்டின் விரிவான பின்னணியைப் பல புதிய தகவல்களுடன் (அவற்றில் முரண்படுவதற்கும் ஏராளம் உள்ளன) ஆசிரியர் காட்சிபடுத்தியிருப்பதாகப் பலரும் பாராட்டுகிறார்கள். அதே போல், எரிக் ஹாப்ஸ்பாம், தாரிக் அலி, ஹாவர்ட் ஜின், Slavoj Zizek போன்ற சிந்தனையாளர்களையும் அவர்களுடைய பங்களிப்பையும் முறைப்படி அறிமுகம் செய்ய வேண்டும்.

2) அடிப்படைகள்

எது மார்க்சியம்? ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான விளக்கத்தை அளிக்கிறார்கள். உதாரணத்துக்கு, தேசியம் பற்றியோ அறவியல் பற்றியோ மார்க்சியம் அதிகம் பேசியதில்லை என்கிறார்கள் ஒரு சாரார். ஆனால் மார்க்சிய அறவியல் என்னும் தலைப்பிலேயே நூல்கள் வெளிவந்துள்ளதையும் காணமுடிகிறது. இந்தியாவைப் பற்றிய மார்க்ஸின் அணுகுமுறை என்ன? சுயநிர்ணய உரிமை பற்றி மார்க்சியம் என்ன சொல்கிறது? பிரெஞ்சு மார்க்சியம் என்பது என்ன? மார்க்சியம் பற்றிய ஓர் எளிய அறிமுகத்தை ஒரு தொடராக வினவு வெளியிட்டால் பலருக்கும் அது உபயோகமாக இருக்கும்.

3) விளக்கங்கள்

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றோர்மீது பலவிதமான அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. சோவியத் யூனியன் குறித்தும் மக்கள் சீனக் குடியரசு குறித்தும் பலவிதமான முரண்பட்ட தகவல்களும் பார்வைகளும் இணையத்திலேயே காணக்கிடைக்கின்றன. ‘இவற்றுக்கான விளக்கங்கள் ஏற்கெனவே பலமுறை சொல்லப்பட்டுவிட்டன’ என்னும் பதில் ஒருவரையும் திருப்திபடுத்துவதில்லை. ‘மாவோ பல லட்சம் பேரைக் கொன்றார்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லி விக்கிபீடியா லிங்க் கொடுப்பவர்களுக்கும் அதை படித்துவிட்டு உள்ளவாறே ஏற்பவர்களுக்கும் தெளிவு பிறக்கும் வகையில் ஒரு பகுதியை வினவு தொடங்கவேண்டும். இதில் ‘பிரபலமான குற்றச்சாட்டுகள்’ அனைத்துக்கும் ஆதாரபூர்வமான பதில்களையும் விளக்கங்களையும் தொகுத்து ஆவணப்படுத்தவேண்டும்.

உதாரணத்துக்கு, கம்யூனிச சமூகத்தில் மத நம்பிக்கை நீடிக்குமா? பெண்கள் பொதுவுடைமையாக்கப்படுவார்களா? குடும்ப உறவுகள்மீது அரசின் தலையீடு இருக்குமா? போன்ற கேள்விகளையும் அச்சங்களையும் மார்க்சியத்தின் கோட்பாடுகள் என்னும் நூலில் எங்கெல்ஸ் எளிமையாகக் கையாண்டிருப்பார். இதே பாணியில் கம்யூனிசம் மற்றும் கம்யூனிஸ்டுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களை வினவு ஆவணப்படுத்தவேண்டும். மார்க்சியத்தின்மீது ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் ஆனால் பல குழப்பங்களில் சிக்கித் தவிக்கும் புதிய வாசகர்களுக்கும் இந்தப் பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வினவு தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள்.

1) பல சமயங்களில் திரைப்படங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

2) திடீரென்று சில கட்டுரைகளை வட்டார மொழி வழக்கில் அல்லது சென்னை தமிழில் அல்லது ஒருவித காமெடி நடையில் எழுதுவது.

3) மாற்று கருத்துடைய ஒருவர் உரையாட முன்வரும்போது அவரை விரட்டியடிக்கும்படியான வேறு சில ஆதரவாளர்களின் உரையாடல்களை அனுமதிப்பது. இவ்வாறு செய்வது மாற்று கருத்துடையவர்களை ஒதுக்கிவைக்கும்.

ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வினவுக்கு வாழ்த்துகள். உழைக்கும் வர்க்கத்தின் குரலாகத் தொடர்ந்து பல்லாண்டுகள் வினவு செயல்படவேண்டும் என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்.

– மருதன்
http://marudhang.blogspot.in/

 1. //..1) பல சமயங்களில் திரைப்படங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது…//

  திரைப்படவிமர்சனம் உண்மையில் பலரை வினவு நோக்கி ஈர்க்கும். லைட் ரீடிங் என்று சொல்லப்படும் ஆழமாக படிக்காத புதிய வாகர்களை ஈர்க்க இது நல்ல வழியாகும்.

  //..2) திடீரென்று சில கட்டுரைகளை வட்டார மொழி வழக்கில் அல்லது சென்னை தமிழில் அல்லது ஒருவித காமெடி நடையில் எழுதுவது../

  நகைச்சுவையை தவிர்த்து விட்டால் பொதுவுடைமை பற்றிய கட்டுரைகள் , படிக்க சலிப்பூட்டுபவையாக அமைந்துவிடும்,. படிப்பவரை மேலும் படிக்க தூண்டுகின்றன என்ற வகையில் நகைச்சுவை கண்டிப்பாக வேண்டும்…

  வட்டார மொழி பயன்பாட்டின் ஒரே சிக்கல், அந்த வட்டாரத்தினரை தவிர மற்றவர்களூக்கு புரிந்துகொள்ள கொஞ்சம் நேரம் பிடிக்கும் என்பது தான்.

  3) மாற்று கருத்துடைய ஒருவர் உரையாட முன்வரும்போது அவரை விரட்டியடிக்கும்படியான வேறு சில ஆதரவாளர்களின் உரையாடல்களை அனுமதிப்பது. இவ்வாறு செய்வது மாற்று கருத்துடையவர்களை ஒதுக்கிவைக்கும்.

  கமேண்டின் அமைப்பை சற்று மாற்றலாம்.. சவுக்கு தளத்தில் இருப்பது போல் + / – தரலாம்.

  மேலும் ஒரு குறிப்பிட கமேண்டின் மறு மொழியாக அமைந்ததை தேவைபட்டால் படிக்கவும், இல்லை படிக்காமலும் அடுத்த கமேண்டுக்கு போகும் வகைல் இருந்தால் நன்றக இருக்கும்.

  அதாவது முதல் வரிமட்டும் தெரியும் படிக்க வெண்டும் என்றால் விரிக்க வேண்டும்.

  அனுமதிப்பது மறுப்பது என்று வந்தால் , தனி நபர் தாக்குதலை தவிர்த்து அனைத்தையும் அனுமத்திப்பதே நல்லது. அப்போது தான் ஆரோக்கியமான உரையாடல் இடம்பெறும்.

 2. “பல சமயங்களில் திரைப்படங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது”-

  சமுகத்தில் பண்பாட்டை கட்டியமைப்பதில் சினிமாவிற்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். பெரும்பாண்மை மக்களின் பொழுதுபோக்காக உள்ளது. விமர்சனத்தையும் தவிர்க்க முடியாது என்றே கருதுகிறேன். அவசியமான சில துறைகளில் கட்டுரைகள் வராததால் சினிமாவிற்கு அதீத முக்கியத்துவம் தருவது போல் தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

 3. “எனது பார்வையில் வினவு” வாசகர்களின் பார்வை பிரமிப்பூட்டுவதாக உள்ளது. வாசகர்கள் வினவை ஊடுருவிப் படிக்கிறார்கள்.வாசகர்கள் பலரும் சிறந்த படைப்பாளிகளாக வளர்ந்துள்ளார்கள் என்பது வினவின் மற்றொரு சாதனை. வலையுலகில் மட்டுமல்ல இது எழுத்துலகிலும் பிரதி பலிக்கும். தமிழ் சமுதாயம் நல்லதை நோக்கி பயணிப்பதில் மகிழ்ச்சி.

 4. மார்க்சியத்துக்கு புறம்பான அரசியலை வைத்திருப்பவர்கள் அல்லது மார்க்சுக்கு கூடுதல் விளக்கம் என முதலாளித்துவ சித்தாந்தங்களையே கம்யூனிச போர்வையில் தரும் பலர் பற்றி வினவு தளம் எழுத வேண்டிய அவசியம் என்ன? அப்படி ஏதாவது தருணங்கள் வரும்போது நீங்கள் சுட்டிக்காட்டுவதுதானே சரியாக இருக்கமுடியும்.
  அறவியலைப் பற்றி பேசுவது எனில் அறம் காலம் சார்ந்து மாறாமல் இருக்கிறதா என்ன? மற்றபடி அந்தந்த சமூகத்துக்கான அறத்தை கம்யூனிஸ்டுகள் எப்போதும் சரியாக முன்வைக்க தவறுவதில்லையே1
  அவதூறுகளிலிருந்து உண்மையை கண்டறிவது என்பது ஒருவித கற்றலின் அறிவியல் பார்வையாக உங்களுக்கு தெரிகிறதா?

 5. மிகச் சரியான பார்வையை கட்டுரை காட்டுகிறது. சமுதாயத்தில் பல தரப்பினரும் உள்ளனர். அனைவரையும் உள்வாஙக எல்லா விடயஙளும் இருந்தால் வாசகர் எண்ணிக்கை பெருகும். அப்படி வருபவர்களையும் எமது வழிக்கு வர வைப்பதே எமது இலட்சியமாக இருக்கவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க