Tuesday, May 6, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

-

2007-08-ல் 40.24 ஆக இருந்த டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வெகு வேகமாக வீழ்ச்சியடைந்து 60 ரூபாய்க்கு வந்துவிட்டது. மூலதனத்துக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களையே சார்ந்திருப்பதுதான் ரூபாயின் மதிப்பு தள்ளாடுவதற்கு அடிப்படையான காரணம் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே ஒப்புக்கொள்கின்றனர். தாங்கள் போட்ட முதலீட்டுக்குக் கொள்ளை இலாபத்தை உறிஞ்சி வந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள், அமெரிக்க அரசு தனது நாட்டில் முதலீட்டுக்கான வட்டி வீதத்தைத் தற்சமயம் சற்று உயர்த்தியவுடனேயே, வெட்டுக்கிளிக் கூட்டம் போல இந்தியாவிலிருந்து வெளியேறி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தொடங்கி வைத்ததோடு, துரிதப்படுத்தியும் வருகின்றன.

11-cartoonஇன்னொருபுறம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. “மார்ச் 2014-க்குள் 172 பில்லியன் டாலர் அந்நியக் கடனை இந்தியா திருப்பிக் கொடுக்க வேண்டும். இது அந்நிய செலாவணி கையிருப்பின் 60 விழுக்காட்டை விழுங்கி விடும்” என்கிறது 29.6.2013 இந்து நாளேட்டின் தலைப்பு செய்தி. கடந்த ஆறே ஆண்டுகளில் அந்நியக் கடன் 3 மடங்கு அதிகரித்திருக்கிறதாம். அது மட்டுமல்ல, இந்த 172 பில்லியனில் 44 சதவீதத் தொகையானது, டாடா – அம்பானி போன்ற இந்தியத் தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருக்கும் கடன். இந்தக் கடனுக்கும் இந்திய அரசுதான் (அதாவது இந்திய மக்கள்தான்) பொறுப்பு. இதுபோக, தற்போதுள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டுமானால், 90 பில்லியன் டாலர் அந்நிய மூலதனத்தை இந்தியா கவர்ந்திழுக்க வேண்டும் என்று கூறுகிறது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில்.

ஆனால், கடந்த ஒரு மாதத்திற்குள் 5 பில்லியன் டாலர் அந்நிய மூலதனம் வெளியேறியிருப்பதாக கூறுகிறது மும்பை பங்குச் சந்தை. “நெருக்கடியான” இந்தச் சூழ்நிலைமையில் அந்நிய மூலதனத்தைக் கவர்ந்திழுக்க வேண்டுமானால், அவர்களுடைய இரத்தப் பசிக்கு தீனி போடும் வகையில் தனியார்மய-தாராளமயக் கொள்கையைத் தீவிரப்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்று மன்மோகன் சிங் கும்பல் வாதாடும்.

வேறுவழியின்றியோ, நெருக்கடியின் காரணமாகவோ அந்நிய மூலதனத்துக்கு அடிபணிவதாக இவர்கள் கூறுவது பித்தலாட்டம் என்பதையும், ஒப்பீட்டளவில் நெருக்கடி இல்லாத காலங்களிலும் அந்நிய மூலதனத்துக்கு நாட்டை விலை பேசுவதுதான் இவர்களது கொள்கையாக இருந்தது என்பதையும் ஆதாரங்ளுடன் விளக்குகிறது இக்கட்டுரை.

– ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

*****

ந்தியப் பொருளாதாரம் அந்நிய முதலீடுகளின் வரவைப் பெரிதும் சார்ந்திருப்பதனால் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் (Foreign Institutional Investors) உத்தரவுகளுக்கு அடிபணிவதைத் தவிரத் தனக்கு வேறு வழியில்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார். 2007-08 -ல் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2011-12 -ல் முன்னெப்போதும் இல்லாத வகையில் 4.2 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2012-13 -ல் இது 5 விழுக்காட்டைத் தாண்டி விடும் என்பது உறுதி. அந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இது 6.7 சதவீதமாக இருந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அபாயகரமான நிலையைப் பார்க்கும்போது, முதன்முறையாக நிதியமைச்சர் எதார்த்த நிலையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

ஆனால் ஆள்வோர், அந்நிய மூலதனத்தின் காலில் விழுந்து கும்பிடுவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அபாயகரமான நிலைமைதான் காரணம் என்பது உண்மையல்ல. 2001-04 -ல் நடப்புக் கணக்கு உபரியில் இருந்தபோதும் இவர்கள் அந்நிய மூலதனத்தின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடந்தனர் என்பதே இதற்கு சான்று.(1)

2007-08 -லும் இது தெளிவாக வெளிப்பட்டது. அந்த ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1.3 விழுக்காடாக இருந்தது. அந்நிய மூலதன வரவோ, இதனைவிடப் பன்மடங்கு அதிகமாக, நிகர உள்நாட்டு உற்பத்தியில் 8.6 விழுக்காடாக இருந்தது. இதன் காரணமாக இந்த முதலீட்டு வரவு, அந்நியச் செலாவணிக் கையிருப்பில் சேர்க்கப்பட்டது. இந்த நடவடிக்கை பல்வேறு விதங்களில் பொருளாதாரத்தின் மீது சுமையைக் கூட்டியதுடன் அதனைச் சிதைக்கவும் செய்தது. எனவே, அந்நிய மூலதனத்தின் முன் மண்டியிடுவது என்பது குறிப்பிட்ட சூழ்நிலைக்கான எதிர்வினை அல்ல. இதற்கான வரலாற்று வேர்கள் இன்றைய இந்திய ஆளும் வர்க்கங்கள் உருவாகி வந்த நிகழ்ச்சிப்போக்கிலேயே இருக்கின்றன.

எனவே, நிதியமைச்சருடைய நடவடிக்கைக்கான உண்மையான தூண்டுதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை திடீரென படுமோசம் அடைந்திருப்பதல்ல. மாறாக, சில்லறை வணிகத்தை அந்நிய நேரடி முதலீட்டுக்குத் திறந்து விடுவது உள்ளிட்ட, கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்ற எல்லாவிதமான நடவடிக்கைகளையும் அமல்படுத்துவதற்கான ஒரு முகாந்திரம். இந்நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களிடம் சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“என்னுடைய மிகப்பெரும் கவலை நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. அது தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு, ஏன் அடுத்த ஆண்டும்கூட நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க நாம் 75 பில்லியன் டாலர்களைக் கொண்டு வந்தாக வேண்டும். நமக்கு முன்னே மூன்று வழிகள்தான் இருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிதி நிறுவன முதலீடு அல்லது வெளிநாட்டு வர்த்தகக் கடன்.”

11-cartoon-2அந்நிய மூலதனத்தைத் திருப்திப்படுத்த முதலாவதாகவும் முதன்மையானதாகவும் பட்ஜெட் கையாளும் வழிமுறை அரசு செலவினத்தை குறைப்பதாகும். 2013-14-ம் ஆண்டிற்கு நிதிப்பற்றாக்குறை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 4.8% என்பதை மாற்றவியலாது என்பதாலும், பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள வருவாய் இனங்களிலிருந்து நிதி வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதாலும், இந்த ஆண்டின் மத்தியிலேயே அரசு செலவினங்கள் மேலும் வெட்டப்படும் என்பது, அநேகமாக முன்கூட்டியே தெரிந்துவிட்ட முடிவாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்கு செலவினங்களை கண்மூடித்தனமாக வெட்டக்கூடியவர் சிதம்பரம். இதை அவர் 2012-13-லேயே நமக்கு நிரூபித்திருக்கிறார்.

இரண்டாவதாக, ஷோமே கமிட்டியின் சிபாரிசுகளுக்குத் தனது ஒப்புதலை வழங்குவதன் மூலம் அந்நிய மூலதனத்தை மகிழ்விக்கும் வகையில் பட்ஜெட் அமையவேண்டும். சென்ற பட்ஜெட்டில் அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி “வரி தவிர்ப்புநடவடிக்கைகளுக்கு எதிரான பொதுவிதிகளை” (General Anti Avoidance Rules)-அறிவித்திருந்தார். வரியைத் தவிர்ப்பதைத் தவிர வேறு எந்த வணிக உள்ளடக்கமோ நோக்கமோ இல்லாத பரிமாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு (எடுத்துக்காட்டாக மொரிசியஸ் வழியாக இந்தியாவில் முதலீடு செய்ல்) வரிச்சலுகைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வழங்குகின்ற அந்த அறிவிப்பு, அந்நிய நிதி முதலீட்டாளர்களின் ஆத்திரம் கொண்ட எதிர்வினையைத் தூண்டிவிட்டது.

முகர்ஜியின் இடத்துக்கு சிதம்பரம் வந்தவுடன், வரித் தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் பொருட்டு ஷோமே கமிட்டியினை நியமித்தார். என்னவிதமான சிபாரிசுகள் அந்தக் கமிட்டியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டனவோ அவற்றை அந்தக் கமிட்டி கச்சிதமாக வழங்கியது. அதன் பெரும்பான்மையான சிபாரிசுகளை ஏற்பதாக ஜனவரி 14-ம் தேதியன்று சிதம்பரம் அறிவித்தார். வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுவிதிகளை ஏறத்தாழ குழி தோண்டிப் புதைக்கின்ற இந்த முடிவு பட்ஜெட் உரையில் இடம்பெறுகிறது. வேறு எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல், வரித் தவிர்ப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டு வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வோடாஃபோன் நிறுவனத்துடன் ஒரு சுமுகத் தீர்வை எட்டுவதற்கு நிதியமைச்சகம் இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

மேலும், அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, அவற்றுக்கு வசதிகள் செய்து கொடுப்பது, நாணயச் சூதாட்டத்தில் ஈடுபட அவர்களை அனுமதிப்பது, குறிப்பிட்ட துறைகளில் அந்நிய முதலீடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உச்சவரம்புகளை நீக்குவது போன்ற பல நடவடிக்கைகளுக்கு பட்ஜெட் உரை கணிசமான முக்கியத்துவம் அளிக்கிறது.

இருப்பினும் இத்தனை சலுகைகளையும் பொருட்படுத்தாது, பட்ஜெட் நாளன்று தங்களது கோபம் முழுவதையும் நிதி மசோதாவின் ஒரேயொரு அம்சத்தை நோக்கித் திருப்பின அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். அந்த அம்சம் இந்தியாவுடன் வரி சார்ந்த ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் நாடுகளின் வழியாக வருகின்ற முதலீடுகள் பற்றியது.

இந்தியாவுக்கும் மொரிசியஸுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. இதன்படி மொரிசியஸில் தங்குமிட உரிமை பெற்ற நிறுவனங்கள், தாங்கள் செலுத்த வேண்டிய மூலதன ஆதாய வரியை மொரிசியஸில்தான் செலுத்தும். இந்தியாவில் அல்ல. மொரிசியஸிலோ மூலதன ஆதாய வரியே கிடையாது. எனவே அந்நிய முதலீட்டாளர்கள் மொரிசியஸில் பெயர்ப்பலகை நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தமது முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள். ஆம், இந்தியாவில் போடப்பட்டிருக்கின்ற அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு ஆகியவற்றில் மொரிசியஸ்தான் முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூருக்கு இரண்டாவது இடம். சிங்கப்பூருடனும் இந்தியா வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

தற்போது கொண்டுவரப்பட்ட நிதி மசோதாவின் ஒரு பிரிவுதான் அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் கோபம் கொள்ளக் காரணம் என்று தெரிகிறது. ஒரு நிறுவனம் மொரிசியஸில் தங்குமிட உரிமை பெற்றது என்ற சான்றிதழை மட்டும் காட்டி மொரிசியஸ்-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வரிச்சலுகையை இந்திய அரசிடமிருந்து பெறவியலாது என்றும், இறுதியில் இந்த வரிச்சலுகையின் ஆதாயத்தைப் பெறுகின்றவர் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறது இந்தப் பிரிவு. மேலும், இந்தச் சலுகையைப் பெறுகின்றவர் மொரிசியஸைச் சேர்ந்தவராக இல்லாத பட்சத்தில், அந்த நிறுவனங்களிடமிருந்து இந்திய வருவாய்த்துறை அதிகாரிகள், மூலதன ஆதாய வரியை வசூலிக்க முடியும் என்றும் இந்தப் பிரிவு கூறுவதாகத் தெரிகிறது. இந்திய வரிச்சட்டங்கள் எனப்படுபவை வெறும் கேலிக்கூத்தாக ஆகிவிடாமல் தடுக்க வேண்டுமானால், இப்படி ஒரு நிபந்தனை அவசியம் என்பதை யாரும் விளங்கிக் கொள்ள இயலும்.

ஆனால், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பட்ஜெட் தினத்தன்றே, பங்குகளை விற்கத் தொடங்கியதன் மூலம மோதலைத் துவக்கினர். வரி தொடர்பான தங்குமிடச் சான்றிதழுக்கு மேல் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் போக மாட்டார்கள் என்றும், அந்நிய முதலீட்டாளர்களின் தங்குமிடத் தகுதியைக் கேள்விக்குள்ளாக்க மாட்டார்கள் என்றும் நிதியமைச்சர் மறுநாளே அறிக்கை வெளியிட்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய வரிச் சட்டங்களைத் தொடர்ந்து கேலிக் கூத்தாக்கலாம் என்று உத்திரவாதம் அளித்தார். (2)

இத்தகைய பெருமுயற்சிகளுக்குப் பின்னரும் தன்னுடைய பட்ஜெட்டை வைத்து அந்நிய முதலீட்டாளர்களை நிதியமைச்சரால் திருப்திப்படுத்த இயலவில்லை என்றே தெரிகிறது. தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உண்மையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை அவர்கள் இடையறாத கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். புதிய சலுகைகளையும் நடவடிக்கைகளையும் கோரித் தொடர்ந்து நிர்ப்பந்தங்களையும் கொடுத்து வருகிறார்கள்.

அடிக்குறிப்புகள் :

(1) இந்தக் காலகட்டத்தில் அரசுக் கருவூலத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் பணத்தைப் பிடுங்கி, அந்நிய நிதி முதலீட்டாளர்களுக்கு வழங்கிய பளிச்சென்று தெரியும் இரண்டு முடிவுகளைப் பார்ப்போம்.

“மொரிசியஸில் உள்ள பெயர்ப்பலகை நிறுவனங்கள் மூலம் தங்களுடைய முதலீடுகளை இந்தியாவுக்குள் அனுப்புவதன் மூலம், மொரிசியஸுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஒரு அந்நிய முதலீட்டாளர் தன்னுடைய ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்வாரேயானால், அதனைக் கண்டுபிடிப்பது அரசின் வரி வசூல் நிர்வாகத்துடைய கடமை” என்று 2002-ல் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அக்டோபர் 2002-ல் மைய அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தன் விளைவாக, “மொரிசியஸ் பாதை” யின் மூலம் நடக்கும் பிரம்மாண்டமான வரி ஏய்ப்பு இன்று வரை தொடர்கிறது. இரண்டாவதாக, ஒரு முதலீட்டாளர் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கிய நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குப் பின்னர் விற்பனை செய்வாரேயானால் அதற்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு அளித்தது 2003-04 பட்ஜெட்.

(2) இந்த மொத்த நிகழ்வுமே 2000 ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களின் மறுபதிப்புத்தான். அன்று அரசாங்கம் ஒரு சுற்றறிக்கையை (எண். 789) அனுப்பி, வரி உறைவிடச் சான்றிதழ் கொடுத்துவிட்டால் போதும்; அதனை ஆராயாமல் நாங்கள் கண்ணை மூடிக் கொள்கிறோம் என்று அரசு விளக்கமளித்தது.

(Aspects of India’s Economy, Issue No.53 இல் வெளிவந்த “FIIs:Difficult to please” என்ற கட்டுரையின் தமிழாக்கம்.)
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________