முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்அசோக் லேலாண்ட் சிஐடியு துரோகம் ! நிர்வாகிகள் விலகல் ! !

அசோக் லேலாண்ட் சிஐடியு துரோகம் ! நிர்வாகிகள் விலகல் ! !

-

30.07.2013, ஓசூர்.

சூரில் கனரக வாகனங்களை உற்பத்தி செய்துவரும் தரகு முதலாளித்துவ நிறுவனமான அசோக் லேலாண்டு, தனது பிளாண்ட்- 1 ல், காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ், சி.எல் முறைகளை புகுத்தி அதன் மூலம் உபரியாகும் தொழிலாளர்களை யூனிட்- 2 க்கு இடமாற்றம் என்ற பெயரில் துரத்தியடித்து விட்டு ஆட்குறைப்பு செய்து விடுவது என்ற திட்டத்தை தனது அடியாள் படையாக அங்கீகரித்து வைத்திருக்கும் துரோக தொழிற்சங்கத் தலைமையான சி.ஐ.டி.யு மற்றும் மைக்கேல் அணியின் மூலமாகவே செய்துள்ளது.

“காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ், சி. எல், முறைகளை புகுத்த நிர்வாகம் எத்தனித்தால்…? அதற்கு சங்கம் துணை நின்று அனுமதித்தால்…? அதனை எதிர்த்து சி.ஐ.டி.யு அணி இறுதிவரை தொழிலாளர் வர்க்க உணர்வுடன் போராடி முறியடிக்கும்” என்று வாய் கிழிய பேசிவிட்டு செயலில் ஆலை நிர்வாகத்தின் ஆணையை தொழிலாளர்கள் மீது சொந்த அணிகளையே மதிக்காமல் சர்வாதிகாரமாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் தாங்கள் தொழிலாளர் இயக்கத்தில் ஒளிந்திருக்கின்ற வர்க்க துரோகிகள்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் கொண்டனர். இதனை வாசகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் சி.ஐ.டி.யு அணியிலிருந்து வெளியேறிய லேலாண்டு அணி நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்களின் விலகல் கடிதங்களை இங்கே அப்படியே பிரசுரிக்கிறோம்.

நன்றி!

தகவல்: பு.ஜ செய்தியாளர், ஓசூர்.
______________________
சி.ஐ.டி.யு அணித் தலைமைக்கு….

அனுப்புனர்
அணி நிர்வாகிகள்,
சி.ஐ.டி.யு. அணி.
அசோக் லேலண்ட் 1, ஓசூர்.

பெறுநர்
திரு பொதுச் செயலாளர்/ தலைவர் அவர்கள்.
சி.ஐ.டி.யு. அணி.
அசோக் லேலண்ட், ஓசூர்.

பொருள் :
அணியின் தொழிலாளர் வர்க்கத் தன்மை செயலிழந்ததைத் தொடர்ந்து அணியின் நிர்வாக பொறுப்பிலிருந்து விலகுவது சம்பந்தமாக.

மதிப்பிற்குரிய பொதுச் செயலாளர், தலைவர் அவர்களுக்கு,

நாங்கள் இந்தக் கம்பெனியில் சேர்ந்தது முதல் இன்று வரை எங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு சேர்ந்து செயல்பட்டு வருகிறோம். சி.ஐ.டி.யுவின் மீது கொண்ட பற்றுதல் காரணமாகவும், கொள்கை பிடிப்பு காரணமாகவும், முழு ஈடுபாட்டுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டு வந்திருக்கிறோம்.

சமீப காலமாக மட்டுமன்றி கிட்டத்தட்ட சில வருடங்களாகவே அணியின் செயல்பாடுகள் தனிமனித செயல்பாடாகவும், அணியின் தொழிலாளர் வர்க்கத் தன்மை செயலிழந்து, ஜனநாயகப் பாதையை மறுத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது அணியின் நிர்வாகிகள் என்கிற முறையில் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நன்கு கவனித்துக்கொண்டு வந்திருக்கிறோம்.

இந்த பேச்சுவார்த்தையின் போது ஆரம்பத்தில் அணியின் நிர்வாகக்குழு, பொதுக்குழு எடுத்த நிலைப்பாட்டிற்கும், முடிவிற்கும் மாறாகவும், (அணியின் தீர்மானம் 1. எம்.டி.வி. அவுட்சோர்ஸ், 2. மேன் பவர் இடமாற்றம்.) அணியின் செயல்பாடு இருக்கிறது.

அதன்பிறகு மாவட்டக் குழு முன்னிலையில் நடந்த அணி நிர்வாகிகள் கூட்டத்தில் அவுட் சோர்ஸ், காண்ட்ராக்ட் சி.எல். போன்ற தொழிலாளர் விரோத கொள்கைகளை சி.ஐ.டி.யு ஒத்துக்கொள்ளாது என்றும் அப்படி ஏதாவது சங்கம் இது சம்பந்தமாக முடிவு எடுக்கும் பட்சத்தில் சி.ஐ.டி.யு அதை எதிர்த்து போராடும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அந்த நிலைப்பாட்டிற்கு மாறாக பகிரங்கமாகவே தற்பொழுது அணி, நிர்வாகத்தின் பக்கம் நிற்பதையும், அதற்கு தகுந்தாற்போல் 10.7.13 அன்று மாவட்டச் செயலாளர் தோழர் பீட்டர் முன்னிலையில் நடைபெற்ற அணியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அணி சங்க நிர்வாகி தோழர் பெத்து முருகேசன் அவர்கள் தற்பொழுது கையெழுத்தாகும் ஒப்பந்தம் முழுக்க முழுக்க ஒரு அவுட் சோர்ஸ், ஒப்பந்தமாகவே இருக்கும். நிர்வாகம் கேட்ட அவுட் சோர்ஸ், காண்ட்ராக்ட் சி.எல், இவைகளை ஒத்துக்கொண்டு அதன் மூலம் உபரியாகும் தொழிலாளர்களை யூனிட் 2-க்கு இடமாற்றம் செய்வது போன்ற அனைத்து தொழிலாளர் விரோதக் கொள்கைகளும் ஒத்துக் கொள்ளப்படும் என்ற சங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாகவே தெரிவித்த பிறகும் சங்கத்தின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அணித் தலைவர், செயலாளர் அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் அதை எதிர்க்காமல் ஆமோதித்து அமைதியாக இருந்தனர். இது வர்க்க விரோத செயலாகும்.

தற்பொழுது கம்பெனியின் புறச்சூழ்நிலைகளும், அகச்சூழ்நிலைகளும் எவ்வாறு இருந்தாலும் சி.ஐ.டி.யு அணியானது தன் கொள்கைகளையோ இந்த ஒப்பந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தவோ அல்லது தொழிலாளர்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகளை தடுக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்தின் அடாவடிக்கு எதிராக எந்தவித எதிர்வினைகளையும் பதிவு செய்யும் வகையில் எவ்வித இயக்கமும் நடத்தப்படவில்லை.

ஒரு தொழிலாளி ஒரு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என்பது தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தன்னைப் போல் சக தொழிலாளர்களுக்கு அந்த இயக்கம் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காகவுமே தவிர வேறெந்தக் காரணங்களும் இருக்க முடியாது. இந்த சங்கம் தொழிலாளர் வர்க்கத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் என நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. எனவே இந்த இயக்கத்தில் நாங்கள் தொடர்ந்து இருக்கவோ, செயல்படுவதோ என்பது தொழிலாளர் வர்க்க விரோத செயல்பாடாகவே கருதுகிறோம். எனவே நாங்கள் அணியின் நிர்வாக பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் எங்களை விலக்கிக்கொள்கிறோம் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கனம்
அணி நிர்வாகிகள்.

இடம்: ஓசூர்.
தேதி: 12.7.2013.

லேலாண்டு தொழிலாளர்களுக்கு…..

சி.ஐ.டி.யு அணியிலிருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அதன் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து விலகிக் கொள்வது தொடர்பாக……

நமது சங்கம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான கோரிக்கைகளை நிர்வாகத்திடம் கொடுத்தவுடன், நிர்வாகத்தரப்பிலிருந்து வழக்கம் போல் ஆட் தூக்கி சரத்துக்கள் வெளியிடப்பட்டன.

ஏ.எல்.டி.எஸ். என்ற சட்ட விரோத உற்பத்தி முறை மூலம், நிரந்தரத் தொழிலாளர் வேலை முறையிலிருந்து, காண்ட்ராக்ட் வேலை முறையை வலுப்படுத்துவது முதல், இடமாற்றம் என்ற பெயரில் ஆட்குறைப்பு, காண்ட்ராக்ட் சி.எல்., புகுத்துதல்…..என படமெடுத்தது நிர்வாகம். தொழிலாளர்கள் மத்தியில் விவாதம் கிளம்பியது. இப்பொழுது கிளம்பியிருப்பது சாதாரண நாகம் அல்ல, கடும் விச ஜந்து. இது கடித்தால் ஆள் பிழைப்பது கடினம் என்ற பொதுப் பார்வையில் பேசப்பட்டது. தொழிலாளர்களை தூண்டில் போட முதலில் ஒரு தொகை அறிவிக்கப்பட்டது.

“நமது அணியும், சங்கத்தலைமையும் நம்மைக் கைவிடாது. நம்மை எப்படியும் காப்பாற்றியே தீரும்.” என்று தொழிலாளர்கள் சமாதானம் ஆனார்கள். ஒரு நீண்ட அமைதி- உற்பத்தி, அமைதி- உற்பத்தி இது மேலும் வளர்ந்து மயான அமைதி சூழ்ந்தது. உடனே நிர்வாகத்தின் பசி லே-ஆஃப் கேட்டது.

“நிர்வாகத்துடன் எந்த அளவுக்கு நாம் ஒத்துழைக்கிறோமோ, அந்த அளவுக்கு நிர்வாகம் ஒப்பந்த பேச்சு வார்த்தையில் முன்னேறி வரும்.” என சங்கத் தலைவர் மைக்கேல் அவர்களின் அறிவிப்பு வெளி வந்தது. நிர்வாகமும் பசியைத் தீர்த்துக்கொண்டது. மீண்டும் வெறுமையின் பயணம் உற்பத்தியை மட்டும் இழுத்துக் கொண்டு சென்றது. தொழிலாளர்கள் மத்தியில் சங்கத்தின் மீதான நம்பிக்கையில் “முணு முணுப்பு” வெறும் தூறலாய் வந்து போனது.

வெறுமை பத்து மாதங்களை விழுங்கிவிட்டு தெனாவட்டாக நகர்ந்து கொண்டிருந்தது. சந்தை நிலவரம் தொழிலாளர்களை மட்டும் பயமுறுத்தியது. மீண்டும் லே-ஆஃப். சங்கம் சந்தர்ப்பம் பார்த்து போராட்டம் நடத்துவதாக நம்பச் சொன்னது. “சம சர்வீசுக்கு சம சம்பளம்” எனும் முழக்கத்தை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம், கேண்டீன் புறக்கணிப்பு, நான் கோஆப்பரேசன் என ‘முன்னேறுகிறது சங்கம்’. அடுத்து “ஃபைவ் டிஜிட் சம்பளம் கூட கிடைக்காது” என்பதை போட்டுடைக்கிறார் ஆலை வாயிலில் தலைவர் மைக்கேல். போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தால் ஒப்பந்தப் பேச்சு வார்த்தையில் முன்னேறி வருவதாக நிர்வாகத்தின் நிலையாய் மீண்டும் மைக்கேல் அறிவிப்பு வெளிவருகிறது.

அடுத்தடுத்த பேச்சு வார்த்தை என்று எவ்வளவுதான் நகர்ந்தாலும் நிர்வாகம் 400 பேர் இடமாற்றத்தில் உறுதியாக இருப்பதாக அறிவிப்பு. இழுத்தடிப்பு, அறிவிப்பு என அதே ஒப்பாரி.

முன்னேற்றம் இல்லையென்றால் போராட்டம் என சொன்ன சங்கம் சம்பிரதாயப் போராட்டத்திற்கும் முழுக்குப்போட்டது. இந்நிலையில் இடமாற்றத்திற்கான எந்த அடிப்படை நியாயமும் இல்லை என்பதை விளக்கி தொழிலாளர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை சங்கத் தலைமையிடம் கொடுத்த பொழுது ‘இடமாற்றம் என்பது சங்கத்தின் நிலைபாடே இல்லை‘ என்று சொல்லி தொழிலாளர்களை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அணி பொதுக்குழு கூட்டப்பட்டது. நிர்வாகத்தின் நிலைப்பாட்டை ஒட்டி விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் முடிவில் மேன்பவர் இடமாற்றம், மேன்பவர் அவுட்சோர்ஸ் போன்றவை ஒத்துக் கொள்வதில்லை என முடிவு எட்டப்பட்டு ஒரு மனதாக சி.ஐ.டி.யு தீர்மானம் இயற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நமது அணியின் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. சி.ஐ.டி.யு. ன் கொள்கைக்கு எதிரான தொழிலாளர் விரோத கோரிக்கைகளான அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட் சி.எல். போன்றவைகளை அனுமதிப்பதில்லை எனவும், இதனால் ஏற்படப்போகும் யூனிட் 2 இடமாற்றத்தை தடுத்து நிறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட அணியின் முடிவுகளை செயல்படுத்த சி.ஐ.டி.யு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அணி உறுப்பினர்கள் இது தொடர்பாக இயக்கம் எடுக்கச் சொல்லி அணித் தலைமையிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அணி உறுப்பினர்கள் தமது சொந்த முயற்சியில் தொழிலாளர்களை திரட்டி நிர்வாகத்தின் தாக்குதலுக்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோதும் அணித் தலைமை நிர்வாகத்தின் பக்கம் இருந்துகொண்டு வேடிக்கை பார்த்தது அனைவரும் அறிந்ததே.

எல்லாவற்றுக்கும் மேலாக அணி நிர்வாகிகள் கூட்டத்தில் சங்க நிர்வாகி என்று சொல்லிக்கொள்ளும் பெத்து முருகேசன் “ஆமாம், இது காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் ஒப்பந்தம்தான்” என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.

ஆகவே, அணி நிர்வாகிகள் உட்பட, உறுப்பினர்களின் பெரும்பான்மைக் கருத்தை நிராகரிக்கும், ஜனநாயக விரோத, தனி நபர் அதிகாரம் கொண்ட கூடாரமாக அணித் தலைமை விளங்குவதால்…..

சி.ஐ.டி.யு. அணி பொதுக் குழுவின் தீர்மானத்தை காலில் போட்டு மிதிக்கும் சர்வாதிகார தலைமையாக விளங்குவதால்……

தொழிலாளர் விரோத கொள்கைகளான நிரந்தர வேலைகளை அவுட்சோர்ஸ் செய்வதற்கு பச்சைக் கொடி காட்டியதால்…..

காம்பனெண்ட் அவுட்சோர்ஸ் ஏற்றுக்கொண்டதால்….

ஆட்குறைப்பு செய்வது.

சி.எல்.— க்கு சிக்னல் காட்டியது.

போன்ற நிர்வாகத்தின் தொழிலாளர்கள்மீதான தாக்குதல்களுக்கு எட்டப்பன் வேலை செய்யும் சி.ஐ.டி.யு. அணியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து விலகுவதை பெருமையாகக் கருதுகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
முன்னாள் சி.ஐ.டி.யு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.  ———————————————————————————————————————-

  1. சவுந்தர் ராஜன்,டி.கெ .ரெங்கராஜன் உள்ளிட்ட சி.ஐ டி.யு வினர் சட்டமன்ற நாடளுமன்ற சாக்கடயில் மூழ்கி முத்தெடுக்க பாட்டளிகளின் ரத்தம் சிந்திய உழைப்பு காவு கொடுக்கப்படுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க