privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்பஜாஜ் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர் போராட்டம் !

பஜாஜ் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர் போராட்டம் !

-

காராஷ்டிராவில் உள்ள சக்கன் என்ற இடத்தில் உள்ள பஜாஜ் பூனே இருசக்கர வண்டி தொழிற்சாலை தொழிலாளர்கள் 40 நாட்களுக்கு மேலாக நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒரு வாரத்துக்குள் கை விடா விட்டால் உற்பத்தியை நிரந்தரமாக ஔரங்கபாதிலுள்ள வாலூஜ் தொழிற்சாலைக்கும் உத்தரகாண்டில் உள்ள பந்த் நகர் தொழிற்சாலைக்கும் மாற்றி விடுவோம் விடும் என்று பஜாஜ் மோட்டார் சைக்கிள் பிரிவின் துணைத் தலைவர் கைலாஷ் ஜன்சாரி மிரட்டியிருக்கிறார்.

பஜாஜ் பல்சர்
பஜாஜ் தொழிலாளர்கள் படைக்கும் நவீன பைக்.

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் உள்ளிட்ட இரு சக்கர வண்டிகளை உற்பத்தி செய்யும் சக்கன் தொழிற்சாலையில் 925 நிரந்தர தொழிலாளர்களும், 364 பயிற்சி தொழிலாளர்களும், “கற்றுக் கொண்டே சம்பாதி” என்ற முறையிலான தொழிலாளர்களும் சேர்த்து மொத்தம் 1,486 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கூடவே 1,500 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றனர்.

1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆரம்பத்தில் ஒளிமயமான எதிர்காலம் வாக்களிக்கப்பட்டது. ஆனால் அடுத்த வந்த 10 ஆண்டுகளில் பல தொழிலாளர் விரோத கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.

  1. ஓவர்டைம் வேலை கட்டாயமாக்கப்பட்டது, ஆனால் அதற்கான ஊதியம் தரப்படவில்லை.
  2. தொழிலாளர்களுக்கான ஷிப்ட் நேரங்களை நிர்வாகம் தமது விருப்பப்படி முடிவு செய்து அதன்படி வேலை செய்யுமாறு தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  3. தொழிலாளர்கள் தமது நிலைமையை பற்றி புகார் சொன்னால் அவர்கள் வசவுகளால் திட்டித் தீர்க்கப்பட்டனர்.
  4. வருடாந்திர ஊதிய உயர்வுகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே வைக்கப்பட்டிருந்தன.

நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர் கொள்ள முடியாமல் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க முடிவு செய்தனர். பல தொழிலாளர்கள் யூனியனில் சேருவதற்கு அஞ்சினாலும் நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர் கொள்ள பெரும்பான்மையினர் ஆகுர்தி தொழிற்சாலையின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான விஷ்வ கல்யாண் காம்கார் சங்காடனா (VKKS) யூனியனில் சேர்ந்தனர். இந்த தொழிற்சங்கம் சக்கன் தொழிற்சாலைக்கும் அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்றது.

2007-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் பஜாஜ் நிறுவனத்தின் பந்த் நகர் தொழிற்சாலை திறக்கப்பட்டது. அந்தத் தொழிலாளர்களும் சக்கன் தொழிலாளர்கள் எதிர் கொண்ட அதே மாதிரியான சுரண்டல்களை எதிர் கொண்டார்கள். நிர்வாகத்தின் அடக்கு முறைகளையும், குறைவான வருடாந்திர ஊதிய உயர்வையும் எதிர்த்து 2012-ம் ஆண்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் படி தொழிலாளர்கள் விகேகேஎஸ் தொழிற்சங்கத்தை அணுகி உதவி கோரினார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தில் யூனியன் ஏற்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாத சூழல் நிலவுவதால் விகேகேஎஸ் அந்தத் தொழிலாளர்களையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டது.

பஜாஜ் தொழிலாளர்கள்
தமது உரிமைகளுக்காக போராடும் பஜாஜ் தொழிலாளர்கள்.

ஆனால், மகாராஷ்டிராவில் ஏற்படுத்தப்பட்ட யூனியன் சக்கன் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மட்டும்தான் பொருந்தும், உத்தரகாண்ட் தொழிலாளர்களை அதில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிறுவனம் முரண்டு பிடித்தது. அதாவது, ஒரு மாநிலத்தில் செயல்படும் தொழிற்சாலையின் செயல்பாடுகள் இன்னொரு மாநிலத்தோடு இணைக்கப்படக் கூடாதாம். ஆனால், இப்போது சக்கன் தொழிலாளர் போராட்டத்தை முறியடிப்பதற்கு உற்பத்தியை சத்தீஸ்கருக்கு மாற்றுவதாக இதே பஜாஜ் நிர்வாகம் மிரட்டுகிறது. தொழிலாளர்களுக்கு வந்தால் அது தக்காளி ஜூஸ், நிர்வாகத்துக்கு வந்தால் அது ரத்தம் என்ற வழக்கமான முதலாளித்துவ ஜனநாயக கோட்பாடுதான் அது.

விகேகேஎஸ் யூனியன் நைனிடால் உயர்நீதிமன்றத்தை அணுகி அங்கீகாரம் வழங்கும்படி மாநில தொழிலாளர் துறைக்கு உத்தரவிடக் கோரியது. உயர் நீதிமன்றமும் விகேகேஎஸ் தொழிற்சங்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதற்கிடையே பஜாஜ் நிர்வாகம் ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி தன் விருப்பப்படியான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியது.

பந்த் நகர் தொழிற்சங்க வழக்கைத் தொடர்ந்து சக்கன் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை உடைப்பதற்காக தொழிலாளர்கள் மீது அடக்கு முறைகளை நிர்வாகம் அவிழ்த்து விட்டது. நடைமுறை சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நிறைவேற்றவில்லை என்று குற்றங்கள் சாட்டியது. பந்த்நகர் சம்பவத்துக்குப் பிறகு (ஜூன் 2012) 22 தற்காலிக பணி நீக்கங்களும், 8 விசாரணைக்கு முன்பு பணி நீக்கமும், 1 வேலை நீக்கமும் உள்ளிட்டு பல தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர்.

2010-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி, 2012-ம் ஆண்டு தர வேண்டிய ஊதிய உயர்வை வழங்காமல் நிர்வாகம் ஒப்பந்தத்தை மீறியது. அதைத் தொடர்ந்து யூனியன் சம்பள ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய கோரிக்கைகளை முன் வைத்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் விவகாரம், ‘கற்றுக் கொண்டே சம்பாதி’ முறையில் அமர்த்தப்படும் தொழிலாளர்கள், நிர்வாகம் ஊதிய ஒப்பந்தத்தை மீறியது ஆகியவை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன.

ராஜீவ் பஜாஜ்
தொழிலாளர்களை ஒடுக்கி ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டும் பஜாஜ் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜீவ் பஜாஜ்.

இது தொடர்பாக தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை ரூ 3,964 கோடியிலிருந்து ரூ 16,974 கோடி (நான்கு மடங்குக்கும் மேல்) யாக உயர்ந்திருக்கிறது. நிகர லாபம் ரூ 249 கோடியிலிருந்து உயர்ந்து ரூ 3,339 கோடியை (13 மடங்குக்கும் மேல்) எட்டியிருக்கிறது. மொத்த மதிப்பு கூட்டுதலில் நிறுவனத்தின் பங்கு 69 சதவீதத்திலிருந்து 88 சதவீதமாக அதிகரித்திருக்கும் அதே நேரம் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தின் பங்கு 31 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்திருக்கிறது.

ஒவ்வொரு பஜாஜ் பல்சர் விற்பனையிலும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் தொகை ரூ 300, பங்குதாரர்களுக்கும் முதலாளிகளுக்கும் கிடைக்கும் தொகை ரூ 16,700, டீலர்களுக்கு கிடைக்கும் தொகை ரூ 10,000.

அதிகரித்து வரும் உற்பத்தி, விற்பனை, லாபம் இவற்றுக்கு இணையாக தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தாமல் மோசடி செய்து வருகிறது பஜாஜ் நிறுவனம். அதனால் ஊதிய உயர்வு, பணிச் சூழலை மேம்படுத்துவது ஆகிய கோரிக்கைகளுடன் ஒவ்வொரு தொழிலாளருக்கும் நிறுவனத்தின் 500 பங்குகள் ரூ 1 என்ற சலுகை விலையில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தொழிற்சங்கம் முன் வைத்தது. அந்த கோரிக்கை வேடிக்கையானது, முட்டாள்தனமானது என்று ஒதுக்கித் தள்ளினார் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ்.

‘லாபம் வரும் போது ஊதிய உயர்வு கேட்பார்கள், நஷ்டம் வந்தால் என்ன செய்வார்கள்’ என்று தொழிலாளர்கள் மீது வைக்கப்படும் பழியின் உண்மைத்தன்மையையும் முதலாளிகளின் லாப வெறியையும் இது தெளிவாக அம்பலப்படுத்துகிறது. ஊதிய உயர்வு கொடுக்கவும் மனம் இல்லை,  ஆனால், தொழிலாளர்களுக்கு நிறுவனத்தில் உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தே முட்டாள்தனமானது இதுதான் முதலாளித்துவத்தின் ஜனநாயகம்.

தொழிலாளர்கள் மீது கீழ்ப்படியாமை என்ற காரணத்தின் அடிப்படையில் ஷோ காஸ் நோட்டிஸ், குற்றப் பத்திரிகை பதிவு செய்வது போன்றவற்றை செய்து வந்திருக்கிறது. தொழிலாளர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகரித்து வந்த அடக்குமுறைகளையும் 22 தொழிலாளர்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டதையும் எதிர்த்து ஜூன் 25-ம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் வேலைக்கு வருவதாக சொல்வது, கற்றுக் கொண்டே சம்பாதி (learn & earn) என்ற முறையின் மூலம் பயிற்சி தொழிலாளர்களை புதிதாக எடுப்பது, பிற தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து உற்பத்தியில் ஈடுபடுத்துவது போன்ற முறைகளில் தொழிற்சாலையை இயக்கி வருகிறது பஜாஜ்.

இந்தியச் சந்தையில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மந்தமாகியுள்ள சூழலில் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை அதிகரிப்பது, சம்பள உயர்வை தள்ளிப் போடுவது என்று தமது லாபத்தை பாதுகாத்துக் கொண்டே சந்தையின் இழப்புகளை தொழிலாளர்கள் மீது ஏற்றி வைக்க முயற்சிக்கிறார்கள் இந்திய முதலாளிகள். பணி நீக்கம் செய்யப்பட்ட 22 தொழிலாளர்களில் 7 பேரை மட்டும் திரும்ப எடுப்பதாக நிர்வாகம் கூறுகிறது. அவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு மறுபடியும் பணியில் அனுமதிப்பதாக கூறி அவர்களை அவமானப்படுத்துகிறது. மற்ற 15 பேரும் நிறுவனம் நடத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தான் ஒரு தரப்பாக இருக்கும் வழக்கில் தானே நீதிபதியாக இருப்பதாக நியாயத்தை நிலை நாட்ட முயற்சிக்கிறது.

சக்கன் தொழிற்சாலை உற்பத்தியில் 3-ல் 1 பங்கை வலூஜ் தொழிற்சாலைக்கு தற்காலிகமாக மாற்றியிருக்கிறது நிர்வாகம். ஆகஸ்ட் 12-க்குள் தொழிலாளர்கள் சரணடையா விட்டால் உற்பத்தியில் பாதியை நிரந்தரமாக வலூஜுக்கு மாற்றி விடுவதாக ஜன்சாரி கூறியிருக்கிறார். அதன் பிறகு தொழிலாளர்கள் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தில் வேலையை விட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விடும் என்று கூறியிருக்கிறார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலைகளை வைத்துக் கொண்டு அவற்றின் நிர்வாகத்தை ஒருங்கிணைத்து திட்டமிடும் அதே நேரத்தில் பல்வேறு தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தமக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதை தடுத்தும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் என்று ஒரே தொழிற்சாலை தொழிலாளர்களையும் பிரித்தும் தமது லாப வேட்டையை தொடர்கின்றனர் இந்திய தரகு முதலாளிகள். தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த தொழிற்சங்கமாக இணைந்து போராடுவதன் மூலமே இவர்களை எதிர் கொள்ள முடியும்.

மேலும் படிக்க