privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசுப் பள்ளிகளை பாதுகாக்க HRPC போராட்டம் !

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க HRPC போராட்டம் !

-

தமிழக அரசே !

  • அரசுப் பள்ளிகள் அனைத்திலும் போதிய ஆசிரியர்களைப் போர்க்கால அடிப்படையில் உடனே பணியமர்த்து!
  • மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, சமையலறை வசதிகளை வழங்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு !
  • பள்ளிகளில் விளையாட்டு மைதானம், போதிய வகுப்பறை, நூலக வசதி ஆகியவற்றை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளை சஸ்பென்ட் செய்!

பெற்றோர்களே!

  • நமது சங்கத்தில் உறுப்பினர்களாக சேருங்கள்!
  • அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் முழுமையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க பெற்றோர்களாகிய நமக்கு உரிமை உண்டு.
  • வாத்தியார் இல்லா வகுப்பறை! மரத்தடியில் மாணவர்கள்!! அழியும் அரசுப் பள்ளிகள் !!!
  • உன் பிள்ளைக்கு நீ போராடாமல் யார் போராடுவார்கள்.

விருத்தாசலத்தில் ஆகஸ்ட் 15 – பேரணி – மறியல்
மாணவர்களின் எதிர்காலம் காக்க பெற்றோர்களே அணி திரள்வீர்!

ன்பார்ந்த பெற்றோர்களே வணக்கம் !

வாத்தியார் இல்லாத வகுப்பறை, மரத்தடியில் மாணவர்கள், மதிய உணவில் பல்லி, அழுகிய முட்டையால் வாந்தி மயக்கம், கழிப்பறை இல்லை, சுகாதாரமான குடிநீர் இல்லை என்ற செய்திகள் அரசுப்பள்ளிகளைப் பற்றி தினமும் வந்து கொண்டே இருக்கின்றன.

உங்கள் பிள்ளைகளிடம் “இன்று பள்ளியில் என்ன கற்றுக் கொண்டாய்? ஆசிரியர் நடத்திய பாடம் உனக்குப் புரிந்ததா? என கேட்டீர்களா?” உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் போதிய ஆசிரியர் இருக்கின்றாரா? விளையாட்டு வாத்தியார் இருக்கிறாரா? நூலகம் இருக்கிறதா? வகுப்பறை இருக்கிறதா? என்று என்றைக்காவது சென்று பார்த்திருப்பீர்களா? உங்கள் பிள்ளைகள் பெயிலானதற்கு, மார்க் அதிகம் எடுக்காததற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல, தரமான கல்வி கற்பிக்கப்படுவதில்லை. நம் ஊரிலேயே பல பள்ளிகளில் போதிய வகுப்பறை, ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
aug-15 poster -final
அரசின் தனியார்மயக் கொள்கையாலும், தனியார் பள்ளிகள் தரமானது என்ற கவர்ச்சி விளம்பரத்தாலும், கட்டண கொள்ளையடிக்கவும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிர்ப்பந்தமாக தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி பல பள்ளிகளில் சிறந்த மாணவர் தேர்ச்சியை காட்டி வருகின்றனர். தகுதியானர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலி ஏன்?

தமிழகத்தில் எண்பது சதவீத மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெருமளவில் மாணவர்கள் பெயிலானால் ஆசிரியர்கள் மீதும், கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. சாதி பாகுபாடில்லாமல், ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல், அனைவரும் சமமாக கூடும் ஒரே இடம் பள்ளிக் கூடம் மட்டுமே. 5,000 ரூபாய்க்கு ஒரு பள்ளி 50,000 ரூபாய்க்கு ஒரு பள்ளி என மாணவர்களை கூறு போட்டால் சமூகம் எப்படி சமத்துவத்தறிற்கு செல்லும்.

தமிழகத்தில் 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள், 2,253 பள்ளிகளில் ஒரு ஆசிரியம் மட்டுமே கொண்டு இயங்குகின்றன. ஏறத்தாழ நான்கரை லட்சம் மாணவர்கள் 100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என படிக்கின்றனர். இச்சூழலில் எப்படி மாணவர்கள் தரமான கல்வி கற்க முடியும்? நம் கண்முன்னே நம் பிள்ளைகளில் எதிர்காலம் சரிந்து விழுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

மாணவர்கள் இன்று தக்கை மனிதர்களாக வளருகின்றனர். தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மை, சிந்திக்கும் ஆற்றல், சமூக பொறுப்புணர்வு, வாதிடும் திறமையை, ஜனநாயகத்தை, நாட்டுப் பற்றை போதிக்கும் தரமான கல்வியை அரசு பள்ளிகளால் மட்டுமே வழங்க முடியும். அத்தகைய கல்வி முறைக்காக நாம் போராட வேண்டும்.

இன்று உயர் பதவிகளில் இருக்கும் தலைமை நீதிபதி, விஞ்ஞானிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உட்பட பலரும் அரசுப் பள்ளிகளில் படிதவர்களே. காசு உள்ளவனுக்குத்தான் கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் எல்லாம் என்றால் ஆகஸ்ட் 15 சுதந்திரத்தால் நாம் அடைந்த பயன் என்ன? இயற்கை வளங்கள் அனைத்தையும், தாய்க்குச் சமமான தண்ணீரையும் பன்னாட்டு கம்பெனிக்கு விற்பதுதான் அரசின் கொள்கை என்றால் ஆகஸ்ட் 15 அர்த்தம் என்ன?

அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம்தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும். அவர்கள்தான் இந்நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்காக போராடுவார்கள்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்

702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு 9345067646

பெறுதல்
அரசு செயலாளர் அவர்கள்,
பள்ளிக் கல்வித் துறை,
தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை.

பொருள்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல் – மாணவர்களுக்கு பாதுகாப்பான, குடிநீர்-கழிப்பறை-சமையலறை வழங்குதல்

அய்யா வணக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாழடைந்து வருகிறது. தரமான கல்வி வழங்குவதை அதிகாரிகளும் கண்காணித்து உத்திரவாதப்படுத்த தவறுகின்றனர். இதனால் பல மடங்கு கல்வி கட்டணத்தில் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு போக நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

2012-2013 ஆன் ஆண்டுக்கான மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி 16 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்தான். 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். மேலும் நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் நான்கரை லட்சம் மாணவர்கள் கல்வி பயிலும் அவலமான சூழலில் அரசு பள்ளி மாணவர்கள் உள்ளனர்.

போதிய வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி பயிலுதல், பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை இல்லை. மதிய உணவில் பல்லி, அழுகிய முட்டை, வாந்தி, மயக்கம் என நாள் தோறும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பல பள்ளிகளில் ஆசிரியர்களும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற பொறுப்புணர்வு இன்றி மாணவர்களுக்கு ஏனோ தானோ என கல்வி கற்பிக்கின்றனர். தேர்ச்சி விகிதம் படு மோசமாவதற்கும், தேர்ச்சி அடைந்த மாணவர்களும் குறைந்த மதிப்பெண் பெற்று மேல்நிலைக் கல்வி தொடர முடியாமல் இடையிலேயே கல்வியிலிருந்து நிறுத்தப்படும் அவலமும் தொடர்கிறது.

அரசுப் பள்ளியின் இத்தகைய நிலையால் கிராமப் புற பெற்றோர்கள் தரமானது என புற்றீசல்களாக ஆங்கிலவழி தனியார் பள்ளிகளை சென்றடைகின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் கற்பித்தல், ஜனநாயகம் என்ற சிந்தனை மாணவர்களிடமிருந்து உருவப்பட்டு பிராய்லர் கறிக்கோழிகளாக மாற்றப்படுகின்றனர். மாணவர்களை சுய சிந்தனை, முழுமையான ஆற்றல் இல்லாமல் உதிரிகளாக மாற்றும் தனியார்மயக் கல்வி புற்று நோயாக எதிர்கால மனித வளத்தை அரித்து வருகிறது. இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால், அரசு பள்ளிகள் அனைத்தும் மாணவர்கள் இல்லை என்று மூடப்படுவதும், கடன் சுமையால் விவசாயிகள் போல கல்வி கட்டணச் சுமையால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும்.

எனவே அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை அரசு உத்திரவாதப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதித்தில் போதிய ஆசிரியர்களை நியமித்தல்
  2. போதுமான வகுப்பறைகள்
  3. சுகாதாரமான குடிநீர்
  4. போதிய கழிப்பறை வசதிகள்
  5. விளையாட்டு மைதானம்
  6. பாதுகாப்பான சமையலறை
  7. நூலக வசதி
  8. கற்றல், கற்பித்தல் சரியாக நடைபெறுகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க போதுமான கல்வி அதிகாரிகளை நியமித்தல்

போன்றவைகள் தரமான கல்வி கற்க அடிப்படையானவைகள்.

மாணவர்களின் கல்வி உரிமை என்பது வாழ்வுரிமையின் அங்கமாகும். அரசுப் பள்ளிகளில் இவற்றை தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள், மாணவர்களிடம் கையொப்பம் பெற்று இந்த கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கின்றோம். நன்றி.

தகவல்

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம்
விருத்தாசலம். பேச : 9345067646, 9345180948