privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்அந்நிய முதலாளிகளுக்கு ஆடி அதிரடி விற்பனை !

அந்நிய முதலாளிகளுக்கு ஆடி அதிரடி விற்பனை !

-

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து விழுந்திருப்பது மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டப்படும் அமெரிக்க டாலர் வருமானத்தைவிட, இறக்குமதிக்கு ஆகும் டாலர் செலவு அதிகமாவதால் ஏற்படும் பற்றாக்குறை என்று இதனைச் சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்) சமாளிக்க முடியாத அளவிற்கு அதிகமாகியிருப்பதைப் பற்றித்தான் கடந்த ஒரு மாத காலமாக மன்மோகன் – ப.சிதம்பரம் கும்பல் ஒப்பாரி வைத்து வருகிறது. 2008-க்கு முன்பு ரூ.40/- ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.60/-ஐத் தாண்டிச் சரிந்து விழுந்துவிட்டது. 2012-13 நிதியாண்டு நிலவரப்படி நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 9,420 கோடி அமெரிக்க டாலராக (இன்றைய மதிப்பின்படி 5,65,200 கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறது.

ப சிதம்பரம்
அந்நிய முதலீடுகளை கவரும் நோக்கத்தோடு அமெரிக்காவில் நடத்தப்பட்ட அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

இந்திய அரசிடம் ஏறத்தாழ 29,000 கோடி அமெரிக்க டாலர்கள் அந்நியச் செலாவணி கையிருப்பாக இருக்கிறதாம். இதனைக் கொண்டு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம் என்றால், அந்நிய முதலாளிகளிடம் வாங்கியிருக்கும் 17,200 கோடி டாலர்கள் பெறுமான குறுகிய கால கடனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அடைக்க வேண்டிய தவணை முன்னால் வந்து நிற்கிறது. இருப்பதைக் கொண்டு இரண்டையும் அடைத்து விட்டாலோ, இறக்குமதி செய்வதற்குத் தேவையான அமெரிக்க டாலருக்குப் பற்றாக்குறை ஏற்படும்; அமெரிக்க டாலர் கையிருப்பு காலியாகிப் போனால், இந்தியரூபாய்க்குக் கழிப்பறைக் காகிதத்திற்கு இருக்கும் மதிப்புகூடக் கிடைக்காது; பங்குச் சந்தையிலும் தொழில்துறையிலும் அமெரிக்க டாலர்களைக் கொண்டுவந்து கொட்டியுள்ள அந்நிய நிறுவனங்களுக்கு மஞ்சக் கடுதாசியைத் தவிர வேறெதையும் கொடுக்க முடியாது என்கிற நிலைமைதான் ஆட்சியாளர்களைத் திணற வைப்பதாக உள்ளது.

தனியார்மயம்-தாராளமயத்திற்கு மாற்று இல்லை என அடித்துப் பேசி, இந்தியாவை ஏகாதிபத்திய நாடுகளின் வேட்டைக் காடாக மாற்றுவதற்கு வித்திட்டவரே மன்மோகன் சிங்தான்; நாடாளுமன்றத்திற்கே தெரியாமல், களவாணித்தனமாக “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்தியப் பொருளாதாரத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் தாரை வார்த்துக் கொடுத்தவரும் மன்மோகன் சிங்தான். இவ்வளவும் செய்துவிட்டு, இப்பொழுது இந்த நெருக்கடிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரம் இன்னும் நெருக்கடியிலிருந்து மீளாததால்தான், இந்தியாவை இப்படிபட்டதொரு நெருக்கடி திடீரெனத் தாக்கிவிட்டதைப் போல காட்ட முயலுகிறார்; மிக முக்கியமாக, இந்த நெருக்கடிக்கும் தனியார்மயம்-தாராளமயத்திற்கும் தொடர்பே இல்லாதது போல நடந்து கொள்கிறார், அவர்.

ஜோ பீடன், மன்மோகன்
அமெரிக்க அணு உலைகளை இறக்குமதி செய்வது குறித்து அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடேனுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கும் மேற்கு ஐரோப்பிய நெருக்கடிக்கும் தொடர்பிருக்கும் அதே சமயம், இவையிரண்டுமே தனியார்மயம்-தாராளமயம் ஏற்படுத்தியிருக்கும் கட்டமைப்பு நெருக்கடியாகும். இன்னும் சொல்லப்போனால், சர்வதேசப் பொருளாதாரம் சௌக்கியமாக இருந்த காலத்திலும் இந்தியப் பொருளாதாரம் இப்படிப்பட்ட நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது என்பதே உண்மை. இந்திய அரசு உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கத் தொடங்கிய காலந்தொட்டு, 1980-க்குப் பின் ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் இந்தியா இதேபோன்ற நெருக்கடியைச் சந்தித்து வந்திருக்கிறது.

தனியார்மயம்-தாராளமயத்தின் தொடக்கத்தில் அந்நிய முதலாளிகள் தாமே நேரடியாகத் தொழில் தொடங்குவதற்கும், மேற்குலகிலிருந்து நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இத்தாராள அனுமதியால் ஏற்பட்ட ‘வளர்ச்சி’ 1990-களின் இறுதியில் நீர்க்குமிழி போல உடைந்தது. இந்த மந்த நிலையைச் சாக்காகக் காட்டி, கடன் சந்தை, பங்குச் சந்தை, வங்கிகள் உள்ளிட்ட நிதித் துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினால்தான் நாடு முன்னேறும் எனக் கூப்பாடு போட்ட ஆளுங்கும்பல், இத்துறைகளில் அந்நிய நிதி மூலதனம் வெள்ளமெனப் பாய்வதற்கு ஏற்ப பல்வேறு சலுகைகளை வழங்கின; கட்டுப்பாடுகளை நீக்கின. இந்தச் சீர்திருத்தங்கள் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளை விட, இந்தியாவில் செய்யப்படும் முதலீட்டிற்கு அதிக வட்டியும் இலாபமும் கிடைப்பதை உறுதி செய்ததால், பன்னாட்டு நிதி மூலதனம் இந்தியாவையும் குறிவைத்து இறங்கியது. 2008-இல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்கள் மாபெரும் மந்தத்தில் சிக்கிக் கொண்ட பிறகும்கூட, அந்நிய நிதி மூலதனம் இங்கு பாய்வதில் எவ்விதத் தடங்கலும் ஏற்படவில்லை.

தனியார் மயம்

இந்த நிதிச் சீர்திருத்தங்கள், இந்தியப் பொருளாதாரம் 2003-2008 ஆம் ஆண்டுகளில் 8 சதவீத ‘வளர்ச்சி’யை எட்டிப் பிடிக்கக் காரணமாக அமைந்த அதே சமயம், இந்தியாவின் அந்நியக் கடன் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை வீங்க வைத்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5% சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி வரம்பு வைத்துள்ள நிலையில், தற்போது இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அந்த வரம்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. மார்ச், 2009-இல் 22,550 கோடி அமெரிக்க டாலராக (13,53,000 கோடிரூபாய்) இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், டிசம்பர் 2012-இல் 37,630 கோடி அமெரிக்க டாலராக (22,57,800 கோடிரூபாய்) அதிகரித்திருக்கிறது. இந்தக் கடனோடு, இந்தியா திருப்பித் தர வேண்டிய அந்நிய முதலீடுகளையும் கணக்கில் கொண்டால், இந்தியாவின் மொத்த அந்நியக் கடன் மதிப்பு டிசம்பர் 2012-இல் 72,390 கோடி அமெரிக்க டாலராகும் (43,43,400 கோடிரூபாய்).

வர்த்தகர் ஆர்ப்பாட்டம்
“இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும்” என்று கூறிய அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கண்டித்து தமிழ்நாடு வர்த்தகர் சங்கம், கடந்த ஆண்டு ஜூலையில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் சர்வதேசக் கடன் சந்தையில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் 2003-ஆம் ஆண்டுக்குப் பின் படிப்படியாகத் தளர்த்தப்பட்டதுதான் இந்தியாவின் அந்நியக் கடன் எகிறிப் போயிருப்பதன் பின்னுள்ள முக்கியமான காரணமாகும். மார்ச் 2014-க்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய 17,200 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான அந்நியக் கடனில் 44 சதவீதம் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் பெற்றுள்ள கடன் என்பதிலிருந்தே இந்தச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தியுள்ள அபாயத்தைப் புரிந்து கொள்ளலாம். சொல்லிக் கொள்ளப்பட்ட பொருளாதார வளர்ச்சி 2008-க்குப் பின் காணாமல் போவிட்டது. ஆனால், இந்த வீக்கம் நாட்டைத் திவாலாக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

தனியார்மயம்-தாராளமயம் மட்டுமே இந்தியாவின் தொழிற் உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் – என ஒளிவட்டம் போட்டுக் காட்டியது, ஆளுங்கும்பல். ஆனால், இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி தனியார்மயம்-தாராளமயம் படுதோல்வியடைந்துவிட்டதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது; இந்தியாவை அந்நிய மூலதனத்தின் அடிமையாக மாற்றியிருப்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

உண்மை இவ்வாறிருக்க, மன்மோகன் சிங் கும்பலோ பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இன்னும் ஆழமாகவும் விரைவாகவும் அமல்படுத்தப்படாமல் தாமதம் ஆவதால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் புளுகி வருகிறது. தனியார்மயம்-தாராளமயத்தை அதன் கடைகோடி எல்லைவரை அமல்படுத்திட வேண்டும் என்ற தமது நோக்கத்தைத் தடையின்றி ஈடேற்றிக் கொள்ளுவதற்கு இந்த நெருக்கடிகளைச் சாக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இந்தியா விற்பனைக்கு1990-களின் தொடக்கத்தில் இந்தியா இதே போன்றதொரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நெருக்கடியில் சிக்கிக்கொண்டபொழுது, சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் இந்தியாவின் கடன் பெறும் தகுதியைக் குறைத்தன. இதனால் இந்தியா தனது கையிருப்பிலுள்ள தங்கத்தை அடகு வைத்துக் கடன் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையிலும் கடன் சந்தையிலும் கொட்டியிருந்த தமது மூலதனத்தைச் சுருட்டிக் கொண்டு அமெரிக்கா நோக்கிக் கிளம்பியதையடுத்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விழுந்திருப்பதோடு, அந்நியச் செலாவணிக் கையிருப்பு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. 1990-களில் ஏற்பட்ட நெருக்கடியைக் காட்டி தனியார்மயம்-தாராளமயத்தைத் தொடங்கி வைத்த மன்மோகன் சிங், இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் காட்டி அதனை இன்னும் தீவிரப்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தொலைபேசித் துறை, ஆயுதத் தளவாட உற்பத்தி, காப்பீடு, தேயிலைத் தோட்டங்கள், கூரியர் சேவை, கச்சா எண்ணெ சுத்திகரிப்பு, விமானப் போக்குவரத்து, மின்சாரச் சந்தை, சிங்கிள் பிராண்டு சில்லறை வணிகம் உள்ளிட்டு 13 தொழில் மற்றும் சேவைத் துறைகளில் அந்நிய மூலதனம் புதிதாக நுழைய அல்லது ஏற்கெனவே உள்ள தமது மூலதனப் பங்கை அதிகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. காப்பீடு துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை மன்மோகன் சிங் மயிரளவிற்குக்கூட மதிக்கவில்லை. ஆயுதத் தளவாட உற்பத்தியில் 26 சதவீத அந்நிய மூலதனம் மிக எளிதான வழியில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்குப் பரவலான எதிர்ப்புகள் எழுந்த பிறகும்கூட, தனது முடிவை மாற்றிக் கொள்ள காங்கிரசு கும்பல் தயாராக இல்லை. அத்துறையில் 26 சதவீதத்திற்கும் மேலான முதலீடுகளை அனுமதிப்பதைப் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுதான் முடிவு செய்யும் என்ற அறிவிப்பெல்லாம் வெறும் பம்மாத்துதான்.

காங்கிரசின் இந்த முடிவு அந்நிய மூலதனம் நுழைய முடியாத தொழில் இனி எதுவுமே இந்தியாவில் கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச் சொத்துகளும் பன்னாட்டு முதலாளிகளுக்குக் கைமாற்றிவிடப்படுகிறது. குடும்பச் சோத்தை ஒவ்வொன்றாக விற்று தின்று தீர்க்கும் தறுதலைக்கும் மன்மோகன் சிங்கின் இத்தனியார்மய நடவடிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

இத்தனியார்மய நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை அமெரிக்காவிடமும் ஏகாதிபத்திய முதலாளிகளிடமும் ஒப்புவிக்கின்றன. நாட்டின் கேந்திரமான செல்வ வளங்கள், தொழில்களைப் பன்னாட்டு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் விட்ட பிறகு, நாட்டின் சுதந்திரம், இறையாண்மை என்று பேசுவதில் ஏதாவது பொருளுண்டா?

– செல்வம்

***

வரிக்கொள்கையை தீர்மானிப்பது யார்?

பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பதை விட, அந்நியக் கடனும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே போவதுதான் அபாயகரமானது. ஆனால், இந்திய ஆளுங்கும்பலும் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் பின்னிரண்டைப் பற்றிப் பேசாமல், அவற்றுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்காமல், பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பதைத்தான் ஊதிப் பெருக்கி வருகிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தா விட்டால், இந்தியாவின் கடன் பெறும் தகுதியைக் குறைத்துவிடுவோம் எனச் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் கடந்த ஆண்டு மத்தியில் மிரட்டின. இதைக் காட்டியே, டீசலுக்கும் சமையல் எரிவாயுவுக்கும், உரத்திற்கும் கொடுத்து வந்த மானியத்தையும் வெட்டியும்; சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்தும், சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்கள் விரும்பியபடி இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தயாரித்தார், ப.சி.

பெட்ரோல் விலைபாகிஸ்தானால் ஏவிவிடப்படும் முசுலீம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக சண்டமாருதம் செய்யத் தயங்காத இந்திய ஆளுங்கும்பலும் ஓட்டுக்கட்சிகளும் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், அந்நிய முதலீட்டாளர்கள் என்ற இந்தச் சந்தை பயங்கரவாதிகள் விடும் மிரட்டல் முன் வெலவெலத்துப் போய் நிற்கிறார்கள். வோடோஃபோன் நிறுவனம் இந்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய 11,000 கோடிரூபாய் பெறுமான மூலதன ஆதாய வரியைச் செலுத்தத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், வரி ஏய்ப்பைத் தவிர்க்கும் பொதுவிதிமுறைகள் 2012-13 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்நிய முதலீட்டாளர்கள் பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்தியவுடனேயே, அந்த விதிமுறைகளைக் கிடப்பில் போடும் நோக்கத்தோடு ஷோமே கமிட்டியை அமைத்தார், மன்மோகன் சிங். அந்த கமிட்டியும் தமது அந்நிய எஜமானர்கள் விரும்பியபடி அவ்விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை மூன்றாண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.

இந்தியாவின் வரி விதிப்பு முறையை அந்நிய முதலீட்டாளர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் தீர்மானிக்கின்றன என்பதற்கு இன்னும் பல உதாரணங்களைத் தரலாம். குறிப்பாக, தற்பொழுதுள்ள வரி விதிப்புகள் குறித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கருத்தை அறிந்துகொள்வது என்ற பெயரில் ஷோமேயின் தலைமையில் மற்றொரு கமிட்டியை (Tax Forum) அமைத்துள்ள மைய அரசு, இக்கமிட்டி வாரம் ஒருமுறை கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் என அறிவித்திருக்கிறது. மேலும், தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விதிக்கும் வரிகளை மாற்றியமைக்கும் நோக்கத்தோடு ரங்காச்சாரி என்பவர் தலைமையில் மற்றொரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சட்டபூர்வ வரிச்சலுகைகளும் தள்ளுபடிகளும்தான் பட்ஜெட் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது என்பது மறைக்கப்பட்டு, இச்சலுகைகள் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானவை என நயவஞ்சகமான முறையில் நியாயப்படுத்தப்படுகிறது.

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________