Tuesday, December 10, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்அந்நிய முதலாளிகளுக்கு ஆடி அதிரடி விற்பனை !

அந்நிய முதலாளிகளுக்கு ஆடி அதிரடி விற்பனை !

-

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து விழுந்திருப்பது மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டப்படும் அமெரிக்க டாலர் வருமானத்தைவிட, இறக்குமதிக்கு ஆகும் டாலர் செலவு அதிகமாவதால் ஏற்படும் பற்றாக்குறை என்று இதனைச் சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்) சமாளிக்க முடியாத அளவிற்கு அதிகமாகியிருப்பதைப் பற்றித்தான் கடந்த ஒரு மாத காலமாக மன்மோகன் – ப.சிதம்பரம் கும்பல் ஒப்பாரி வைத்து வருகிறது. 2008-க்கு முன்பு ரூ.40/- ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.60/-ஐத் தாண்டிச் சரிந்து விழுந்துவிட்டது. 2012-13 நிதியாண்டு நிலவரப்படி நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 9,420 கோடி அமெரிக்க டாலராக (இன்றைய மதிப்பின்படி 5,65,200 கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறது.

ப சிதம்பரம்
அந்நிய முதலீடுகளை கவரும் நோக்கத்தோடு அமெரிக்காவில் நடத்தப்பட்ட அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

இந்திய அரசிடம் ஏறத்தாழ 29,000 கோடி அமெரிக்க டாலர்கள் அந்நியச் செலாவணி கையிருப்பாக இருக்கிறதாம். இதனைக் கொண்டு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம் என்றால், அந்நிய முதலாளிகளிடம் வாங்கியிருக்கும் 17,200 கோடி டாலர்கள் பெறுமான குறுகிய கால கடனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அடைக்க வேண்டிய தவணை முன்னால் வந்து நிற்கிறது. இருப்பதைக் கொண்டு இரண்டையும் அடைத்து விட்டாலோ, இறக்குமதி செய்வதற்குத் தேவையான அமெரிக்க டாலருக்குப் பற்றாக்குறை ஏற்படும்; அமெரிக்க டாலர் கையிருப்பு காலியாகிப் போனால், இந்தியரூபாய்க்குக் கழிப்பறைக் காகிதத்திற்கு இருக்கும் மதிப்புகூடக் கிடைக்காது; பங்குச் சந்தையிலும் தொழில்துறையிலும் அமெரிக்க டாலர்களைக் கொண்டுவந்து கொட்டியுள்ள அந்நிய நிறுவனங்களுக்கு மஞ்சக் கடுதாசியைத் தவிர வேறெதையும் கொடுக்க முடியாது என்கிற நிலைமைதான் ஆட்சியாளர்களைத் திணற வைப்பதாக உள்ளது.

தனியார்மயம்-தாராளமயத்திற்கு மாற்று இல்லை என அடித்துப் பேசி, இந்தியாவை ஏகாதிபத்திய நாடுகளின் வேட்டைக் காடாக மாற்றுவதற்கு வித்திட்டவரே மன்மோகன் சிங்தான்; நாடாளுமன்றத்திற்கே தெரியாமல், களவாணித்தனமாக “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்தியப் பொருளாதாரத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் தாரை வார்த்துக் கொடுத்தவரும் மன்மோகன் சிங்தான். இவ்வளவும் செய்துவிட்டு, இப்பொழுது இந்த நெருக்கடிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரம் இன்னும் நெருக்கடியிலிருந்து மீளாததால்தான், இந்தியாவை இப்படிபட்டதொரு நெருக்கடி திடீரெனத் தாக்கிவிட்டதைப் போல காட்ட முயலுகிறார்; மிக முக்கியமாக, இந்த நெருக்கடிக்கும் தனியார்மயம்-தாராளமயத்திற்கும் தொடர்பே இல்லாதது போல நடந்து கொள்கிறார், அவர்.

ஜோ பீடன், மன்மோகன்
அமெரிக்க அணு உலைகளை இறக்குமதி செய்வது குறித்து அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடேனுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கும் மேற்கு ஐரோப்பிய நெருக்கடிக்கும் தொடர்பிருக்கும் அதே சமயம், இவையிரண்டுமே தனியார்மயம்-தாராளமயம் ஏற்படுத்தியிருக்கும் கட்டமைப்பு நெருக்கடியாகும். இன்னும் சொல்லப்போனால், சர்வதேசப் பொருளாதாரம் சௌக்கியமாக இருந்த காலத்திலும் இந்தியப் பொருளாதாரம் இப்படிப்பட்ட நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது என்பதே உண்மை. இந்திய அரசு உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கத் தொடங்கிய காலந்தொட்டு, 1980-க்குப் பின் ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் இந்தியா இதேபோன்ற நெருக்கடியைச் சந்தித்து வந்திருக்கிறது.

தனியார்மயம்-தாராளமயத்தின் தொடக்கத்தில் அந்நிய முதலாளிகள் தாமே நேரடியாகத் தொழில் தொடங்குவதற்கும், மேற்குலகிலிருந்து நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இத்தாராள அனுமதியால் ஏற்பட்ட ‘வளர்ச்சி’ 1990-களின் இறுதியில் நீர்க்குமிழி போல உடைந்தது. இந்த மந்த நிலையைச் சாக்காகக் காட்டி, கடன் சந்தை, பங்குச் சந்தை, வங்கிகள் உள்ளிட்ட நிதித் துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினால்தான் நாடு முன்னேறும் எனக் கூப்பாடு போட்ட ஆளுங்கும்பல், இத்துறைகளில் அந்நிய நிதி மூலதனம் வெள்ளமெனப் பாய்வதற்கு ஏற்ப பல்வேறு சலுகைகளை வழங்கின; கட்டுப்பாடுகளை நீக்கின. இந்தச் சீர்திருத்தங்கள் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளை விட, இந்தியாவில் செய்யப்படும் முதலீட்டிற்கு அதிக வட்டியும் இலாபமும் கிடைப்பதை உறுதி செய்ததால், பன்னாட்டு நிதி மூலதனம் இந்தியாவையும் குறிவைத்து இறங்கியது. 2008-இல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்கள் மாபெரும் மந்தத்தில் சிக்கிக் கொண்ட பிறகும்கூட, அந்நிய நிதி மூலதனம் இங்கு பாய்வதில் எவ்விதத் தடங்கலும் ஏற்படவில்லை.

தனியார் மயம்

இந்த நிதிச் சீர்திருத்தங்கள், இந்தியப் பொருளாதாரம் 2003-2008 ஆம் ஆண்டுகளில் 8 சதவீத ‘வளர்ச்சி’யை எட்டிப் பிடிக்கக் காரணமாக அமைந்த அதே சமயம், இந்தியாவின் அந்நியக் கடன் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை வீங்க வைத்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5% சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி வரம்பு வைத்துள்ள நிலையில், தற்போது இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அந்த வரம்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. மார்ச், 2009-இல் 22,550 கோடி அமெரிக்க டாலராக (13,53,000 கோடிரூபாய்) இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், டிசம்பர் 2012-இல் 37,630 கோடி அமெரிக்க டாலராக (22,57,800 கோடிரூபாய்) அதிகரித்திருக்கிறது. இந்தக் கடனோடு, இந்தியா திருப்பித் தர வேண்டிய அந்நிய முதலீடுகளையும் கணக்கில் கொண்டால், இந்தியாவின் மொத்த அந்நியக் கடன் மதிப்பு டிசம்பர் 2012-இல் 72,390 கோடி அமெரிக்க டாலராகும் (43,43,400 கோடிரூபாய்).

வர்த்தகர் ஆர்ப்பாட்டம்
“இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும்” என்று கூறிய அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கண்டித்து தமிழ்நாடு வர்த்தகர் சங்கம், கடந்த ஆண்டு ஜூலையில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் சர்வதேசக் கடன் சந்தையில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் 2003-ஆம் ஆண்டுக்குப் பின் படிப்படியாகத் தளர்த்தப்பட்டதுதான் இந்தியாவின் அந்நியக் கடன் எகிறிப் போயிருப்பதன் பின்னுள்ள முக்கியமான காரணமாகும். மார்ச் 2014-க்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய 17,200 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான அந்நியக் கடனில் 44 சதவீதம் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் பெற்றுள்ள கடன் என்பதிலிருந்தே இந்தச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தியுள்ள அபாயத்தைப் புரிந்து கொள்ளலாம். சொல்லிக் கொள்ளப்பட்ட பொருளாதார வளர்ச்சி 2008-க்குப் பின் காணாமல் போவிட்டது. ஆனால், இந்த வீக்கம் நாட்டைத் திவாலாக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

தனியார்மயம்-தாராளமயம் மட்டுமே இந்தியாவின் தொழிற் உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் – என ஒளிவட்டம் போட்டுக் காட்டியது, ஆளுங்கும்பல். ஆனால், இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி தனியார்மயம்-தாராளமயம் படுதோல்வியடைந்துவிட்டதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது; இந்தியாவை அந்நிய மூலதனத்தின் அடிமையாக மாற்றியிருப்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

உண்மை இவ்வாறிருக்க, மன்மோகன் சிங் கும்பலோ பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இன்னும் ஆழமாகவும் விரைவாகவும் அமல்படுத்தப்படாமல் தாமதம் ஆவதால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் புளுகி வருகிறது. தனியார்மயம்-தாராளமயத்தை அதன் கடைகோடி எல்லைவரை அமல்படுத்திட வேண்டும் என்ற தமது நோக்கத்தைத் தடையின்றி ஈடேற்றிக் கொள்ளுவதற்கு இந்த நெருக்கடிகளைச் சாக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இந்தியா விற்பனைக்கு1990-களின் தொடக்கத்தில் இந்தியா இதே போன்றதொரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நெருக்கடியில் சிக்கிக்கொண்டபொழுது, சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் இந்தியாவின் கடன் பெறும் தகுதியைக் குறைத்தன. இதனால் இந்தியா தனது கையிருப்பிலுள்ள தங்கத்தை அடகு வைத்துக் கடன் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையிலும் கடன் சந்தையிலும் கொட்டியிருந்த தமது மூலதனத்தைச் சுருட்டிக் கொண்டு அமெரிக்கா நோக்கிக் கிளம்பியதையடுத்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விழுந்திருப்பதோடு, அந்நியச் செலாவணிக் கையிருப்பு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. 1990-களில் ஏற்பட்ட நெருக்கடியைக் காட்டி தனியார்மயம்-தாராளமயத்தைத் தொடங்கி வைத்த மன்மோகன் சிங், இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் காட்டி அதனை இன்னும் தீவிரப்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தொலைபேசித் துறை, ஆயுதத் தளவாட உற்பத்தி, காப்பீடு, தேயிலைத் தோட்டங்கள், கூரியர் சேவை, கச்சா எண்ணெ சுத்திகரிப்பு, விமானப் போக்குவரத்து, மின்சாரச் சந்தை, சிங்கிள் பிராண்டு சில்லறை வணிகம் உள்ளிட்டு 13 தொழில் மற்றும் சேவைத் துறைகளில் அந்நிய மூலதனம் புதிதாக நுழைய அல்லது ஏற்கெனவே உள்ள தமது மூலதனப் பங்கை அதிகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. காப்பீடு துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை மன்மோகன் சிங் மயிரளவிற்குக்கூட மதிக்கவில்லை. ஆயுதத் தளவாட உற்பத்தியில் 26 சதவீத அந்நிய மூலதனம் மிக எளிதான வழியில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்குப் பரவலான எதிர்ப்புகள் எழுந்த பிறகும்கூட, தனது முடிவை மாற்றிக் கொள்ள காங்கிரசு கும்பல் தயாராக இல்லை. அத்துறையில் 26 சதவீதத்திற்கும் மேலான முதலீடுகளை அனுமதிப்பதைப் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுதான் முடிவு செய்யும் என்ற அறிவிப்பெல்லாம் வெறும் பம்மாத்துதான்.

காங்கிரசின் இந்த முடிவு அந்நிய மூலதனம் நுழைய முடியாத தொழில் இனி எதுவுமே இந்தியாவில் கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச் சொத்துகளும் பன்னாட்டு முதலாளிகளுக்குக் கைமாற்றிவிடப்படுகிறது. குடும்பச் சோத்தை ஒவ்வொன்றாக விற்று தின்று தீர்க்கும் தறுதலைக்கும் மன்மோகன் சிங்கின் இத்தனியார்மய நடவடிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

இத்தனியார்மய நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை அமெரிக்காவிடமும் ஏகாதிபத்திய முதலாளிகளிடமும் ஒப்புவிக்கின்றன. நாட்டின் கேந்திரமான செல்வ வளங்கள், தொழில்களைப் பன்னாட்டு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் விட்ட பிறகு, நாட்டின் சுதந்திரம், இறையாண்மை என்று பேசுவதில் ஏதாவது பொருளுண்டா?

– செல்வம்

***

வரிக்கொள்கையை தீர்மானிப்பது யார்?

பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பதை விட, அந்நியக் கடனும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே போவதுதான் அபாயகரமானது. ஆனால், இந்திய ஆளுங்கும்பலும் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் பின்னிரண்டைப் பற்றிப் பேசாமல், அவற்றுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்காமல், பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பதைத்தான் ஊதிப் பெருக்கி வருகிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தா விட்டால், இந்தியாவின் கடன் பெறும் தகுதியைக் குறைத்துவிடுவோம் எனச் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் கடந்த ஆண்டு மத்தியில் மிரட்டின. இதைக் காட்டியே, டீசலுக்கும் சமையல் எரிவாயுவுக்கும், உரத்திற்கும் கொடுத்து வந்த மானியத்தையும் வெட்டியும்; சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்தும், சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்கள் விரும்பியபடி இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தயாரித்தார், ப.சி.

பெட்ரோல் விலைபாகிஸ்தானால் ஏவிவிடப்படும் முசுலீம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக சண்டமாருதம் செய்யத் தயங்காத இந்திய ஆளுங்கும்பலும் ஓட்டுக்கட்சிகளும் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், அந்நிய முதலீட்டாளர்கள் என்ற இந்தச் சந்தை பயங்கரவாதிகள் விடும் மிரட்டல் முன் வெலவெலத்துப் போய் நிற்கிறார்கள். வோடோஃபோன் நிறுவனம் இந்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய 11,000 கோடிரூபாய் பெறுமான மூலதன ஆதாய வரியைச் செலுத்தத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், வரி ஏய்ப்பைத் தவிர்க்கும் பொதுவிதிமுறைகள் 2012-13 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்நிய முதலீட்டாளர்கள் பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்தியவுடனேயே, அந்த விதிமுறைகளைக் கிடப்பில் போடும் நோக்கத்தோடு ஷோமே கமிட்டியை அமைத்தார், மன்மோகன் சிங். அந்த கமிட்டியும் தமது அந்நிய எஜமானர்கள் விரும்பியபடி அவ்விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை மூன்றாண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.

இந்தியாவின் வரி விதிப்பு முறையை அந்நிய முதலீட்டாளர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் தீர்மானிக்கின்றன என்பதற்கு இன்னும் பல உதாரணங்களைத் தரலாம். குறிப்பாக, தற்பொழுதுள்ள வரி விதிப்புகள் குறித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கருத்தை அறிந்துகொள்வது என்ற பெயரில் ஷோமேயின் தலைமையில் மற்றொரு கமிட்டியை (Tax Forum) அமைத்துள்ள மைய அரசு, இக்கமிட்டி வாரம் ஒருமுறை கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் என அறிவித்திருக்கிறது. மேலும், தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விதிக்கும் வரிகளை மாற்றியமைக்கும் நோக்கத்தோடு ரங்காச்சாரி என்பவர் தலைமையில் மற்றொரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சட்டபூர்வ வரிச்சலுகைகளும் தள்ளுபடிகளும்தான் பட்ஜெட் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது என்பது மறைக்கப்பட்டு, இச்சலுகைகள் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானவை என நயவஞ்சகமான முறையில் நியாயப்படுத்தப்படுகிறது.

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

  1. ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்கு ,இந்திய நிறுவனங்கள் மீண்டும் அயல் நாட்டு வர்த்தக கடன்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. (ஆகஸ்டு 7 ET )

    அயல்நாட்டு கடன்களை முடிவு செய்யும் உயர் மட்ட குழு, பன்னாட்டு நிறுவனங்களிடம் அவைகளின் இந்திய துணை நிறுவனங்கள் இயங்கு மூலதனத்திற்காக (working capital) அயல்நாட்டு அயல்நாட்டு வர்த்தக கடன்கள் வாங்கிகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    இப்படி வாங்கப்படுகிற அயல் நாட்டு வர்த்தக கடன்களை வைத்து ரூபாயில் வாங்கப்பட்ட இந்திய கடன்களை அடைத்து கொள்ளலாம் என்றும் நிறுவங்கள் ரூ 1800 கோடி மதிப்பிலான ($300 million வரை )கடன் தொகை வரை அயல் நாட்டு கடன்கள் வாங்கி கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கின்றன (தற்போதய வரையறை : 120 கோடி அல்லது $20 million ) அது போக அனுமதி பெறாமல் வாங்கப்படுகிற,ஐந்து வருடங்களுக்குள் திருப்பி செலுத்துகிற காலம் முடிவடைகிற அயல் நாட்டு வர்த்தக கடன் தற்போதய ரூ 4500 கோடியிலிருந்து ($750 மில்லியன் ) ரூ 9000 கோடி மதிப்பிலான அந்நிய கடன்கள் வாங்கிகொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது எனவே இந்திய வங்கிகளில் கொலேடரல் சமர்ப்பித்து, கேரண்டீ பெற்று , அயல் நாட்டு கடன்களை வாங்க எளிய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது டாலர் வரத்து அதிகமாகும் . Forward Contract மூலமாக தங்கள் வாங்கிய கடன்களை ரூபாய் மதிப்புசரிந்தாலும் முன்னரே முடிவு செய்யப்பட Exchange Rate ல் திரும்ப செலுத்துகிற வசதிகளையும் செய்து கொள்ளலாம் என்ற தகவல் வந்திருக்கிறது

  2. //குடும்பச் சோத்தை ஒவ்வொன்றாக விற்று தின்று தீர்க்கும் தறுதலைக்கும் மன்மோகன் சிங்கின் இத்தனியார்மய நடவடிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.//……. இதற்கு மேல் எளிமையாக இந்த கட்டுரையின் சாரம்சத்தை விளக்கமுடியாது……….. //மார்ச் 2014-க்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய 17,200 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான அந்நியக் கடனில் 44 சதவீதம் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் பெற்றுள்ள கடன் என்பதிலிருந்தே இந்தச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தியுள்ள அபாயத்தைப் புரிந்து கொள்ளலாம்//……….. எந்த செய்தித்தாள்களிலும் விவாதிக்கப்படாத உண்மையான கருத்து………..

    • //குடும்பச் சோத்தை ஒவ்வொன்றாக விற்று தின்று தீர்க்கும் தறுதலைக்கும் மன்மோகன் சிங்கின் இத்தனியார்மய நடவடிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.//……. இதற்கு மேல் எளிமையாக இந்த கட்டுரையின் சாரம்சத்தை விளக்கமுடியாது……….. /

      பு.ஜ வில் இந்தக் கட்டுரையை படித்த போது எனக்கும் இதுதான் தோன்றியது.

  3. நமது சுதேசி முதலாளிகள், அயல்னாடுகளில் முதலீடு செய்ய கொன்டுபோன மூலதனம் கொட்டொ கொட்டென்று லாபமாய் கொட்டும் என்று சொன்னார்கள்! என்ன செய்ய! கையை கடித்துவிட்டது!
    ஏமாந்தவர்கள் இருப்பார்கள் என்று சீனாவிற்கும்,ஜெர்மனிக்கும் போனார்கள்! அங்கிருந்தும் ஒன்றும் பெயரவில்லை! நாட்டுபற்றாளர்கள் நம் நாட்டுக்குள் கொண்டுவராமலே பதுக்கிவிட்டார்கள்!நமதுநாட்டில் செயல்படும் வோடாபோன்,நோக்கியா போன்றவை வரிஏய்ப்பு செய்தும், நீதிபதி தயவில் தப்பிக்கின்றன! இவ்வாறே இந்த தேசபக்தர் களெல்லாம் தப்பித்து கொள்ள ஊதியம்பெரும் நடுத்தர வர்க்கத்தினரே, ஒழுஙகாக வரி செலுத்தியும்,நுகர்வோர் வரிகளை செலுதியும், கடன் வாஙகி செலவு செய்தும் நமது பொருளாதாரத்தை காத்து வருகிறார்கள்! இவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்!அய்ந்துரூபாய்க்கு விற்ற காய்கறிகள் இப்பொது நாற்பது ரூபாய்!அரிசி அய்ம்பது ரூபாய்! தேர்தல் வந்தால் ஆட்சியை மாற்றலாம்! காட்சியை மாற்ற முடியுமா?

  4. தாராளமய தனியார்மயமாக்கல் என்பதே அப்பட்டமான கொள்ளை என்பதை மனசாட்சியோடு சிந்திப்பவர் எவருமே ஏற்றுக் கொள்வர்.நண்பர் அதியமான் போன்றோர் வேண்டுமானால் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு தூய முதலாளித்துவமே தீர்வு என கம்பு சுத்தலாம்.இதற்கு பெரிய பொருளாதார ஆய்வு எல்லாம் தேவை இல்லை.இந்த பாழாய் போன தனியார்மயத்திற்கு முந்தைய காலத்தை சற்றே நினைவு படுத்தி பார்த்தாலே போதும்.

    இப்போது ஏற்றுமதியை விட இறக்குமதி கூடிப் போனதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை வருவதாக ஒப்பாரி வைக்கும் ஆளும் கும்பல் இது தாராளமயத்தால்தான வந்தது என்பதை மட்டும் சொல்வதில்லை.80 களில் இந்தியாவிலேயே சாலிடெர்,டயனோரா போன்ற தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனங்கள் இருந்தன.அவற்றை ஒழித்துக்கட்டி வெளிநாட்டு தொலைக்காட்சிகளை கொண்டு வந்து குவித்தது யார்.காளி மார்க்கையும் மாப்பிள்ளை விநாயகரையும் வின்சென்டையும் ஒழித்துக்கட்டி பெப்சி கோக் என அந்நியன் மூத்திரத்தை வாங்கி குடிக்க விட்டவர்கள் யார்.நமது ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து குளிர்பானமும் தண்ணீரும் விறபதற்கு அவனுக்கு ஏன் டாலரில் கப்பம் கட்ட வேண்டும்.நமது நாட்டு மூலப்பொருளில் நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் துணிக்கும் செருப்புக்கும் கேவலம் அடிடாசு,பூமா என அவன் முத்திரையை குத்துவதற்கு கோடிக்கணக்கில் அவன் டாலராக அள்ளிப் போக அனுமதித்து விட்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை என ஓலமிடுவது அயோக்கியத்தனமில்லையா.

    நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேலும் மேலும் அந்நிய முதலீட்டை ஈரப்பதன் மூலமாக தீர்த்து விடலாம் எனபது மோசடி.இப்போது இருக்கும் முதலீடே நாட்டை திவாலாக்குகிறது.மேலும் வந்தால் என்னாவது.

    உள்நாட்டு,வெளிநாட்டு கடன்கள் மூலம் தீர்க்க முயன்றாலும் இப்போது இருக்கும் வட்டி சுமையையே தாங்க முடியாமல் தள்ளாடும் இந்திய பொருளாதாரம் மயங்கி சரிந்தே போகும்.

    ஆகவே உலக வர்த்தக கழகத்திலிருந்து வெளியேறுவதும் அனைத்து அந்நிய நிறுவனங்களையும் இழப்பீடு ஏதுமின்றி விரட்டியடிப்பதுமே இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கும்.

    • ///இந்த பாழாய் போன தனியார்மயத்திற்கு முந்தைய காலத்தை சற்றே நினைவு படுத்தி பார்த்தாலே போதும்.///

      :))) நிங்க அப்ப பிறக்கவில்லை. அறியாமையால் தான் இப்படி பேசுகிறீர்கள். மொதல்ல அன்று கடைபிடிக்கப்பட்ட மூடிய பொருளாதார கொள்கைகள் :

      1.Industrial licencing policy with permits, quotas under 5 year plans
      2.MRTP Act which limited maximum size of a company
      3.Confiscatory tax regime of almost 98 % for highest marginal rates
      4.Severe restrictions on foreign investments and resulting shortage of foreign exchange which was bridged by chronic bailouts from IMF.

      மேற்கொண்ட நான்கு அடிப்படை விசியங்களில் மீண்டும் பழைய பாணிக்கு செல்ல வேண்டும் என்று
      யாரும் போராடவில்லைல். ஏன் ? இவைகளை முற்றாக கைவிட்டது தான் தாரளமயமாக்கல் என்படுகிறது. மேலே சொன்ன விசியங்களுக்குள் சென்று விவாதிக்க தயார் என்றால் சரி. இல்லாவிட்டால் நான் இந்த ஆட்டத்துக்கு வரலப்பா !!

      மற்றபடி : //நண்பர் அதியமான் போன்றோர் வேண்டுமானால் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு/// மனசாட்சியை கழட்டி வைக்க முடிந்திருந்தால் சவுரியமா தான் இருக்கும். ஆனா முடியலையே !! ’நீங்க மூளைய கலட்டி வைத்துவிட்டு, etc, etc’ என்றெல்லாம் பதிலுக்கு பேச முடியும் தான். ஆனால் விவாத்தில் தனி மனித தாக்குதல் செய்யும் உங்களை போன்றவர்களுடன் தொடர்ந்து பேச அலுப்பாக இருக்கிறது. ஆள விடுங்க..

      • பாவம் அதியமான் நீங்கள்.சுதந்திரா கட்சி கிளப்பி விட்ட ”Licence Raj” பீதியை இன்னும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் போலும். தாரளமயமாக்கலை நியாயப்படுத்த ஏகாதிபத்தியவாதிகள் அடித்து விடும் பொய்களில் ஒன்று ”அப்போதெல்லாம் இந்தியாவில் தொழில் தொடங்க 80 முகாமைகளில் [agencies ] அனுமதி வாங்க வேண்டும்”

        .பார்க்க.http://news.bbc.co.uk/2/hi/south_asia/55427.stm

        சுட்டியிலிருந்து \\The labyrinthine bureaucracy often led to absurd restrictions – up to 80 agencies had to be satisfied before a firm could be granted a licence to produce//

        இந்திய அரசில் மொத்தமே 55 அமைச்சரவைகள்தான் உள்ளன.ஆனால் இந்த எத்தர்கள் 80 இடங்களில் அனுமதி வாங்க வேண்டுமென கதைக்கிறார்கள்.

        தொழிற்துறையின் மேல் அரசின் கட்டுப்பாடுகள் இருந்தன.உண்மை.ஆனால் அவை அவசியமானவை.அப்போதுதான் இந்தியா போன்ற வறிய நாடுகளில் இருக்கின்ற வளங்களை கொண்டு சமூகத்துக்கு என்ன தேவையோ அவற்றை மட்டும் உற்பத்தி செய்ய முடியும்.இல்லையென்றால் இப்போது நடக்கும் முட்டாள்தனமான உற்பத்திதான் நடக்கும்.நகர்ப்புறங்களில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாலை வசதிகளை அப்படியே வைத்துக் கொண்டு வாகனங்களை செய்து குவிக்கும் முட்டாள்தனத்தை எப்படி நியாயப்படுத்த போகிறீர்கள்.அதிலும் விற்காமல் தேங்கி விட கூடாது என வங்கிகளை கடன் கொடுக்க வற்புறுத்துவதையும்,இழுவை வாகனத்திற்கு [Tractor ] கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் மகிழுந்து கடன் விகிதத்தை விட கூடுதல் என்ற அயோக்கியத்தனத்தையும் எப்படி நியாயப்படுத்த போகிறீர்கள்.

        98 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் கொடுங்கள் மேற்கொண்டு பேசுவோம்.எனது சிற்றறிவுக்கு அவ்வளவு வரி விதிக்கப்பட்டது எட்டவில்லை.

        அந்நிய முதலீடு வந்தால்தான் அந்நிய செலாவணி கிடைக்கும் என்கிறீகள்.இது வீட்டை அடகு வைத்து வெள்ளையடிப்பதற்கு ஒப்பானது.உற்பத்தியை பெருக்கி இறக்குமதிக்கு ஈடாக ஏற்றுமதியை கொணர்வதுதான் உண்மையான அந்நிய செலாவணி இருப்பை தரும்.இது பொருளாதாரத்தின் அடிப்படையான எளிய உண்மை.இது கூட தெரியவில்லையே உங்களுக்கு.உங்கள் வாதப்படி பெப்சியும்,வோடபோனும் கொண்டு வந்த அந்நிய செலாவணியை எண்ணெய் இறக்குமதி செய்தும்,ராணுவ தளவாடங்கள் வாங்கியும்,அமைச்சர் பெருமக்கள் தனி வானூர்திகளில் பறந்தும் தின்று தீர்த்தாகி விட்டது. ஆகவே அவனுகளை ”நீ கொண்டு வந்த செலாவணி தீந்து போச்சு வெளிய போடா நாயே”ன்னு தொரத்திரலாமா.

        தாராளமயமாக்கல் சிறு கும்பலுக்கே பயனளிக்கிறது.பரந்துபட்ட மக்களுக்கு பயனில்ல.

        பார்க்க.http://www.mse.ac.in/Frontier/i9%20uma.pdf

        சுட்டியிலிருந்து \\In case of organised sector, annual employment growth has decreased from 3.44
        per cent per annum during 1990-91 to 1996-97 to -0.63 per cent in 1997-98 to 2004-05. //

        குறிப்பு. மனசாட்சியை கழட்டி எனபது ஒரு சரள நடையில் [flow ] வந்து விட்டது.உங்களை காயப்படுத்துவதாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

  5. //80 களில் இந்தியாவிலேயே சாலிடெர்,டயனோரா போன்ற தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனங்கள் இருந்தன.அவற்றை ஒழித்துக்கட்டி வெளிநாட்டு தொலைக்காட்சிகளை கொண்டு வந்து குவித்தது யார்.காளி மார்க்கையும் மாப்பிள்ளை விநாயகரையும் வின்சென்டையும் ஒழித்துக்கட்டி பெப்சி கோக் என அந்நியன் மூத்திரத்தை வாங்கி குடிக்க விட்டவர்கள் யார் //

    If you are making good quality product , why are you not able to compete with foreign made products ?

    Who stopped you from selling your product to other countries?

    What kind of technical capabilities, ingeniously developed during those period?

    Why people had to register and wait for years, with Bajaj to get one scooter, with BSNL to get phone line?

    • உலகையே கொள்ளையடித்து பகாசுர நிறுவனங்களாக வளர்ந்து விட்ட அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுடன் சரிக்கு சரியாக உள்நாட்டு சிறு உற்பத்தியாளர்களை போட்டியிட சொல்வது குள்ளநரித்தனம்.உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில்தான் அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும்.அதுதான் கூடுதல் வேலைவாய்ப்பு,மக்களின் வாங்கும் ஆற்றல் வளர்வது,கூடுதல் வியாபாரம் என மக்கள் நலன் பயக்கும் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும்.இப்போதைய தாராளமயமாக்கலில் தரகர்கள் மட்டுமே செழிக்க முடியும்.
      இன்று ஏற்பட்டிருக்கும் அறிவியல்,தொழில் நுட்ப வளர்ச்சியே கேட்டவுடன் இரு சக்கர வாகனத்தையும்,தொலைபேசியையும் தருகிறது.இந்திய மக்களுக்கு இவற்றையெல்லாம் வழங்க வேண்டும் என சேவை மனப்பான்மை உந்தி தள்ள எவனும் இங்கு தொழில் தொடங்க வரவில்லை.அவன் வராவிட்டாலும் இது நடந்திருக்கும்.
      அதிருக்கட்டும் கிருசுணா கோதாவரி படுகையில் எண்ணெய் தோண்டும் அம்பானியிடம் இருக்கும் தொழில் நுட்பம் ONGC இடம் இல்லை என எந்த முட்டாளும் சொல்ல மாட்டான்.பெப்சி கோக் காரன் சோடா தண்ணி விக்கிறதுக்கு என்னய்யா தொழில் நுட்பம் வேண்டி கிடக்கு.

      குறிப்பு.அப்போது வந்த டயனோரா வண்ண தொலைக்காட்சி பெட்டியை வாங்கியவர்களிடம் கேட்டு பார்த்தால் தெரியும்.அதன் தரம் எந்த வகையிலும் வெளிநாட்டு தொலைக்காட்சி பெட்டிகளுக்கு குறைந்ததாக இருக்கவில்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க