privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி !

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி !

-

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த தடை, சட்டப்படி செல்லாது என்றும், கடந்த மார்ச் 23-ம் தேதி தூத்துக்குடியில் பரவிய நச்சுக்காற்று பற்றி மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இத்துடன் ஆலைக்கு 25 வழிகாட்டுதல்களை வழங்கி அவற்றை ஆலை இரு மாத காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட்

கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி தூத்துக்குடி நகர மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண்ணெரிச்சல் ஏற்படவே நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலரும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தரவே ஆலை செயல்பட தடை விதிக்கப்பட்டது. மார்ச் 30-ல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலை செயல்பட முறைப்படி தடை விதித்தது. ஜெயலலிதாவுக்கு நல்லக்கண்ணு துவங்கி வைகோ வரை பலரும் அவசர அவசரமாக நன்றி தெரிவித்தனர். அம்மாவைப் பாராட்டுவதில் யாரும் பின்தங்கிவிடக்கூடாது என்ற பயம்தான்!

நச்சு வாயு கசிந்து 10 நாட்களுக்குள் ஏப்ரல் 2-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்திரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் 2010-ம் ஆண்டு தீர்ப்பை உச்சநீதி மன்றம் ரத்து செய்திருந்தது. அந்த வழக்கில் ஜெயா அரசு 2012-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தவில்லை என்று சான்றளித்திருந்தது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் மீது ஸ்டெர்லைட் மேல் முறையீடு செய்ததில் பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால உத்திரவாக ஆலை இயங்க அனுமதி அளித்தது. இறுதி விசாரணையின் ஒரு பகுதியாக தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் ஒருவர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஒருவர், இரண்டு ஐஐடி பேராசிரியர்கள் ஆகியோர்களைக் கொண்ட நால்வர் குழு இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். தூத்துக்குடி நகருக்கு வெளியே பல ஆலைகள் குறிப்பாக ரசாயன ஆலைகள் சில இயங்கி வருகின்றன. நச்சு வாயு அவற்றில் எதிலிருந்தாவது கூட வந்திருக்கலாம் என்பதுதான் ஐஐடி பேராசிரியர்களான நிபுணர்களின் ஐயப்பாடு. (ஐஐடி பேராசிரியரே சொன்ன பிறகு மறுகேள்வி கேட்பார்களா என்ன? – செவப்பா இருப்பனெல்லாம் பொய் சொல்ல மாட்டானா! என்ற கதை தான்).

நிபுணர் குழு அறிக்கை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடையாணை விதித்த செயலை சட்டவிரோதம் என்றெல்லாம் பேசத் துவங்கியது. போதாத குறைக்கு தூத்துக்குடியின் அரசு மருத்துவர்கள் சிலரே இதுவரை சுற்றியுள்ள ஆலைகளிலிருந்து வெளியான மாசடைந்த காற்றால் யாரும் மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய்க்காக மருத்துவமனையை நாடியதாக வரலாறே இல்லை என்று சான்றளித்துள்ளனர்

தற்போது வெளியாகியுள்ள பசுமைத் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் ஓராண்டுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை ஆலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்கு அரசு செயலர்கள் இருவர், நிபுணர்கள் இருவர், வைகோ ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு அமைத்து உத்திரவிட்டுள்ளது.

இவர்கள் அப்பகுதியில் ஏன் வாயு கசிந்தது என்றும் ஆலைப்பகுதியில் மக்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து இரு மாதங்களுக்கொரு முறை அறிக்கை தர வேண்டுமாம். அதனடிப்படையில் எதுவும் முடிவு எடுத்து விடப் போவதில்லை, மாறாக வாயு கசிவுகளை தடுக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி 6 மாதங்களுக்கொரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமாம். அதாவது வேதாந்தா குழுமத்திற்கு ஆலோசனை வழங்கி அவர்களை காப்பாற்ற வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் என்று அரசு அமைப்புகளை மட்டும் நம்பியிருந்தால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இது.

தாமிரத் தகடுகள்
உலகச் சந்தையில் விற்பதற்காக தூத்துக்குடியை அழித்து ஸ்டெர்லைட் தயாரிக்கும் தாமிரத் தகடுகள் (மாதிரி புகைப்படம்: நன்றி ராய்ட்டர்ஸ்).

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பைக் குறித்து ஸ்டெர்லைட்டின் தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் கருத்து கூறுகையில், “25 வழிகாட்டு நெறிமுறைகளை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். அதில் 7 எல்லா ஆலைகளுக்கும் பொருந்தக் கூடியது. 6 எங்களது ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது சம்பந்தப்பட்டது” எனக் கூறி பெரும்பாலானவற்றை தாங்கள் நிறைவேற்றவே போவதில்லை என்று சொல்லாமல் சொல்லி விட்டார். நாங்கள் மாசடைந்த நீரை கடலில் கலக்கும் வேலையை செய்யாத ஒரே தாமிர உற்பத்தி நிறுவனம் என்றும் கூறியுள்ள அவர் ஆலை மூடப்பட்டிருந்த 85 நாட்களில் ரூபாய் 4,000 கோடி நட்டம் என்றும், தாங்கள் சுற்றுச்சூழலுக்காக மட்டும் 500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி தாங்கள் சரியானவர்கள் என்பதோடு பொருளாதார ரீதியிலு காசை இறைத்திருப்பதாக சொல்லி விட்டார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதி மன்றம் போக உள்ளது. ஆனால், அங்கு ஏற்கெனவே ஜெயா அரசு கொடுத்த ஸ்டெர்லைட் பாராட்டு பத்திரம் இருக்கிறதே! அதற்கும் மேல் ஸ்டெர்லைட் இழைத்த தீங்குகளுக்கு எல்லாம் ரூ 100 கோடி அபராதம் விதித்து ‘நாட்டு நலன்’ கருதி அதை தொடர்ந்து இயங்க அனுமதிப்பதாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் இருக்கிறது. அந்த தெனாவெட்டில் தான் வேதாந்தா 25 என்ன நூறே விதிமுறைகள் போட்டாலும் அது என் ம#$க்கு சமம் என்று நிமிர்ந்து நிற்கிறான்.

தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை நச்சுப்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் , அரசு அமைப்புகளை மட்டும் நம்பியிருந்தால் வைகோ போல வேதாந்தாவின் சுற்றுச்சூழல் ஆலோசகராகத்தான் மாற வேண்டியிருக்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுக்காமல் தூத்துக்குடி மக்கள் நிம்மதியாக மூச்சு கூட விட முடியாது என்பதுதான் நிதர்சனம்.