நோய்ப் படுக்கையில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு ஒரு புதிய டாக்டர் வந்திருக்கிறார். ஆம், நடப்புக் கணக்கில் பற்றாக்குறை, ரூபாயின் மதிப்பு குறைவு, விவசாயத் துறையில் நலிவு, தொழில் துறையில் தேக்கம், வேலை வாய்ப்புகளில் வீழ்ச்சி இவற்றை எல்லாம் சரி செய்ய மன்மோகன் சிங், ப சிதம்பரம், மான்டேக் சிங் அலுவாலியா போன்ற ‘உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்களின்’ கரங்களை பலப்படுத்த ரகுராம் ராஜன் என்ற பன்னாட்டு பொருளாதார ‘நிபுணர்’ இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக செப்டம்பர் மாதம் தேதி பதவி ஏற்கவுள்ள ரகுராம் ராஜன் அவரது தந்தை வெளியுறவுத் துறையில் பணி புரிந்ததால் 7-ம் வகுப்பு வரை வெளிநாடுகளில் பள்ளிக் கல்வி பயின்று அதன் பிறகு டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். அமெரிக்கா செல்ல அனுமதிச் சீட்டாக பயன்படும் வகையில் டெல்லி ஐஐடியில் எலக்ட்ரிகல் துறை பட்டமும், ஐஐஎம் அகமதாபாத்தில் மேலாண்மை பட்டமும் பெற்று அமெரிக்காவின் எம்ஐடிக்குப் போய் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். ஐஐடி, ஐஐஎம்மில் படிக்கும் மேட்டுக்குடி இந்தியர்களது தேசபக்தி அமெரிக்காவில்தான் பொங்கி வழியும் என்ற உண்மைக்கேற்ப இவரும் அமெரிக்காவிலேயே குடியேறி விட்டார்.
தமிழே தெரியாத இவரை தமிழரென்று கண்டுபிடித்து சில தினசரிகள் மகிழ்கின்றன. இனி, புதுதில்லி சென்று பணம் வென்ற மறத்தமிழனென்று சீமான் கூட்டம் நடத்தாததுதான் பாக்கி.
வங்கிகள் பற்றிய கட்டுரைகள் என்ற ஆய்வுத் தொகுப்புக்கு முனைவர் பட்டம் பெற்ற அவர் சிகாகோ பல்கலைக் கழகத்தின் பூத் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் (பூத் பொருளாதாரக் கல்லூரி) பணி புரிந்து வருகிறார். 2003-ம் ஆண்டு முதல் 2006 டிசம்பர் வரை ஐஎம்எப்-பின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் பணி புரிந்திருக்கிறார். 1980-களிலிருந்து உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அவற்றின் பொருளாதாரங்களை அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அடிமைப்படுத்துவதற்கான கொள்கைகளை சுமத்துவதுதான் ஐஎம்எப்பின் பணி. கடன் கொடுக்கும் போதே கண்டிஷன்ஸ் அப்ளை என்று ஏழை நாடுகளது இறையாண்மையை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதுதான் அதன் முக்கிய நோக்கம். அத்தகைய திருப்பணிக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்தவர்தான் இப்போது இந்திய ரூபாயை நிர்வாகிக்க ரிசர்வ் வங்கியின் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
இனி ஐஎம்எஃப் கடன் கொடுக்கும் போது இந்தியா கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை பட்டியலிட வேண்டியதில்லை. அவற்றை வடிவமைத்த நிபுணர் குழுவைச் சேர்ந்தவரே இங்கு ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் போது “நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமை சாலி” என்று அமெரிக்கா மெச்சிக் கொள்ளும்.
அமெரிக்காவில் பணி புரிந்து வந்த ரகுராம் ராஜன் ஏற்கனவே இங்கு மன்மோகன் சிங், அலுவாலியா, சிதம்பரம் போன்றவர்கள் இந்தியாவை மலிவாக விற்பனை செய்து செயல்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மேலும் வலு சேர்க்க அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் இந்திய அரசால் அழைக்கப்பட்டாரா, அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அவரை இந்திய அரசின் மீது சுமத்தினார்களா என்பது மன்மோகன் சிங்குக்குத்தான் வெளிச்சம். இந்திய நிதித்துறை சீர்திருத்தங்களுக்கான கமிட்டியின் தலைவராகவும், பிரதமர் மன்மோகன் சிங்கின் கௌரவ பொருளாதார ஆலோசகராவும் பணியாற்றியவர் அதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
1960-களின் இறுதியில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் (UNCTAD) பணி புரிந்து விட்டு இந்தியாவுக்கு வந்து தனது 50 வயதில் 1982-ல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆனார் மன்மோகன் சிங். அதற்கு முந்தைய ஆண்டில்தான் இந்தியா ஐஎம்எப்பிடமிருந்து கடன் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் போலவே ஐஎம்எஃப்பில் ஆலோசகராக பணி புரிந்த ரகுராம் ராஜனும் தனது 50-வது வயதில் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக்கப்பட்டுள்ளார்
இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகள், நிதித்துறை சிக்கல்கள் இவற்றை சமாளிக்க பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து காட்டும் அக்கறையை இது காட்டுகிறது என்று முதலாளித்து அறிஞர்கள் பேசுகிறார்கள். ஆனால் முழு இந்தியாவையும் ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்வதில் சுணக்கம் கூடாது என்பதற்காகவே ஐஎம்எஃப்பின் நிபுணர்கள் இங்கே நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றனர். இனி மறுகாலனியாக்க நடவடிக்கைகள் முன்னிலும் வேகம் பிடிக்கும்.

1991 முதல் சுமார் 15 ஆண்டுகளுக்கு நடுத்தர வர்க்கத்தின் செல்லப் பிள்ளையாக விளங்கிய அந்த நிதி நிறுவனங்களின் பிரதிநிதியான மன் மோகன் சிங் இன்று அதே வர்க்கத்திடம் காலாவதியாகி இருப்பதால் புதிய தேவதைகள் தேவைப்படுகின்றன. அதன் பொருட்டு இந்த ரகுராம் ராஜன் இறக்கப்பட்டிருக்கிறார். இந்திய பொருளாதாரத்தை உலக முதலீட்டாளர்களுக்கு மேலும் திறந்து விட வசதிகள் செய்து தருவது ரகுராம் ராஜனின் முக்கிய கடமையாக இருக்கும்.
பாரம்பரியமாக எச்சரிக்கையுடன் கடன் கொடுக்கும் தன்மையுடைய வங்கித் துறை தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் உலக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டது; அப்படி இணைக்கப்பட்ட நிதித் துறையில் தகவல் தொழில் நுட்பத்தைப் மேலும் அதிகமாக பயன்படுத்தி சூதாடுவதற்கான புதுப் புது கருவிகள் உருவாக்கப்பட்டன; வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்கள் சரக்காக சந்தையில் கிடைத்ததால் அவர்களுடன் நேரடி தொடர்பு இல்லாமலேயே கடன் கொடுப்பதற்கான வசதி ஏற்பட்டது; இதனால் வங்கிகள், ஓய்வூதிய நிதியங்கள், முதலீட்டு வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் தொழில் முறை மேலாளர்கள் அதிக அபாயங்கள் அடங்கிய முதலீடுகள் செய்து தமது ஊதியத்தை பெருக்கிக் கொள்ள முயற்சித்தார்கள்; இவை அனைத்தும் அமெரிக்க நிதித் துறையிலும் அதைத் தொடர்ந்து உலகளாவிய நிதிச் சந்தையிலும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என்பதை 2005-ம் ஆண்டே முன்னறிவித்த புகழுடையவர் ரகுராம் ராஜன் என்று வணிக நாளிதழ்கள் புகழாரம் சூட்டுகின்றன.
ஆனால், தனி நபர்களும் நிறுவனங்களும் புதுப் புது வழிகளில் தமது மூலதனத்தை பெருக்கிக் கொள்ளும் வேட்டையில் ஈடுபடும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் இத்தகைய நெருக்கடிகளுக்குள் தள்ளப்படும் என்பது 300 ஆண்டு கால முதலாளித்துவ பொருளாதாரத்தில் பல முறை முன்னறிவிக்கப்பட்டும், நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான ஒரு நிகழ்வுதான். இத்தகைய நெருக்கடிகளை முன்னறிவிப்பதற்கு “பகலில் வெயிலடிக்கும், இரவில் இருட்டாக இருக்கும்” என்று சொல்வது போன்ற அடிப்படை அறிவே போதுமானதுதான்.
ரகுராம் ராஜன் இத்தகைய நெருக்கடிக்கு காரணமாக முதலளாத்துவ பொருளாதாரத்தின் அடிப்படைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மாறாக பாதுகாப்பாக தொழில் செய்வது எப்படி என்று நெருக்கடிகளை தடுக்கும் வழிகளை வரையறுக்கிறார். முன் பின் தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்காமல் இருந்திருந்தால் அமெரிக்க நெருக்கடி வந்திருக்காது என்பதாயும் அவரது கண்டுபிடிப்பை புரிந்து கொள்ளலாம். ஆனால் பெருத்து விட்ட மூலதனம் ஒரு போதும் முடங்கிப் போக வழியில்லை என்று மேலும் மேலும் சூதாட்டம் போல பெருக்க நினைத்ததில்தான் அமெரிக்க நெருக்கடி ஆரம்பத்ததுவே அன்றி பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளால் அல்ல. இது முதலாளித்துவம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஒருசுய முரண்பாடு. இதில் இருந்து முதலாளித்துவ பொருளாதாரம் தப்பவே முடியாது. எனினும் இதை எந்த முதலாளித்துவ பொருளாதார அறிஞரும் ஏற்பதில்லை.
பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் விவசாயத் துறையை அழிய விட்டது, தேசியத் தொழில் துறையை முடக்கி தரகு முதலாளித்துவத்தை வளர விட்டது, ஏற்றுமதிக்கான மற்றும் நிதித்துறை சேவைகளின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி இவற்றால் நலிந்துள்ள இந்தியப் பொருளாதாரத்தை ரகுராம் ராஜன் போன்ற நிதித்துறை நிபுணரை வைத்து ஒழுங்குபடுத்துவதன் மூலம் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மேலும் சுரண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க நினைக்கின்றன. ஆனால் அந்த ஒழுங்கு படுத்தல்கள் என்பது மக்களை மேலும் துன்ப துயரத்தில் தள்ளிவிடுவனவே அன்றி வேறு எதுவுமல்ல.
அடிப்படை துறைகளான விவசாயம், தொழில் உற்பத்தி, உள்நாட்டு சேவைத் துறை இவற்றில் இந்திய மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்படாதது வரையில், பன்னாட்டு நிதி மூலதனத்தின் தயவில் நம் நாட்டை வைத்திருப்பது வரையில் இந்தியா மேலும் மேலும் மோசமாகும் நெருக்கடிகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும். மிகச் சிறுபான்மையினரான தரகு முதலாளி வர்க்கத்தினர் தமது செல்வத்தைப் பெருக்கிக் கொண்டே போக, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்கள் அடகு வைக்கப்பட்டு அழிக்கப்படுவதை முறியடிக்க உலகமயமாக்கல் கொள்கைகளை தடுத்து நிறுத்துவதுதான் ஒரே வழி.
– பண்பரசு
மேலும் படிக்க
- A reformist economist to play central banker
- Ex-IMF heavyweight Raghuram Rajan named new RBI chief, rupee at new low
- Steep learning curve ahead for next RBI governor Raghuram Rajan
- Raghuram Rajan takes over as chief economic advisor
- Rajan in his own words
- Six things you need to know about Raghuram Rajan
- Raghuram Rajan (Wikipedia)
- Raghuram Rajan (Chiago Booth)