Sunday, October 6, 2024
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுபுமாஇமு போராட்டங்கள் உருவாக்கிய போலீஸ் 'ஹீரோ'!

புமாஇமு போராட்டங்கள் உருவாக்கிய போலீஸ் ‘ஹீரோ’!

-

போலீசு மக்களின் நண்பனா? எதிரியா ?

“இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. இந்தப்பகுதியிலே சாலை போடுவதற்காக தற்போது பூசை போடப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல தொடர்ச்சியாக மக்களுக்கு நல்லது செய்து வரும் இந்த அரசு மேலும் பல திட்டங்கள் அறிவிக்க இருக்கிறது. மின்விளக்குகள், குடி தண்ணீர் பிரச்சினை ஆகிய அனைத்தையும் அரசு சரி செய்யும். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் இந்த அரசு தீர்த்துவைக்கும். இந்த விழாவிலே கலந்து கொண்டதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இப்படி ஒரு விழாவை நடத்துவதற்கு அதிகம் உழைத்தது மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு. அவர் மூலம் உங்கள் ஊருக்கு நிறைய நல்லது செய்ய உள்ளோம். இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் டியூசன் சென்டர்களை அமைக்கவும் பாய்ஸ் கிளப் அமைக்கவும் அவர் முயன்று வருகிறார். ஆகவே அவருக்கு ஆதரவு நீங்கள் கொடுக்கவேண்டும்.”

இணை ஆணையர்
தொடங்கி வைத்த’ இணை ஆணையர்

– மதுரவாயல், பிள்ளையார் கோயில் பகுதியில் நடந்த சாலை போடுவதற்கான பூசை விழாவில் சென்னை இணை ஆணயர் சண்முகவேல் பேசியதில் இருந்து.

என்ன நடக்கிறது இந்த நாட்டில்?

ஒவ்வொரு சாலையின் சந்திப்புக்களிலும் நின்று கொண்டு, “லைசென்ஸ் இல்லை, ஆர் சி புக் இல்லை, ஏன் நீ மனுசனே இல்லை” என்று துரத்தி துரத்தி பணம் வசூலிப்பது, டீக்கடை, ஹோட்டல்கள் முதல் மீன்கடை, தரைக்கடை என அனைவரிடமும் மிரட்டி பணம் பறிப்பது, விசாரணை என்றபெயரில் சித்திரவதை செய்து அடித்தே கொல்வது போன்ற மக்கள் விரோத / சட்ட விரோத செயல்களையே குலத்தொழில்களாகக் கொண்டிருக்கும் போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஹீரோக்கள் வெளிவருவதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு.

ஆம் புதியதாய் ஒரு ஹீரோ மதுரவயல் காவல் நிலையத்தில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் ஆனந்தபாபு, இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ். காவலர்களுக்கு ஓசியில் உணவு தர மறுத்ததற்காக மதுரவாயலில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை பொய் வழக்கிட்டு சித்திரவதை செய்ததற்கு புகழ்பெற்ற மதுரவாயல் காவல் நிலையத்தில் இருந்து ஒரு புது சரக்கு ஆனந்தபாபு. ஆம் இவர் பதவியேற்ற பின்னர் மதுரவாயல் பகுதி இளைஞர்களை பொய்வழக்கில் கைது செய்வது, சித்திரவதை செய்வது, ஒரு கொட்டடிக்கொலை…….என்று ஹீரோயிசங்கள் தொடர்ந்தன.

இதையெல்லாம் எதிர்த்துப் போராடக்கூடிய புமாஇமு மீது பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுதல், புமாஇமு தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் பொய்யாக கைது செய்தது, அதற்கு நியாயம் கேட்கப்போனவர்களை போலீசு படை மூலம் வெறி கொண்டு தாக்கி 50 பேர்களை சிறையில் அடைத்தது, மக்கள் பிரச்சினைக்காக சுவரொட்டி ஒட்டியவர்களை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது……………….. இன்னமும் கணக்கில் அடங்காத சாதனைகளை செய்தவர்தான் ஆனந்தபாபு.

லைசென்ஸ் ( நான்கு சக்கர வாகன லைசென்சிற்கு காவல் நிலையத்தில் அத்தாட்சி வாங்குதல் ) வேண்டும் என்று காவல் நிலையம் சென்றால் கூட ”உங்க ஏரியாவில் யாருக்குமே லைசென்ஸ் தரமுடியாது, புமாஇமுவில் இல்லைன்னு எழுதிக்கொடுங்க, லைசென்ஸ் தரேன்”, “பிள்ளையார் கோயிலில் இருந்து எவன் வந்தாலும் ரிமாண்டுதான்” என்பது இவரின் புகழ்பெற்ற வார்த்தைகள்.

தனியார்மயத்தின் கோர விளைவால் உழைக்கின்ற மக்களின் வாழ்க்கை  விசிறியடிக்கப்படுகின்றது.  அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன. இப்பிரச்சினைகளை ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. விளைவு, தங்களின் உரிமைக்காக போராடத் துவங்குகிறார்கள். மக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லை, கழிவறை இல்லை, குடியிருக்க இடம் இல்லை என்று கால்கடுக்க அலைந்த போது திரும்பிப்  பார்க்காத இந்த அரசு,  அடிப்படை வசதிகளுக்காக போராடும் மக்கள் மீதும் அவர்களுக்கு  தலைமை தாங்கும் புரட்சிகர,  ஜனநாயக சக்திகள் மீதும் அடக்கு முறையை செலுத்துகிறது. அதனால் இனியும் இந்த ஆளும் வர்க்கம் ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளை நம்பத் தயாராக இல்லை. தானே நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு பொய் வழக்கு, சிறை, சித்திரவதையை பரிசாகத்தருகிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் மதுரவாயலும் எழும்பூர் சந்தோஷ் நகரும்.

துணை மேயர்
துணை மேயரை சூழ்ந்து கேள்வி கேட்கும் மக்கள்

மதுரவாயல் பிள்ளையார் கோயில் பகுதியில், சாலை, குடி நீர், கழிவறை உட்பட எந்த அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்ட நிலையில் புமாஇமு தோழர்களின் தலைமையில் இந்தக்கொடுமைக்கு எதிராக மக்கள் போராடினார்கள். அண்ணன், தங்கை, அப்பன், மகள் என வித்யாசமின்றி இருட்டில் மலம் கழித்துக்கொண்டிருந்த கொடுமைக்கு புலம்புவது தீர்வல்ல, போராடியே எதையும் பெறமுடியும் என்று கூறி மக்கள் போராட்டத்தின் மூலம் கழிவறை பிரச்சினை முதல் அடிப்படைப்பிரச்சினை வரை சாதித்துக்கொண்டு இருப்பதும் புமாஇமு தான்.

அதே போல எழும்பூர் சந்தோஷ் நகரில் பொதுக்கழிவறை இல்லாமல் காலைக்கடனை கழிக்க ரயில்பாதைகளின் ஓரம் சென்று உயிரை இழந்தவர்கள் பலர். பாதிக்கப்பட்ட மக்களை அணி திரட்டி கழிவறையை கட்டிக் கொடுக்க வைத்தது மட்டுமல்ல, அதை பராமரிக்காமல் வைத்து இருந்த அரசுக்கு எதிராக மக்களை மீண்டும் திரட்டியதன் விளைவாக புதிய கழிவறையை கட்டிக் கொடுத்து சாக்கடைகளை தூர்வாரி, குப்பைகளை அகற்றி, தண்ணீர் தொட்டியை அமைக்க வைத்தது மக்களின் போராட்டங்கள்தான்.

மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை போராடியே பெறமுடியும் என்பதை அனுபவத்தில் உணர்ந்ததால்தான் மதுரவாயல் – பிள்ளையர் கோயில் பகுதி மற்றும் சந்தோஷ் நகர் மக்கள் மற்ற ஊர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள். அம்மக்களைப் போல அணி திரண்டு போராட வேண்டும் என்பதை அருகில் உள்ள ஊர் மக்களும் உணர்ந்து வருகிறார்கள். இதற்குத்தான் புமாஇமு போராடுகிறது, மக்கள் தங்களுடைய போர்க் குணமிக்க போராட்டங்களின் மூலம் மட்டுமே உரிமைகளைப்பெற முடியும் என்ற கருத்தை தமிழகம் முழுக்க கொண்டு செல்வதும் அதை நிரூபித்துக்காட்டியதும் புமாஇமு. அதனால்தான் புமாஇமு செயல்படும் பகுதிகளில் அடிப்படை பிரச்சினைக்காக சுவரொட்டியை ஒட்டியவுடனே ஓடி வருகிறது அரசு. மக்களுக்கு சேவை செய்ய அல்ல.

மதுரவாயல் – பிள்ளையார் கோயில் பகுதியில் இவ்வருடம் சாலை, குடி நீர், சாக்கடை, சாலை ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளை சீர் செய்ய வலியுறுத்தி போராடியதன் விளைவாக சாலை, சாக்கடை வசதிகள், குப்பைத்தொட்டிகள் பராமரிப்பது ஆகியவற்றை சீர்செய்ய மாநகராட்சி வேறு வழியின்றி ஒத்துக்கொண்டது. இப்படி மக்கள் போராடிப் பெற்ற சாலைக்குத்தான் இணை ஆணையர், கூடுதல் ஆணையர் என தலைமை தாங்கி பூசை செய்தார்கள். போராடுகின்ற மக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் அரசு ஏன் மக்கள் போராடிப்பெற்ற சாலைக்கு போலீசு கும்பல் பூசை போடுகிறது? மதுரவாயல் சந்தோஷ் நகரைப்போல மற்றப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைக்காக அணி திரளக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம்.

மக்கள் போர்க்குணமிக்க போராட்டங்களைத்தொடரக்கூடாது , புமாஇமுவை நாடக்கூடாது என்பதுதான் போலீசு அதிகாரவர்க்கத்தின் எண்ணம். அதனால்தான் புமாஇமு ஒரு சதிகாரகும்பல் என்பது போன்ற பொய்ச்செய்தியை ஊடகங்களின் மூலமாக தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது . எதையுமே போராடாமல் பெறமுடியாது என்பதை அனுபவமாக மக்கள் உணர்ந்துள்ள சூழலில் கிரிமினலிசத்தை திட்டமிட்டு உருவாக்குகின்ற இந்த போலீசு நான் உங்கள் நண்பன் என்றாலும் சரி, டியூசன் சென்டர், பாய்ஸ் கிளப் என்று என்னதான் கூப்பாடு போட்டாலும் மக்கள் அதை நம்பத்தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

“என்னய்யா இது? ரோட்டுக்கு பூசை போடறதுக்கு இவ்வளவு போலீசா” என்று மக்கள் ஓராமாய் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து போலீசு கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தது. துணை மேயர் பெஞ்சமின், முதல் கவுன்சிலர், வட்டம், சதுரம் வரை அனைவருமே இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர் என அனைவருக்குமே பொன்னாடைகளை போர்த்திக் கொண்டு இருந்தார்கள். மைக்கைப் பிடித்த அனைத்து அரசியல்வாதிகளும் “இப்படி ஒரு மக்கள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபுதான் காரணம், அவருக்கு நன்றி” என்று புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் கிளம்பிய துணை மேயர் பெஞ்சமினை “தண்ணீர் இல்லை, ரேஷன் பொருட்கள் வருவதில்லை” என்று மக்கள் முறையிட்டுக் கொண்டே போனார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் துணை மேயர், வட்டம், சதுரம் என யாராலும் சமாளிக்க முடியாத போது இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு அவர்களை மீட்டுக் கொண்டு போனார். இந்த ஓட்டு சீட்டு அரசியல்வாதிகள் தற்போது அம்பலப்பட்டு போய் விட்டார்கள். நேரடியாக களத்திற்கு அதிகார வர்க்கம் வர முயல்வதன் காரணமாக ஆனந்தபாபுவை களமிறக்கியிருக்கிறது. வறுமைக்கெதிரான மக்களின் போராட்டத்தை சமாளிக்க இனி ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை நம்பமுடியாது என்பதுதான் அரசின் நிலை. அதனால்தான் ஆனந்த பாபு உருவாக்கப்பட்டு இருக்கிறார் ஹீரோவாக.

இத்தனை பொய்வழக்கு, சிறைக்குப்பின்னும் ஒரே வழியில் மட்டும் மக்களையும் மக்களுக்காக போராடும் புமாஇமுவையும் ஒடுக்க முடியாது என்றுதான் மக்கள் நலப்பணி என்று உள்ளே நுழைகிறது அரசு, அதற்கு ஹீரோவாக இருக்க வைக்கப்பட்டு இருக்கிறார் ஆனந்த பாபு. வறுமைக்கு எதிரானப் போராட்டங்கள் தீவிரமடையும் போது போலீசு, அதிகாரவர்க்கம் என யார் எந்த வேடத்தில் வந்தாலும் அவர்களை ஜீரோவாக்கி காட்டுவார்கள் மக்கள் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் உண்மை.

1.  சந்தோஷ் நகரில் கழிப்பறை, சாக்கடை, குப்பைத் தொட்டிகளின் நிலைமை (முன்பு)

2. சந்தோஷ் நகரில் போராட்டங்களுக்குப் பிறகு நடந்த பராமரிப்பு பணிகள்

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை.

  1. எப்டியோ…நல்லது நடந்தா சரிதான். உங்களுக்கு ஏன் காண்டு.
    நல்லத யார் பன்னாலும் ஏத்துக்கனும். உங்க கட்டுரைல வகுத்தெரிச்சல்தான் தெரியுது.
    எல்லாம் சரியாய்ட்டா நாம யார்ட்ட போய் ஹீரோ வெஷம் கட்ரதுனு பயம் வந்துருச்சோ.

  2. கழுத்தை சுத்தி மூக்கை தொட்டாலும், நேரிடையாக மூக்கை தொட்டாலும் போலீசு, மக்களின் நண்பனாக ஒருக்காலும் இருக்கமுடியாது. அது உழைக்கும் மக்களுக்கு எதிரிதான்,

  3. போராட்டங்களுக்கு வழி காட்டும் தோழர்களுக்கு வாழ்த்துகள்!

    “இந்தக் கன்றாவிகளைக் கண்டு மனுமேல் மனுக் கொடுத்தும் செவி மடுக்காத நகராட்சியை உலுக்கியது நகராட்சி வாசலில் மலம் கழிக்கும் போராட்டம். இது திருச்சி தில்லை நகர், காந்திபுரம் ‘கக்கூசுக்காக’ சில ஆண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க வினர் நடத்திய போராட்டம். மலம் கழிக்க அணிதிரள்வதற்கு முன்பாகவே ஒரு பெரும் படை நகராட்சி அலுவலகத்திலிருந்து பறந்து வந்தது. வந்த வேகத்தில் அலசி அள்ளிச் சென்றது மலக்குவியல்களை.”

    மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
    http://hooraan.blogspot.com/2011/03/blog-post_19.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க