ஓடு தலைவா ஓடு !

-

லங்காரங்களால் சவடால் அடிக்கும் பொய்கள், தங்களை உண்மைகளுக்கும் மேலானவை என்று எப்போதும் காட்டிக் கொண்டாலும், அவற்றின் ஆயுள் அற்பமென்பதால், அவை சிதறி விழும் போது மீண்டும் மீண்டும் அவலத்திற்கு தள்ளப்படுவது இயற்கை. இது பஞ்ச் டயலாக்கிற்கு போட்டியாகச் சொல்லப்படும் பஞ்ச் தத்துவமென்றாலும் “காவலனி”ல் முறைத்து, பிறந்த நாளில் தடுமாறி, “தலைவா”வில் தள்ளாடுகிறது விஜயின் சினிமா மேக்கப். “Time to lead” எனும் தலைவா படத்தின் ‘கம்பீர’ முழக்கம் இப்போது “Time to run” என்பதாக சரிந்து விழுந்திருக்கிறது.

டெரர் ஃபேஸ்
“Time to lead” எனும் தலைவா படத்தின் ‘கம்பீர’ முழக்கம் இப்போது “Time to run” என்பதாக சரிந்து விழுந்திருக்கிறது.

சென்ற தேர்தலில் விஜய் அன் கோ தமக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதிலிருந்து ஜெ-வுக்கும் வி-வுக்குமான முரண்பாடு ஆரம்பிக்கிறது. பிறகு தமிழ்நாட்டில் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அந்தக் காலத்தில் பாக்யராஜ், டிஆர் (இவர் இப்போதும் களத்தில் உள்ளார் என்றாலும் அதன் பரப்பளவு 2க்கு 2 அடி) துவங்கி பிறகு விஜய் வரைக்கும் ஆளாளுக்கு அடுத்த முதல்வர் என்று பிளக்ஸ் வைப்பது ஜெவுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டவுட்டுக்கு மற்ற உருவங்களெல்லாம் வித்தவுட்டாகத்தான் தெரியும் என்பது பாசிசத்தின் பாலபாடம்.

இதில் ரஜினி அரசியல் ஆட்டத்துக்கு வரவில்லை என்று ஓட, சரத்குமார் காலில் விழ, விஜயகாந்த் போயஸ் தோட்டத்திலிருந்து தனது வாழ்வைத் துவக்கி தற்போது அங்கேயே முடிக்குமளவு விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளார். மீதமிருப்பவர் விஜய். இதில் இளைய தளபதியே சும்மா இருந்தாலும் அவரை உசுப்பி விட்டு, அவரது படத்தைக் காட்டி அரசியல் ஆசைகளை ரசிகர்களுக்கு வளர்த்து விட அப்பா சந்திரசேகர் முயல்வதால் ஜெவின் கண்கள் கோபத்தில் சிவப்பானது.

கருணாநிதி காலத்தில் தமிழ்த் திரையுலகம் எந்த படமெடுத்தாலும் அதில் அரசியல் கலந்தோ, இல்லை முதலமைச்சரை கிண்டல் செய்வது மட்டுமல்ல, வில்லனாகவே காண்பித்தாலும் அவர் கண்டு கொள்வதில்லை. கருணாநிதியைப் பொறுத்தவரை ஆறுமாதத்திற்கு ஒரு முறை ஏதாவது சால்ஜாப்பில் ஒரு பாராட்டு விழாவை திரையுலகினர் நடத்தினால் அங்கே சென்று முழு நிகழ்வையும், குத்தாட்டங்களையும் உள்ளிட்டு ரசித்து, தன்னைப் பாராட்டும் பரிதாபமான வார்த்தைகளில் மூழ்கி திக்கு முக்காடுவார். அதைத் தவிர வேறு ஆசைகள் அவருக்கில்லை. தமிழ் சினிமாக்காரர்களும் முகவிற்காகவே இந்த ஜால்ரா சங்கீதத்தை அவ்வப்போது நிகழ்த்துவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போதை. கருணாநிதிக்கு புகழ் போதை.

ஆனால் அவரது வாரிசுகளின் வாரிசுகள் படத்தயாரிப்பாளர்களாக அவதரித்ததால் அவர்களுக்கு நட்சத்திர நடிகர்கள் கால்ஷீட் கொடுத்தே ஆகவேண்டுமென்று கட்டாயம் ஆயிற்று. அப்படி சில முரண்பாடுகள் உருவானாலும் பெரிய அளவில் யாரும் பகைத்துக் கொள்ளுமளவு சிக்கல்கள் உருவாகவில்லை. ஆனால் விஜயக்கு ஏதோ கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தது போலும்.

கூடவே அவரது படங்களில் சில வரலாற்று விபத்தாக சகல சென்டர்களிலும் ஓட (பல ஓடவில்லை என்பது வேறு விசயம்) அப்பா சந்திரசேகரது மனதில் அடுத்த முதல்வர் எனும் நோய் பெருங்கனவாக உருவெடுத்திருக்கலாம். இடையில் சட்டமன்ற தேர்தல் வந்த போது, உடன் கட்சி ஆரம்பிப்பது சாத்தியமில்லை எனுமளவுக்கு விவரம் இருந்ததால் விஜய் தரப்பு நிதானித்தது. அதிலும் திமுக எதிர்ப்பு மேலோங்கிய நிலையில் அதில் கலந்து கொள்ளும் பொருட்டு போயஸ்தோட்டத்துக்கு தூது விட்டார்கள். ஆனானப்பட்ட புரட்சித் தளபதி விஜயகாந்தே கூட்டணியில் சரணாகதி அடைந்த நிலையில் ஜூனியர் தளபதியெல்லாம் ‘அம்மா’ முன் எம்மாத்திரம்?

பச்ச புள்ள
இதற்கு மேல் இந்தப் பச்சப்பிள்ளை என்ன செய்ய முடியும்?

அதனால் தேர்தலில் நேரடியாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தோட்டம் உத்திரவிட இவர்கள் கதிகலங்கினார்கள். நோகாமல் அரசியலில் நொங்கெடுக்கலாம் என்ற அவர்களது ஆசை அப்படித்தான் யதார்த்தத்தை கண்டு கதறியது. ஏதோ சமாளித்து அறிக்கை என்பதாய் நிறுத்திக் கொண்டாலும், ‘அம்மா’ இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென்பதில் உறுதி கொண்டார்.

அதன்படி விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் போலிசால் நிறுத்தப்பட்டது. அதில் சில நூறு பேருக்கு சில நூறு ரூபாயில் செலவு செய்து நலத்திட்டம் வழங்கும் விழாதானே அன்றி அரசியல் ஏதும் இல்லை என்று விஜய் சத்தியம் செய்தாலும் அம்மன் இரங்குவதாக இல்லை. அப்போதே அரசியலுக்கும் தனக்கும் காத தூரம், கட்சி கிட்சி எதுவும் தனது ஆழ்மனதில் கூட இல்லை என ஜூனியர் தளபதி தலையால் சத்தியம் செய்து ஊடகங்களில் நேர்காணல் கொடுத்தார். இதற்கு மேல் இந்தப் பச்சப்பிள்ளை என்ன செய்ய முடியும்? ஆனால் ஆத்தா, தான் குறித்த கருவறுப்புத் திட்டத்தில் இருந்து பின்வாங்குவதாய் இல்லை.

இந்த சூழ்நிலையில் தலைவா படம் வெளியாக இருந்தது. படத்தின் பெயர், முத்திரை முழக்கம், பஞ்ச் டயலாக், கதை அனைத்திலும் விஜயின் அரசியல் ஆசை குறித்த சித்திரம் நேரடியாகவும், இலைமறையாகவும் வருகிறது என்று உளவுத்துறை போலிசு தோட்டத்தில் கொளுத்திப் போட்டிருக்கும் போலும். உடனே திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வருகிறது. அதுவும் தலைவா படத்தை விலைக்கு வாங்கியிருக்கும் பச்சமுத்துவின் கல்லூரிகளில் பணத்தை பறிகொடுத்த மாணவர்கள் வைத்திருக்கும் சங்கமாம். கேழ்வரகில் நெய் வடியவில்லை, அமுதமே வடிகிறது என்ற இந்த உண்மையை ஊடகங்கள் உண்மை போல செய்திகளாக வெளியிட்டன. விஸ்வரூபம் படத்திற்கு  பகடைக் காய்களாக பாய்கள் பயன்பட்டது போல தலைவாவிற்கு எவரும் சிக்கவில்லை போலும்.

ஏற்கனவே துப்பாக்கியில் இசுலாமியர்களின் கோபத்திற்கு ஆளான விஜய் தரப்பு விசுவரூபம் படத்திற்கு கிடைத்த நெருக்கடியைப் பார்த்து பல நாட்கள் தூக்கமில்லாமல் கழித்திருக்கும். இதனால்தான் என்னவோ இல்லை பிராயச்சித்தமாகவோ தலைவா படத்தை ரம்ஜான் அன்று ரிலீஸ் செய்வதாக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். எதிர்ப்பதற்கு பாய்கள் இல்லை என்பதால் வேறு காரணங்கள் கிடைக்காது என்று இவர்கள் தப்புக் கணக்கு போட்டார்கள்.

தலைவா ஷூட்டிங்
வேறு வழியின்றி தலைவா திரைப்படம் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மட்டும் வெளியானது.

எஸ்.ஆர்.எம் கல்லூரிகளில் சில பல இலட்சங்களை தாரை வார்த்து விட்டு படிக்கும் நடுத்தர வர்க்க மாணவர்கள், சிறுநீர் கழிக்கும் போது கூட பச்சமுத்துவை நினைத்து கோபம் அடையக் கூடியவர்கள் அல்ல. எந்தப் பிரச்சினைக்கும் மூச்சு கூட விடக் கூடாது என எல்கேஜி பள்ளிகளையும் விஞ்சும் பயமும், கட்டுப்பாடும் கொண்ட இந்த கைப்புள்ளைகள் வெடிகுண்டு வைக்க கிளம்புகிறார்கள் என்றால், அதையும் செய்தியாக ஊடகங்கள் வெளியிடுகின்றன என்றால் இங்கே அம்மா பயம் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என்பதறியலாம்.

மேலும் பச்சமுத்து இதற்கு முன் வெளியிட்ட படங்களுக்கெல்லாம் இந்த கைப்புள்ள மாணவர் வெடிகுண்டு கடிதம் வரவில்லை. இதெல்லாம் உளவுத்துறை திட்டத்தின் லாஜிக் மீறல் என்றால் அதையெல்லாம் இங்கே பேசுவதற்கு எவரும் தயராக இல்லை. தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் திரையரங்க முதலாளிகள் படத்தை வெளியிட மாட்டோம் என கைவிரிக்க வேறு வழியின்றி தலைவா திரைப்படம் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மட்டும் வெளியானது.

ஜூனியர் தளபதியின் கிச்சன் கேபினட் கூடி பேசியதில் கொடநாடு சென்று அம்மாவை உடன் சந்தித்து ஒரு போட்டோ வந்தால் கூட படங்களை வெளியிட முடியும் என்று முடிவு செய்தது. உடன் விஜயும் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் சகிதம் கொடநாடு சென்று அம்மாவிற்கு மனுக் கொடுக்க முயன்றார்கள். ஆனால் அவரது உதவியாளரைக் கூட பல கெஞ்சல்களுக்கு பிறகே பார்க்க முடிந்ததே அன்றி அம்மாவை அல்ல. வெறுங்கையுடன் சென்னை திரும்பினார்கள்.

திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர்கள் இருந்தாலே கேளிக்கை வரியில்லை என்று கருணாநிதி தனக்கு அவ்வப்போது கிடைத்த ஜால்ரா சங்கீதத்திற்காக கொண்டு வந்த சிறப்புச் சலுகை, சினிமா உலக முதலாளிகள் வரியின்றி கொள்ளையடிக்க உதவியது. தலைவா படத்திற்கு இந்த வரிவிலக்கும் கிடையாது என்று கொளுத்திப் போட்டார்கள். கேளிக்கை வரிவிலக்கை முடிவு செய்யும் குழு படத்தை பார்த்து இந்தப் படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க முடியாது என்று சொல்ல என்ன காரணம்?

படத்தின் உரையாடலில் ஆங்கில கலப்பு நிறைய வருகிறது என்பதால் அந்த முடிவாம். அடப்பாவிகளா, இதனால் ஏனைய படங்கள் அக்மார்க் தமிழில் வருகிறது என்றா சொல்கிறீர்கள்? இதுவும் உளவுத்துறையின் லாஜிக் மீறல் என்றாலும் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை. இந்த கால இடைவெளியில் வெளி மாநிலங்களில் வெளியான தலைவா திரைப்படம், திருட்டு விசிடிகளாக தமிழகத்தில் படையெடுத்து விட்டனவாம். இதற்கும் ஒரு கோரிக்கையை தயார் செய்திருக்கிறார்கள்.

தற்போது ஜெயலிலதா கொடநாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பி விட்ட படியால் அம்மாவை உடன் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தலைவா தரப்பினர் மனுப்போட்டு காத்திருக்கின்றனர்.

ஒரு சினிமாவை வெளியிடுவதற்கு இவ்வளவு தடைகளை ஒரு மாநில அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதைத் தட்டிக் கேட்பதற்கு கூட இங்கே எந்த சினிமாக்காரனுக்கும் வக்கில்லை என்பதே உண்மை. படங்களில் கையை, காலை ஆட்டி வில்லன்களை பந்தாடும் இந்த நாயகர்கள் நிஜவாழ்வில் தொடை நடுங்கி கோழைகளாக இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். ஆனாலும் இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு அடுத்த முதல்வர் ஆசை வராமல் இல்லை. தனது ரசிகர் பட்டாளத்தை வைத்து இந்த ஆசைகளை அவர்களே காசு கொடுத்து முழங்கச் சொல்லி கேட்டு ரசிக்கிறார்கள்.

விஜய்
ஜெயலிதாவின் காலில் விழுந்து கதறிய விஜய் என்ற செய்தியை எதிர்பார்க்கலாமா?

தலைவா படத்திற்கு பிரச்சினைகள் வந்த பிறகு இத்தகைய முழக்கங்கள் எதுவும் போடக்கூடாது என்று விஜய் தரப்பு தனது பட்டாளத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி, அப்படி எழுதப்பட்ட பேனர்களை அகற்றியதாம். அடுத்து இன்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஜெயலலிதாவின் சாதனைகளை பட்டியிலிட்டு, அப்பேற்பட்ட அம்மா தலைவா படப்பிரச்சினைகளை தீர்ப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. இனி அடுத்தகட்டமாக என்ன செய்வார்கள்? ஜெயலிதாவின் காலில் விழுந்து கதறிய விஜய் என்ற செய்தியை எதிர்பார்க்கலாமா?

திமுகவிற்கு பிரச்சாரம் செய்த காரணத்தால் தனது படவாய்ப்புகளை இழந்த வடிவேலு கூட ஒரு பிரஸ்மீட் வைத்து அம்மா காலில் விழுகிறேன், என்னை வாழவையுங்கள் என்று அழுது அரற்ற வில்லை. அப்படியே அவர் அழுதாலும் அதை ஒரு சறுக்கலாக யாரும் நினைக்கப் போவதில்லை. மக்களை சிரிக்க வைப்பதற்காக தன்னை இழிவுபடுத்திக் கொள்ளும் நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஹீரோவிற்கு இல்லையே!

சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை அநீதியாக வந்தால் அதற்கு நீதி கேட்டு பேசுவது, சண்டை போடுவது எல்லாம் உழைக்கும் மக்களிடம் சகஜமாக காணப்படும் பண்பாடு. ஆனால் பண முதலைகளாகவும், கருப்பு பணத்தில் வயிறு வளர்க்கும் இந்த சினிமா நட்சத்திரங்கள் தமது சொந்தப் பிரச்சினைகளுக்கே கூட அப்படி போராட மாட்டார்கள் என்பது தலைவா பட பிரச்சினையிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பல கோடி பட்ஜெட் தயாரிப்பில் பல கோடி சம்பளத்தில் பல கோடி விளம்பரத்தில் இவர்கள் ஒரு படத்தின் இலாபத்தை சடுதியில் பார்த்து விடுகிறார்கள். அதனால்தான் இவர்களால் அரசையோ இல்லை ஜெயலலிதாவையோ பகைத்துக் கொள்ள முடியவில்லை என்பது ஒரு பாதிதான். அன்றும் இன்றும் தமிழ் சினிமா என்பது ஆள்பவர்களை அண்டிப்பிழைத்து வாழும் ஒரு ஒட்டுண்ணிக் கூட்டம் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.

தமிழக மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் இவர்கள் பயத்தாலும், அந்தஸ்தாலும் வாயே திறப்பதில்லை. அப்படி மீறி காவிரி, ஈழம் என்று சிலவற்றுக்கு வாய் திறந்தாலும் அது ஆளும் கட்சியின் நலனுக்கு உட்பட்டதாகவே இருக்கும். இதைத்தாண்டி திமுக, அதிமுக கட்சிகளின் மக்கள் விரோத ஆட்சித் திட்டங்கள், பிரச்சினைகளை எல்லாம் இவர்கள் தனிப்பட்ட பேச்சில் கூட கண்டிப்பவர்கள் இல்லை. ஆகவே ஜனநாயக உணர்வோ, இல்லை ஜனநாயக உணர்வுக்கான போராட்டமோ இவர்களிடத்தில் முளை விடும் வாய்ப்பு கூட இல்லை. மற்றவர்களுக்காக, மக்களுக்காக போராட விரும்பாதவர்கள் தங்களுக்காக மட்டும் போராட முடியுமா என்ன?

ஜெயலலிதாவின் பாசிச அணுகுமுறையால் தமிழ் சினிமாவுக்கு ஜனநாயக உணர்வு வந்து விடாது. ஏனெனில் தமிழ் சினிமா நட்சத்திர நடிகர்கள் என்பவர்கள் அதிகாரம் இல்லாத பாசிஸ்டுகள். இவர்களுக்கிடையே நடக்கும் சண்டை ஒரு விதத்தில் நாம் வேடிக்கை பார்த்து ரசிக்க மட்டுமே அருகதை உள்ளது.

பாசிச ஜெயவை எதிர்த்துப் போராடும் பணியை தமிழக மக்கள் தமது சொந்த அனுபவத்திலேயே பெறுவார்கள். அதற்கு தமிழ் சினிமாவின் தயவு தேவையில்லை. அதனால் தலைவாவின் சிக்கலுக்கு நம்மிடம் இரக்கமும் இல்லை.