Tuesday, June 28, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ராபர்ட் வதேரா : நேரு பரம்பரையின் புதிய பில்லியரானது எப்படி ?

ராபர்ட் வதேரா : நேரு பரம்பரையின் புதிய பில்லியரானது எப்படி ?

-

அசோக் கெம்கா
மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா

னியார்மய காலகட்டம் ஆரம்பித்த கடந்த இருபது ஆண்டுகளில் ஊழல்களின் மதிப்பு ஆயிரம் கோடிகளில் இருந்து லட்சம் கோடிகளுக்கு மாறியிருக்கிறது. ஊழலின் பரிமாணமும் சகல துறைகளிலும் கால் பதிப்பதாக மாறியிருக்கிறது. அப்படி ஒரு பெரிய மோசடி ஹரியானா மாநிலத்தின் ஆளும் வர்க்க அதிகாரிகள், முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடைய கூட்டு முயற்சியால் சாத்தியமாகி உள்ளது.

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமும், டி.எல்.எஃப் என்ற கட்டுமான நிறுவனமும், ஹரியானா காங்கிரசு தலைவர் ஒருவரின் ஓங்காரேஸ்வரர் நிறுவனமும் இணைந்து இந்த ஊழலை நடத்தியுள்ளன. 2012 அக்டோபரில், இதனை அம்பலப்படுத்திய மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா மீது இட மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இம்முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட மூவர் குழு கெம்காவின் நடவடிக்கைகளுக்கு உள்நோக்கம் இருப்பதாக சொல்லி அவரை விசாரணைக்கு அழைக்காமலேயே அவரது உத்திரவுகளை ரத்து செய்தது. இப்போது கெம்கா பொதுவில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து 100 பக்க அளவில் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த ஊழலின் மூலம் வதேரா அடைந்த வருமானம் மட்டும் குறைந்தது ரூ 3.5 லட்சம் கோடி வரை இருக்கும் என கெம்கா கணக்கிட்டு சொல்லியிருக்கிறார்.

பிளேபாய் வதேரா
பிளேபாய் வதேரா

நிலக்கரி ஊழலுக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்த ஊழலின் கதாநாயகன் ராபர்ட் வதேரா. பரம்பரை பணக்காரர்கள் என்று போற்றப்படும் நேரு குடும்பத்தின் மருமகன். ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவை திருமணம் செய்வதற்கு முன் டெல்லி பகுதியில் ஒரு ப்ளே பாயாக (நம்ம ஊர் மொழியில் சொன்னால் மைனராக) ஆடம்பர மேல்நாட்டு மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தவர் என பத்திரிகைகள் பலமுறை செய்திகளை புகைப்படங்களோடு வெளியிட்டும் கூட அதைப் பற்றி பெயருக்கு கூட ஒரு மறுப்பும் சொல்லாதவர். ஏதோ தொழில் செய்கிறார் என்று பூடகமாக பேசப்பட்டவர். இப்படிப்பட்டவர்கள் நமது சமூகத்தில் கடந்த இரு பத்தாண்டுகளில் கடைசியாக வந்து சேரும் தொழில் ரியல் எஸ்டேட். கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்பதற்கேற்ப அந்த இடத்திற்கு வதேரா வந்து சேர்ந்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

வந்தவர் தோளில் துண்டும், கையில் ஒன்றுமில்லாமல் இருந்தாலும் வாயிலேயே வடை சுடும் வீடு புரோக்கர் வேலையைக் கூட திறமையாக செய்ய இயலவில்லை. இப்படி பெரிய வீட்டு மருமகன் அல்லாடுவதைப் பார்க்க பொறுக்காத ஹரியானா காங்கிரசு அரசின் முதல்வர் பூபேந்தர்சிங் ஹூடா தலைமையிலான அமைச்சரவை சகாக்கள் சேர்ந்து அவருக்கு உதவ முன் வருகின்றனர்.

விவசாய நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஏதாவது ஒரு காங்கிரசு தரகருக்கு குறைந்த விலைக்கு கொடுப்பது மற்றும் கொடுக்க வைப்பது முதல் வேலை. சில சமயம் அப்படி வாங்கப்படும் நிலம் நகர வளர்ச்சிக்காக திட்டமிடப்பட்ட பகுதியாகக் கூட இருக்கும். அதன் பிறகு வணிக அல்லது குடியிருப்பு பயன்பாட்டுக்கான நிலம் இருப்பதாக பெரிய ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு அந்த தரகர் தூது அனுப்புவார்.

பூபிந்தர் சிங் ஹூடா
வதேராவின் சேவையில் ஹரியானா முதல்வர் ஹூடா

விவசாய நிலத்தை வணிக பயன்பாட்டிற்கானதாகவோ அல்லது குடியிருப்பு பயன்பாட்டிற்கானதாகவோ மாற்றுவதற்கு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்துள்ள நிறுவனம் குறிப்பிடப்பட்டிருக்கும் பயன்பாட்டிற்கு ஏற்றபடி நிலத்தை பயன்படுத்துவதற்கு தகுதியானதா என்பதை கண்டறிவதுடன் அவர்களது ஆண்டு விற்பனை மதிப்பு, எத்தனை ஆண்டுகளாக சந்தையில் செயல்படுகின்றனர் என பல காரணிகளை ஆய்வுக்குட்படுத்தி, அந்த பகுதிக்கான அரசின் நீண்ட கால வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிலத்தின் பயன்பாட்டை மாற்றுவதற்கு தேவை இருக்கிறதா என்பதை பரிசீலித்த பிறகு பயன்பாடு வகையை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றி அனுமதிப்பதைப் பற்றி முடிவு செய்யும்.

கடந்த இருபது ஆண்டுகளில் வெட்டப்படும் தொகைக்கேற்ப பயன்பாடு மாற்றம் நடக்கும் என ஆகி விட்டதால் இடைத்தரகர்கள் பெருமளவு வளர்ந்து வந்தனர்.

இந்த இடத்தில் தான் வதேரா வருகிறார். அவரது ஸ்கைலைஃப் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் பயன்பாட்டு மாற்ற அனுமதி மறுக்கப்படும் இடங்களுக்கு தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அனுமதி பெற்று அதன் பிறகு நிலத்தை கூடுதல் விலையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்று விடும். நிறுவனங்கள் நேரடியாக அனுமதி கோரும் போது மறுக்கப்படுவதும், வதேராவின் நிறுவனத்துக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்த பிறகு ஒரு சில மாதங்களிலேயே அதே நிலத்தின் பயன்பாட்டு மாற்றம் வழங்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. உரிமத்தையும், நிலத்தையும் வதேரா ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றிக் கொடுத்து விடுவார்.

சோனியா காந்தி குடும்பம்
தரகர் ‘இனத்தின்’ முதன்மை இந்தியக் குடும்பம்.

இந்த பரிவர்த்தனையில் வதேரா சார்பில் பணம் ஏதும் முதலீடு செய்யப்படாமலேயே நிலமும், அதற்கான பரிவர்த்தனை பணமும் அவரது நிறுவனத்தின் சொத்தாக சில ஆண்டுகளுக்கு இருக்கின்றன. அது பற்றிய விபரங்களை அரசின் பத்திரப் பதிவுத் துறைக்கும், நிறுவனம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கும், நிறுவனத்தின் ஆண்டு வரவு செலவு கணக்கின் மூலமாக வருமான வரித் துறைக்கும் அனுப்பியுள்ளார்.

2005 முதல் இத்தகை நில பயன்பாட்டு மாற்றம் தொடர்பான ஊழல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக கடந்த ஆண்டு டி.எல்.எஃப் உடன் நடத்திய முறைகேட்டை அசோக் கெம்கா அம்பலப்படுத்தியுள்ளார்.

தொழில் துறையில் கொடிகட்டிப் பறக்கும் குர்கான் பகுதியில் உள்ள சிகோக்பூர் கிராமத்தில் உள்ள 3.53 ஏக்கர் நிலத்தை ஓங்காரேஸ்வரர் நிறுவனத்திடமிருந்து வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மார்ச் 12, 2008-ல் வாங்குகிறது. வாங்கியதற்கான பதிவுப்பத்திர எண் 4928-ல், நிலத்தின் விலைக்காக கொடுத்தாக காட்டப்பட்டிருந்த கார்ப்பரேசன் வங்கியின் காசோலை (செக்) எண் 607251 வதேராவுடன் சம்பந்தப்பட்டதே இல்லை. 7.95 கோடி ரூபாய் கைமாறியதாக பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஸ்கைலைட், ஓங்காரேஸ்வரர் நிறுவனங்களுக்கிடையில் உண்மையில் பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை. அதாவது, காங்கிரசு அமைச்சரின் ஓங்காரேஸ்வரர் நிறுவனம் தனது எஜமான் வீட்டு கன்றுக்குட்டிக்கு சும்மா தூக்கிக் கொடுத்த நிலம்தான் என்பதை பதிவுகள் நிரூபிக்கின்றன.

நேரு குடும்பம்
நேரு குடும்ப மருமகன் முன்பு சட்டங்கள் கை கட்டி நிற்கும்.

அப்படியானால் வதேராவுக்கு இது அன்பளிப்பாக தரப்பட்டதாக அர்த்தம். அதற்கான சிறப்பு வருமான வரியை வதேரா முறைப்படி கட்டியிருக்க வேண்டும். விற்பனை என்ற பெயரில் பதிவு செய்த இம்மோசடியில் முத்திரைத்தாள் கட்டணத்தையும் (ஏறக்குறைய ரூ.45 லட்சம்) நிலத்தை விற்பவரே தந்திருப்பதாக காட்டியிருக்கிறார்கள். 2008 மார்ச் இறுதியில் ஆண்டு முடிப்பு கணக்கு வெளியிட்ட ஸ்கைலைட் நிறுவனம் தனக்கு வங்கி தரக்கூடிய தற்காலிக கடன் வசதி (ஓவர் டிராப்ட் தொகையின் வரம்பு) ரூ 7.5 கோடி என பதிவு செய்திருக்கிறது. அந்த கால கட்டத்தில் நிறுவனம் அந்த அளவுக்கு வணிகம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லாமலேயே வங்கி கடன் கொடுத்திருப்பதாக காட்டியிருக்கிறார்.

2008, ஜூன் மாதம் டி.எல்.எஃப். இந்த 3.53 ஏக்கர் நிலத்தை வதேராவிடமிருந்து ரூ.58 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறது. அப்போது நிலவிய சந்தை மதிப்பை விட இரு மடங்கு மதிப்பின் அடிப்படையில் பத்திரப்பதிவு நடந்தது. அதற்கு முன்தொகையாக ரூ 50 கோடி வதேராவுக்கு தரப்பட்டது. அப்பணத்திலிருந்து 7.92 கோடி ரூபாய் பணத்தை நிலம் வாங்கிய விலையாக ஓங்காரேஸ்வரர் நிறுவனத்திற்கு தருகிறார் வதேரா. அதாவது, வெறுங்கையில் நிலம் வாங்கி, அதை சுமார் 7 மடங்கு அதிக விலைக்கு விற்று கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை தான் வாங்கிய விலையாக கொடுத்திருக்கிறார்.

டிஎல்எஃப் குஷல் பால் சிங்
டிஎல்எஃப் முதலாளி குஷல் பால் சிங்

ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நிலத்தை வணிக பயன்பாட்டுக்கானதாக மாற்றக் கோரி மாநில அரசின் நகர்ப்புற, கிராமப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் டி.எல்.எஃப் விண்ணப்பிக்கிறது. டிஎல்எஃப்புக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், நவம்பர் 2008-ல் தான் டி.எல்.எஃப் உடன் இணைந்து நிலத்தை வணிகத்துக்கு பயன்படுத்தப் போவதாக வதேரா விண்ணப்பித்தவுடன் அவரது நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கப்படுகிறது.

உரிமம் கிடைத்த பிறகு உடனடியாக நிலத்தை டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு மாற்றினால் மாட்டிக் கொள்வோம் என்பதால் ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் காத்திருந்து 2012 ஏப்ரலில் உரிமத்தையும், செப்டம்பரில் மொத்த நிலத்தையும் டிஎல்எஃபின் பெயருக்கு மாற்றி உள்ளார் வதேரா.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் இப்படி மாற்றிக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் அரசின் நில அளவை மற்றும் புள்ளிவிபரத் துறையின் தலைவராக இருந்த கெம்காவுக்கு இது தொடர்பாக சந்தேகம் வரவே 2012 அக்டோபர் 8-ம் தேதி இம்முறைகேடு பற்றி விசாரிக்க துவங்குகிறார். அக்டோபர் 11-ம் தேதி அவருக்கு இடமாற்றல் உத்திரவு வருகிறது. டி.எல்.எஃப் உடனான வதேராவின் விற்பனை ஒப்பந்தத்தை விசாரணைக்குட்படுத்தி, நிலத்தின் பயன்பாட்டு மாற்ற உரிமத்தை ரத்து செய்து அக்டோபர் 15-ல் உத்திரவிடுகிறார் கெம்கா.

ஜமாய் ராஜா
ஜமாய் ராஜா (மருமக ராஜா)

எதிர்க்கட்சிகளான லோக் தள் கட்சியும், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஊழலுக்கெதிரான அமைப்பும் போராட துவங்கிய பிறகு நிதித்துறை ஆணையர் க்ருஷண் மோகன், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலர் கே.கே.ஜாலன் ஆகியோரை உள்ளடக்கிய மூவர் விசாரணைக் குழு ஒன்றை மாநில முதல்வர் ஹூடோ அமைத்தார். ஊழல் நடைபெற்ற இரு துறையின் தலைவர்களும் விசாரணை நடத்துவார்கள் எனக் கூறிய காங்கிரசு முதல்வரின் இச்செயல் விசாரணை கமிசன்களின் யோக்யதையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவர்களும் வதேரா குற்றமற்றவர் என்றும், குற்றமே நடக்கவில்லை என்றும் கூறியதோடு, பரிவர்த்தனையை ரத்து செய்த அசோக் கெம்காவுக்கு சட்டமே சரியாக தெரியவில்லை என்றும், அவருக்கு உள்நோக்கம் இருந்ததாகவும் கூறி கெம்காவின் உத்திரவை ரத்து செய்து விட்டனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாதிகளாகவோ, பிரதிவாதிகளாகவோ, அல்லது குறைந்தபட்சம் சாட்சிகளாகவோ கூட முன்வராத நிலையில், தடையை நீக்க கோரிக்கை ஏதும் வைக்காத நிலையில், எதற்காக கமிசன் தானே முன்வந்து அவர்களது பரிவர்த்தனையை அங்கீகரித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்கிறார் கெம்கா. இது சாமான்ய மக்களுக்கு சாத்தியமா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

இதற்கிடையில் அர்விந்த் கேஜ்ரிவாலின் அமைப்பைச் சேர்ந்த நுதன் தாக்குர் என்பவர் வதேராவின் மோசடி பற்றி விசாரணைக்கு உத்திரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பாக பிரதமர் அலுவலகம் அளித்த பிரமாணப் பத்திரத்தில் அது தொடர்பான விபரங்கள் அரசு ரகசியம் என்று கூறி விபரங்களை தர மறுத்துள்ளது. அலகாபாத் குடும்பம் ஆட்டையைப் போட்டால் கூட அது அரசாங்க ரகசியம்.

நெல்சன் மண்டேலா
பெரிய இடத்து தம்பதியினர் பிரியங்கா-வதேரா (தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுடன்).

தற்போது கெம்காவின் 100 பக்க ஆதாரங்கள் மற்றும் கேள்விகள் வெளியான பிறகு மாநில அரசின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அதற்கு பதிலளித்துள்ளார். “டிஎல்எப், ஸ்கைலேட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திடம் நிலம் வாங்கியது இரு தனிப்பட்ட நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை, அரசு எப்படி அதில் தலையிட இயலும்” என்றும், “எங்களது வேலை 1975-ம் ஆண்டு விதிகளின்படி உரிமம் வழங்குவதுதான். அதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.

“உரிமத்தை வதேராவின் நிறுவனத்தின் பெயரிலிருந்து டிஎல்எஃப்புக்கு மாற்றியதில் எந்த சட்ட மீறலும் நடக்கவில்லை. சட்ட நடைமுறைகளை கறாராக பின்பற்றி உள்ளோம்” என்றும், “தனியார் நிலம் வாங்குகையில் அரசுக்கு செலுத்தும் பல்வேறு கட்டணங்களை தாண்டி, அவர்களால் செயல்படுத்தப்படும் திட்டம் லாபகரமாக இருக்கிறது என்பதை மட்டுமே காரணம் காட்டி அது பொது நலனுக்கு எதிரானது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்றும், “அத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபம் அபிவிருத்தி உரிமம் வழங்கும் அரசுத் துறையின் வழிகாட்டலை மீறாமல்தான் ஈட்டப்படுள்ளது” என்றும், “வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் தான் நிறுவனத்தின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்றும், “அரசின் நிதியுதவி ஏதுமின்றி பொது, வணிக, குடியிருப்பு என ஒருங்கிணைந்த முறையில் தொழிற் பேட்டைகளை அமைக்க முடிகிறது என்பதை பார்க்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

அதாவது, “சட்டப்படி நடக்கிறோம், தேசத்தை முன்னேற்றுகிறோம், எங்களது லாபத்துக்கு சரியாக வரி கட்டி விட்டோம், இதை விட முக்கியம் அரசே செய்ய வேண்டிய அடிப்படை கட்டுமான வசதிகளை நாங்களே ஏற்படுத்துகிறோம். அப்படியிருக்க ஏன் தேவையில்லாமல் ஊழலை பெரிது படுத்துகிறீர்கள்” எனக் கேட்கிறார். ஒரு முதலாளியின் மக்கள் தொடர்பு அதிகாரி பேசுவதை அரசு அதிகாரி பேசுவது போல படுகிறதா?

வதேரா
வேகமான ‘முன்னேற்ற’ப் பாதையில் வதேரா

கெம்கா ஹரியானாவில் 2005-ல் மட்டும் இது போல 21,000 ஏக்கர் வரை உரிமம் தரப்பட்டதாக கூறியிருப்பதைக் குறித்து, அதில் 8,000 ஏக்கர் மட்டும்தான் குர்கான் பகுதி போன்ற நகரப் பகுதிகளில் தரப்பட்டதாகவும், மீதி 13,000 ஏக்கருக்கான உரிமங்கள் சிறு நகரப் பகுதிகளுக்கு தரப்பட்டதாகவும், இவற்றை ஒரே மாதிரியாக கணக்கிட்டதால் தான் 3.5 லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு என்று சொல்கிறார் என்றும் அரசு தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது. அரசு கணக்குப்படியே பார்த்தால் கூட 8,000 ஏக்கருக்கு 1.13 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதுடன் கூடவே, மீதமுள்ள 13,000 ஏக்கருக்கு குறைந்த விலையில் கணக்கிட்டால் கூட மொத்தம் எப்படியும் ரூ. 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

கடந்த ஆண்டு வதேராவுக்கு தாராளமாக கடன் கொடுத்த விவகாரம் வெளிவந்தபோது கைமாற்றப்பட்ட உரிமங்களை வாங்கிய கட்டுமான நிறுவனங்களும் நட்டமடைவதில்லை என்றுதான் டி.எல்.எஃப் கூறி வந்தது. அப்படியானால் வதேரா சூறையாடிய பணம் யாருடையது?

அதாவது கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள டி.எல்.எஃப் போன்ற நிறுவனங்கள் வதேரா போன்ற இடைத்தரகர்களுக்கு பல கோடி ரூபாய் கமிஷன் கொடுத்த பிறகும் தாம் கட்டும் கட்டிங்களை நிறுவனங்கள், குடியிருப்புகள் போன்றவற்றுக்கு லாபம் வைத்து சந்தையில் விற்கின்றன. அவற்றை வாங்குவதற்கு நிறுவனங்களும், தனிநபர்களும் வங்கிகளை நாடி கடன் வாங்குகிறார்கள். இதன் மூலம் சாதாரண மக்களுக்கு நிலத்தின் விலையும், வீட்டு விலையும் அதிகரிப்பதோடு, கட்டுமானத் துறைக்கான வங்கிக் கடன்கள் வதேரா போன்ற தரகர்களின் லாபத்துக்கு உரம் போடுவதாகவும் முடிகின்றன.

ஊழலை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா அத்துறையில் 80 நாட்கள் மட்டுமே பணியாற்றினார். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி குறைந்தபட்சம் ஒரு பதவியில் இரு ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இதில் மீறப்பட்டிருக்கிறது. 80 நாட்களில் அவர் கண்டறிந்த நில பேர ஊழல்களில் பலவும் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு பற்றியதாகவும், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் பற்றியதாகவும் தான் பெரும்பாலும் இருந்தன. அதன் பிறகு பணியிட மாற்றம் செய்யப்பட்ட காலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விவசாய இடுபொருள் மற்றும் ரசாயன உரத்தை வாங்குவதில் இருந்த அமெரிக்க நிறுவனத்தின் லாபியை அம்பலப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் அவரது தீர்வு சிறிய அரசு மானியங்களையே ஆதார் அட்டை மூலமாக கண்காணிக்க முடியுமானால் பெரிய பணப் பரிமாற்றம் பற்றி ஏன் கண்காணிக்க முடியாது என கேள்வி எழுப்புவதாகத்தான் முடிகிறது.

இவ்வாறாக 2G ஊழல், நிலக்கரி ஊழல் இவற்றை எல்லாம் மிஞ்சி இந்திய ஊழல் வரலாற்றில் ஒரு தனிநபர் அடித்த தொகையில் முதலிடத்தை ராபர்ட் வதேரா தட்டிச் செல்கிறார்.

சட்டப்படி ராபர்ட் வதேரா குற்றவாளி இல்லை. ஏனென்றால் அவர் செய்த தரகு வேலை என்பது புதிய பொருளாதாரத்தின் சேவைத்துறை சார்ந்த தொழில். அதாவது நீரா ராடியா நடத்தியது போல கன்சல்டன்சி. என்ன ஒரே ஒரு வித்தியாசம் என்றால் வதேரா நடத்தியது கன்சல்டன்சி உடன் இணைந்த ரியல் எஸ்டேட் என்ற டூ இன் ஒன் பிசினஸ் (இரண்டில் ஒன்று வணிகம்). இதுவும் சட்டப்படி தவறு இல்லை. எனவே இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கூட யாராலும் பதிவு செய்ய முடியாது. வதேராவை சட்டத்தின் முன் குற்றவாளியாகக் கூட நிறுத்த முடியாது. அப்படி ஒருவேளை அரசியல் அழுத்தங்கள் ஏற்பட்டால் முத்திரைத்தாளில் நடந்த மோசடிக்காக வேண்டுமானால் சில கோடிகளை அபராதமாக விதிக்கலாம் அல்லது நிரூபிக்கப்படும் பட்சத்தில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கலாம்.

ராஜஸ்தானிலும் இதுபோல மாநில காங்கிரசு அரசு ஏழை மக்கள் 722 பேருக்கு இலவசமாக வழங்க வைத்திருந்த நிலத்தை வதேராவுக்கு பட்டா போட்டு விட்டதாக குற்றச்சாட்டை பிஜேபி முன்வைத்துள்ளது. காங்கிரசு ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்த வகை ஊழல் வதேராவால் நடத்தப்பட்டிருக்கின்றது என்று பாராளுமன்றத்தில் பாஜக-ன் யஸ்வந்த் சின்ஹா கூறியிருக்கிறார். கூடவே எந்த பிசினஸ் பள்ளியிலும் படிக்காமலேயே லட்சம் கோடிகளில் எப்படி சம்பாதிக்க முடியும் என கற்றுத் தந்திருக்கிறார் என நக்கலடித்திருக்கிறார். இதைவிட அதிசயம் குர்கான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரசின் இந்தர்ஜித் சிங், வதேரா மீது சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரியிருப்பது காங்கிரசு வட்டாரத்திலேயே பீதியைக் கிளப்பி வருகிறது.

லைசான் ஆபீசர்கள் (ஒருங்கிணைப்பு அதிகாரிகள்) என டெல்லி தெற்கு பிளாக்கில் (பிரதமர் அலுவலகம்) பல பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அதாவது நம்ம ஊர் ஆர்டிஓ ஆபீசு தரகர் நமக்கு செய்வது போல அம்பானிக்கும், டாடாவுக்கும், பிர்லாவுக்குமாக நிற்பவர்கள். இவர்கள் எல்லாம் நிறுவனத்தின் சம்பளத்துக்கும், சொற்ப கமிசனுக்கும் குழைபவர்கள். வதேரா அடுத்த கட்டத்திற்கு வருகிறார். இங்கு கமிசன் அதிகம். தரகர் சொந்தமாக அலுவலகம் வைத்திருப்பார். தொழிலதிபர்களும், தொழில் முனைவோர்களும் அவரிடம் வந்து குழைந்து கொண்டிருப்பார்கள். ராடியாவின் அடுத்தக் கட்ட வளர்ச்சி தான் ராபர்ட் வதேரா.

எது எப்படியோ நேரு பரம்பரை என்பது பராம்பரிய பணக்காரர்கள் பரம்பரை என்பதையும் அந்த பாரம்பரியத்தின் இரகசியம் என்ன என்பதையும் வதேரா நிரூபித்து விட்டார்.

– வசந்தன்

  1. ரெண்டு காசு சம்பாரிச்சி வாய வவுத்தை கழுவலாம்னு பாத்தா,
    எதுக்கு ஏழை குடும்பங்களை அனியாயமாக எழுதிரீங்க?
    குந்த குடிசைகூட இல்லாத சோனியா மருமொவனை ஏன் இந்த பாடு படுத்திறீங்க?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க