privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பீகார்-குழந்தைகள் சாவு : கிரிமினல் அரசமைப்பே குற்றவாளி !

பீகார்-குழந்தைகள் சாவு : கிரிமினல் அரசமைப்பே குற்றவாளி !

-

மதிய உணவுடந்த ஜூலை 16-ஆம் தேதி பீகார் மாநிலம், சரண் மாவட்டம், தர்மசதி கண்டவான் கிராமத்தில் உள்ள பள்ளியில் மதிய உணவருந்திய 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவு நஞ்சாகிப் போனதால் சிறிது நேரத்தில் வயிற்றுவலியால் துடித்தும் வாந்தி எடுத்தும் மயங்கி விழுந்து, சிகிச்சையளிக்கும் முன்னரே பெற்றோரின் கைகளிலேயே 23 குழந்தைகள் துடி துடித்து மாண்டுபோன சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாநில அரசுகள் நடை முறைப்படுத்த வேண்டுமென்று 2001-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போதிய நிதியோடு அடிக்கட்டுமானங்களை உருவாக்காமல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் அலட்சியமும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடுகின்றன. பல மாநிலங்களில் தன்னார்வக் குழுக்களின் (அரசு சாரா நிறுவனங்களின்), மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொறுப்பில் சத்துணவுத் திட்டம் விடப்பட்டுள்ளது. அதனைப் பெயரளவில் மேற்பார்வையிடுவதோ அதிகார வர்க்கம். ஊழல் மலிந்துள்ள நாட்டில் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்குப் பொறுப்பாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. 2011-இல் ஒரிசா அமைச்சரான பிரமீளா மல்லிக் மதிய உணவுத் திட்டத்தில் பல கோடி ஊழல் செய்த விவகாரமும், மதிய உணவுத் திட்ட ஊழல்களை விசாரிக்க 2012 -இல் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் இத்திட்டத்தில் புழுத்து நாறும் ஊழல் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன.

குழந்தைகள்குழந்தைகளைப் பலி கொண்ட பள்ளியின் மதிய உணவில் ஆர்கானிக் பாஸ்பரஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததற்குத் தலைமையாசிரியையின் பொறுப்பின்மைதான் காரணம் என்று குற்றம் சாட்டி கைது செய்தும், கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள கல்வி அதிகாரியை பணி நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் காட்டுகிறது, பீகார் அரசு. நெய்வேலியில் மதிய உணவில் கெட்டுப் போன முட்டைகளை உண்டு மாணவிகள் மயக்கமடைந்த விவகாரம் பரபரப்பானதும், பள்ளியின் தலைமையாசிரியரும் சமையலாளரும் முதலில் சாப்பிட்ட பிறகே குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டுமென்று உத்தரவு போடுகிறார் ஜெயலலிதா.

ஊடகங்களின் பரபரப்பும், அரசின் விசாரணையும், காரணமானவர்களைப் பணி நீக்கம் செய்து தண்டித்து விட்டு, இனி எல்லாம் முறையாக நடக்கும் என்பதாகப் பிரமையூட்டும் இத்தகைய தொடர் நிகழ்வுகள், இன்றைய அரசியலமைப்பு முறையின் படுதோல்வியையே மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. மீண்டும் இத்தகைய கொடூரங்கள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஏனெனில் இத்தகைய திட்டங்களை மக்கள் கண்காணிக்கவோ, முறைகேடுகளைத் தடுக்கவோ அதிகாரமில்லை. ஊழல்-மோசடிகளில் ஈடுபடும் அதே அரசு சாரா நிறுவனங்களிடமும், அதிகார வர்க்க, போலீசு, நீதி, நிர்வாக அமைப்பு முறையிடம்தான் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்படுகிறது.

பீகாரில் மாண்டுபோன குழந்தைகளைக் கையிலேந்திக் கொண்டு பெற்றோர்களான அடித்தட்டு மக்கள் கதறிய காட்சியும், அக்குழந்தைகளின் உடல்களை அப்பள்ளியின் முன்னேயே புதைத்துப் பொதுக் கல்லறை எழுப்பியிருப்பதும் மாளாத்துயரமாக நெஞ்சைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூரங்களும், துயரங்களும் இனியும் தொடராதிருக்க வேண்டுமானால், தற்போதைய அரசியலமைப்பு முறையின் தோல்வியை அம்பலப்படுத்தும் வகையில், மக்களின் கரங்களில் அதிகாரத்தைக் குவிக்கும் புதியதொரு அரசியலமைப்பு முறையை நிறுவும் திசையில் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். இதுதான் உண்மையான மக்கள் பணி; அரசியல் பணி.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க