privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க'சுதந்திர' தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !

‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !

-

மிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய சிறப்புக் கட்டணத்தை வழங்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கிறது தமிழக அரசு. இந்த சிறப்பு கட்டணத்தின் கீழ் வரும் செலவுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தமது சொந்த பணத்திலிருந்து தான் செலவு செய்து வருகின்றனர். இதனால் அத்தியாவசியச் செலவுகளுக்கே திணறி வரும் தலைமையாசிரியர்கள் தமிழகத்தில் உள்ள 6,500 அரசுப் பள்ளிகள் உட்பட, அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு இந்தத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

வசதிகள் மறுக்கப்பட்ட அரசு பள்ளிகள்
இரண்டு ஆண்டுகளாக பணத்தை அரசு கொடுக்காத நிலை.

2010-ம் ஆண்டு வரை ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரிடமும் சிறப்புக் கட்டணம் என்கிற பெயரில் பணம் கட்டாயமாக வசூலிக்கப்பட்டு வந்தது. 6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் ரூ 25-ம் 9,10 ஆம் வகுப்பு மாணவர்களிடம் ரூ 35-ம், +1 மாணவர்களிடம் ரூ 93-ம், +2 மாணவர்களிடம் ரூ 103-ம் சிறப்புக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. வருகைப் பதிவேடு வாங்குதல், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றல், வகுப்பறை மற்றும் கழிவறைகளை தூய்மைப்படுத்துல் ஆகிய செலவுகளுக்கு அந்தத் தொகை பயன்படுத்தப்பட்டு வந்தது.

2010-ம் ஆண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்த போது, இந்த செலவுகளுக்கான தொகையை அரசே நேரடியாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. 2012-13 கல்வி ஆண்டிலும் நடப்பு கல்வி ஆண்டிலும் சிறப்புக் கட்டண நிதியை அரசு பள்ளிகளுக்கு வழங்கவில்லை.

இரண்டு ஆண்டுகளாக பணத்தை அரசு கொடுக்காத நிலையில் மேற்கண்ட செலவினங்களோடு கூடவே சாரண, சாரணியர் இயக்கம், செஞ்சிலுவை இயக்கம் போன்றவற்றுக்கும் தலைமையாசிரியர்களே கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். மேலும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடி விடுங்கள் என்று அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், சுதந்திர தினத்திற்கு மிட்டாய் வாங்கக் கூட அரசு பத்து பைசா தரவில்லை. பள்ளியின் தலைமையாசிரியர்கள் தான் கொடியேற்றி மிட்டாய் கொடுக்க ரூ 1,000 முதல் ரூ 2,000 வரை செலவு செய்துள்ளனர்.

உடற்பயிற்சி
சாரண, சாரணியர் இயக்கப் பயிற்சி, விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளும் மாணவர்களின் உடல், அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானவை

கழிப்பறை வசதி என்பது மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு இன்றியமையாத தேவை. அது போலவே, சாரண, சாரணியர் இயக்கப் பயிற்சி, விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளும் மாணவர்களின் உடல், அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானவை. இந்த செலவுகளுக்கு பணம் மறுப்பதன் மூலம் மாணவர்களின் அடிப்படைக் கல்வி உரிமைகளையே அரசு மறுக்கிறது.

பள்ளியின் அன்றாட செலவுகளுக்கான நிதியைக் கூட கொடுக்காமல் இருக்கும் ஜெயா அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சீருடைகள், புத்தகப் பை என்று இலவசங்களை வாரி வழங்குவதாக போக்கு காட்டுகிறது. ஆனால், மாணவர்களுக்கான புத்தகங்களை வட்டத் தலைநகரிலிருந்து பள்ளிக்கு கொண்டு வருவதற்கான செலவுகளைக் கூட அரசு கொடுப்பதில்லை என்று தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுத்து, போக்குவரத்து செலவுகளை ஏற்க மறுத்து மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள் பற்றிய மதிப்பீட்டை குலைக்கிறார்கள். இதன் மூலம், பெற்றோர்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓட வைக்கும் வேலையை அரசு மறைமுகமாக செய்கிறது. இதன் விளைவாக, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, அதை காரணம் காட்டி பள்ளியை இழுத்து மூடும் திட்டமும் நிறைவேற்றப்படும்.

இனி அரசுப் பள்ளிகள் மெல்லச் சாகாது, அசுர வேகத்தில் மரிக்கட்டும் என்பதற்காக அரசு காட்டும் கருணை இது.