Sunday, January 29, 2023
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்இளவரசன் மரணம் : ‘சமூக நீதி’ அரசியலின் சாதிவெறி முகம் !

இளவரசன் மரணம் : ‘சமூக நீதி’ அரசியலின் சாதிவெறி முகம் !

-

கொலையா தற்கொலையா என்பதுதான் மையமான கேள்வி என்கிற வகையில் சுருக்கப்படுகிறது இளவரசனின் மரணம் குறித்த பிரச்சினை. திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதன் விளைவாகத் தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் விளைவுதான் நத்தம் காலனி எரிப்பு என்று தங்கள் வெறியாட்டத்துக்கு பா.ம.க. சாதிவெறியர்கள் நியாயம் கற்பித்தது நினைவிருக்கிறதா?

இளவரசன் மரணம்
இருப்புப் பாதை அருகே கிடக்கும் இளவரசனின் சடலத்தைக் கட்டியணைத்துக் கதறியழும் அவரது தாய் மற்றும் உறவினர்கள்;

அதே நியாயத்தினை இளவரசன் தற்கொலைக்கும் பொருத்தலாமல்லவா? இது தற்கொலை என்றே வைத்துக் கொண்டாலும், இளவரசனின் மரணம் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும், சாதி மறுப்பாளர்கள் மத்தியிலும் தோற்றுவித்திருக்கும் நியாயமான கோபத்துக்கு யாரைத் தீக்கிரையாக்குவது என்ற கேள்விக்கு சாதி வெறியர்கள் பதில் சோல்ல வேண்டும். இவ்வாறு கேட்பது பழிக்குப் பழி வாங்கும் எதிர்வினை அல்ல, தர்க்கரீதியாக எழும்பும் எதிர் வினா.

இது கொலையானாலும் தற்கொலையானாலும் அதனைத் தூண்டிய குற்றவாளிகள் பா.ம.க. சாதிவெறியர்கள்தான். ஆதிக்க சாதி பெண்களால் காதலிக்கப்படும் தலித் இளைஞர்கள் மிரட்டப்படுவதும், கொல்லப்படுவதும் தமிழகத்தில் வழமையாகி வருகிறது. நத்தம் காலனி எரிப்புக்குப் பின்னர், சேத்தியாதோப்பு கோபாலகிருஷ்ணன் என்ற தலித் இளைஞன் வன்னிய சாதிப் பெண்ணைக் காதலித்த குற்றத்துக்காக கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டான். பதிவுத் திருமணம் செய்து கொண்ட விமல்ராஜ் என்ற தலித் இளைஞனையும் செந்தமிழ்ச்செல்வி என்ற வன்னியப் பெண்ணையும் பிரிப்பதற்கு காடுவெட்டி குருவின் வக்கீல்கள் மேற்கொண்ட முயற்சியை, குடந்தையைச் சேர்ந்த சில வழக்குரைஞர்களும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் ராஜுவும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று முறியடித்திருக்கின்றனர். இருப்பினும் உயிருக்குப் பயந்து விமல்ராஜும் செந்தமிழ்ச்செல்வியும் தலைமறைவாக வாழ்கின்றனர். இவையனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதொரு சாதிவெறிப் பயங்கரவாத அச்சுறுத்தல் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதற்கான சான்றுகள்.

இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரிப்பதற்கு பா.ம.க. தலைமையைச் சேர்ந்த தருமபுரி டாக்டர் செந்தில், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பாலு ஆகியோர் நேரடியாக ஈடுபட்டதும், “வன்னியப் பெண்ணைத் தொட்டால் வெட்டு” என்று காடுவெட்டி குரு பேசியதும் நாடறிந்த உண்மைகள். இருப்பினும் இளவரசன் மரணம் குறித்த புலன் விசாரணையை கொலை என்ற கோணத்தில் நடத்த மறுப்பது மட்டுமின்றி, தற்கொலைதான் என்ற பொதுக்கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டே காய் நகர்த்தி வருகிறது போலீசு.

சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், இளவரசனின் வழக்குரைஞர்கள் சங்கர சுப்பு, ரஜினி மற்றும் இளவரசனின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், போலீசின் இந்த ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை அம்பலப்படுத்தியிருக்கின்றனர். எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே, தற்கொலைதான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதாகப் பத்திரிகைகளுக்குச் செய்தியைக் கசிய விட்டது, இளவரசன் எழுதியதாக கூறப்படும் கடிதம் கைக்கு கிடைத்தவுடனேயே, “இது தற்கொலைதான்” என்று மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் அறிவித்தது, இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தாரென்று அவரது நண்பர்களே வாக்குமூலம் அளித்துவிட்டதாக வதந்தி பரப்பியது போன்ற பல விவரங்களைக் கூறி, இந்தப் புலன் விசாரணையின் நம்பகத்தன்மையை அவர்கள் கேள்விக்குள்ளாக்கினர். ஆடிட்டர் ரமேசு கொலையைத் தொடர்ந்து, இந்து மதவெறியர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்துவரும் போலீசு, இளவரசன் மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சோல்லவில்லை.

பாமக
இளவரசனின் மண வாழ்க்கை முறிந்து போனதற்கும், அவர் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்து போனதற்கும் காரணமான குற்றவாளிகள் : ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு, மற்றும் பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் செந்தில்.

இளவரசன்-திவ்யா காதல் திருமணம் என்பது, வன்னிய மக்கள் மத்தியில் சாதிவெறியைக் கிளப்புவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரைத் திரட்டுவதற்கும் ராமதாசு பயன்படுத்திய துருப்புச் சீட்டு. நத்தம் காலனி எரிப்பு தொடங்கி, மரக்காணம் தாக்குதல், மாமல்லபுரம் சாதிவெறிக் கொண்டாட்டம், ராமதாசு கைதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடத்தப்பட்ட பொதுச்சொத்து அழிப்பு, அப்பாவிகள் கொலை, இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரித்தது, இறுதியாக இளவரசன் மரணம் போன்றவையனைத்தும் தனித்தனிக் குற்றங்கள் அல்ல. இவை ராமதாசு நடத்தி வரும் சாதிவெறி அரசியல் எனும் கொடும் குற்றத்தின் வெவ்வேறு விளைவுகள்.

குஜராத், அயோத்தி, மும்பை படுகொலைகளில் மோடி, அத்வானி, தாக்கரே ஆகியோரின் பாத்திரம் என்னவோ அதுதான் இளவரசன் கொலை, நத்தம் காலனி எரிப்பு மற்றும் மரக்காணம் தாக்குதலில் பா.ம.க. தலைமையின் பாத்திரம். இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள். திவ்யாவின் தந்தை நாகராஜின் பிணத்தை வைத்துக் கொண்டு மூன்று கிராமங்களைச் சுடுகாடாக்கிய பா.ம.க. வின் கிரிமினல் நடவடிக்கை, கோத்ராவின் பிணங்களைக் காட்டி முஸ்லிம் மக்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விட்ட மோடியின் குற்றத்திலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல. நியூட்டன் விதியைக் கூறி குஜராத் இனப்படுகொலையை நியாயப்படுத்திய நரமாமிச மோடிக்கும், நத்தம் காலனி சூறையாடலை நாகராஜின் மரணத்துக்கு எதிர்வினை என்று நியாயப்படுத்திய ‘அன்பு’ மணி வகையறாக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சிறுபான்மை தலித் மக்களுக்கு எதிராக வன்னியர்களை மட்டுமின்றி, பார்ப்பனர் உள்ளிட்ட எல்லா ஆதிக்க சாதிகளையும் அணிதிரட்டும் ராமதாசின் அயோக்கியத்தனம், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்து பெரும்பான்மையைத் திரட்டும் இந்துவெறியர்களின் குற்றத்துக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.

திவ்யா
பா.ம.க.வின் வழக்குரைஞரும் வன்னிய சாதி வெறியனுமான பாலுவின் ‘பாதுகாப்போடு’ நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும் இளவரசனின் காதல் மனைவி திவ்யா.

எனினும், இளவரசனின் மரணத்துக்குக் காரணமான முதல் குற்றவாளி ராமதாசு உள்ளிட்ட பா.ம.க. வின் தலைமையினர்தான் என்ற உண்மையை வேண்டுமென்றே பூசி மறைக்கிறது ஜெ அரசு. தன்னுடைய அரசு அதிகாரத்தின் மேலாண்மையை நிறுவும் பொருட்டு, பொதுச்சொத்துக்கு சேதம் போன்ற குற்றங்களுக்காக பா.ம.க. வினர் மீது வழக்குகளைப் போட்டிருக்கும் ஜெ.அரசு, அந்த நடவடிக்கைகளையே சாதிவெறிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகச் சித்தரித்து தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது.

இளவரசன் மரணத்தையொட்டித் தாழ்த்தப்பட்ட மக்களும், சாதி மறுப்பாளர்களும் திரளுவதைத் தடுக்க திட்டமிட்டே தருமபுரி மாவட்டம் முழுதும் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருமாவளவனுக்குத் தடை, தில்லியிலிருந்து வந்த எஸ்.சி – எஸ்.டி. கமிசனைச் சேர்ந்தோருக்கும் தடை, நத்தம் காலனிக்குள் நுழைவதற்கு ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவு, அனைத்துக்கும் மேலாக இளவரசனும் திவ்யாவும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் கொண்ட பானர்களை போலீசே முன்நின்று அகற்றியது போன்ற நடவடிக்கைகளின் மூலம், சட்டம் – ஒழுங்கின் பெயரால், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சாதி மறுப்பாளர்களைத்தான் ஜெ.அரசு ஒடுக்கியிருக்கிறது.

இந்து முன்னணி வெள்ளையப்பன், பா.ஜ.க. ரமேசு ஆகியோரின் கொலை தொடர்பாக போலீசு மேற்கொண்டிருக்கும் அணுகுமுறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வெள்ளையப்பனின் உடலை ஊர் ஊராக கொண்டு செல்ல அனுமதிக்கப் படுகிறது. பா.ஜ.க. வின் அனைத்திந்தியத் தலைவர்கள் வரிசையாக வந்து இறங்கி மதவெறியைக் கக்குகின்றனர். கடையடைப்பு என்ற பெயரில் தமிழகமெங்கும் இந்து மதவெறியர்கள் காலித்தனம் செய்கின்றனர். ரமேஷ் கொல்லப்பட்டவுடனே இந்து மதவெறியர்களுக்கு ஆயுத போலீசு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அனைத்துக்கும் மேல், புலன் விசாரணை தொடங்கும்போதே கொலையாளிகள் இசுலாமியர்கள்தான் என்ற கருத்தை போலீசே உருவாக்குகிறது. இந்து மதவெறியர்களின் கோரிக்கைப்படி சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுவிட்டது.

ஒச்சம்மாள், பார்த்திபன்
எதிர்ப்புகளை மீறி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒச்சம்மாளைக் காதல் திருமணம் செய்து கொண்டதால், கழுத்து அறுக்கப்பட்டும், ஆணுறுப்பு வெட்டப்பட்டும் கொல்லப்பட்ட பெரம்பலூர் – ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞன் பார்த்திபன். (நன்றி : ஜூ.வி.)

அதேநேரத்தில் நத்தம் காலனி எரிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 50,000 தரப்பட்டது. “எரிந்த, திருடப்பட்ட பொருட்களின் மதிப்பான 7 கோடி ரூபாயைத் தமிழக அரசுதான் கொடுக்கவேண்டும்” என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது இளவரசன் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற ம.உ.பா. மையத்தின் மனுவும் தமிழக அரசால் இழுத்தடிக்கப்படுகிறது.

அரசும் போலீசும் மட்டுமல்ல, உயர் நீதிமன்றமும் சட்ட விரோதமான முறையில் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறது. தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் விருப்பப்பட்டுத்தான் இளவரசனை மணந்ததாகவும் திவ்யா தெளிவாகக் கூறிவிட்ட போதிலும், இளவரசன்-திவ்யா திருமணத்தை முன்வைத்து நவம்பர் 2012 முதல் தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் அரங்கேற்றி வரும் சாதிவெறியாட்டங்கள் பற்றி தெரிந்திருந்த போதிலும், திவ்யாவை பா.ம.க. வினரின் பிடியில் ஒப்படைத்து அந்தப் பெண்ணை இளவரசனிடமிருந்து பிரிப்பதற்குத் துணை நின்றது உயர் நீதிமன்றம்.

தி.மு.க. உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் முதல் தமிழினவாத அமைப்புகள் வரையிலான அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக சம்பிரதாயக் கண்டனத்துடன் நிறுத்திக் கொண்டனர். வன்னியர்கள் மத்தியிலேயே வீழ்ச்சியடைந்து வரும் தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்கு ராமதாசு மேற்கொள்ளும் கீழ்த்தரமான முயற்சி என்று என்று திருமாவளவன் போன்றோர் இதனை விளக்குகின்றனர். அரசு எந்திரம், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் ஆகியவற்றின் ஆதிக்க சாதிச்சார்புக்கும், மற்ற ஓட்டுக் கட்சிகளின் மவுனத்துக்குமான விளக்கம் இதில் இல்லை.

எளிமையாகச் சோல்வதானால், வன்னிய சாதியில் பிறந்த அடிப்படை வர்க்கத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண், சாதியைத் தேவையற்றதாவும், நிராகரிக்க வேண்டியதாகவும் கருதியிருக்கிறாள். நத்தம் காலனியிலேயே அவளைப் போன்ற பல பெண்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை மணந்து கொண்டு, அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். நத்தம் காலனி எரிப்புக்குப் பின்னரும்கூட செந்தமிழ்ச்செல்வியைப் போன்ற பெண்கள் வன்னியகுல சத்திரிய போதைக்கு ஆட்படவில்லை. மாறாக, அவர்கள் சாதியை நிராகரிக்கிறார்கள்.

“வழக்குரைஞர்கள் சமூகநீதிப் பேரவை” வைத்திருக்கும் பா.ம.க. வின் வக்கீல் பாலுவுக்கும், டாக்டர்கள் ராமதாசு, அன்புமணி, செந்திலுக்கும், இன்னும் வன்னிய சாதியைச் சேர்ந்த பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி வள்ளல்கள், கந்து வட்டிக்காரர்கள், காண்டிராக்டர்கள், அதிகார வர்க்கத்தினர், நீதிபதிகள், அறிவுஜீவிகள் ஆகியோருக்கும்தான் சாதி தேவைப்படுகிறது.

ஏற்கெனவே சமூகரீதியில் ஒரு ஆதிக்க சாதி என்ற முறையில் பெற்றிருக்கும் அதிகாரத்துடன், அரசியல் கட்சி, அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை போன்றவற்றிலும் இத்தகைய இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடி வர்க்கங்கள் பெறுகின்ற அதிகாரம் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக மட்டுமின்றி, சொந்த சாதி உழைக்கும் மக்களுக்கும் எதிராக இருக்கிறது. அந்த வகையில் நாடாளுமன்ற அரசியல் சாதியைப் பாதுகாப்பதற்கான நிரந்தர ஏற்பாடாக ஆளும் வர்க்கத்திற்குப் பயன்படுகிறது.

வர்க்கப் போராட்டத்திற்கு மாற்றாகவும், சாதியை ஒழிக்கும் பொருட்டு இந்திய மண்ணுக்காகவே தயாரிக்கப்பட்ட வழிமுறையாகவும் முன்வைக்கப்பட்ட சமூக நீதி அரசியல் என்ற பெயரிலான சாதிய அடையாள அரசியல்தான் மக்கள் மத்தியில் மங்கி வரும் சாதி உணர்வை புளி போட்டு விளக்கிப் புதுப்பித்து, “பல்லவனே வா, பாண்டியனே வா, சேரனே வா!” என்று அரிவாள் எடுத்துக் கொடுக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் – தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை பற்றி பேசித் திரிந்த எல்லா சாதியப் பிழைப்புவாதிகளின் சாயமும் வெளுத்து விட்டது. மாயாவதி நடத்திய பார்ப்பனர்களின் சாதிச்சங்க பேரணிக்குப் போட்டியாக முலாயம் கட்சி பார்ப்பனப் பேரணி நடத்த முயற்சிக்க, சாதிச்சங்க பேரணி நடத்தக்கூடாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க, “சாதிப் பேரணி நடத்துவது ஜனநாயக உரிமை; சாதி இருக்கலாம், ஆதிக்கம்தான் இருக்க கூடாது” என்று புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விளக்கமளிக்க, சாதி ஒழிப்பு கூடாது என்கின்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையே சமூகநீதிக் கொள்கை என்பது விளக்கமாகியிருக்கிறது.

– அஜித்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

 1. இந்த கட்டுரை படித்தது முதல் …ஒரு இஸ்லாமியன் எவ்வாறு பாதிக்க படுகிறானோ அதே அளவு பாதிப்பு தலித் மக்களும் பெறுகிறார்கள் என்பதை உணர முடுகிறது …ஜாதியின் பெயராலும் ..பத்திரிக்கை மூலமாகவும் அநிதி எழக்க படுவதை தெள்ள தெளிவாக உணர முடிகிறது…
  பத்திரிகை துறையிலும் …அரசியலிலும் …அவர்கள் நல்ல நிலையில் இருந்துகொண்டு நமக்கு துரோகம் இழை கிறார்கள்..
  அதற்கு நாம் என்ன செய்வது ???
  1. கல்விக்கு முககியதவும் தருவது
  2. அரசியலில் இணைந்து செயல் படுவது ….

  • //ஒரு இஸ்லாமியன் எவ்வாறு பாதிக்க படுகிறானோ அதே அளவு பாதிப்பு தலித் மக்களும் பெறுகிறார்கள் என்பதை உணர முடுகிறது//

   This is not the right statement. And I object to this.
   Daliths have been exploited for the past 2000 years.
   Muslims were ruler class till 1800.

   If you want you can write , “Suffereings of Muslims is comparable to the sufferings of Daliths”

 2. என்னங்கானும்….. ஹிட்ஸ் கொரஞ்சுடுத்தோ…. உங்க நடுநெலமை இப்போதான் எல்லாவாளுக்கும் புரியுது… அதான் அவாய்ட் பன்றா… பன்னிட்டா..

 3. அது சரி காதல் பிரச்சனையில் வேர் அஜ்டஹிகறான் எவனும் சாகவில்லிய இல்ல கொலை செய்யபடவில்லிய காதல் என்றாலே பிரட்சநிதான் இதை நீங்கள் ஜாதி கண்ணோட்துடன் முடிச்சி போடுவது உங்க ஜாதி பாசம் மத்தபடி ஒரே சாதி காதல் என்றாலும் குடும்பம் எற்றுக்கொல்லை என்றால் இதுபோல கொலை தற்கொலை நடக்கத்தான் செய்யும் காதலிப்பவன் வரும் முன் தவிர்த்து கொல்லனும்

  பிரச்சன் இல்லாத இடத்தில் காதல் பண்ணிக்கணும்

 4. ஜீன்ஸ் பேண்டும் கூலிங் க்ளாசும் போட்டுட்டு மயக்கிடறாங்கன்னு ராமதாசு சொன்னது சரிதான் போலவே…போட்டோவில அந்த பையன் அப்படித்தான் இருக்கான்…தனித்தனி சம்பவங்களை எடுத்துக்கிட்டு வருசக்கணக்கா புளி போட்டு விளக்கி ஊதி ஊதி பெருசாக்குவதை விட்டுவிட்டு தலித்தோட பொருளாதார முன்னேற்றத்துக்கு என்ன பண்ணலாம்னு பாருங்கய்யா.

  நாடார்கள் எவ்வளவு சிரமப்பட்டவர்கள் இன்று உழைப்பினால் முன்னேறியிருக்காங்க.அரசாங்கம் ஒண்ணும் செய்யலே அவங்க முன்னேற்றத்துக்கு.சொந்தக்காரங்க உதவியோடும் கடும் உழைப்போடும் இந்த நிலைக்கு வந்திருக்காங்க.மீதமுள்ளவர்களும் வருகிறார்கள்.அதை தலித்து கிட்டே சொல்லிக் காட்டுங்க.அதை விட்டுப்புட்டு…

  • நெத்தியடி… இதற்கு வினவின் பதில் என்ன?… வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது… வான் கிழிய உயரவேண்டும்.

 5. வேற்று ஜாதியினர் சமைத்த சத்துணவு: சாப்பிட மறுக்கும் ராஜபாளையம் பள்ளி மாணவிகள்Posted by: JayachitraPublished: Tuesday, August 27, 2013, 17:18 [IST] Ads by GoogleOral b India New Revolutionary Toothpaste Brand Unbeatable All Around Protection. http://www.rewardme.in
  1947 MB data for 1 week Freedom to endlessly surf, download with Tata Docomo at Rs 31. Buy now tatadocomo.com/data-recharge

  ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் வேறு ஜாதியினர் சமைக்கும் சத்துணவை சாப்பிட மாட்டோம் என கடந்த ஓராண்டாக மறுத்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  ராஜபாளையம் அருகே சுமார் 200 குடியிருப்புகள் கொண்டது கே.கம்மாபட்டி கிராமம். இங்கு வசிக்கும் அனைவருமே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாம். இந்த ஊரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், அதே ஊரைச்சேர்ந்த 50 மாணவர்களும், 25 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

  கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இப்பள்ளியில் கிராமத்து மக்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் சத்துணவு ஊழியராக இருந்துள்ளார். கடந்தாண்டோடு அவரது பணிக்காலம் நிறைவு பெற்று விட, தற்போது தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மரகதவள்ளி (25) என்பவர் சமையல்காரராகவும், சரவணக்குமாரி (30) என்பவர் சமையல் உதவியாளராகவும் அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது.

  ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பள்ளிமாணவர்கள் கடந்தாண்டு ஜூலை 30 முதல், அப்பள்ளியில் சத்துணவு சாப்பிட மறுத்து வருகின்றனர். அதற்குக் காரணமாக ‘பிற ஜாதியினர் சமைத்த சாபப்பாட்டை எங்கள் பிள்ளைகள் சாப்பிட்டால் தீட்டு வரும்’ என்று சொல்லி வருகின்றனர் அம்மாணவர்களது பெற்றோர்கள்.

  கலெக்டர், சத்துணவு திட்ட அதிகாரிகள் என அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தொடர்ந்து பள்ளி சத்துணவு சாப்பாட்டை புறக்கணித்து வந்திருக்கிறார்கள் பள்ளி மாணவர்கள்.

  அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 11ம் தேதி, சத்துணவு திட்ட இணை இயக்குனர் வசந்தி, இந்த கிராமத்துக்கு சென்று ஊர் பெரியவர்களை சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து தற்போது மாணவர்கள் மட்டும் சத்துணவு எடுத்துக் கொள்கிறார்களாம். ஆனால், மாணவிகளின் சத்துணவு புறக்கணிப்பு தொடர்ந்து வருகிறதாம்.

  என்றாவது ஒருநாள் மனம் மாறி மாணவிகளும் சத்துணவு சாப்பிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தினமும் சத்துணவு தயாரிக்கும் ஊழியர்கள், பின்னர் மீதமாகும் அந்த உணவை மாடுகளுக்கு போட்டு விடுகிறார்களாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க