Tuesday, May 6, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி உரிமை கோரி உசிலையில் ஆர்ப்பாட்டம் !

கல்வி உரிமை கோரி உசிலையில் ஆர்ப்பாட்டம் !

-

  • காற்றில் பறக்குது கல்வி உரிமை
  • ஆசிரியர் பற்றாக்குறையால் தள்ளாடுது அரசு பள்ளிகள்
  • ஆட்டிப் படைக்கிறது ஆங்கில மோகம்
  • கொள்ளையடிக்கிறான் கல்வி வியாபாரி
  • அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து !
  • தனியார் கொள்ளையைத் தடுத்து நிறுத்து !

உசிலையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் !

ன்பார்ந்த பெற்றோர்களே !

“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” – என்றார் திருவள்ளுவர். கல்வி என்பது கண்ணுக்குச் சமம். ஆனால், அந்தக் கல்வியை மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு தனது கடமையிலிருந்து பின் வாங்கிக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளை அம்போ என்று அனாதையாக விட்டு விட்டு தனியார் பள்ளிகளைச் சீராட்டி வளர்க்கிறது. என்ன கொடுமை இது!

தனியார் பள்ளிதனியார் கல்வி நிறுவனங்களின் குறிக்கோள் தரமான கல்வி அல்ல. மாறாக கோடி கோடியாகப் பணம் பறிப்பதே அவர்களது நோக்கம். 3 வயது பச்சிளம் குழந்தைக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்கு மிக சாதாரண பள்ளிகளில் கூட ரூ 25 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர். பிற வகுப்புகளுக்கு லட்சக் கணக்கில் கட்டணக் கொள்ளை நடக்கிறது. அரசோ அதை ஆதரிக்கிறது. நீதிமன்றமோ அதை ஆமோதிக்கிறது. பெற்றோர்களோ பணத்துக்காக அல்லாடுகிறார்கள். ஏன் இந்த அவலநிலை?

14 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வியை அரசே வழங்க வேண்டும் என்று நம்முடைய அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால், அந்த உரிமை இன்று முற்றிலும் மறுக்கப்படுகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கொண்டு வந்துள்ள எல்லாம் தனியார் மயம் என்ற கொள்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை கல்வியிலும் அமல்படுத்தத் துடிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். எனவேதான் கல்விக்கு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வரவு,செலவு திட்டத்தில் 6 விழுக்காடு நிதி ஒதுக்கி வந்த அரசு இப்போது 2 விழுக்காடு மட்டுமே நிதி ஒதுக்குகிறது. இதனால் அரசுப் பள்ளிகள் சவலைப் பிள்ளைகள் போல் நலிந்து வருகின்றன. இதைத் தட்டிக் கேட்பதற்கு பெற்றோர்களாகிய நாம் முன் வருவதில்லை.

அரசு புள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. கட்டிட வசதி இல்லை. குடிநீர், கழிப்பறை, விளையாட்டு மைதானம், நூலகம் போன்ற வசதிகள் இல்லை. உடற்கல்வி, ஓவியப் பயிற்சி, கைவினைப் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. நம்முடைய பாடத் திட்டத்தோடு அதனைக் கற்பிக்கும் திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை. திட்டங்கள் எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளன. மழலையர் கல்வி, தொடக்கக் கல்வியில் அரசு பள்ளிகளிலோ, அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ, தாய் மொழி தமிழ் வழியிலே கல்வி கற்க தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் முன் வராத அவல நிலையை அரசு உருவாக்கி வருகிறது. அதாவது அரசு பள்ளிகளின் அடித்தளம் தகர்க்கப்பட்டு அது தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

தாய்மொழி வழிக் கல்வி தான் மிகச் சிறந்த கற்பித்தல் முறை என்பது உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தாலும் தமிழ் நாட்டில் மட்டும் அது மறுக்கப்படுகிறது. ஆங்கில வழியில் படித்தால்தான் பெருமை, கவுரவம், நல்ல எதிர்காலம் என்று கருதும் போலித்தனம் மக்களிடையே பரப்பப்பட்டுள்ளது. அதைத்தான் இன்று தனியார் கல்வி வியாபாரிகள் காசாக்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக உருவாக்கப்படுகிறார்களே தவிர, சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும், துணையின்றி இயங்கும் துணிச்சலையும் இழந்து விடுகின்றனர். ஏனென்றால் அவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்ற வகையிலே வேலை செய்யும் இயந்திரங்களாக உருவாக்கப்படுகின்றனர். இந்தியாவை ஆண்ட போது கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய கூலிகளைக் கடல் கடந்து கொண்டு போனார்கள். இப்போது கம்ப்யூட்டர் கூலிகளைக் கொண்டு போகிறார்கள்.

கடுமையான போட்டியின் விளைவாகவும், தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் ஆட்குறைப்பு நடவடிக்கை தீவிரமாக இருக்கிறது. பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வி பயின்ற பலர் இன்று மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும்படி தள்ளப்பட்டுள்ளனர். தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் வந்து ஏராளமான ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக கழித்துக் கட்டுகிறது அரசு. மனித ஆற்றலை, உழைப்பை விற்பதில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியின் காரணமாக சம்பளம் குறைக்கப்படுகிறது. இந்த உண்மையை உணராத மக்கள் ஆங்கிலம் படித்தால் எதிர்காலம் வளமாகி விடும் என்று அப்பாவித் தனமாக நம்புவதால், கல்வி வியாபாரிகளின் கல்லா நிரம்பி வழிகிறது. ஆனால், தாய் மொழியைத் தவிர வேறு மொழியே தெரியாத பலர் சமூக நிலைமைகளைப் புரிந்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதைப் பரவலாகப் பார்க்கிறோம்.

இப்போதும் கூட ஆரம்பக் கல்வி தவிர்த்த இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் இன்னமும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் 75 விழுக்காடு மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆனால், அரசுதான் அதன் தேவைகளை நிறைவு செய்ய கட்டாயமாக மறுத்து வருகிறது. தம்முடைய பிள்ளைகளின் படிப்புக்காக, எதிர்காலத்திற்காக – எல்லாவற்றையும் இழக்கத் தயாராகி தனியாருக்குக் கொட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி, சீரமைக்கக் கோரி போராடினால் அது நல்ல பயனைத் தரும்.

மாணவர்களின் கல்வித் திறனை சோதிப்பதற்காக பைசா (PISA) என்ற அமைப்பு மேற்கொண்ட முயற்சியில் 74 நாடுகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் 73-வது இடத்தைப் பிடித்தவர்கள் ஆங்கில வழிக் கல்வி பயின்ற இந்திய மாணவர்கள். முதல் இடத்தைப் பிடித்தவர்கள் தங்கள் தாய் மொழியில் கல்வி பயின்ற  சீன மாணவர்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால், கேள்விகளுக்கான விடைகளை எளிதில் கண்டு பிடிக்கும் ஆற்றல் அவர்களிடம் இருந்ததற்குக் காரணம் அவர்கள் தாய்மொழியில் சிந்திப்பது, படிப்பதுதான்.

எனவே பெற்றோர்களாகிய நாம் நமது தாய்மொழியின் மீது நம்பிக்கை வைத்து நம்முடைய பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கவும் அப்பள்ளிகளின் தரம் உயர்த்தவும் போராட முன்வர வேண்டும்.

தமிழக அரசே,

  • அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மொழிக் கல்விதான் வேண்டும்.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கற்பித்தலை உடனே நிறுத்த வேண்டும்.
  • ஆங்கிலத்தை மொழிப்பாடமாக மட்டும் கற்பிக்க வேண்டும். அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்பித்தல் கூடாது.
  • அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அவர்களுக்கு தனிப் பயிற்ச அளிக்க வேண்டும்.
  • கழிப்பறை, குடிநீர், நூலகம், விளையாட்டரங்கம் இதர தனிப் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும்.
  • தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் பள்ளிகளை சோதித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி ஒரே வகையான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
  • பொதுப் பள்ளிகள், அருகாமை பள்ளிகளை உருவாக்க வேண்டும்.
  • உசிலையில் சட்ட விரோதமாக கட்டணம் வசூலிக்கும் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி. நாடார் மேல்நிலைப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உசிலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும்.
  • சமச் சீர்க் கல்வி அமலில் உள்ளதால் மெட்ரிக் என்று பெயர் வைப்பதை தடை செய்ய வேண்டும்.
  • தாய்மொழி வழிக் கல்வியின் மேன்மையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
உசிலை பேருந்து நிலையம் முன்பு 30.08.13 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை.

தலைமை :
திரு மு ஜெயப்பாண்டி, செயலாளர், மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம், மதுரை

கருத்துரை
வழக்கறிஞர் திரு மு திருநாவுக்கரசு, உயர்நீதிமன்றம், மதுரை
தலைவர் மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம், மதுரை மாவட்டம்

திரு ம லயனல் அந்தோனி ராஜ்,
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்

வழக்கறிஞர் திரு சே வாஞ்சிநாதன், உயர்நீதிமன்றம்,
துணை செயலர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

தோழர் கதிரவன்,
ம.க.இ.க மாநில செ.கு. உறுப்பினர்,

தோழர் குருசாமி,
செயலர், வி.வி.மு. உசிலை

வழக்கறிஞர்கள் வெங்கடேசன், சி ராஜசேகரன், சி மன்மதன்,
ம.உ.பா மையம், மதுரை.

நன்றியுரை :
திரு ப ரவி,
ம.உ.பா. மையம் உசிலை

தகவல் :

மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரை மாவட்டம்
தொடர்புக்கு : 98431 71026, 94434 71003