Monday, August 15, 2022
முகப்பு உலகம் ஆசியா ஆசிய பசிபிக் ஆண்களிடம் பாலியல் வன்முறை !

ஆசிய பசிபிக் ஆண்களிடம் பாலியல் வன்முறை !

-

டந்த ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் ஓடும் பேருந்தில் கும்பலான பாலியல் வல்லுறவுக்குள்ளான மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளான இளைஞர்களுக்கு நீதிமன்றம் தண்டனைகளை அறிவிக்கவுள்ளது.

சமூகச் சூழல்
இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகச் சூழல்.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் நிர்பயா நிதி என்ற பெயரில் ரூ 1000 கோடியை ஒதுக்கி பெண்கள் மீதான தாக்குதலை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக ரூ.487 கோடியை ஒதுக்கி ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் சமநிலையை பேண நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் பார்வையை கற்று கொடுக்கும் பண்பாட்டு நிறுவனங்களை இந்த திட்டம் ஒன்றுமே செய்யாது என்பது ஒருபுறமிருக்கட்டும்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிக அளவில் நடக்கும் இடங்களாக நகரங்கள், பெரு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் 94 இடங்களை அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது. ஜார்கண்ட் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவின் உதவியுடன் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவும் அரசு முடிவு செய்துள்ளது. ஏனெனில் பெண்கள் மீதான தாக்குதலுக்கு ஆண்கள் மது அருந்துவது ஒரு காரணம் என அரசு கருதுகிறது. இத்துடன் செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவது மற்றும் மனித உரிமை அமைப்புகளை, அதிகாரிகளை பாதிக்கப்பட வாய்ப்புள்ள பெண்கள் எளிதில் அழைக்கும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவி கிடைக்க மத்திய அரசு இத்திட்டம் மூலம் முயலும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பாலியல் வல்லுறவு பாதிக்கப்பட்டவர்
பாலியல் வல்லுறவு – பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக நடத்தும் சமூகம்.

அண்மையில் மும்பை மாநகராட்சி எல்லைக்குள் சுகாதாரம் மற்றும் நலிவடைந்தவர்களுக்கான விசாரணை மையம் என்ற அமைப்பு 2008-12 காலகட்டத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்களில் உயிரோடிருக்கும் 94 பேரிடம் நடத்திய ஆய்வில் 47% பேர் உடனடியாக தங்களது உடைகளை மாற்றிக் கொண்டு விட்டதாகவும், 38% பேர் உடனடியாக குளித்து விட்டதாகவும், 28 சதவீதம் பேர் உடனடியாக பாலியல் வன்முறையில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். வெளியில் உடனடியாக தெரிந்தால் அவமானம் என்றும், தங்களைத்தான் சமூகம் குற்றம் சொல்லும் என்ற பயத்தாலும், 24 மணி நேரத்திற்குள் அப்படியே மருத்துவரிடம் போய் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றால் அங்குள்ள நடைமுறைகளானது அவர்களை இழிவாக நடத்துவதும் சேர்ந்து பெண்களை இவ்வாறு செய்யத் தூண்டியுள்ளது. மேலும் வல்லுறவுக்குள்ளாக்கியவர்கள் எனப் பார்த்தால் அவர்களில் நால்வரில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களே. மூன்றில் ஒரு சிறுமிக்கு சாக்லேட், பொம்மை பரிசுப் பொருட்களை வாங்கித் தருவதாக கூறிதான் தெரிந்த, நெருக்கமான ஆண்கள் குழந்தைகள் மீது இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர்.

பாலியல் வன்முறைசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும், முனைவர் எம்மா ஃபுளூ-ம் இணைந்து ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளில் நடத்திய சர்வே ஒன்றின் படி நான்கில் ஒரு ஆசிய ஆண் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் எவ்வளவு நம்பகமானது என்று தெரியவில்லை. பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, இலங்கை, பபுவா நியூ கினியா ஆகிய 6 நாடுகளில் நடந்த இந்த ஆய்வில் பத்தில் ஒரு ஆண் தனது இணையருக்கு வெளியே மற்றொரு பெண்ணிடம் இக்குற்றத்தை நிகழ்த்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. உலகின் மக்கட்தொகையில் ஏறக்குறைய சரிபாதி பேர் இப்பகுதியில் வசிப்பதால் இதனை தங்களது ஆய்வு மையமாக தெரிவு செய்திருந்தனர். எனினும் இந்த விகிதத்தை விட அமெரிக்காவில் பாலியல் வன்முறையின் அளவு அதிகம் என்பதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும்.

18 முதல் 49 வயதுக்குட்பட்ட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களிடமும், 3,100 பெண்களிடமும் 2010-13 ஆண்டுகளில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் பாலியல் சமத்துவம், முறையான பாலியல் உறவுகள், உறவுகளை பரஸ்பர மரியாதையுடன் அணுகுதல் போன்றவற்றுக்கான பயிற்சியை அளிப்பது போன்றனவும் இந்த ஆய்வின் தொடர் நிகழ்வாக வைக்கப்பட்டுள்ளது.

இப்பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் மனைவி அல்லது காதலியின் சம்மதமில்லாமல் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவு, சட்டத்தின்படி ஒரு குற்றமில்லை. உலகின் பல நாடுகளில் திருமணம் மட்டுமே பாலியல் உறவுக்கான லைசென்சு அல்ல என்று சட்டமியற்றிய பிறகும், ஐ.நா மன்றமே திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவுகளை குற்றமாக கருத வேண்டும் என வழிகாட்டிய பிறகும் பல நாடுகள் இதனை சட்டமாக்க முன்வரவில்லை. அதில் இந்தியாவும் ஒன்று.

திருமண உறவில் பாலியல் வன்முறைஸ்காட்லாந்தில் முதன்முதலாக 1982-ல் தான் திருமண உறவுக்குள் பெண்ணின் சம்மதமில்லாமல் நடக்கும் பாலியல் உறவை பாலியல் வல்லுறவு எனக் கருதும் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் பல முதலாளித்துவ நாடுகள் இதனை ஒரு குற்றச் செயலாகவே அங்கீகரித்தன. இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரான்சு, இசுரேல், முன்னாள் சோவியத் யூனியன் என பல நாடுகள் இதனை ஒரு குற்றமாகப் பாவித்து சட்டமியற்றின. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அங்குள்ள 50 மாநிலங்களில் 18 ல் மட்டும்தான் இது ஒரு குற்ற நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மண உறவுக்குள்ளான இத்தகைய சம்மதமற்ற பாலியல் நடவடிக்கைகளில் பெரும்பாலான சமயங்களில் சம்பந்தப்பட்ட பெண்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவதுடன், உடல்ரீதியாக காயங்களுடன் பல சமயங்களில் மரணத்தையும் தழுவியுள்ளனர். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒரு இந்தியப் பெண் இந்த வகையில் இறந்து போகிறாள். 2005-ம் ஆண்டு மாத்திரம் கணவனால் கொல்லப்பட்ட இந்தியப் பெண்களின் எண்ணிக்கை 6,787. மேலும் பாலியல் முறைகேடுகளால் உருவாகும் வியாதிகளை உடைய ஆண்கள் பெண்களை கட்டாயமாக உறவுக்குள்ளாக்கி நோய்களையும் கொடுத்து வருகின்றனர்.

பெண்ணுக்கு எதிரான சமூக சூழல்இந்திய சட்டப்படி 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் வற்புறுத்தி உறவு கொள்ளும் கணவனை எந்த சட்டத்தின்படியும் வல்லுறவு குற்றம் சாட்ட முடியாது. சாதியும், ஆணாதிக்கமும் இணைந்த பார்ப்பனியத்தின் இந்திய சமூகத்தில் திருமண உறவுக்குள் நடக்கும் இத்தகைய வல்லுறவுகளை குற்றமாக மாற்ற ஜேஎஸ் வர்மா கமிட்டி தில்லி சம்பவத்துக்கு பின்னர் பரிந்துரை செய்ததை நமது கலாச்சாரத்தை காரணமாக காட்டி நாடாளுமன்ற நிலைக்குழு அங்கீகரிக்க மறுத்து விட்டது. உதிரப்போக்கு காலத்தில் தீட்டுகளை அறிமுகப்படுத்திய ஆணாதிக்க இந்தியர்கள் பாலியல் உறவில் தாங்கள் நுகரும் பொருட்களில் ஒன்றாகத்தான் தமது மனைவி, காதலிகளைப் பார்த்துள்ளனர். உலகளவிலும் ஆணாதிக்கவாதிகள் இப்படித்தான் பெண்களைக் கருதுகின்றனர்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நில உடைமை சமூக அமைப்பு விழுமியங்களின் காரணமாக பெண்களிடம் சம்மதம் பெற்றுத்தான் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பெரும்பான்மை ஆண்களால் (73%) ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 46 சதவீத ஆண்கள் ஏதாவது ஒரு வகையில் வன்முறையை பயன்படுத்தி தான் தங்கள் இணையர்களிடம் உறவு கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கடைப்பிடிக்கும் வேறுபாடுகள் போன்றவை அவர்களை பிற்காலத்தில் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நுகர்வு கலாச்சாரம்பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்களில் பாதிப் பேர் தங்களது பதின்ம வயதில் இக்குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய நுகர்வு கலாச்சாரம், காதலுக்கும் நட்புக்கும் இடையிலான கேர்ள் ஃபிரண்டு கலாச்சாரம், கட்டற்ற இணைய பாலுறவு காட்சிகள், டேட்டிங், இணையம் மற்றும் செல்பேசியின் பாலியல் அரட்டைகள் இவற்றை விரைவு படுத்துகின்றன.

பெருகிவரும் மாநகர சேவைத்துறை நிறுவனங்கள் போன்றவை தோற்றுவிக்கும் அதீத வேலை நேரங்கள் மற்றும் வார இறுதி நாட்களின் கொண்டாட்டங்கள், ஆண் – பெண் உறவில் தோற்றுவிக்கும் மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து பாலியல் உறவுகளை கட்டற்றதாக வரைமுறையில்லாமல் மாற்றி வருகிறது. எனினும் இதில் பாதிக்கப்படுவதும் விளைவுகளின் துயரங்களை சுமப்பதும் பெண்கள்தான்.

பெரும்பாலான இளைஞர்களிடம் மண உறவுக்கு வெளியே ஒரு உறவை தொடர்வது பெருமைக்குரிய விசயமாகவே பார்க்கப்படுகிறது. அலுவலகம், நட்பு போன்றவற்றில் இருக்கும் அதே நேர்மையின்மையை தங்களது மண உறவிலும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதனால் தான் திருமணத்துக்கு முன் ஒரு லிவிங் டுகெதர் என்பதை இந்த வகை இளைஞர் எளிதாக எடுத்துக் கொள்கின்றனர். இவையெல்லாம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் இதில் குறிப்பிட்ட சதவீத ஆண்கள் பாலியல் வன்முறை செய்யும் மனநிலைக்கு தயாராகின்றனர்.

பாலியல் சர்வே
படம் : நன்றி தி இந்து.

ஆய்வில் பாதியளவு ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக தெரிய வந்துள்ளது. ஆண்களின் மனநிலையில் பாலியல் வல்லுறவு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வன்முறையாகவும், பெண்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே இதனை ஆண்கள் கருதுவதும் தெரிய வந்தது. 72 முதல் 97 சதவீதம் வரையிலான பெண்கள் சட்டபூர்வமாக ஆண்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்பதையும் ஆண்கள் இப்படியும் புரிந்து கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போகிறது.

இந்தோனேசியா போன்ற நாடுகளில் 2004-ல் குடும்ப வன்முறை சட்டம் அமலுக்கு வந்தாலும் கடந்த 2012-ல் மட்டும் அங்கு 2,16,000 வழக்குகள் பெண்கள் மீதான வன்முறைக்காக மட்டும் பதிவாகி உள்ளன. சட்டம் இன்னமும் பழைய முறையில் ஆதாரங்களை தந்தால் மட்டும்தான் வழக்கு பதிவு செய்வதாலும், சமூகத்தில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் பெண்கள் வெளியே வந்து தமக்கு நேர்ந்ததை பெரும்பாலும் சொல்வதில்லை. அப்படி இருந்த போதிலும் தினசரி பதிவாகும் வழக்குகளின்படி நாளொன்றுக்கு 20 இந்தோனேசிய பெண்கள் வல்லுறவுக்குள்ளாகின்றனர். ஆனாலும் பிராந்தியத்தை ஒப்பிடுகையில் இந்தோனேசியா மற்றும் பங்களாதேசில் இத்தகைய வல்லுறவுகளின் எண்ணிக்கை பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகத்தான் பதிவாகி உள்ளது.

பபுவா நியூ கினியா போன்ற பகுதிகளில் வல்லுறவுகளின் சதவீதம் மிகவும் அதிகமாக 62% வரை உள்ளது. ஒருபால் வல்லுறவுகளும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. பெருகி வரும் வறுமையும், அங்கு பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ள சேவைத் துறைகளின் வளர்ச்சியும் இவற்றை இன்னும் அதிகப்படுத்தலாம். குறிப்பாக தீவுகளை நோக்கி சுற்றுலாத் துறையும், விபச்சாரமும் பரவுவதை உலகமயமாதல் அதிகரிக்கவே உதவும். உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த பகுதிகளில் இத்தகைய வல்லுறவுகள் அதிகரித்த அளவில் இருக்கின்றன.

வங்க தேசத்திலும், இலங்கையிலும் பாலியல் வன்முறையை விட பிற வன்முறைகள்தான் அதிகமாக பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. சட்டப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யப்படாத நிலைமை இலங்கையில் தான் அதிகமாக (96.5%) இருக்கிறது. போருக்குப் பிறகான இலங்கையின் நிலைமையை பளிச்செனக் காட்டுகிறது ஆய்வு முடிவு.

பாலியல் வன்முறை குறித்த இந்த புள்ளி விவரங்கள் சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நமக்கு அறியத் தருகின்றன. ஆனாலும் விளைவுகளின் வழியாக மட்டும் நாம் பாலியவல் வன்முறையை தடுத்து நிறுத்த முடியாது. அதைத் தோற்றுவிக்கும் பண்பாட்டு நிறுவனங்களையும் அதன் விழுமியங்களையும் எதிர்த்து போராடுவதோடு அதற்கு பலியாகியிருக்கும் மக்களிடமும் பாலியல் சமத்துவம் குறித்த விழுமியத்தை ஏற்கச் செய்ய வேண்டும். அதுவரை ஆசியா மட்டுமல்ல உலகெங்கிலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதனால் சமூகத்திற்கும் நிம்மதியில்லை.

– வசந்தன்.

மேலும் படிக்க

 1. ஆணை பெண்ணிடமிருந்து விடுதலை செய்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது. அதுவரை பெண் ஆணை மனத்தால் பலாத்காரம் செய்வாள். ஆண் பெண்ணை உடலால் பலாத்காரம் செய்வான்.

 2. அண்ண்ணே என்னனெ நீங்க.. வசந்தண்ணே…
  இப்புடி பெண்களுக்கு ஆப்பு வச்சுடீஙக்ளே…

  நீங்க சொல்லுர புள்ளிவிபரப்படி 70 % , 80 %, 94 % பாலியல் வல்லுறவு இருக்குனா..

  அது சட்டவிரோதம்னு எப்படி சொல்லுறது..
  ஆக பெரும்பான்மை சொல்வது சட்டம் என்பது தானே சன நாயகம்.

  அப்படி பார்த்தால் பாலியல் வல்லுறவு அனுபவித்த ஆண்களுக்கு ஆடம்பர வரி, கேளிக்கை வரின்னு போட்டு டாலர் மதிப்பால் சரிந்து விழும் கஜானவை நிரப்ப்புவார் மன்னு மோகனு…

  நீங்க வேன்ன பாருங்க இது நடக்குதா இல்லையானு..

 3. ஆசிய பசிபிக் ஆண்களிடம் பாலியல் வன்முறை !

  தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன தொடர்பு வசந்தண்ணே..

 4. ஆசிய பசிபிக் ஆண்களின் பாலியல் வன்முறை என்று இருந்திருக்க வேண்டும்.

  • ஆசிய பசிபிக் ஆண்களிடம் பாலியல் வன்முறை நிறைந்து கிடக்கிறது என்ற தொனியில் தலைப்பு எழுதப்பட்டிருக்கக்கூடும்!

 5. “இன்றைய நுகர்வு கலாச்சாரம், காதலுக்கும் நட்புக்கும் இடையிலான கேர்ள் ஃபிரண்டு கலாச்சாரம், கட்டற்ற இணைய பாலுறவு காட்சிகள், டேட்டிங், இணையம் மற்றும் செல்பேசியின் பாலியல் அரட்டைகள் இவற்றை விரைவு படுத்துகின்றன.“

  இவற்றோடு பெண்களை போகப் பொருளாக, காட்சிப் பொருளாக சித்தரிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிக்கைகள் அகியவையும் பாலியல் கொடுமைகளை விரைவு படுத்துகின்றன.

  பாலியல் வன்கொடுமைகளுக்கான சமூக பின்புலத்தைத் தகர்க்காமல் இக்கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது.

  பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவே கிடையாதா?
  http://www.hooraan.blogspot.com/2012/12/blog-post_26.html

 6. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு வெறும் உடல் சார்ந்த விஷயமாக மட்டுமே பார்க்கப் படுவது மிகவும் ஒரு வருத்தத்திற்குரிய விஷயம். மேலும் பெண் என்பவள் வெறும் சுகம் கொடுக்கும் இயந்த்திரம் என்ற ஒரு கருத்து படித்தவர் பாமரர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும் உள்ளது.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடல் ரீதியான வேறுபாடு சில உறுப்புகள் மட்டும்தான்,மற்ற படி அனைத்து உணர்வுகளும் ஒன்றுதான் என்ற எண்ணம் பெரும்பாலான ஆண்களுக்கு இல்லாமல் இருப்பது மிகவும் நெருடலான ஒரு விஷயம். மேலும் பொருளாதார சார்ந்த் வேறுபாடுகள் பாலியல் குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. காதல் என்பது தெய்வீகமான விஷயமும் அல்ல. காமம் என்பது வெற்றியின் வெளிப்பாடும் அல்ல.உண்பது உறங்குவது போல் அதுவும் ஒரு சாதாரண செயலென்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல் பெண் என்பவள் தேவதையும் அல்ல. காமமத்திற்க்கு மட்டுமே உரிய இயந்த்திரமும் அல்ல. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவள் என்பதையும் உணர வேண்டும்.

 7. “Rape Punishment” Manu Smriti Hindu Law.
  8.323. Those who abduct women should be given death sentence.
  9.232. Those who kill women, children or scholarly virtuous people should be given strictest punishment.
  8.352. Those who rape or molest women or incite them into adultery should be given harshest punishment that creates fear among others to even think of such a crime.
  8. 275. One should be punished if he puts false allegations or demeans mother, wife or daughter.
  8.389. Those who abandon their mother, father, wife or children without any reasonable reason should face severe punishments.
  357. Offering presents (to a woman), romping (with her), touching her ornaments and dress, sitting with her on a bed, all (these acts) are considered adulterous acts (samgrahana).
  363. Yet he who secretly converses with such women, or with female slaves kept by one (master), and with female ascetics, shall be compelled to pay a small fine.
  367. But if any man through insolence forcibly contaminates a maiden, two of his fingers shall be instantly cut off, and he shall pay a fine of six hundred (panas).
  370. But a woman who pollutes a damsel shall instantly have (her head) shaved or two fingers cut off, and be made to ride (through the town) on a donkey.
  385. A Brahmana who approaches unguarded females (of the) Kshatriya or Vaisya (castes), or a Sudra female, shall be fined five hundred (panas); but (for intercourse with) a female (of the) lowest (castes), one thousand.
  http://ramanan50.wordpress.com/2013/01/06/rape-punishment-manu-smriti-hindu-law/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க