privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகுளிர்பதன வாயு : அமெரிக்க ஆணையும் அடியாள் மன்மோகன் சிங்கும் !

குளிர்பதன வாயு : அமெரிக்க ஆணையும் அடியாள் மன்மோகன் சிங்கும் !

-

ன்மோகன் சிங் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் நிலையில் பருவநிலை மாற்றம் குறித்த ஒரு இரு தரப்பு  ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அமெரிக்க அரசு இந்தியாவை வற்புறுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மலிவான, ஆனால் புவிவெப்பமாதலுக்கு பங்களிக்கும் குளிர்பதன வாயுக்களை வெளியிடும் குளிர்சாதன கருவிகளுக்கு பதிலாக அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ள, அதிக செலவாகக் கூடிய தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டி வரும். புவிவெப்பமாதலை தடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தங்களின் படி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பொறுப்பை தட்டிக்கழித்து விட்டு இந்தியாவின் மீது சுமத்துவதாக இது அமையும்.

பருவநிலை மாற்றத்திற்கான அமெரிக்கத் தூதர் டோட் ஸ்டெர்ன்
பருவநிலை மாற்றத்திற்கான அமெரிக்கத் தூதர் டோட் ஸ்டெர்ன்.

அமெரிக்கக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தருவதையே நோக்கமாக கொண்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் மீது உடனடியாக திணிக்க முயல்கிறது அமெரிக்கா. மன்மோகனின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்பே அதிகாரிகள் மட்டத்தில் இது குறித்து பேச்சு நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் ஒபாமா, இது குறித்து மன்மோகனிடம் நேரடியாக ஆணையிடுவார் என்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமெரிக்கத் தூதர் டோட் ஸ்டெர்ன் எச்சரித்துள்ளார்.

பூமியைச் சுற்றி அரணாக உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை குளிர்பதன வாயுக்கள். இந்த குளிர்பதன வாயுக்கள் உருவாவதை குறைப்பது தொடர்பாக இது வரை இரண்டு சர்வதேச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. செப்டம்பர் 16, 1987-ல் கையெழுத்தான மான்ட்ரியல் ஒப்பந்தம் ஓசோனை பாதிக்கும் காரணிகளை படிப்படியாக கைவிடுவதற்கான ஒரு கால அட்டவணையை தயாரித்தது. அதன்படி 1996-க்குள் அப்போது பயன்படுத்தப்பட்ட குளோரோ புளோரோ கார்பன் (CFC) ஐ ஒழித்துக் கட்டி ஹைட்ரோ-குளோரோ-புளோரோ-கார்பனுக்கு (HCFC) மாறுவது என்றும், 2015-2030-க்குள் ஹைட்ரோ-குளோரோ-புளோரோ-கார்பனை குறைத்து ஹைட்ரோ-புளொரோ-கார்பனுக்கு (HFC) மாறுவது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகள் ஏற்கனவே ஹைட்ரோ-புளோரோ-கார்பனுக்கு மாறிவிட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகள் முதலில் செலவு குறைவாக பிடிக்கும் HCFC-க்கு மாறியிருக்கின்றன. அடுத்த கட்டமாக 2030-ம் ஆண்டுக்குள் HFC-க்கு மாற வேண்டும். அதிக செலவு பிடிக்கும் இந்த தொழில் நுட்பத்தில் வெளியாகும் ஹைட்ரோ-புளோரோ-கார்பன் ஓசோனை பாதிக்கா விட்டாலும் கரியமில வாயுவைப் போல புவி வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே புவி வெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்களை கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தின் கீழ் ஹைட்ரோ-புளோரோ-கார்பன் வெளியாவதையும் நிறுத்தி விட்டு மாற்று நுட்பங்களுக்கு மாற வேண்டும். அது பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் விவாத சட்டகத்தின் (UNFCCC) கீழ் வருகிறது.

இந்த வாயுக்களை வெளியிடாத  புதிய மாற்று தொழில் நுட்பத்தை அமெரிக்க நிறுவன்ங்களான ஹனிவெல்,டியூபான்ட் மற்றும் ஜப்பானிய நிறுவனமான டைச்சி சாங்கியோ ஆகியவை தயாரிக்கின்றன.

தற்போது அமெரிக்கா திணிக்க முயலும் ஒப்பந்தத்தின் படி இந்தியா HFC நிலைக்கு போகாமல் நேரடியாக அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்றிருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு தாவ வேண்டும். இது குளிர்விப்பான் கருவிகளின் வணிகத்தில், இந்தியா போன்ற பெரிய சந்தையை பிடிப்பதற்கான அமெரிக்க நிறுவனங்களின் முயற்சியை தவிர வேறு எதுவுமில்லை. அமெரிக்க நிறுவனங்களால் காப்புரிமை பெறப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்தினால் முன்பை விட 20 மடங்கு அதிக விலை கொடுக்கவேண்டிருக்கும். தனது வணிக நலனுக்கு இந்தியாவை பலியிட துடிக்கிறது அமெரிக்கா.

வணிக நோக்கத்தை தவிர வேறு நோக்கமும் அமெரிக்காவிற்கு இருக்கிறது. வளிமண்டலத்தில் இந்த குளிர்விப்பான்களின் (HFC) ஆயுட்காலம் குறைவு, புவி வெப்பமடைவதில் இவற்றை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது கரியமிலவாயு (CO2) தான். ஆனால் கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் அமெரிக்கா அதைக் குறைப்பதை பற்றி பேசாமல் இந்தியா போன்ற நாடுகளின் குளிர்விப்பான்களிலிருந்து வெளியாகும் சிறு அளவிலான வாயுக்கள் குறித்து கவனத்தை திருப்புவதன் மூலம் வளரும் நாடுகள் தான் பருவநிலைமாற்றத்திற்கு காரணம் என்பது போன்ற சித்தரிப்பை உருவாக்க முயல்கிறது. மேலும் தான கரியமில வாயு வெளியிடுவதை குறைப்பதற்கான் காலத்தை நீட்டிக்க இதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

புவி வெப்பமடைதலுக்கு காரணமாக இருக்கும் கரியமில வாயு முதலான பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதற்கான ஒப்பந்தமான UNFCCC-யின் கீழ் அதற்கான செலவுகளை வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். எனவே, HFC-யிலிருந்து மாறுவதற்கான செலவை வளர்ந்த நாடுகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வளரும் நாடுகள் வாதிட்டு வருகின்றன.

இப்போது அமெரிக்கா இந்தியாவின் மீது சுமத்த முயலும் தொழில் நுட்பம் சில தனியார் நிறுவனங்களால் காப்புரிமை பெறப்பட்டு 20 மடங்கு அதிக விலையை கொண்டிருக்கிறது என்றும் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பானது தான் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்று கூறி சுற்றுச் சூழல் அமைச்சகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் அந்த புதிய தொழில்நுட்பத்தை முன்னரே நிராகரித்திருந்தன. 2012-ம் ஆண்டில் மத்திய அமைச்சரவையும் இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்பதில்லை என்று முடிவு செய்திருந்தது. ஆனால் எதையும் மதிக்காமல் மன்மோகன் சிங் சமீபத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்த தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்பதாக சொல்லும் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டு வந்துள்ளார்.

காட்டிய எல்லா இட்த்திலும் கைநாட்டிடும் துரோகிகள் கையில் இருக்கும் வரை நமது நாடும், பொருளாதாரமும் அமெரிக்கா போன்ற ஆண்டைகளின் ஆட்டுவிப்புக்கு ஆடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். இவ்வளவிற்கும் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் முயற்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வரையறைகளை உள்ளடக்கிய கியாட்டோ ஒப்பந்தத்தில் இன்று வரை கையெழுத்து போட மாட்டோம் என்று அடம்பிடிக்கும் நாடு அமெரிக்காதான். அப்பேற்பட்ட அமெரிக்கா சுற்றுச்சூழல் காவலனாக குளிர்பதன வாயுக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூவுவதும் அதற்கு மன்மோகன்சிங் தலையாட்டுவதும் அயோக்கியத்தனமில்லையா?

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க