privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கிரிக்கெட் கொள்ளை தேர்தலில் காங், பாஜக, பவார் கூட்டணி !

கிரிக்கெட் கொள்ளை தேர்தலில் காங், பாஜக, பவார் கூட்டணி !

-

காராஷ்டிரா முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான், மாஸ்கான் கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதி பதவியை ஏற்க முன் வந்திருக்கிறார். மும்பை கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவர் முதலான பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. மும்பை கிரிக்கெட் அசோசியேஷனின் விதிகளின் படி அதன் தேர்தலில் போட்டியிட 330 கிளை கிளப்புகளில் ஒன்றின் பிரதிநிதியாக நியமிக்கப்பட வேண்டும்.

பிருத்விராஜ் சவான்
மகாராஷ்டிரா முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான்

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக வருபவர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு குறி வைக்க முடியும் என்பதால் மாஸ்கான் கிரிக்கெட் சங்கம், சவானுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருக்கும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் பிடி தளருவதால் அடுத்த வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்கும் என்று முன்னாள், இன்னாள் அரசியல்வாதிகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

மும்பை கிரிக்கெட் சங்கத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெருச்சாளியும் மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத் பவார் தலைமை பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். பாஜகவின் கோபிநாத் முண்டே, ஸ்டைலோ கிரிக்கெட்டர் அணியின் பிரதிநிதித்துவத்தை விலைக்கு வாங்கி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் அமைச்சராக இருக்கும் சரத் பவாரை எதிர்த்து முறியடிக்க பாஜகவின் கோபிநாத் முண்டேவுடன் காங்கிரசின் பிருத்விராஜ் சவான் கூட்டணி சேரவிருக்கிறார்.

சவானுக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம் என்றும் கிரிக்கெட்டுக்கு சேவை செய்யவே அவர் மாஸ்கான் சங்கத்தின் பிரதிநிதியாக மும்பை கிரிக்கெட் சங்கத்தில் பங்கேற்க இருக்கிறார் என்றும் மாஸ்கான் கிரிக்கெட் சங்கம் மற்றும் ஸ்டைலோ கிரிக்கெட் சங்கம் இரண்டிற்கும் அதிகாரபூர்வ செயலாளரான (ஒப்பமிடுபவர்) ஷா ஆலம் ஷேக் தெரிவித்திருக்கிறார். தன் கட்டுப்பாட்டில் இருக்கும் மாஸ்கான், ஸ்டைலோ சங்கங்கள் மூலம் ஆலம் உருவாக்கியிருக்கும் வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஏற்பட்டிருப்பது போலவே, எதிர்த் தரப்பில் சரத் பவார் பாஜகவின் மும்பை தலைவர் ஆஷிஷ் ஷேலருடன் கூட்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

மாஸ்கான் கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை பிடித்தவர்களில் இப்போதைய முதல்வர் சவானுக்கு முன்னோடி, காலம் சென்ற முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக்.  சென்ற மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தேர்தலில் சரத்பவாரின்  வேட்புமனு முகவரி குளறுபடி காரணமாக நிராகரிக்கப்பட்டதால் விலாஸ் ராவ் தேஷ்முக்கை ஆதரித்து தலைவர் பதவியில் அமர்த்தினார் சரத் பவார். இப்போது அதே கிரிக்கெட் கிளப்பின் பிரதிநிதியாக சரத்பவாரை எதிர்க்கத் திட்டமிடுகிறார் சவான்.

சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெருச்சாளியும் மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத் பவார்

தேசிய அளவில் எதிரிக் கட்சிகளாக அடித்துக் கொள்ளும் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் யோக்கியதையை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். கிரிக்கெட் வாரியம் முதலான கணிசமான ஆட்டையை போடும் வாய்ப்புள்ள இடங்களில் தங்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து கூட்டணி அமைத்துக் கொள்வது இவர்களின் வாடிக்கை. நிலக்கரி வயல், தொலைத்தொடர்பு என்று பல துறைகளிலும் இவர்களது கூட்டணி இருப்பதைப் போன்று கிரிக்கெட்டிலும் உள்ளது.

பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கடந்த சில ஆண்டுகளில் ஒரு கிளப்புக்கு ரூ 1 கோடி முதல் ரூ 2.5 கோடி வரை கொடுத்து மும்பை கிரிக்கெட் அசோசியேஷனின் கிளை கிளப்புகளை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். ஒரு உள்ளூர் கிரிக்கெட் கிளப் பிரதிநிதி பதவிக்கே கோடிகளில் செலவழித்து இந்த முதலைகள் இடம் பிடிக்கின்றன என்றால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் புரளும் பணத்தின் அளவை புரிந்து கொள்ளலாம். எனில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதாக மாயையை உருவாக்கும் “சச்சின்” போன்ற படங்களின் அபத்தத்தை என்னவென்பது?

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி எம்எல்ஏ நிதின் சர்தேசாய் தாதரைச் சேர்ந்த பார்சி சோராஷ்ட்ரிய சங்கத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிவசேனாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஜோஷியும், சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாயும் கிரிக்கெட் சங்க  பிரதிநிதித்துவத்தை வாங்கியிருக்கும் அரசியல் தலைவர்கள்.

ஸ்ரீசாந்த்
வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த்

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே, உத்தவ் தாக்கரேயின் தனிச் செயலர் மிலிந்த் நார்வேகர், சிவசேனாவின் ராஜ்யசபை உறுப்பினர் அனில் தேசாய், மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் ஜிதேந்திர அவ்கத் மற்றும் இன்னொரு அமைச்சர் சச்சின் அஹிர் ஆகியோரும் பல்வேறு கிளப்புகளின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்று பிற மாநிலங்களில் பாஜக ராஜ்யசபைத் தலைவர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சுக்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, பீகாரின் ராஷ்ட்ரீய ஜனதா தள் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரும் மாநில கிரிக்கெட் சங்க பதவிகளை பிடித்திருக்கிறார்கள்.

இப்படி பல கோடி ரூபாய்கள் கைமாறும் கீழ் மட்ட கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர்களைக் கொண்டதுதான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

அந்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்ட புரோக்கர்களிடம் காசு வாங்கிக் கொண்டு விளையாடியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த கேரளாவின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோரை வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்திருக்கிறது. அதே ஐபிஎல் போட்டியில் சூதாடியதாக கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பனின் மாமனாரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்தக்காரருமான இந்தியா சிமென்ட்ஸ் முதலாளி சீனிவாசன் மேற்பார்வையில்தான் இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது என்பதிலிருந்து இந்திய கிரிக்கெட்டின் லட்சணத்தை புரிந்து கொள்ளலாம்.

கிரிக்கெட் என்பது வெறும் மட்டை, பந்து, விக்கெட் மட்டுமல்ல. பில்லியன் ரூபாய்களில் புரளும் ஒரு கொள்ளை என்பது இந்த கிரிக்கெட் தேர்தல்களை வைத்து புரிந்து கொள்ளலாம். அந்தக் கொள்ளையில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதம் இல்லாமல் இவர்கள் நடத்தும் கூட்டணியையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க