Thursday, August 11, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கார்னெட் மணல் கொள்ளை - HRPC உண்மை அறியும் குழு அறிக்கை

கார்னெட் மணல் கொள்ளை – HRPC உண்மை அறியும் குழு அறிக்கை

-

தென் மாவட்டங்களில் கார்னெட் மணல் கொள்ளை குறித்த விரிவான உண்மையறியும் குழு ஆய்வை மேற்கொண்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் தனது அறிக்கையை சென்ற வாரம் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டது. இதை பல்வேறு ஊடகங்கள் சுருக்கியோ, செய்தியாகவோ வெளியிட்டிருக்கின்றன. 19-09-2013 இன்று தி இந்து-வில் இதன் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகியிருக்கிறது. இங்கே அந்த அறிக்கையை முழுமையாக வெளியிடுகிறோம்.

பிடிஎஃப் கோப்பையும் இணைத்திருக்கிறோம். தேவைப்படுபவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். இதை விரிவாகக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கார்னெட் மணல் நிறுவனங்களால் கனிம வளங்கள் சுரண்டப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை.

————————————————————————-

மிக நீண்ட காலமாக கடலோரங்களில் மணல் அள்ளுவதற்கெதிராக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கடந்த 06.08.2013 தேதியிட்ட பத்திரிகை செய்தியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் “தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், வைப்பாறு, வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் அருகேயுள்ள கடலோர கிராமங்களில் ஆய்வு செய்த போது தனியார் நிறுவனம் ஒன்று வைப்பாறு கிராமப் பகுதியில் அனுமதியின்றி அரசு புறம்போக்கு மற்றும் நில அளவை செய்யப்படாத பகுதிகளில் 2-10 அடிகள் ஆழம் வரை, 3 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை மணலை சட்டவிரோதமாக அள்ளியும், 2,39,712 மெட்ரிக் டன் அளவில் கனிமங்களை சட்டவிரோதமாக அள்ளியும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். உடனே அப்பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டார். கடந்த 14.08.2013 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் O.A.171/2013 என்ற வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு பகுதியைக் குறிப்பிட்டு நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் மணல் அள்ளத் தடை விதித்தது. இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பான உண்மை நிலைமைகளைக் கண்டறியும் பொருட்டு ம.உ.பா. மையம் சார்பில் கீழ்க்கண்ட நபர்களைக் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

குழு உறுப்பினர்கள்

1. சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர், மதுரை உயர் நீதிமன்றம்

2. இராமச்சந்திரன், வழக்கறிஞர், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்

3. அரிராகவன், வழக்கறிஞர், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்

4. சிவராசபூபதி, வழக்கறிஞர், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம்

5. தங்கப்பாண்டியன், வழக்கறிஞர், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்

6. சுரேசு சக்திமுருகன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்

7. ம.லயனல் அந்தோணிராஜ், செயலர், மதுரை மாவட்ட ம.உ.பா. மையம்,

இக்குழு கடந்த 14.08.2013, 16.08.2013 முதல் 18.08.2013 வரை மற்றும் 21.08.2013 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தாலுகா முத்தையாபுரம், பெரியசாமிபுரம் – மேல்மாந்தை, கீழவைப்பாறு கடற்கரைப் பகுதிகள் மற்றும் வடக்கு ஆத்தூர், நெல்லை மாவட்டத்தில் பெரியதாழை, நவலடி, உவரி, பஞ்சல் கடற்கரை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் லீபுரம் கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களைப் பார்வையிட்டும், அப்பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்தும் – செப்டம்பர் 02, 03, 05, 07 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரி, கனிம வளத்துறை துணை இயக்குநர் ஆகியோரைச் சந்தித்தும் விபரங்களைச் சேகரித்தது. மக்களின் வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவசியமான இடங்களில் சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்ட கனிமவள வரலாறு

உலகில் கனிமங்கள் நிரம்பியுள்ள மணலின் மொத்த இருப்பு தோராயமாக 460 மில்லியன் டன். இதில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மணலில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மேனோசைட், தோரியம் ஆகிய கனிமங்கள் புதைந்துள்ளன. இது முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1905-ல் கண்டறியப்பட்டு அதன் பின் 1910-ல் சில தொழிற்சாலைகள் ஜெர்மானியர்களால் இங்கு அமைக்கப்பட்டு கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1914-ல் துவங்கிய முதலாம் உலகப் போரையொட்டி பிரிட்டிஷ் அரசு ஜெர்மானியர்களைக் கைது செய்துவிட்டு, தானே கம்பெனிகளை எடுத்து நடத்தியது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இத்தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்படவே அரசு பொறுப்பேற்று நடத்தி வந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சில தனியார் நிறுவனங்கள் இத்தொழிலில் அனுமதிக்கப்படவே, வி.வி. மினரல்ஸ், பீச் மினரல்ஸ் கம்பெனி (B.M.C), இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ் கம்பெனி (I.M.C) மற்றும் எஸ்.டி.எஸ். மாணிக்கம், தயா தேவதாஸ், நாகராஜன் ஆகியோரின் நிறுவனங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு இன்று பெருமளவு கனிம ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் வி.வி. மினரல்ஸ், பீச் மினரல்ஸ் கம்பெனி (B.M.C), இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ் கம்பெனி (I.M.C) ஆகியவை வைகுண்டராஜன் மற்றும் அவரது குடும்பத்தாருக்குச் சொந்தமானவை. இவர்களே இத்தொழிலில் ஏகபோகமாக உள்ளனர். இந்நிறுவனங்களின் மண் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி கடலோரங்களில் அமைந்துள்ளன. இதில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தினர் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக உள்ளனர்.

கடற்கரையில் கொட்டிக் கிடக்கும் அரியவகை கனிமங்கள்:

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகளில் உள்ள கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய கனிமங்கள் மிகவும் அரிய வகையைச் சேர்ந்தவை. சுமார் 2100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் பாறைகள் உருவாகின. இதில் சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தால் உருமாற்றப் பாறைகள் உருவானபோது அதனுடன் சேர்ந்து கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் முதலிய கனிமங்களும் உருவாகியுள்ளன. ஊட்டி முதல் கன்னியாகுமரி வரையுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிதான் இவற்றின் மூலம். இங்குள்ள ஆறுகள் மூலம் குறிப்பாக தாமிரபரணி ஆறு மூலமாக இக்கனிமங்கள் கடலில் சேர்க்கப்பட்டு தென்மாவட்டக் கடற்கரைகளில் சேர்ந்துள்ளன. இயற்கையின் கொடையான இந்த அரிய வகை கனிமங்கள் கடற்கரையில் சேர பல லட்சம் ஆண்டுகள் ஆகியுள்ளன. இக்கனிமங்கள் கீழ்கண்ட வகைகளில் பயன்படுகின்றன.

கார்னெட்

தூசு, மாசு இல்லாத தரமான கனிமம் இது. கோமேதகம் வகையைச் சேர்ந்தது. உப்புக்காற்றால் சேதமடைந்த கப்பல்கள், கட்டிடங்கள், சிலைகளைத் தூய்மைப்படுத்த, கண்ணாடி, செயற்கைக் கற்கள், அலுமினியம், டைட்டானியத்தைத் துண்டிக்க, நீரை சுத்தப்படுத்த, கணினியின் திரை, மூக்குக் கண்ணாடி, வால்வுகள் ஆகியவற்றை பாலீஷ் செய்ய என இன்னும் பல்வேறு வகைகளில் கார்னெட் பயன்படுகிறது.

இல்மனைட்:

உலகில் அதிகத் தேவையுள்ள இக்கனிமம் பெயிண்ட், பிளாஸ்டிக், உயர்தர காகிதம், வெல்டிங் ராடு, டைட்டானியம், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், விளையாட்டுப் பொருட்கள், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியன தயாரிக்கப் பயன்படுகிறது.

சிர்கான்:

18,000 சென்டிகிரேடு வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்ட சிர்கான் உருக்கு, வார்ப்பு தொழிற்சாலைகளிலும், செராமிக் டைல்ஸ், இரும்பு, உருக்கு ஆலைக் கற்கள் தயாரிக்கவும், ரசாயன தொழிற்சாலைகளில் துருப்பிடிப்பு மற்றும் அரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது. அணுஉலைக் கட்டமைப்பில், மருந்து, சமையல் பாத்திரங்கள், குளியலறை – கழிவறை உபகரணங்கள் தயாரிப்பிலும் சிர்கான் பயன்படுத்தப்படுகிறது.

ரூட்டைல்:

டைட்டானியத்தின் மூலப்பொருள் இது. பெயிண்ட், பிளாஸ்டிக், துணிகள், வெல்டிங் ராடு, நகை, விண்வெளி உபகரணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

மோனோசைட்:

தோரியத்தை உள்ளடக்கிய கனிமம் இது. அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது.

என்ன செய்கின்றன கார்னெட் மணல் நிறுவனங்கள்?

garnet-1

தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழக கடற்கரைப் பகுதியில் பல லட்சம் ஆண்டுகளாய் இயற்கை சேர்த்து வைத்திருந்த அரிய வகைக் கனிமங்கள் நிரம்பிய மணல் தாதுவை அள்ளி தொழிற்சாலைகள் மூலம் கார்னெட், இல்மனேட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய தனித்தனி கனிமங்களாகப் பிரித்து, அவற்றை தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொரியா, அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் மற்றும் அவரது குடும்ப நிறுவனங்கள் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான 15 கி.மீ நீளமுள்ள கடற்கரையை 40 ஆண்டுகள் குத்தகைக்கு அரசிடமிருந்து பெற்றுள்ளதோடு, 2300 ஏக்கர்கள் பட்டா நிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தங்கள் நிறுவன இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். இந்த நிலங்களையும் அரசிடமிருந்து மிகக் குறைந்த குத்தகைக்கு தான் பெற்றுள்ளார்கள். உதாரணத்திற்கு இருக்கன்துறை கிராமத்தில் 100 ஏக்கர்கள் அரசு நிலம் ஆண்டுக்கு 16 ரூபாய்க்கு வைகுண்டராஜனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதுபோக கடற்கரை ஓரமுள்ள ஏராளமான புறம்போக்கு நிலங்களையும் அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

தூத்துக்குடி – கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களில் கார்னெட் மணல் தொழிற்சாலை நடத்துவோர் கடலை ஒட்டி தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பல நூறு பேர் பணிபுரிகின்றனர். தொழிற்சாலையின் முன்புறம் பெரிய சுவர் கட்டப்பட்டு, அதற்கு செக்யூரிட்டிகளை காவலுக்கும் வைத்து உள்ளனர். நிறுவனத்துக்கு பின்புறம் மலை போல் மண்ணைக் கொட்டி மேடாக்கியுள்ளனர். இதனால் தொழிற்சாலைக்குள் நடப்பது எதுவும் வெளியில் தெரிவதில்லை. தொழிற்சாலையின் அருகில் வசிப்பவர்களுக்குக் கூட எதுவும் தெரிவதில்லை. ஒவ்வொரு மணல் நிறுவனமும் ஒரு மர்மக் கோட்டை போலவே காட்சியளிக்கிறது.

கடற்கரை மக்களின் போராட்ட வரலாறு

கார்னெட் மணல் கொள்ளைக்கு எதிராக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெல்லை மாவட்ட கடலோர மக்கள் போராடி வந்துள்ளனர். பத்திரிகையில் வந்த சில செய்திகளின் படி 30.06.1996-ல் நெல்லை மாவட்டம், பெருமணலில் பங்குத்தந்தை புரூனோ தலைமையில் மறியல், 4.10.1996–ல் இராதாபுரம் பேருந்து நிலையம் அருகில் மணல் எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் பட்டினிப் போராட்டம், 20.03.1997–ல் பாளை மார்க்கெட் ஜவஹர் திடலில், பா.ம.க மற்றும் கார்னெட் மணல் எடுப்பு எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியன உள்ளிட்ட ஏராளமான போராட்டங்கள் இம்மாவட்டத்தில் நடந்துள்ளன. 30.06.1996 அன்று பெருமணலில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணமாக பஞ்சல் கடற்கரைப் பகுதியில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மணல் எடுக்கத் சேரன்மகாதேவி துணை ஆட்சியர் தடைவிதித்துள்ளார்.

இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக 15.12.1996–ல் பெருமணல் கிராமத்தில் 4 அரசுப் பேருந்துகள் மக்களால் சிறைபிடிக்கப்பட்ட சூழலில், 16.12.1996 அன்று பெருமணலுக்கு வந்த அன்றைய நெல்லை மாவட்ட எஸ்.பி ஜாங்கிட் தலைமையிலான போலீசார், தங்கள் வாகனங்களை தாங்களே நொறுக்கிவிட்டு மக்களைக் கொடூரமாகத் தாக்கி, 200 போ் மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர். தாக்குதலில் உவரி அந்தோணியார் ஆலய உதவி பங்குத்தந்தை புஷ்பராயன் உள்ளிட்டு பொதுமக்கள் பலரும் காயம் அடைந்துள்ளனர். பி.யு.சி.எல். சார்பில் உண்மை அறியும் குழு வந்து இச்சம்பத்தை விசாரித்து, போலீசாருக்குக் கண்டனம் தெரிவித்து, மணல் கொள்ளைக்கு அரசு தடைவிதிக்கக் கோரியுள்ளது. தடியடியைக் கண்டித்து ஜூலை 3-ல் மீனவர்களது வேலைநிறுத்தம், திருச்சியில் உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்கள் நடந்துள்ளன. மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடு முழுவதிலுமிருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்ற கண்டனக் கூட்டமும் நடந்துள்ளது. அன்றைய மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் முதல்வர் கருணாநிதியிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தி இந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர், தினத்தந்தி, மாலை மலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும், வாரப் பத்திரிகைகளிலும் இப்போராட்டங்களைப் பற்றி ஏராளமான செய்திகள் வெளிவந்துள்ளன. மொத்தத்தில் கார்னெட் மணல் கம்பெனிகளுக்கெதிராக, பாதிப்புகளை உணர்ந்து போராடிய கடற்கரை மக்கள், அரசு வன்முறையால் கடுமையாக ஒடுக்கப்பட்டு, பொய்வழக்குகளால் பயமுறுத்தப்பட்டு, போராட்டத்தைக் கைவிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதே உண்மை.

உண்மை அறியும் குழுவினர் பார்வையிட்ட பகுதிகளின் நிலைமைகள் மற்றும் அனுபவங்கள்:

தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் வட்டம் – முத்தையாபுரம் – பெரியசாமிபுரம் – மேல்மாந்தை கடற்கரைப் பகுதி :

garnet-2

இப்பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகப் பகுதிக்குள் வருகின்றது. அரிய பவளப் பாறைகள், கடல் அட்டைகள், கடல் ஆமைகள், கடல் பசுக்கள் மற்றும் அரிய கடல்வாழ் தாவரங்கள், உயிரினங்கள் நிறைந்துள்ள பகுதி இது. இக்கடற்கரைப் பகுதிகளில் கடற்கரையே கருகருவென கனிமங்கள் நிறைந்து காட்சியளிக்கிறது. பச்சையாபுரம் எல்லைக் கல்லுக்கு முன்பு வரை பல கிலோ மீட்டர்களுக்கு கடற்கரையையே வெட்டி எடுத்துள்ளனர். அது மட்டுமின்றி கடலின் உள்ளேயும் மணல் எடுத்துள்ளனர். இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் பகலிலேயே அதிகம் இல்லை. பெரும்பாலும் இரவில் தான் மணல் அள்ளியுள்ளனர். மணல் அள்ளுவதற்காக உப்பளத்திற்கு தண்ணீர் இறைக்கும் ESCEE Infrasturcture Pvt Ltd நிறுவன பம்பிங் ஸ்டேசன் அருகில் தனியாக சாலை ஒன்றையும் அமைத்துள்ளனர். கடற்கரையில் சுமார் 3 முதல் 6 அடி வரை வெட்டி மணல் எடுக்கப்பட்டுள்ளது. சவுக்குத் தோப்புக்கு பின்புறம் பெரிய ஏரி போல் 1 ½ ஆள் உயரத்துக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. சவுக்கு, பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தால் இப்பகுதிக் கடற்கரை சட்டவிரோதமாக சூறையாடப்பட்டுள்ளது. கடற்கரையே சிதைக்கப்பட்டு கோரமாகக் காட்சியளிக்கிறது.

ம.உ.பா. மையத்தின் உண்மை அறியும் குழுவினர் கீழவைப்பாறு பகுதியில் உள்ள வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் மணல் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்குச் சென்றபோது ஊழியர்கள் தாங்கள் புதியவர்கள் என்றும், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறினர். எங்களது பெயர்கள் மற்றும் விபரங்களைக் கேட்டுக்கொண்டதுடன், நாங்கள் சென்ற வாகனங்களின் எண்களையும் குறித்துக்கொண்டனர். சிலருக்கு செல்பேசி மூலம் தகவல் கொடுத்தனர். திரும்பி வரும்போது பைக்கில் வேகமாக வந்த மூவர் எங்களை மறித்து விபரம் கேட்டு பின்னர் அனுப்பினர்.

பெரியதாழை

garnet-3

இப்பகுதிக்கு எமது உண்மை அறியும் குழு சென்றபோது கழிவு மணலால் நாசப்படுத்தப்பட்ட பகுதிகளை இயந்திரம் மூலம் மூடிக் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓடி வி்ட்டனர். கடலில் கழிவு மணலை பல ஏக்கருக்குக் கொட்டி கடலை பாலைவனம் போல் மாற்றியுள்ளனர். கழிவு மணல் கொட்டப்பட்ட பகுதியில் நடந்தால் புதைகுழி போல் கால்கள் உள்ளே இறங்குகின்றன. தூண்டில் வளைவுப் பாலம் முழுமையாக நாசப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்து முடித்த சிறிது நேரத்தில் கம்பெனி ஆட்கள் 100-150 பேர் உண்மை அறியும் குழு மற்றும் மீனவர்களைச் சூழ்ந்து கொண்டு, கடற்கரையே தங்கள் பட்டா இடம் என்று சொல்லி அவர்களைத் தாண்டிச் செல்ல விட மறுத்தனர். சூழ்ந்து நின்று கொண்டு பிரச்சனை வேண்டாம், போய் விடுங்கள் என எச்சரித்து, படகில் ஏறும் வரை உடன் வந்து அனுப்பி விட்டனர். எங்களை புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

உவரி

garnet-4

நெல்லை மாவட்டம், உவரிக்கு சென்ற போது அங்கு ஆழமாக மணல் எடுக்கப்பட்ட பகுதிகளில் கழிவு மணலைக் கொட்டி மூடியிருந்தனர். பசுமைத் தீர்ப்பாயத் தடை இருந்தாலும் நாங்கள் செல்லும் போது பொக்லைன் மூலம் வேலையாட்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன், வேகமாக டிராக்டர்களை எடுத்துக்கொண்டு கம்பெனிக்குள் ஓடி விட்டனர். உடனே வேகமாக ஒரு ஜீப் வந்தது. அதிலிருந்து இருவர் வந்து, தாங்கள் உள்ளூர்க்காரர்கள் என்றும், இது தங்களது பட்டா இடம் என்றும், நீங்கள் உள்ளே வரக்கூடாது என்றும் கூறினர். சட்டப்படி வேலி அமைத்தே மணல் எடுக்க வேண்டும், ஏன் அமைக்கவில்லை, இது கடற்கரைப் பகுதி, பாதிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்கிறோம், உங்கள் பெயர் என்ன? எனக் கேட்டதற்கு, எனது பெயர் வேண்டாம், இங்கு மணல் கம்பெனியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார். ஒருவரை அழைத்து பாதிப்பு இருக்கா சொல் என்றார். அவரும் பாதிப்பில்லை, வேலைதான் கிடைத்துள்ளது என்றார். ஆனால் இங்கு பட்டா இடம் என்று சொல்லப்படும் இடத்திலேயே மிகவும் ஆழமாக 30 முதல் 40 அடி வரை மணல் அள்ளப்பட்டிருப்பதுடன், கடற்கரையிலும், கடலின் உள்ளேயும் கூட மணல் அள்ளப்பட்டுள்ளது.

பஞ்சல் கிராமம்

இங்கு வலது பக்கம் பார்க்கும் தூரத்தில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும், இடதுபுறம் முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் கூடங்குளம் அணு உலையும் அமைந்துள்ளன. இதற்கு இடைப்பட்ட பகுதியில் கடற்கரை முழுவதும் அணு உலையின் சுற்றுச்சுவர் வரை மணல் அள்ளியுள்ளனர் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தினர்.

மக்கள் தெரிவித்த கருத்துக்கள்

தூத்துக்குடிமாவட்டம், புதுக்கோட்டை, ஆறுமுகம் நகர், காந்திமதி நாதன்:

நான் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச் சூழலைக் காப்பது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறேன். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் உள்ளேன்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கடலோரப் பகுதிகளில் கடற்கரை மணல் சமூக விரோத கும்பல்களால், அரசு அனுமதியின்றி திருடப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்ததையடுத்து அக்கிராமங்களுக்கே நேரில் சென்று பார்த்தேன். நான் பார்த்த மேல்மாந்தை, கீழவைப்பார், பெரியசாமிபுரம், குஞ்செயபுரம், முத்தையாபுரம், வேம்பார் ஆகிய கடற்கரை கிராமங்களில் மணலை அள்ளிக் கடத்தி வருகிறார்கள். ஒரு தனியார் நிறுவனம் அப்பகுதியிலுள்ள சில கைக்கூலிகளைக் கொண்டு இச்செயலை அரங்கேற்றி வருகிறது. அரசு அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

இப்பகுதி கடற்கரை முழுவதும் மன்னார் வளைகுடா தேசிய உயிர்க்கோள காப்பகம் மற்றும் தேசிய கடல் பூங்கா உள்ள பகுதியாகும். வடக்கில் பாம்பன் தீவு முதல் தூத்துக்குடி வரை இங்கு 21 தீவுகள் உள்ளன. இப்பகுதியைப் பாதுகாக்க ஒவ்வோராண்டும் அரசால் நிதி ஒதுக்கப்படுகிறது. 2011-2012-ல் ரூ.50.39 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தூத்துக்குடி வனச்சரகப் பகுதியில் மட்டும் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவைக் கண்காணிக்க 3 வனச் சரகங்கள் உள்ளன. இதில் உள்ள வனச்சரக அலுவலர்கள் மற்றும் சிப்பந்திகள் இப்பகுதியைத் தொடர்ந்து கண்காணிக்க சட்டப்படி கடமைப்பட்டவர்கள். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட இப்பகுதியில்தான் இத்தனை அத்துமீறல்கள் நடந்துள்ளது.

கடல்சார் உயிரினங்களைப் பெருக்கம் செய்யும், சுனாமியின் வேகத்தை தடுத்து மக்களைக் காக்கும் சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேற்கண்ட அனைத்துத் தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளேன். தமிழ்நாடு வனத் துறையின் இராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் அலுவலகத்திலிருந்து கடந்த 05.07.2012 அன்று கடற்கரை பகுதியில் மணல் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் கலெக்டர் ஆய்வு செய்து மணல் எடுக்கப்பட்டுள்ளது என அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நான் பல புகார்களை அரசுக்கு அனுப்பியுள்ளேன். நீண்ட காலமாக எந்த நடவடிக்கை இல்லை. தற்போதுதான் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாறு கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி சாமி- சார்லஸ் – தாமஸ் – அம்புரோஸ் – ரவீந்திரன் – அன்டண்

பல வருடங்களாக எங்கள் ஊருக்கு அருகிலுள்ள கடற்கரையில் மணல் அள்ளி வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் கடலின் போக்கே மாறி விட்டது. கழிவு மணலைக் கடலில் விடுவதால் மீன்பாடு சரியாக இல்லை. கலைஞானபுரத்தைச் சார்ந்த கடல் தொழிலோடு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு வீட்டுக்கு ஒரு டிராக்டர் வாங்கிக் கொடுத்து தங்கள் ஆட்களாக மணல் கம்பெனியினர் பயன்படுத்திக் கொள்கின்றனர். தொண்டு நிறுவனங்கள் நட்ட கன்னா செடி, வனத்துறை நட்ட சவுக்கு மரங்களை நாசப்படுத்தி விட்டார்கள். பெரிய, பெரிய இயந்திரங்கள் மூலம் 10-15 அடி ஆழம் மணல் அள்ளுகின்றனர். கெமிக்கல் கலந்த கம்பெனி கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் மாசுபட்டுள்ளது. இதனால் கடந்த சில வருடங்களில் எங்கள் ஊரில் புற்றுநோய், கல் அடைப்பு, கிட்னி பிரச்சனை பலருக்கும் வந்துள்ளது. இதுவரை இந்நோய்களால் சுமார் 50 பேர் வரை இறந்துள்ளனர். வி.வி. நிறுவனம் வருவதற்கு முன்பு எங்கள் ஊரில் இந்நோய்கள் இருந்ததே கிடையாது. இதற்கு முன்பு எங்கள் ஊரில் முக்கியமானவர்கள் வி.வி.-க்கு ஆதரவு கொடுத்ததால் மக்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தற்போது நாங்கள் ஊர் நிர்வாகத்துக்கு வந்து, கலெக்டரிடம் மீனவர் குறை தீர்ப்பு நாளில் புகார் கொடுத்து, அதன்பின் ஆய்வுக்குழு வந்தது. மீண்டும் பெரிய குழு வந்து சர்வே செய்து வி.வி. நிறுவனம் சட்ட விரோதமாக மணல் அள்ளியிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கலெக்டர், வி.ஏ.ஓ. மூலம் குளத்தூர் காவல் நிலையத்தில் வி.வி. நிறுவனம் மீது புகார் கொடுத்தார். இதுவரை நடவடிக்கை இல்லை. இரவோடு இரவாக அவர் மாற்றப்பட்டார். தற்போது சிலரை அனுப்பி (பெயர் வேண்டாம் அவர்களும் மீனவர் சமூகம்தான்) 3,4 லட்சம் பணம் தருகிறோம் என வி.வி. நிறுவனத்தினர் பேசி வருகிறார்கள். வி.வி.-ஐ எதிர்த்து ஜெயிக்க முடியாது. நாளை வழக்கு, வம்பு வந்தால் மக்கள் வரமாட்டார்கள் என மிரட்டுகிறார்கள். நாங்கள் உறுதியாக உள்ளோம். இன்று தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வருகிறோம். வேம்பாறு முதல் கன்னியாகுமரி வரையுள்ள மீனவர்கள் மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடுவோம். ஆனால் தற்போது எங்கள் ஊரின் அருகிலுள்ள கலைஞானபுரத்தில் வசிக்கும் தேவேந்திர குல சமூகத்தினரை தூண்டி, சாதிக் கலவரம் உருவாக்க மணல் கம்பெனியினர் தயாராக உள்ளார்கள். கலைஞானபுரம் மணல் எடுக்கும் பகுதியில் தூத்துக்குடி வக்கீல் ஒருவர் 50 அடியாட்களுடன் எப்போதும் இருப்பார். வி.வி. நிறுவனத்தின் அனைத்து குற்றங்களும் இதுநாள் வரை அரசு, காவல்துறை அதிகாரிகள் ஆதரவோடுதான் நடந்தது. எங்கள் கடற்கரையில் மணல் அள்ளுவது நிறுத்தப்பட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை – ஆல்ஸ்டன், அமலன், மெஸ்மென், லூர்தையா, சந்தியாகு, ஜீலிஸ் கோட்டார், ஜார்ஜ், சாமி, ஜீதோன்ஸ் ஆகியோர் பைபர் படகில் கடல் வழியே அழைத்துச் சென்று பாதிப்பிற்குள்ளான இடங்களைக் காட்டித் தெரிவித்தவை

பெரியதாழை என்பது தூத்துக்குடி-நெல்லை மாவட்ட எல்லைப்பகுதி. இங்கு Beach Mineral Company பல நூறு ஏக்கரில் செயல்படுகிறது. இதன் உரிமையாளர் வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனின் தம்பி சுகுமாரன். கடந்த 2005 ஆம் ஆண்டில் கடல்நீரை கம்பெனிக்குள் கொண்டு செல்ல வெடி வைத்தார்கள். இதனால் ஊரில் அதிர்ச்சி ஏற்பட்டது. புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. கால்வாயை மூடிக் கொண்டிருந்ததால் DSP, வருவாய்துறையினரை உள்ளே விட மறுத்து விட்டார்கள். மக்கள் ஊர் மணியை அடித்து மொத்தமாக சென்றோம். பிரச்சனை நடந்தது. பின்பு அவர்களே கம்பெனிக்குள் தீ வைத்துவிட்டு எங்கள் மீது பொய் வழக்குப் போட்டார்கள். இதுவரை வழக்கு நடக்கிறது.

கம்பெனி ஆட்கள் முதலில் ஊர்த்தலைவர்களை, ஊரில் முக்கியமானவர்களைப் பிடிப்பார்கள். அவர்கள் மூலம் ஊரில் ஒரு கேங், டீம் உருவாகும். இதனால் சாதாரண மக்கள் கம்பெனியை எதிர்க்க பயப்படுவார்கள். கம்பெனிக்கு ஆதரவானவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆளைப் பொறுத்து ரூ. 5,000 – 10,000 எனக் கொடுப்பார்கள்.

ஊரில் புது நிர்வாகம் வந்தவுடன் கடந்த 8 மாதங்களாக மனுக்கொடுத்தோம். கலெக்டர் ஆய்வுக்கு வந்தார். சம்பந்தம் இல்லாத பகுதிகளில் ஆய்வு செய்தார்கள். பின்பு நாங்கள் சொன்ன பகுதிக்கு வந்து பார்த்து வியந்து, ஏராளமாய் மண் அள்ளி இருப்பதாய் சொன்னார்கள். தற்போது ஒரு மாதமாய் மண் போட்டு மூடி வருகிறார்கள். லாரிகளில் 50 லோடு கத்தாழையைக் கொண்டு வந்து ஆழமாக மணல் எடுத்த பகுதிகளில் நட்டு, இயற்கையாய் இருப்பது போல் காட்டி விதிமீறலை மறைக்க முயற்சிக்கிறார்கள். ககன்தீப் சிங் பேடி குழு ஆய்வுக்கு வரும்போது எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கோசம் போட்டு உள்ளே சென்றோம். 40 – 50 அடிகள் மணல் எடுத்த பகுதியில் கற்றாழை நட்டு வைத்திருக்கிறார்கள். பேடி குழுவிடம் பாதிப்புகளைச் சொல்லியுள்ளோம்.

கடலை ஒட்டிய உள்பகுதியில் கனிமங்கள் உள்ள செம்மண்ணை எடுக்கிறார்கள். அந்தக் கழிவு நீரை கடலில் விடுவதால் கழிவுநீர் சிவப்பாக மாறி கடல் மாசுபடுகிறது. இதனால் இறால் மீன்கள் அழிகிறது, வேறு சில மீன்கள் ஆழ்கடலுக்குள் சென்று விடுகிறது. கடலோரங்களில் கிடைக்கும் சிங்க இறாலை உயிருடன் வெளிநாட்டுக்கு அனுப்புவோம். கிலோ ரூ.1,500 என விலை போகும். இது எங்களுக்கு முக்கிய வாழ்வாதாரம். இப்போது சிங்க இறால் இனமே அழிந்து விட்டது. கடற்கரையில் எங்கள் சுதந்திரம் பறிபோய் விட்டது.

சாத்தான்குளம் இடைத்தோ்தல் சமயம் 6 கோடி செலவில் பெரியதாழை மீனவர்களுக்காக கடலில் 800 மீட்டர் நீளத்திற்கு தூண்டில் வளைவு பாலம் அரசாங்கம் அமைத்துத் தந்தது. கம்பெனி மணல் கலந்த கழிவு நீரை விட்டதால் தூண்டில் வளைவுப் பாலம் கழிவு மண்ணால் மூடப்பட்டு விட்டது. தூண்டில் வளைவு என்பது பெரிய அலைகள், காற்று, புயல், மழையிலிருந்து மீனவர்களுக்கு பாதுகாப்பு தரும் பகுதி. இன்று அது மூடப்பட்டதால் எங்களுக்கு பல விபத்துக்கள் ஏற்பட்டு கை, கால், இடுப்பு, தண்டுவடம் முறிந்துள்ளது. 5 ஆண்டுகளில் 100 பேருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. கூலிக்கு வேலை செய்யும் மீனவனுக்கு இடுப்பு முறிந்தால் அவன் குடும்பம் தெருவில் தான் நிற்கும். கழிவுமண் கடற்கரை ஓரங்களில் குவிவதால், கடற்கரை மேடாகி விட்டது. இதனால் கடலுக்கு சென்று விட்டு வரும் பைபரை கரையில் ஏற்ற முடியாது.

கடலில் கால்வாய் வெட்டி நேரடியாக தண்ணீர் திருடி மணலை சுத்திகரிக்கப் பயன்படுத்துகிறார்கள். ரசாயன மணலை விட்டு தூண்டில் பாலம் பகுதி ப்ரவுன் கலர் கழிவாக மாறி விட்டது. முன்பு கடல் இருந்த பகுதி மணல் கம்பெனி கழிவு மண் கொட்டப்பட்டதால் பாலைவனமாகி விட்டது. கடலையே மணலைக் கொட்டி ஆக்கிரமித்து விட்டார்கள். தற்போது மண்ணைப் போட்டு மூடியும் வருகிறார்கள்.

கம்பெனி அருகில் இருந்த 100 வீடுகள் காலி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும ஊரின் அருகே வந்து விட்டார்கள். முன்பு பனைமரம் உயரத்திற்கு இயற்கையாகவே மேடாக இருந்த மணல் குன்று பகுதிகள் இன்று தரைமட்டம் ஆகிவிட்டது. ஆழத்தில் பாறை வரை தோண்டி விட்டார்கள். 10 வருடங்களுக்கு முன்பு நன்றாக இருந்த குடிநீர், இன்று குடிக்க லாயக்கற்று போய் விட்டது. கெமிக்கல் தண்ணீரால் பல நோய்கள் வருகின்றன. தவறுதலாக ஒரு மடக்கு கடல் தண்ணீரை விழுங்கினால் உடம்பு காந்தல் எடுத்து, ஈரல் கருகியது போல தோன்றுகிறது. கேன்சர், கிட்னி பாதிப்பு அதிகம் உள்ளது.

விதிகளை மீறி அசுர, பகாசுர கருவிகளைக் கொண்டு மணல் அள்ளுகிறார்கள். 100 டன் Capacity உள்ள 10 வால்வோ வண்டிகள் BMC-ல் உள்ளது. ஒரு நாளைக்கு 2 நடை எடுப்பார்கள். டாரஸ் வண்டிகள் 60, 70 உள்ளது. எல்லாம் அரசுக்கு தெரிந்தே நடக்கிறது. நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அரசு காவல்துறையை வைத்து எங்களை அடித்து, பொய்வழக்கு போடா விட்டால் ஒரே நாளில் மணல் நிறுவனத்தை எங்கள் மக்கள் மூடிவிடுவார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், உவரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி

25 – 30 ஆண்டுகளுக்கு முன்பு மணல் எடுப்பது முதலில் துவங்கியது எங்கள் ஊரில் தான். வி.வி. நிறுவனம் மணல் எடுப்பதால் எங்கள் ஊரில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல்வளம் கெட்டு, மணல் திட்டுக்கள் அரிக்கப்பட்டுள்ளது. கடல்நீர் உள்ளே வருகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மணல் கம்பெனி தூசியால் மக்களின் உடல்நிலை, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கடல் சிவப்பாக மாறி விட்டது. கூடங்குளம் போராட்டக்குழு இப்பகுதி கடல்நீரை சோதனை செய்ததில் ட்ரேசஸ் ஆப் சயனைடு உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். அந்தோணியார் கோவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் பூச்சிகள் இனமே அழிந்து விட்டது. அரசு அதிகாரிகளே இதற்குக் காரணம். கவனிக்க வேண்டிய வருவாய், காவல்துறை அதிகாரிகள் வி.வி.க்கு காவலாக உள்ளனர். ஆட்சியாளர்களும் அவ்வாறே உள்ளனர். கடந்த ஆட்சியில் முதலமைச்சர், வி.வி.க்கு எதிராக வலுவாகப் பேசினார். பின்பு நடவடிக்கை எதுவும் இல்லை. 7 கோடி ரூபாய் கொடுத்து முடித்து விட்டதாக மக்கள் பேசினார்கள். கழிவு மண்ணை கடலில் கொட்டுவதால் கிட்னி பெயிலியர், கேன்சர், சரும நோய் வருகிறது.

இங்கு மணலில் உள்ள மினரல்கள் கதிர்வீச்சு தன்மை உடையவை. முன்பு சமநிலை இருந்தது. மணல் எடுத்து, மாற்றப்பட்டதால் மொத்தமாக கழிவுமணல் சேருவதால் கதிர்வீச்சு அதிகம் உள்ளது. இதனால் சிறு உயிரினங்கள் அழிகிறது. ஆடு, மாடு உள்ள பகுதியில், மணற்பாங்கான பகுதியில் இருந்த புழுவுன்னி இந்தப் பகுதியில் அழிந்து விட்டது.

ஊருக்குள் பல இடங்களில் கதிர்வீச்சு மண்ணைக் கொட்டுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. முன்பு வேளாங்கண்ணி மாதாவுக்கு கால்நடையாக நடந்து செல்பவர்கள் ஊரின் முன்பாக இருந்த செழிப்பான பெரிய அரசமரத்தடியில் படுத்து எழுந்து செல்வார்கள். படுக்க வசதியாக கழிவு மண்ணை மரத்தை சுற்றிக் கொட்டியதில், கொட்டிய 1 1/2 – 2 மாதத்தில் மரம் பட்டுப்போய் விட்டது.

1974 – 75 களில் கனிமவளத் துறையில் வேலை பார்த்த செல்வராஜ் என்ற அதிகாரியும், தூத்துக்குடி மணல் மாணிக்கமும் இணைந்து முதலில் கார்னெட் மணல் கம்பெனி தொடங்கினார்கள். பின்பு செல்வராஜை மிரட்டி, விரட்டி விட்டார்கள். அதன்பின் செல்வராஜை, வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன் சந்தித்து, அழைத்து வந்து இத்தொழிலில் இறங்கினார். செல்வராஜ் முதன்முதலில் ரூ.150/- செலவில் வைகுண்டராஜனுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார்.

இவ்வாறு தொழில் தொடங்கிய வைகுண்டராஜன் இன்று அம்பானிக்கு இணையான பணக்காரராக வளர்ந்துள்ளார். ஆரம்பத்தில் 20 வருடங்களுக்கு முன்பு மணல் கம்பெனிகளுக்கு எதிராக அரசிடம் பல்வேறு மனுக்கள் கொடுத்து பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அப்போதைய திருநெல்வேலி எஸ்.பி. ஜாங்கிட் பெரும் அடக்குமுறையை மணல் கம்பெனிக்கு ஆதரவாக ஏவி, மக்களை ஒடுக்கி விட்டார். இன்று கூடங்குளம் போராட்டக்குழுவில் உதயகுமாருடன் இருக்கும் புஷ்பராயன் அப்போது பாதிரியாராக இருந்தார். மக்களோடு சேர்ந்து அவரும் போராடியதால் அவரது கை முறிக்கப்பட்டது. சர்ச் இந்த அநியாயத்தைக் கேட்காததால், அவர் குடும்ப வாழ்க்கைக்குச் திரும்பச் சென்று விட்டார்.

இது CRZ (Coastal Regulation Zone) பகுதி. கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு கட்டிடங்கள் கட்டவோ, தொழில் நடத்தவோ கூடாது என 20 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் இருந்தது. அதை மணல் கம்பெனி மீறியிருக்கிறது. ஏற்கெனவே உள்ள வீடுகள் தவிர்த்து, இதர நடவடிக்கைகளுக்கு அரசு தடைவிதித்திருக்க வேண்டும். அரசு அதைச் செய்யவில்லை. அரசின் சட்டத்தை மக்கள் மதிக்கவில்லை என்றால் மக்கள் குற்றவாளி. அரசே தனது சட்டத்தை மதிக்காவிட்டால் யார் குற்றவாளி? இன்று நாட்டு நடப்பே அவ்வாறுதான் உள்ளது. 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓ-க்கு 6 மாத தண்டனை தருகிறார்கள். பல கோடி ஊழலுக்கு தண்டனை இல்லை. இது நீதிபதிகளுக்கும் தெரியும்.

மணல் கம்பெனி பிரச்சினையால் உள்ளுரில் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. கூத்தன்குழியில் 40 – 50 பேர் மணல் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்கள். ஊருக்கு மொத்த பாதிப்பு என்பதால் வேலைக்கு செல்லக் கூடாதென சமுதாயக் கட்டுப்பாடு போட்டார்கள். இதை ஒரு தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு வி.வி. நிறுவனம் பணம் கொடுத்து ஊருக்குள் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை வீசிய பிறகு, மணல் கம்பெனியை எதிர்ப்பவர்களை ஊரை விட்டு விரட்டி விட்டார்கள். தற்போது அவர்கள் இடிந்தகரையில் தஞ்சமடைந்துள்ளனர். ஊர் இப்போது வி.வி. கையில் சென்று விட்டது. நாளை உவரியிலும் அதுதான் நடக்கும். வெடிகுண்டு கலாச்சாரத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

தற்போது தூத்துக்குடிக்கு ககன்தீப் சிங் பேடி குழுவிடம் நாங்கள் மனு கொடுக்கச் சென்றபோது எங்கள் பகுதியிலிருந்து தலைக்கு ரூ.1,000/-மும், பிரியாணியும் கொடுத்து மணல் கம்பெனியும் ஆட்களை அழைத்து வந்தார்கள். கம்பெனிக்கு ஆதரவாக நெல்லை திருமண்டல CSI பிஷப் வந்திருந்தார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் வைகுண்டராஜன், தூத்துக்குடியின் பெரும் பணமுதலை ராஜா ஏஜென்சீஸ் S.T.K ராஜனை ஜெயிக்க வைத்தார். அந்நன்றிக்கு அவரும் வந்திருந்தார். இது மிகப்பெரிய அநியாயம். நசுக்கப்பட்ட மக்களுக்காக ஜீசஸ் தன்னையே சிலுவையில் அறைந்தார். ஆதிக்கத்தை எதிர்க்காவிட்டால் அவர் வாழ்ந்திருக்கலாம். அவரின் கொள்கையை எடுத்துச் சொல்பவர்கள் இப்படி உள்ளார்கள். போராட்டத்திற்கு வரவும் மறுக்கிறார்கள். இதில் மதம் எங்கு இருக்கிறது? வி.வி. இந்து, பாதிக்கப்பட்டவர்கள் கிருத்துவர்கள். பிஷப் வி.வி. க்கு ஆதரவாக வருகிறார். பெரும் கொடுமை இது.

அரசுக்கு தெரிந்தே அனைத்தும் நடக்கிறது. அரசாங்கத்திற்குச் சொந்தமான பொருளை கம்பெனி எடுத்து ரூ.1,000/- க்கு விற்று அரசுக்கு தருவது 10 பைசா. தற்போது கூட பசுமைத் தீர்ப்பாய தடையாலே தான் மணல் அள்ளுவது நின்றுள்ளது. அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை. முதலாளிகள் லாபத்திற்காக உள்ளனர். அரசு அப்படி இருக்கக் கூடாது.

திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராம கமிட்டிகளின் கூட்டமைப்புத் தலைவர் ஜோசப் – உவரி

சின்ன வயதில் செருப்பில்லாமல் ஊரில் நடப்போம். இன்று நடந்தால் கால் பொத்து விடும். இயற்கையான மணலை சூடு படுத்தினால் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் போகாது. எவ்வளவு சூடு படுத்தினாலும் அதே வெப்பநிலையில் இருக்கும். இதனால்தான் வேர்க்கடலையை மணலில் போட்டு கருகாமல் வறுப்பார்கள். இன்று மணலின் இயற்கைத் தன்மை மாற்றப்பட்டதால், கதிரியக்கத் தன்மை உருவாகி மணலின் வெப்பம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் கடற்கரையில் சுதந்திரமாக வாக்கிங் போவோம். உவரியிலிருந்து கன்னியாகுமரி வரை திருவிழாவிற்கு கடற்கரையில் நடந்தே செல்வோம். இன்று சுதந்திரம் பறிபோய் விட்டது. கடற்கரையே மணல் கம்பெனிக்குச் சொந்தமாகி விட்டது.

இரவு நேரத்தில்தான் கடற்கரையில் மணல் எடுப்பார்கள், இதனால் கரை அழிகிறது. கடல் ஊருக்குள் வருகிறது. ஏற்கெனவே சுனாமி கடலில் இருந்து வந்தது. இப்போது ஊரைச் சுற்றி மண் எடுத்ததால் ஊருக்குள்ளிருந்து வரும். பூகோள அமைப்பே மாறி விட்டது. அனைத்து வீடுகளிலும் செம்மண் தூசுப் படலம் உள்ளது. இதை சுவாசிக்கும் போது உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. மணலை பிரித்தெடுக்க பயன்படுத்தும் கெமிக்கலை கடலில் விடுகிறார்கள். இதற்கு அரசு அனுமதியில்லை. இதனால் கடலில் இறங்கி நின்றால் துணிகள் நாசமாகிறது, நோய் வருகிறது.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரைச் சாலைகளில் 22 டயர் கொண்ட அதிக எடை கொண்ட வாகனங்கள் போகும்போது, சாலைகள் கடுமையாக சேதமடைகின்றன. அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. கூடங்குளம் பஞ்சாயத்து தலைவரின் தம்பி இப்படி நடந்த விபத்தினால் இறந்துள்ளார்.

சுற்றுச்சூழல் மாசுபட்டு, கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. முன்பு கொசுவே இல்லாத ஊரில் இப்போது கொசுக்கள் வந்து விட்டது. இதனால் வைரஸ் காய்ச்சல், மலேரியா, டைபாய்டு, டெங்கு எளிதில் வருகிறது. நிலத்தடி நீர் கெட்டுப் போயுள்ளது. மணல் கம்பெனிகளின் அட்டூழியத்தை தட்டிக் கேட்க முடியாமல் ஏழை மக்கள் மனம் புழுங்கியுள்ளனர். அனைத்து கடலோர கிராமங்களும் இரண்டு பட்டுள்ளது. வலிமையானவர்கள் வி.வி.க்கு ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கிறார்கள். வேலைக்குச் செல்லாமலேயே சம்பளம் கொடுக்கிறார்கள்.

வி.வி. ஆதரவு நபர்கள் எதிலும் தாங்கள் தான் என ஊரில் உள்ளார்கள். அவர்களைக் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது. நியாயம், நீதி உள்ளவர்களை ஊரில் செயல்பட முடியாமல் முடக்குகிறார்கள். கடுமையான ஆதிக்கம் செய்கின்றனர். இதனால் ஊரில் பதட்டமான சூழல் உள்ளது. மக்கள் கொதித்தெழுந்து பெரிய கலவரம் உண்டாகி, இரு தரப்பும் மோதி எப்போது உயிர்ப்பலி ஏற்படுமோ தெரியாது. கூத்தன்குழியில் அது நடந்து விட்டது. இது அரசு, ஊடகங்களுக்கும் தெரியும். கூடுதலாக மீனவர் – நாடார் பிரச்சினையும் ஏற்படும் நிலை உள்ளது. ஒருவர் பகுதிக்கு மற்றொருவர் சுதந்திரமாக, பயமின்றி செல்ல முடியாத நிலை உள்ளது. கடற்கரை கிராமங்களையே சுடுகாடாக்கி விட்டார்கள். நடைப் பிணங்களாய் வாழ்கிறோம். இருந்தாலும் பயமின்றி பேசுகிறோம். வேறு வழியில்லை. நீதி – நியாயத்தைப் பேசாமல் இருக்க முடியாது. என்னைப் பலரும் மணல் பிரச்சினையை பேச வேண்டாம் என எச்சரிக்கிறார்கள்.

அதிகாரமும், பலமும் உள்ள அரசு மணல் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். சட்டம், அரசு யாருக்கானது? மக்களுக்கா? இல்லை நிலச்சுவான்தார்கள், கோடீஸ்வரர்கள், பணக்காரர்கள், வெளிநாட்டு கம்பெனிகளுக்கா?

பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கருத்து தெரிவித்த சில இளைஞர்கள் (உவரி)

உவரி புனித அந்தோணியார் கோவில் அருகே வசிக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.டி. ரைமண்ட் தான் உவரியில் வி.வி. நிறுவனத்தின் வைகுண்டராஜனுக்கு எல்லாமுமாக இருப்பவர். முன்பு சாதாரண நிலையில் இருந்தவர், இன்று பெரிய கோடீசுவரராகி விட்டார். அண்ணன், தம்பி, உறவினர்கள் அதிகம் இருந்ததால் ஆட்கள் பலத்தால் யாரையும் அடித்து ஒடுக்கி, வி.வி.க்கு நெருக்கமாகி விட்டார். உள்ளுரில் யாராவது மணல் கம்பெனியை எதிர்த்தால், அவர்களிடம் S.T.R-ன் ஆட்கள் தகராறு செய்வார்கள். உங்களிடம் பேசுவதை யாராவது சொல்லி விட்டால் கூட, எங்களை அழைத்துக் கேட்பார்கள். எதிர்த்துப் பேச முடியாது. உவரியில் இவர்தான் இன்று ஆதிக்கம் செய்கிறார். அதனால் உள்ளுர் மக்கள் பயந்து போய் உள்ளோம்.

டாக்டர். ஆர்.எஸ். லால் மோகன், நாகர்கோவில் – RTD. SCIENTIST (Indian Council of Agricultural Research)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிகம் உள்ளதை 1905-ம் ஆண்டு கண்டுபிடித்த ஜெர்மானியர்கள் சில தொழிற்சாலைகளை இங்கு தொடங்கினர். பின்பு பிரிட்டிஷ் அரசும், இந்திய அரசும் அதை ஏற்று நடத்தி வந்தன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கார்னெட், இல்மனைட், சிர்கான், ரூட்டைல், மோனோசைட், தோரியம், சிறிதளவு யுரேனியம் ஆகிய கனிமங்கள் உள்ளன. 1 லட்சம் டன் கார்னெட்டில் 4000 டன் மோனோசைட் இருக்கும். இதில் 4 சதவீதம் தோரியம் இருக்கும். இவை மிக அதிக கதிர்வீச்சுத் தன்மை உடையவை. அணு உலை எரிபொருளாகவும் இவை பயன்படுகின்றன. பி.ஜே.பி அரசு, சில கனிமங்களை DeList பண்ணிய பிறகு மணல் கொள்ளை தீவிரமானது. Costal Regulation Zone – என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. இதன்படி கடற்கரையையொட்டி 500 மீ தூரத்திற்கு எந்தத் தொழிலும் நடத்தக் கூடாது. ஆனால் வேண்டுமென்றே, வெளியில் கிடைக்காததை எடுக்கலாம் என அனுமதித்தார்கள். இப்போது கடலின் உள்ளேயே பட்டா போட்டு கொடுத்தது போல் மணல் அள்ளுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்மிடாலம், லீபுரம், ஆரோக்கியபுரம் பகுதிகளில் அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால் அனுமதித்ததை விட மிக அதிகம் எடுத்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக அரசுக்கு ஏற்கெனவே எவ்வளவு கனிமம் இருந்தது, எவ்வளவு எடுத்துள்ளார்கள் எனத் தெரியாது. சர்வே செய்து இவற்றுக்கு அனுமதி கொடுப்பதில்லை.

மணல் கம்பெனிகள் பொருளாதார ரீதியில் மக்களை காசு கொடுத்துப் பிரித்து விடுவார்கள். நாடார் – முக்குவ மீனவர் பிரிவை எற்படுத்தி மிடாலம் பகுதியில் அமைதியே போய் விட்டது. பணம் அரசியல்வாதிகளுக்கு போகிறது. அவர்கள் அதிகாரிகளை நிர்ப்பந்திக்கிறார்கள். நோ்மையான அதிகாரிகளை வேலை செய்ய விட மாட்டார்கள். மீறினால் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்.

கடலை சிவப்பாக மாற்றி விட்டார்கள். மீன்வளம், தென்னை வளம் அழிந்து விட்டது.

1000 டன் கார்னெட்டில் 4% மோனோசைட் உள்ளது. இதில் 4% தோரியம் உள்ளது. மோனோசைட்டை தனி மனிதன் வைத்திருக்கக் கூடாது. அது சட்டவிரோதம், சமூகவிரோத செயல். ஆனால் மோனோசைட்டில், தோரியம் இருப்பதால் இதற்கு சர்வதேச சந்தை உள்ளது. அந்த மோனோசைட் எங்கே போனது? இவர்கள் கன்டெய்னர் மூலம் வெளியில் அனுப்பியிருக்கலாம். இந்த தேசவிரோத செயலை விசாரிக்க வேண்டும். ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும். இது தேசிய சொத்து.

மணல் அள்ளுவதில் ஏற்படும் கதிரியக்க பாதிப்பு ஒரு மனித உரிமை விவகாரம். குறிப்பாக வி.வி. நிறுவன தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. கதிரியக்கம் பாதிக்காத உடைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். கதிரியக்கத்தின் அளவை கண்காணிக்க வேண்டும். இப்பகுதியில் ஆல்பா, பீட்டா, காமா ரேடியேசன் உள்ளது. பீட்டா ரேடியேசன் தோலை ஊடுருவும். கழலைக் கட்டி வரும். கண்ணில் பட்டால் நீண்ட காலத்திற்குப் பின் ரெட்டினா பாதிக்கும். இதய நோய்கள், வால்வில் பிரச்சனைகள் வரும். காமா கதிரும் உடலை ஊடுருவும், கேன்சர் வரும். காமா கதிர்வீச்சும் அதிகமாய் உள்ளது. நாங்கள் கடந்த 2006-ம் ஆண்டு K.A.R.D தொண்டு நிறுவனம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி, தோவாளை, நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் ஆய்வு செய்தபோது, மனவளர்ச்சி குன்றியவர்கள் அதிகமாக காணப்பட்டனர். மணவாளக்குறிச்சியில் 31 பேரும், தோவாளையில் 12 பேரும், கூத்தன்குழியில் 42 பேரும் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளாக கண்டறியப்பட்டனர். இவர்கள் நீண்ட காலம் வாழ முடியாது. கதிரியக்கம் ஜீன்களைத் தாக்கி, அடுத்த தலைமுறைக்கு கேன்சரைக் கடத்தும். கதிர்வீச்சில் மீன்கள், நண்டுகள் அழியும். இது தொடர்பாக பல ஆய்வுகள் நடந்து, முடிவுகள் வெளிவரவில்லை. பயத்தால் மறைக்கப்படுகிறது. Project கொடுக்கும்போதே வெளியிடக் கூடாது என்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், பஞ்சல் கிராமத்தைச் சேர்ந்த இக்னேசியஸ்

எங்கள் ஊர் மிகச்சிறிய ஊர், 10 – 15 வீடுகள்தான் இருக்கும். இங்கு 16 வருடங்களாக வி.வி. கம்பெனியினர் மணல் எடுக்கிறார்கள். 2 கி.மீ நீளத்திற்கு மணல் எடுக்கிறார்கள். கழிவு மண்ணால் கடல் மேடாகி விட்டது. இதனால் பைபர் படகை கரையில் ஏற்ற முடியாது. தற்போது ரோலர் வைத்து ஏற்றுகிறோம்.

16 வருடங்களுக்கு முன்பு எங்கள் பக்கத்து ஊரான பெருமணலில் போராட்டம் செய்தோம். போலீசு, சி.ஐ.டி போலீசு வி.வி. க்கு சாதகமாக செயல்பட்டார்கள். பெருமணலில் கம்பெனி சார்பில் ஒருவரை விலைக்கு வாங்கி பொய்ப்புகார் கொடுத்து, போராடுபவரை கைது செய்தார்கள். மக்கள் பஸ்களை சிறை பிடித்தார்கள். ஜாங்கிட் எஸ்.பி, கலெக்டர் எல்லாம் கலந்து பேசி கம்பெனிக்கு ஆதரவாக நின்று, ஃபாதர், சிஸ்டர்கள், மக்களை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். கை, கால்களை உடைத்தார்கள். பொய் கேசு போட்டார்கள். 4, 5 ஆண்டுகள் வழக்கு நடந்தது. வி.வி.க்கு எதிராக பேசினால் எப்போது, என்ன நடக்கும் என்ற பயம் எல்லோருக்கும் உண்டு. பெரிய ஊரான பெருமணலில் கூட வி.வி.க்கு எதிராகப் பேச மாட்டார்கள். வி.விக்கு எதிராகப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

கலெக்டர் அலுவலகத்தில் வி.விக்கு எதிராக ஒரு மனுக் கொடுத்தால் அடுத்த நிமிடம் வி.வி.க்கு தெரிந்து விடும். உடனே கம்பெனி மனுக் கொடுத்தவர்களை பணம் கொடுத்து சரி செய்யும், இல்லாவிட்டால் மிரட்டும். அதற்கும் சரியாகா விட்டால் அதே ஊரில் வேறு சிலரை வைத்து எதிர்மனுக்கள் கொடுப்பார்கள்.

பஞ்சலில் மணல் எடுக்கும் போது, கூடுதலாக எடுத்ததால் புகார் செய்து, அரசு அதிகாரிகள் வந்து பார்த்தார்கள். அவர்கள் முன்பே கூத்தன்குழி அடியாட்களை வைத்து மக்களை அடித்தார்கள். அதிகாரிகள் அதை வெளியில் சொல்லவில்லை. காவல்துறை, வருவாய்த்துறை, கலெக்டர், தாசில்தார் எல்லாம் கம்பெனிக்கு ஆதரவாகவே உள்ளனர். பணத்திற்கோ, பயந்தோ இவ்வாறு உள்ளனர். நாங்களும் பயந்தே உள்ளோம். பாதிக்கப்பட்டதால் சொல்கிறோம்.

எங்கள் ஊரில் மண்ணெடுத்ததால் கடல் அரிப்பு உள்ளது. தண்ணீர் கலர் மாறி விட்டது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் அலையடிக்கும் பகுதிக்கும், கரைக்கும் இடையே சிங்க இறால் வலை போடுவோம், கம்பெனி கழிவு நீரால் இறால் கிடைப்பதில்லை. பாசி சீசனில் முன்பு 25 லோடு அனுப்புவோம். இன்று 4 லோடுதான் அனுப்புகிறோம்.

கூத்தன்குழியில் பாதிப்பேர் வி.வி.யில் வேலை செய்கிறார்கள். அவர்களில் பலர் வேலை செய்யாமலே ரூ. 5,000 – 10,000 சம்பளம் வாங்குகிறார்கள். கம்பெனிக்கு ஆதரவாக இவர்கள் கலெக்டரிடம் மனுக் கொடுப்பார்கள். எதிர்ப்பவர்களை அடிப்பார்கள். கடற்கரை சமூகத்தையே பிளந்து வைத்துள்ளார்கள். எல்லா ஊர்களையும் பிரித்து வைத்துள்ளார்கள். ஒற்றுமை வரக் கூடாது என வேலை செய்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமை. இதற்கு போலீஸ் ஸ்டேசன் போனால் கம்பெனி சொல்வதைக் கேள் என்பார்கள்.

தற்போது எங்கள் ஊரை ஒட்டி மணல் எடுக்கிறார்கள். இதுநாள் வரை கடற்கரையை ஒட்டியுள்ள நிலங்களில் மணல் எடுத்தவர்கள், இப்போது கடற்கரையையே எடுக்கிறார்கள். அரசிடம் அனுமதி பெற்ற ஆவணங்கள் கேட்டால் தர மறுக்கிறார்கள். கம்பெனியில் சொல்கிறோம், ஆவணமெல்லாம் தர முடியாது. கம்பெனியில் எடுக்கச் சொன்னால் எடுப்போம் என்கிறார்கள் வேலை செய்பவர்கள். நாங்களெல்லாம் ஆவணம் கொடுக்குமளவு ஆட்கள் இல்லை, கம்பெனிக்கு தூசு போல நாங்கள். வி.வி.யை எதிர்த்தால் மறுநாளே சம்மந்தப்பட்டவர் பிரச்சனையை சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்டதால் எங்களுக்கு வேறு வழியில்லை. இனியும் மணல் எடுத்தால் ஊரில் நாங்கள் இருக்க முடியாது. சாவு என்றைக்கும் உண்டு. நாளைக்கும் சாகலாம், 10 நாட்கள் கழித்தும் சாகலாம். வானத்துக்குக் கீழே வீட்டைக் கட்டி, வானம் இடிந்து விழும் என்று பயந்தால் வாழ முடியாது.

கன்னியாகுமரி மாவட்டம், கல்லவிளை கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் பாஸ்கர்:

இளம் வயதில் நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடிய கடல் பகுதி இது. இப்பகுதியில் நிறைய மீன் பிடிப்பார்கள். 2002-ல் வி.வி. நிறுவனம் இப்பகுதியில் நிலங்கள் வாங்கி, எங்களை கடற்கரைக்கு வர விடாமல் தடுத்து விட்டனர். நாம் நிற்கும் கடற்கரையில் மணல் அள்ளியுள்ளனர். பட்டா இடத்தை வாங்கி, அருகேயுள்ள கடற்கரையிலும் மணலை சட்டவிரோதமாக அள்ளினர். அரசியல் கட்சிகளுக்கு கவனிப்பு, அதிக சம்பளம் கொடுப்பதென ஊரில் ஆதரவைப் பெற்றனர். மணல் எடுத்ததால் கடல்அ ரிப்பு உள்ளது. இதனால் கடல் உள்ளே வருகிறது. இனி சுனாமி வந்தால் அதிக பாதிப்பு இருக்கும். 2,3 ஆண்டுகள் லாரி, டிப்பர்கள் மூலம் தினமும் பல நூறு டன் மணல் எடுத்ததால் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. முன்பு சிப்பி, பாசி எடுத்து பலர் பிழைத்து வந்தனர். மணல் எடுத்ததால் அத்தொழில் அழிந்து விட்டது. நிறைய போராட்டங்கள் நடத்தி 2006 -லிருந்து மணல் எடுப்பதை தடுத்து விட்டோம்.

திரு. சுந்தரம், இ.ஆ.ப. (ஓய்வு) முன்னாள் அரசு செயலாளர் – தமிழக பொதுப்பணித் துறை, முன்னாள் ஆட்சித் தலைவர் – ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் அவர்களைச் சந்தித்தது

மூன்று வருடங்களுக்கு முன்பு வைகுண்டராஜனின் நிறுவனங்கள் சட்டவிரோதமாக கனிம வளங்கள் உடைய கடற்கரை மண்ணை வெட்டியெடுத்து வியாபாரம் செய்வதாக எனக்குத் தகவல் கிடைத்தது. போதுமான விபரங்களையும், ஆவணங்களையும் திரட்டினேன். பின் எனது நண்பரும், மண்வள நிபுணருமான டாக்டர். விக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் ஒரு குழுவினை அனுப்பி தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் முழுக்க ஆய்வு செய்தோம். அதன் பின்னர் நானே நேரடியாக சென்று பார்த்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய கனிமங்கள் கொண்ட கடற்கரை மணல் கொள்ளையடிக்கப்பட்டள்ளதை ஊர்ஜிதம் செய்து கொண்டேன். கூடுதல் விபரங்கள் திரட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆவணங்களைப் பெற்றேன். மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்று வந்த கடற்கரை மணற்கொள்ளை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் 1500-க்கும் மேற்பட்ட புகார்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் அளித்துள்ளேன். ஒருவர் கூட பதிலளிக்கவுமில்லை, நடவடிக்கையும் இல்லை .கடந்த 07.01.2013 அன்று கூட தமிழக அரசின் தலைமைச் செயலர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், தொழிற்துறை செயலர் திரு. பழனியப்பனுக்கும் புகார்கள் அளித்துள்ளேன். பதில் இல்லை. தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி வரையிலான மொத்தக் கடற்கரையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து வைகுண்டராஜன் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகின்றார்.

DEPARTMENT OF ATOMIC ENERGY, MINISTRY OF MINES AND MINERALS அதிகாரிகள், CONTROLLER OF MINES, INDIAN BEREAU OF MINES அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளும், மாநில அரசில் – மாவட்ட ஆட்சித்தலைவர், தாசில்தார், மீன்வளத் துறை, தொழிற்துறை, கனிம மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், தலைமைச் செயலக அதிகாரிகள், ஏன் முதலமைச்சர் வரை வைகுண்டராஜனுக்கு துணையாக உள்ளனர். ஒரு சிலரைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் பணத்தால் குளிப்பாட்டப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகில் கடற்கரையில் தனியாக சாலை, செக்போஸ்ட் எல்லாம் அமைத்து தனி அரசாங்கமே அதனால் தான் அவரால் நடத்த முடிகின்றது. ஆந்திராவில் இராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலத்திலேயே பல கோடி ரூபாய் கைமாறியதன் பலனாக கும்மிடிப்பூண்டி முதல் சிறீகாகுளம் வரை உள்ள கடற்கரை பகுதியில் மணல் எடுக்க வைகுண்டராஜனுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

2011 மே மாதம் அ.தி.மு.க அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் 43 லைசென்ஸ்கள் கடற்கரை மணல் எடுக்க வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் 36 வைகுண்டராஜனின் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள 7 லைசென்ஸ் பெற்றவர்களை பொய் புகார்கள் அளித்து தன் அதிகார பலத்தில் செயல்பட விடாமல் தடுத்து விட்டார். அ.தி.மு.க. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அளிக்கப்பட்ட 8,9 லைசென்ஸ்கள் முழுவதும் வைகுண்டராஜனுக்கே வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடற்கரை மணல் எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய்த் துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்துள்ளது கண்துடைப்பு நடவடிக்கையே ஆகும். ஏனெனில் தூத்துக்குடி மாவட்டத்தில் 20% அளவிலேயே இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் 65%, கன்னியாகுமரி மாவட்டத்தில் 20% என்ற அளவில் மணல் எடுக்கும் பணி நடந்து வருகின்றது. முழுமையாக அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்தால் தான் உண்மையான வருவாய் இழப்பினைக் கணக்கிட முடியும். கடந்த 1999-ம் ஆண்டிலிருந்து வைகுண்டராஜன் நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 96,120 கோடி ரூபாய்கள். இம்மதிப்பீடு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தணிக்கை, நிலவியல் உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களால் கணக்கிடப்பட்டது.

அரசு புறம்போக்கு நிலங்கள் மிகவும் சொற்பமான தொகைக்கு 30 ஆண்டுகால லீசுக்கு விடப்பட்டுள்ளன. 1996–ல் நெல்லை மாவட்டம் இராதாபுரம் தாசில்தார், இருக்கன்துறை கிராமத்தில் 34.35 ஹெக்டோ் கடற்கரை புறம்போக்கு நிலத்தினை ஆண்டுக்கு ரூ.16.74 என நிர்ணயித்து வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இது போன்று எண்ணற்ற இடங்களில் நடந்துள்ளதாக அறிகிறேன்.

விவசாயம் பொய்த்த வறட்சியான இராதாபுரம் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மணல் எடுத்துக் கொள்கிறேன் என சொற்பமான தொகையினை விவசாயிகளிடம் கொடுத்து விட்டு, பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டுள்ளது. 63,000 டன் மணல் எடுத்து கொள்வதாக அனுமதி பெறப்படும். ஆனால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான டன் அளவில் மணல் கொண்டு செல்வதற்கான டிரான்ஸ்போர்ட்டிங் அனுமதி வேறு துறையிடம் பெற்று, சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படும் மணல் ஏற்றுமதிக்கு எடுத்துச் செல்லப்படும். கடந்த 2007-ம் ஆண்டுதான் இல்மனைட், ரூட்டைல், சிர்கான் போன்ற அரிய கனிமங்களுக்கு அணுசக்தி சட்டம், 1962-லிருந்து விலக்களிக்கப்பட்டது. ஆனால் இக்கனிமங்களை 1998-லிருந்து ஏற்றுமதி செய்வதாக வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இது சட்டவிரோதம் என்பதுடன், இதற்கான வரியையும் அரசுக்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை. தூத்துக்குடி துறைமுகம் வழியே கண்டெய்னர்களில் ஏற்றுமதி செய்யப்படும் கனிமங்களில் மோனோசைட் போன்ற அணுசக்திக் கனிமங்களும் கடத்தப்படுகின்றன. இக்கடத்தலைக் கண்டறியும் வழிமுறைகள் இல்லை. கனிமச் சட்டப்படி மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுக்க முடியாது. ஆனால் வைகுண்டராஜன் இதை மீறியுள்ளார். இதை மதுரை உயர்நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ள பொதுநல வழக்கிலும் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடற்கரை மணல் வளம் சுரண்டப்படுவதால் கடல் அரிப்பு ஏற்படுகின்றது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது. மீன்கள் கரைகளை விட்டு தூரமாக சென்று விடுகின்றன. கடலில் இருந்து உட்புறமாக நிலப்பகுதியில் 20 கி.மீ. அளவில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியுள்ளது. இதனால் கடற்கரையை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயமும் பாதித்து, குடிநீரும் கிடைக்கப் பெறாமல் போய் உள்ளது. இம்மாதிரியான பாதிப்புகளைச் சரி செய்ய பல ஆண்டுகள் ஆகும். பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் – காவல்துறை கண்காணிப்பாளர் – மாவட்ட வன அதிகாரி, கனிம வளத்துறை துணை இயக்குநரைச் சந்தித்தது

02.09.2013 – அன்று உண்மையறியும் குழு வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இரவிக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கார்னெட் மணல் கொள்ளை தொடர்பான நடவடிக்கைகள் குறித்துக் கேட்டபோது, ”நான் 06.08.2013–ல் தான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டேன். அதற்கு முன்பு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. நீங்கள் ஏ.டீ.மைன்ஸ்-ஐ பாருங்கள். இது சம்பந்தமாக அவருக்குத்தான் தெரியும்” என்றார். ”மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என அரசாணை உள்ளதே” எனக் கேட்டதற்கு ”அப்படி ஏதும் குழு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆற்று மணல் அள்ளுவதை கண்காணிக்கத்தான் குழு அமைத்துள்ளோம்” என்றவரிடம், ”குளத்தூர் காவல் நிலையத்தில் முன்பிருந்த ஆட்சியர் உத்தரவின் பேரில் வி.ஏ.ஓ கொடுத்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படவில்லையே” என்றதற்கு ”ஆம், பதியப்படவில்லை. நீங்கள் ஏ.டீ. மைன்ஸ்-யிடம் கேளுங்கள் என்று சொல்லி, அடுத்தடுத்த கேள்விகளைத் தடுத்து விட்டார்.

03.09.2013 – அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரையைச் சந்தித்து ”அரசாணை எண்.135 நாள் 13.11.2009-ன் கீழான கனிமத் திருட்டு தடுப்புக் குழுவில் எஸ்.பி.யும் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் கார்னெட் மணல் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்” எனக் கேட்டதற்கு ”குழு அமைக்கச் சொல்லி அரசாணை ஏதும் இல்லை. ஆற்று மணல் அள்ளுவது தொடர்பான விபரங்கள் உள்ளது. பீச் மணல் அள்ளியது சம்மந்தமாக நான் எதுவும் சொல்ல முடியாது” என்றவரிடம் குளத்தூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் குறித்துக் கேட்க, மிகவும் கோபப்பட்டு, ”அதான் புகார் கொடுத்ததற்கு ரசீது போட்டு முடித்து விட்டோம். என்னுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று சொல்லிப் பேச மறுத்து வி்ட்டார்.

05.09.2013 – ல் மாவட்ட வன அலுவலர் திரு. செண்பகமூர்த்தியை சந்தித்து, ”தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் சவுக்கு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதே” என்றதற்கு ”நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. எனக்கு எதுவும் தெரியாது” என்று சில வார்த்தைகள் பேசக் கூடப் பயந்து ”தயவு செய்து சென்று விடுங்கள்” எனக் கெஞ்சி அனுப்பி விட்டார்.

07.09.2013-ல் கனிமவளத்துறை துணை இயக்குநர் செல்வசேகரை செல்பேசியில் (9842280969) தொடர்பு கொண்டு பேசியபோது, ”கனிம திருட்டைத் தடுக்க அரசாணையின்படி ஆய்வுக்குழு உள்ளது. மாதாந்திர கூட்டங்கள் நடைபெறும், அதில் மணல் பிரச்சனை சம்மந்தமாகப் பேசியுள்ளோம். க்ரைம் மீட்டிங்கிலும் பேசியுள்ளோம். வி.வி.மினரல்சுக்கு எதிரான புகார்கள் எல்லாம் தொழில் போட்டியில் வந்ததுதான். இப்பிரச்சனை தொடர்பான ஆவணங்களை ககன்தீப்சிங் பேடி தலைமையிலான ஆய்வுக்குழுவிடம் கொடுத்து விட்டோம்” என்றார்.

அரசாணை எண்.135 நாள் 13.11.2009-ன் கீழான கனிமத் திருட்டு தடுப்புக் குழு மாவட்ட வாரியாக அமைக்க வேண்டும் என்ற சட்டப்படியான கடப்பாடு உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட உயர் அதிகாரிகள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்கள். அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதற்கு இது ஓர் துலக்கமான உதாரணம்.

தாமிரபரணியிலிருந்து வி.வி.மினரல்ஸ்சின் தண்ணீர் கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூரிலிருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் சேந்தபூமங்கலம் என்ற ஊரில் வி.வி.மினரல் கம்பெனி பல ஏக்கரில் விரிந்து பரந்துள்ளது. இக்கம்பெனிக்கு தாமிரபரணி ஆற்றின் நடுவில் பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதன் கழிவு நீர் மீண்டும் ஆற்றில் விடப்படுகிறது.

தமிழக அரசு மற்றும் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுப்படி அரசு அதிகாரிகளின் சட்டப்படியான கடமையும் – மீறலும்

கடந்த 21.05.1993 அன்று வருவாய்துறை ஆணையர், தமிழக அரசின் தொழிற்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் (L.DIS (A) 202323/92 dated 21.05.1993) “கிராம நிர்வாக அலுவலர்களின் பணிவிதிகளின் படி, சட்டவிரோத கனிமவள சுரண்டல் மற்றும் கடத்தல் குறித்துக் கண்டறிந்து வட்டாட்சியரிடம் அறிக்கை செய்ய வேண்டும். மேலும் அத்தகைய சட்டவிரோத கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும். இல்லா விட்டால் துறைரீதியான நடவடிக்கைக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் உட்படுவார்கள் என்பதே தற்போதைய நடைமுறை” என்று குறிப்பிட்டுள்ளார்.

11.05.2005 அன்று தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்ட அரசாணை G.O.Ms.No, Industries (MMA-1)-ன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், டி.ஆர்ஓ, ஆர்.டி.ஓ, தாசில்தார்கள், துணை, உதவி இயக்குநர்கள் (புவியியல் & கனிம வளங்கள்), இயக்குநர்கள், கூடுதல் இணை, துணை, உதவி இயக்குநர்கள் (புவியியல் & கனிம வளங்கள்) ஆகியோருக்கு கனிமச் சுரங்கங்களில் சென்று ஆய்வு, சர்வே, விசாரணை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

18.09.2006 அன்று தமிழக அரசு கெஜட்டில் வெளியான அரசாணை G.O.(Ms) No.114 Industries (MMA-1) 18TH, Septemper 2006-ன் படி காவல்துறை ஆய்வாளர் மட்டத்திற்கு மேலான காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டவிரோத கனிமவளத் திருட்டு, கடத்தலுக்குப் பயன்படுத்தும் வாகனங்களை, இயந்திரங்களைக் கைப்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

W.P.No.9860/2008 வழக்கில் 05.01.2009 அன்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவுப்படி “சட்டவிரோத குவாரித் தொழிலைத் தடுக்க மாவட்ட அளவில், தாலுகா அளவில் சிறப்புக் குழுக்கள், அரசாணை எண்.135, நாள் 13.11.2009-ன் படி தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும்

1. மாவட்ட ஆட்சியர், 2. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வனத்துறை அதிகாரி, 4. மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி 5. மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரி, 6. வருவாய் கோட்டாட்சியர், 7. மாவட்ட துணை கண்காணிப்பாளர், 8. உதவி இயக்குநர் (பஞ்சாயத்து), 9. உதவி இயக்குநர் (டவுண் பஞ்சாயத்து) 10. நகராட்சி ஆணையர்கள், 11. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அளவிலான அதிகாரி, 12. துணை அல்லது உதவி இயக்குநர்கள் (கனிமவளத் துறை) – செயலர் / ஒருங்கிணைப்பாளர், நிர்வாகப் பொறியாளர் (PWD – WRO) கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு கனிமவளச் சுரண்டல் தொடர்பான தங்கள் மாவட்டத்தின் விபரங்களை சேகரித்துக் கண்டறிய வேண்டும். தாலுகா அளவிலான குழுவைக் கண்காணிக்க வேண்டும். மாதம் ஒருமுறை இக்குழு தவறாது கூடி சட்டவிரோத குவாரிகள் / கனிமங்கள் / கடத்தல் / சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்டறிந்து மாநில சிறப்பு குழுவிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், கீழ்காணும் நபர்களைக் கொண்ட தாலுகா அளவிலான குழுவினை அமைக்க வேண்டும்.

 1. வட்டாட்சியர் – ஒருங்கிணைப்பாளர்
 2. காவல்துறை ஆய்வாளர்
 3. வனத்துறை அதிகாரி
 4. மாவட்ட புவியியல் & கனிமவளத் துறை பிரதிநிதி
 5. மண்டல போக்குவரத்து அலுவலர் பிரதிநிதி
 6. கிராம நிர்வாக அலுவலர்
 7. சார்பு ஆய்வாளர்
 8. உதவிப் பொறியாளர் (PWD – WRO)

இக்குழு அடிக்கடி குவாரிப் பகுதிகள், வாகனங்களை சோதித்து கனிமத் திருடலைத் தடுத்து, மாவட்ட குழுவிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

சட்ட விரோதமாக, கனிமங்கள் திருடப்பட்டிருந்தால் i. கிராம நிர்வாக அலுவலர் (V.A.O), ii. வட்டாட்சியர் (Tasildhar), iii. மாவட்ட புவியியல் & கனிமவளத் துறை பொறுப்பு அதிகாரி, iv. அந்தப் பகுதியின் பொறுப்பு காவல்துறை அதிகாரி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததற்குப் பொறுப்பானவர்கள் ஆவர். மாவட்ட ஆட்சியர் இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்களின் புகார்கள், சுந்தரம் IAS அவர்களின் புகார்கள், காந்திமதி நாதனின் புகார்கள், Federation of Indian Placer Mineral Industries-ன் புகார்கள், பல்வேறு உயர்நீதி மன்ற வழக்குகள், பல்லாண்டு கால மக்கள் போராடடங்கள், மணல் குவாரி-ன் மர்ம மரணங்கள், பொதுச் சொத்துக்கள் அழிப்பு, பத்திரிகைச் செய்திகள் என ஏராளமான தகவல்கள் இருந்தும் இக்குழுக்கள் எவ்வித நடவடிக்கையும் மணல் மாஃபியாக்கள் மீது எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. மேலும் இக்குழு தன் கடமையிலிருந்து தவறினால் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என அரசாணையிருந்தும் இக்குழு மீதும் உரிய நடவடிக்கை அரசால் எடுக்கப்படவில்லை.

மதுரை கிரானைட் ஊழல் – தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கார்னெட் ஊழல் – ஓர் ஒப்பீடு

கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வந்த மாபெரும் கிரானைட் ஊழல் குறித்து அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் திரு .உ.சகாயம், கடந்த 19.05.2012-ல் தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையின் சாரம்:

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பெரியாறு பிரதான கால்வாய் மூலமாக பாசன வசதி பெற்று நெல், கரும்பு வாழை அதிக அளவில் பயிரிடப்பட்ட பகுதி. கிரானைட் கற்கள் பெருமளவு வெட்டி எடுக்கப்பட்ட நிலையில், இக்கிராமங்களில் ஒரு காலத்தில் நின்று நிலைத்தோங்கிய எளிய சுயசார்பான வேளாண் பொருளாதாரம் அமைதியாக அழிக்கப்பட்டு மௌனமாக மரணித்துப் போய்விட்டது தான் சோகத்திலும் சோகம். ஒரு காலத்தில் இதற்கு எதிராக ஆவேசத்தோடு போராடிய விவசாயிகள் கால ஓட்டத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக எழுந்து நிற்கும் கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் நின்று நிலைக்க முடியாமல் ஒடுங்கி, ஒதுங்கி விட்டார்கள். அச்சம் காரணமாக அந்த கிராமங்களின் எளிய விவசாயிகள் மௌனித்து விட்டார்கள் என்றே சொல்லலாம். ஆனால் இன்னொரு பக்கத்தில் பி.ஆர்.பி., பி.கே.எஸ் போன்ற தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரம்மாண்டமான – அசுரத்தனமாக பண பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்துகின்ற அளவிற்கு எழுந்து நிற்கின்றன.

“இது குறித்த கிராம மக்களின் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கனிமவளத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினாலும், பயத்தினாலோ அல்லது நிதி லாபம் பெறும் நோக்கத்தினாலோ அவர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை”

“கனிம சுரங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்திட கனிம வளத்துறை அலுவலர்களையும், வருவாய்த் துறை அலுவலர்களையும் அவ்வப்போது அறிவுறுத்தி வந்தேன். இருப்பினும் இந்த அலுவலர்கள் சரியான நடவடிக்கைகளை எடுத்து, முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கவில்லை என்பது கசப்பான உண்மை”

“பி.ஆர்.பி போன்ற கிரானைட் சாம்ராஜ்யங்களுக்கு எதிராக தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமும், தங்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சமும் அவர்களிடத்தில் இருந்திருக்கலாம். ஆனாலும் இந்த அலுவலர்கள் சட்டத்திற்கு புறம்பான கிரானைட் வெட்டி எடுத்தலை, கடத்தலை கண்டும் காணாமல் இருந்ததற்காக பெருமளவிற்கு நிதி ஆதாயம் அடைந்திருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக வருவாய்த் துறையில் கீழ்நிலையில் பணியாற்றக் கூடிய அலுவலர்களும், கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்திருக்கிறார்கள். இதன் விளைவாக எத்தனை முறை அறிவுறுத்தினாலும் இந்த இயற்கை வளத்தை சுரண்டியும் சூறையாடியும், சமூகத்திற்கும் தேசத்திற்கும் எதிரான இவர்களின் மிகப்பெரும் மோசடியை கண்டும் காணாத மௌன சாட்சிகளாகவே இருந்திருக்கிறார்கள்.”

“ஒரு மாவட்ட ஆட்சியர் என்கிற முறையில் அரசுக்கு ஏற்படக்கூடிய நிதியிழப்பை தடுத்திட வேண்டும் என்று உறுதியாக எண்ணினேன். காரணம் விலை மதிப்பில்லாத கனிமவளம் என்பது பொதுவான சமூகச் சொத்து – தேசச் சொத்து. பொதுவான சமூகச் சொத்தை தனி நபர்களும் நிறுவனங்களும் சுரண்டுவதையும், சூறையாடுவதையும் நாம் என்றைக்கும் அனுமதிக்க முடியாது. அதுவும் பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் – கிராமத்து மனிதர்களுடைய வாழ்வாதாரங்களை அழித்து, ஒரு சில தனியார் நிறுவனங்கள் பிரமிப்பூட்டும் பெரும் பலனை அடைவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க இயலாது.”

“அரசுக்கு இப்போது ஏற்பட்ட நிதியிழப்பு டாமின் நிறுவனம் மற்றும் கனிமவளத் துறை அலுவர்களின் துணை இல்லாமல் நடந்திருக்க முடியாது. எனவே விரிவான அளவில் விசாரணை நடத்தப்பட்டு இந்த நிதியிழப்பிற்கு காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

மேற்கண்ட அறிக்கையை அளித்தவுடன் ஆட்சியர் சகாயம் அவர்கள் மாற்றப்பட்டார். அதன்பின் சகாயத்தின் அறிக்கை ஊடகங்களில் வெளியான சூழலில் வேறு வழியின்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இன்றைய தேதி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 447, 201, 379, 406, 420-ன் கீழும், பிரிவுகள் 4(1), 4(2)(A), 4(3) and 21(b)(5) Mines and Minerals Development and Regulation Act 1957–ன் கீழும், பிரிவு 3(1) தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் (TNPPDL Act) கீழும் கிரானைட் நிறுவனங்கள் மீது பதியப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கிரானைட் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட கிரேன்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களும், கம்ப்யூட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கிரானைட் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 2012 முதல் இன்று வரை சட்டவிரோத கிரானைட் குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்படாமல் உள்ளன.

மேலும் கிரானைட் மாஃபியாக்களுக்கு பெருமளவு உடந்தையாய் இருந்த N. மதிவாணன் IAS, C. காமராஜ் IAS, U. ராஜாராம் – துணை இயக்குநர், கனிமவளத் துறை, P.பெரியசாமி- வணிகவளத் துறை அதிகாரி. ஏ.சுப்பு – துணை ஆட்சியர், சு.ராமச்சந்திரன்- நிர்வாகப் பொறியாளர்- PWD ஆகியோர் மீது Cr.No.5/2012 / AC / MU, பிரிவுகள் 13(2) r/w 13(1)(d) of prevention of corruption Act, 1988 மற்றும் பிரிவுகள் 119, 468, 471, 120(B) இ.த.ச.-ன் கீழும் வழக்குகள் பதியப்பட்டன. கிரானைட் நிறுவனங்களால் ஆதாயமடைந்த வி.ஏ.ஓ.க்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், கனிமவளத் துறை ஊழியர்கள், பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள் ஆகியோர் மீதும் துறைரீதியான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மிக அதிக அளவில் மதுரை மாவட்டத்தின் மேலூர் தாலுகாவில் இயற்கை வளத்தைச் சூறையாடிய கிரானைட் மாபியாக்கள் மற்றும் அதிகாரிகள் மீது பெயரளவிலான நடவடிக்கைகளாவது எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் இயற்கை வளங்களை பகாசுர லாப வேட்கையோடு சூறையாடி வரும் வைகுண்டராஜன் தலைமையிலான கார்னெட் மணல் மாஃபியாக்கள் மீது துளியளவு கூட நடவடிக்கை இல்லை என்பதே உண்மை. குளத்தூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் கூட இன்று வரை வழக்குப் பதியவில்லை. ஏனெனில் வைகுண்டராஜனின் செல்வாக்கு அரசு நிர்வாகத்தில் அந்தளவுக்கு ஆழமாக ஊடுருவியுள்ளது.

வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் வளர்ந்த வரலாறு!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை – கீரைக்காரன்தட்டு கிராமத்தைச் சேர்ந்த, வைகுண்டராஜன் நடுத்தரமான வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் அரிசி ஆலை, லாரிகள் வைத்து சாதாரணமாகத் தொழில் செய்து வந்தவர், 1974 – 75-களில் கனிமவளத் துறையில் வேலை பார்த்த செல்வராஜ் என்ற அதிகாரி மூலம் கார்னெட் மணல் எடுக்கும் தொழிலில் கால் பதித்து இன்று இந்தியப் பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். கார்னெட் மணல் ஏற்றுமதியில் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தினர் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக உள்ளதோடு, உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். ஜெயா டி.வி.-ல் வைகுண்டராஜன் அதிகப் பங்குகள் வைத்துள்ள பங்குதாரராகவும் உள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு சாத்தான்குளம், திசையன்விளை பகுதிகளில் வரவிருந்த டாடா-ன் டைட்டானியத் தொழிற்சாலையை தனது அரசியல் செல்வாக்கால் விரட்டியடித்தவர். அனைத்து அரசியல் கட்சிகளும் இவருக்கு பக்கபலமாகவே உள்ளன. தற்போது ககன்தீப்சிங் பேடி குழுவிடம் கார்னெட் மணல் கொள்ளைக்கு ஆதரவாக இந்து முன்னணியினரும் – தென்னிந்திய திருச்சபையினரும் (CSI) மனு அளித்ததே இதற்கு நடைமுறை உதாரணம்.

‘மிகவும் எளிமையானவர், காலில் செருப்புக் கூட அணிய மாட்டார், தனக்கு உதவியவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்’ என்றெல்லாம் வியந்தோதப்படும் வைகுண்டராஜனின் உண்மை முகம் கொடூரமானது. நிழல் உலக தாதா போல் மாஃபியா சாம்ராஜ்யம் நடத்தி வரும் இவர் தனது தொழில் வளர்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். அரசியல், சாதி, மத செல்வாக்கு, லஞ்சம், ஊழல், கடத்தல், அடியாட்கள், ரவுடித்தனம், கொலை, கலவரம், ஊரைப் பிரித்தாளுதல்……. இவையே வைகுண்டராஜன் சாம்ராஜ்யம் வளர்ந்ததன் வழிமுறைகள்.

கனிம மணல் கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் வழக்கிற்காக கடந்த 2007-ம் ஆண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, கண்டிசன் கையெழுத்துப் போடும்போது தலைமறைவாகி, பின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் இரணியல் நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு மீண்டும் தலைமறைவுக் குற்றவாளியாக இருந்தவர் இந்த வைகுண்டராஜன். இந்த கிரிமினல் பேர்வழிக்குத்தான் மத்திய, மாநில அரசுகள், சேம்பர் ஆப் காமர்ஸ், மட்டீசியா போன்ற அமைப்புகள் 1990 முதல் தேசிய உற்பத்தியாளர் விருது, சிறந்த ஏற்றுமதியாளர் விருது, கார்னெட் ஏற்றுமதியாளர் விருது, விஸ்வேஸ்வரையா விருது, 16 ஆண்டுகளாக தொடர்ந்து மத்திய அரசின் வணிக மற்றும் தொழில் அமைச்சகத்தின் சிறந்த ஏற்றுமதியாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளனர்.

தாங்கள் பெற்ற விருதுகளுக்குப் பொருத்தமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கார்னெட் மணல் நிறுவனங்கள் குறிப்பாக வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் மற்றும் அவரது குடும்ப நிறுவனத்தினர் கீழ்கண்ட சட்டங்கள் மற்றும் விதிகளை மீறிய குற்றத்தை இழைத்துள்ளனர்.

1. கார்னெட் மணலை சுத்திகரிக்கும்போது வரும் மோனோசைட்டை திரும்ப அரசிடம் ஒப்படைக்கவில்லை. இது Atomic Energy Act, 1962 மற்றும் Atomic Energy (Working of Mines, Minerals and Handling of Prescribed Substances) Rules 1984–க்கு முரணானது.

2. மோனோசைட் போன்ற கதிர்வீச்சுக் கனிமங்களைப் பிரித்தெடுக்க அணுசக்தித் துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. இது Atomic Energy (Working of Mines, Minerals and Handling of Prescribed Substances)Rules 1984–க்கு முரணானது.

3. மோனோசைட்டில் தோரியம் உள்ளதால் மோனோசைட் கையாளப்பட்டது தொடர்பான ஆண்டறிக்கை அணுசக்தித் துறைக்கு ஒவ்வோராண்டும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வறிக்கை கொடுக்கப்படவில்லை என்கிறார் சுந்தரம் அய்.ஏ.எஸ்.

4. மத்திய அரசின் சுற்றுச்சூழல் & வனத்துறை மற்றும் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் கார்னெட் நிறுவனங்கள் அனுமதி பெறவில்லை.

5. ஏற்றுமதிக்கு முன்பாக அணுசக்தித் துறையின் கனிமப் பிரிவிடம் மாதிரிகளை அனுப்பி மோனோசைட் இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படவில்லை.

6. Mineral Concession Rules, 1960 – விதி 33-ன் படி கனிமங்கள் எடுக்கும் பகுதி முறைப்படி சர்வே செய்யப்பட்டு – நான்கெல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்யப்படவில்லை.

7. The Tamilnadu Minor Mineral concession Rules, 1959 – விதி 5 & 5(2)-ன் படி பாதுகாக்கப்பட்ட நிலங்கள், காடுகளில் கனிமங்கள் எடுப்பது குற்றம். கார்னெட் நிறுவனத்தினர் பல்வேறு பகுதிகளில் சவுக்கு மரங்களை அழித்து விதியை மீறியுள்ளனர்.

8. The Tamilnadu Minor Mineral concession Rules, 1959 விதி 36(C)-ன் படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி-தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தொழில் செய்ய வேண்டும். இவ்விதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

மேலும் Tamilnadu Forest Act, 1882, The Mines and Minerals (Development and Regulation) Act1957, The Tamilnadu Minor Mineral concession Rules, 1959, The Tamilnadu Prevention of illegal mining, transportation and storage of minerals and mineral Dealers Rules, 2011, Environment (Protection) Act, 1986, Air (Prevention and Control of Pollution) Act, 1981, Water (Prevention and Control of Pollution) Act, 1997, Indian Penal Code, 1872, sections, 447, 201, 406, 420, 379, Sec.3 of TNPPDL ACT, Sections 124-A & 153-A of Indian Penal Code, Atomic Energy Act 1962, Atomic Energy Factory rules, Environment (Protection ) Act 1986, Atomic Energy (Factories) rules 1996 ஆகிய சட்டங்களின் பல்வேறு பிரிவுகள் மற்றும் விதிகளை மீறிய குற்றத்தையும் கார்னெட் நிறுவனங்கள் இழைத்துள்ளன.

இத்தனை குற்றங்களை இழைத்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி கார்னெட் மணல் மாஃபியாக்கள் மீது உரிய நடவடிக்கை இன்று வரை இல்லாததற்கு மத்திய-மாநில அரசுகள் தான் பொறுப்பு.

வைகுண்டராஜனை வளர்த்த இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை

வைகுண்டராஜன் கார்னெட் தொழிலில் நுழைந்து, காலூன்றி, வளர்ந்த காலம் (1990-கள்) இந்திய அரசியல் – பொருளாதார வரலாற்றில் முக்கியமானது. 1990-ம் ஆண்டு வரை இந்திய அரசின் தொழிற் கொள்கை கனிம வளங்களை அரசு மட்டுமே எடுக்க அனுமதித்தது. தனியாருக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. 1991-ல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியாரும் கனிமத் தொழிலில் அனுமதிக்கப்பட்டனர். 1990-க்கு முன்பு சட்டவிரோதமானவையெல்லாம், பின்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இயற்கை வளங்களின் மீதான அரசின் கட்டுப்பாடு, திட்டமிட்டு தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றப்பட்டது. இதனால் சட்டவிரோதமாக கார்னெட் மணலைக் கடத்தி வந்த வைகுண்டராஜன், சட்டப்பூர்வமாகவே கடத்தினார். அரசு விருதுகள் பெற்றார்.

தேசிய தொழில்நுட்பக் கழக ஆய்வின்படி, இந்தியக் கடற்கரைகளில் 12.8 மில்லியன் டன்கள் மோனோசைட் உள்ளது. இதில் 2.1 மில்லியன் டன் மோனாசைட் கடந்த 10 ஆண்டுகளில் இழக்கப்பட்டுள்ளது. இந்த மோனாசைட்டில் தான் விலைமதிப்பற்ற தோரியம் உள்ளது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள தோரியத்தின் மதிப்பு மட்டும் ரூ.1,26,72,00000000000 ஆகும். 1998 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் இந்திய அணுசக்தித் துறை எடுத்த முடிவுகளின் படி தனியாரும், வெளிநாட்டு நிறுவனங்களும் கனிமங்கள், கார்னெட் மணல் எடுப்பில் கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்பட்டனர். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பின்பு இந்திய அரசு கனிமச் சட்டத்தைத் திருத்தி, கனிமச் சுரண்டலை எளிதாக்கியது. நவம்பர் 30, 2011-ல் பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி அணுசக்தித் துறை எஸ்.ஓ.61(இ)-ன் படி மோனோசைட் தவிர இதர கனிமங்கள் எடுக்க அணுசக்தித் துறையின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

இவ்வாறாக இயற்கை வளங்களை தனியார் சூறையாடலுக்கு அனுமதித்த இந்திய அரசின் தொழிற் கொள்கையான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமே வைகுண்டராஜனின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது. ஊழல்கள் வெளிவரும் போதெல்லாம் உரிம விதிகள் மீறப்பட்டனவா? என்று மட்டுமே விவாதிக்கப்படுகிறது. அதன் மூலமான அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை குறித்து பேசப்படுவதில்லை. ஆனால் இதுதான் இன்று முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

கார்னெட் மணல் பிரச்சனையிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பும் சதி

மதுரையில் கடந்த 2012–ல் கிரானைட் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளின் தலைகளைத் துண்டித்து சாதிக் கலவரம் நடத்தி பிரச்சனையை திசைதிருப்ப முயற்சித்தார்கள். அதேபோல் தற்போதும் கடந்த 23.08.2013 அன்று இரவு 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி டி.எஸ்.பி அலுவலகத்துக்கு வந்த தொலைபேசியில் “இலங்கையிலிருந்த 35 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் தமிழகத்தில் ஊடுருவியுள்ளார்கள்“ என்று வந்த தகவலை மத்திய உளவுத்துறையும் உறுதிப்படுத்தியதாகச் சொல்லி, மக்களிடையே பீதியூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தூத்துக்குடி ப்ரௌசிங் சென்டரிலிருந்து பேசப்பட்டதைக் கண்டறிந்த பின்பும், இச்செய்தி ஊதிப்பெருக்கப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகள் போலீசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, அனல், அணு மின் நி்லையங்களுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு, ஆறு மாவட்ட போலீசார் வரவழைப்பு, கடற்படை கண்காணிப்பு…… என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையிலிருந்த 35 தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பே இல்லாத நிலையில், தூத்துக்குடி ப்ரௌசிங் சென்டரிலிருந்து தொலைபேசி செய்த நபர் குறித்த விபரம் மறைக்கப்படும் சூழலில், தீவிரவாதிகள் ஊடுறுவல் செய்தி கார்னெட் மணல் நிறுவனங்களின் குறிப்பாக வைகுண்டராஜனின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதற்கு அடிப்படைகள் உள்ளன. ஏனெனில் எந்த அரசு வந்தாலும் அவருக்கு செல்வாக்கு உண்டென்பதுடன், அதிகாரிகள் மட்டத்தில் நிரந்தர செல்வாக்கு உடையவர்.

மேற்கண்டவாறாக பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வாக்குமூலங்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியான கள ஆய்வு, சமூக ஆர்வலர்கள், அறிவியலாளர்களின் கருத்துக்கள், உயர்நீதி மன்றங்களில் தாக்கள் செய்யப்பட்ட ஆவணங்கள், பத்திரிகைச் செய்திகள் ஆகியவற்றை ஆராய்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரங்களில் கனிம மணல் அள்ளப்பட்டது தொடர்பாக கீழ்க்கண்ட உண்மைகளைக் கண்டறிந்துள்ளோம். அதனடிப்படையில் சில பரிந்துரைகளையும் முன் வைக்கின்றோம்.

1. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் தங்களது பண பலத்தின் மூலம் கைக்கூலிகளை உருவாக்கி, ஒவ்வொரு கிராமத்தையும் இரண்டாகப் பிளந்து, மோதலை ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைத்து, வெடிகுண்டு கலாச்சாரத்தைப் புகுத்தியது கார்னெட் மணல் நிறுவனங்கள் தான். இதில் வி.வி மினரல்ஸ் வைகுண்டராஜனே முதல் குற்றவாளி. அவரையும், அவரது சகோதரர்களையும், மற்ற கார்னெட் நிறுவன உரிமையாளர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அனைத்து கடலோர கிராமங்களிலும் சமாதானக் கூட்டங்கள் (Peace meeting) நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

2. கார்னெட் மணல் நிறுவனங்கள் தங்களின் இலாபத்திற்காக அரசின் பல்வேறு சட்டங்களை மீறிய குற்றங்களை இழைத்துள்ளன. இவை அனைத்திற்கும் உரிய அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு, தனித்தனியாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும். மத்திய-மாநில அரசுகள் குற்றவாளிகளாக உள்ள நிலையில் விசாரணை, ஸ்பெக்ட்ரம் வழக்கு போல உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவால் (Special Investigation Team) நடத்தப்பட வேண்டும். அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய இரு அரசுகளுமே கார்னெட் ஊழலுக்குத் துணை போயுள்ள நிலையில், தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி ககன்தீப்சிங் பேடி தலைமையில் நேற்று வரை மணல் மாஃபியாக்களுக்குத் துணை நின்ற தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகளைக் கொண்டே நடத்தப்படும் விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே தவிர உண்மையானதல்ல.

3. அனைத்து கார்னெட் மணல் நிறுவனங்களும் சட்டங்களை, விதிகளை மீறியே நடத்தப்பட்டுள்ளன. எந்த நிறுவனமும் எல்லைகளை வரையறுத்து வேலிகள் அமைக்கவில்லை. இயந்திரங்கள் மூலம் தான் பெருமளவு மணல் அள்ளப்பட்டுள்ளது. தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் O.A.171/2013 வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு பகுதியில் 2,30,000 டன் மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் மணல் அள்ளத் தடை விதித்த சூழலிலும் மணல் தொடர்ந்து எடுக்கப்படுகிறது. ஆகவே சட்டவிரோதமாகச் செயல்படும் மணல் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.

4. ஸ்பெக்ட்ரம் ஊழல் போல, அரசு இத்தொழிலை நடத்தி சந்தை விலைக்கு கனிமங்கள் விற்கப்பட்டிருந்தால் இவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என்ற முறையில் இழப்பீடு கணக்கிடப்பட வேண்டும். மேலோட்டமான மதிப்பீட்டிலேயே கார்னெட் ஊழல் சில லட்சம் கோடியைத் தாண்டும் என்ற நிலையில், ஊழலுக்கு துணை போன அதிகாரிகளைக் கொண்டே விசாரணை நடத்தப்படக் கூடாது. உச்சநீதி மன்றமே நோ்மையான அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விசாரணை நடத்தி இழப்பீடு மதிப்பிடப்பட வேண்டும்.

5. அணு உலை மற்றும் அணு ஆயுத தயாரிப்பிற்கு பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. அணுக் கனிமங்கள் இயக்ககக் கூற்றுப்படி மோனோசைட்டில் 0.2-0.4 சதவீதம் யுரேனியமும்,4.5-9.5 சதவீதம் தோரியமும் ஆக்சைடு வடிவில் உள்ளது. சுந்தரம் அவர்கள் கூற்றுப்படி கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு தோரியம், யுரேனியத்துக்கு மாற்று என்ற நிலையில், அளவிட முடியாதது. கூடங்குளம் போராட்டத்தை தேசநலனுக்கு விரோதமானது என்று ஒடுக்கும் அணுசக்தித் துறை இக்கடத்தலைக் கண்டுகொள்ளவில்லை. கார்னெட் மணல் நிறுவனங்கள் மோனோசைட்டை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே இதுவரை பிரித்தெடுக்கபட்ட மோனாசைட் குறித்து அணு விஞ்ஞானிகள் அடங்கிய குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

6. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டக் கடலோரங்களில் இயற்கைச் சமநிலை சீர்குலைக்கப்பட்டு, கடல், நிலம், காற்று, நீர் மாசுபடுத்தப்பட்டுள்ளது. மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழல் சீர்குலைவிற்கு மணல் நிறுவனங்களே நேரடிப் பொறுப்பு. சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு தனியாக விசாரணை நடத்தப்பட்டு இழப்பீடு வசூலிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பான ஆய்வறிக்கைகள் உடனே வெளியிடப்பட வேண்டும்.

7. கார்னெட் மணல் நிறுவனங்களின் சட்டவிரோத மணல் கொள்ளையால் மீனவர்களுக்கு புற்றுநோய், சிறுநீரக நோய், தோல் நோய், எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். அனைத்து கடற்கரை கிராமங்களிலும் தூண்டில் வளைவுப் பாலங்கள் அமைத்துத் தரப்பட வேண்டும்.

8. கார்னெட் மணல் சூறையாடலுக்கு கடந்த 25 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், கனிமவளத் துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அரசின் அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். ஆதாயம் அடைந்துள்ளனர். இந்த மாபெரும் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

9. சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட கார்னெட் மணல் நிறுவனங்களின் சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அப்பணத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

10. தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கழிவு மணலைக் கொட்டி, கடலையே பல ஏக்கருக்கு ஆக்கிரமித்துள்ளது BMC நிறுவனம். 6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தூண்டில் வளைவு பாலமும் முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்காக TNPPDL Act-ன் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்து, தூண்டில் வளைவு பாலத்தை சீரமைத்துத் தர வேண்டும்.

11. தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தண்ணீர் உறிஞ்சுவதை தடை செய்ய வேண்டும்.

12. நாட்டின் இயற்கை வளங்களை வரைமுறையில்லாமல் சூறையாடிய வைகுண்டராஜனுக்கு ஆதரவாக திருநெல்வேலி மறை மாவட்ட பிஷப்பும், எஸ்.டி.கே. ராஜனும் வருவது மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம். இவர்களையும், இவர்களைப் போன்ற ஊழல் பேர்வழிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். அதோடு இயற்கை வளங்களை தனியார் சூறையாடலுக்கு அனுமதித்த இந்திய அரசின் தொழிற் கொள்கையான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமே வைகுண்டராஜனின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு மூலமாக உள்ளது என்ற நிலையில், இப்பொருளாதாரக் கொள்கையின் கடந்த 20 ஆண்டு அமலாக்கத்தின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து – மாற்றுப் பொருளாதாரக் கொள்கைக்கான முன்னெடுப்புகள் – போராட்டங்கள் மக்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இடம்: மதுரை
நாள் : 12.09.2013

உண்மை அறியும் குழுவிற்காக

சே.வாஞ்சிநாதன்
———————————————————

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை-20. தொடர்புக்கு – 9865348163, 9443527613.

———————————————————

படத் தொகுப்பு

பத்திரிகை செய்திகள்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

 1. Malaivilunki Mahadevan Parthathilaya? Athai vida Imayam mulunki Mahadevanthan Intha Vaigundam. Sumar 25 varudam munbu mithivandiyil sentravar, Intru Yivarukku, 20 Kappalkal, Pavam Vavusi(VOC) kooda kappalvanki Oottandiyai Ponar Avar Sutha Thamizhar. Ivar engirunthuthaan Vantharo? Enkal Kadarkaartrin Kaval aran, Puyalkartrin paathukappu savukku, panaimaram,Manalkuviyal, Aamai vaalvidam, Meenkal,Kunjuporikumidam, Ellampochu, Srilankavil Kood Singlavan Enkal Kovanathaiyavathu vittuvittan, Intha Kollaikaran, Aathayum uruvukiran. Enkal Oor local tv-yil Yivarkalin akkapor kadantha 10 Naatkalaka Thanka mudiyavillai.Enkal kovanam uruvapadumvarai ellorum enguthaan ponaarkalo…Thamizh Meenava Muthukudiyil Piranthatharku Nankalum Engeyum Yeayhiliyaithan poganumo theriyavillai… Ep[pothum Meenavani… Kadarkarayil… Kanneer karayil…

 2. The Section 2(1)(g) of the Atomic Energy Act, 1962 mandates the DAE to notify the list of Prescribed Substances through a Gazette Notification. Accordingly, the Gazette Notification of 20th January 2006 excluding the Titanium bearing minerals (Ilmenite, Rutile and Leucoxene) and Zircon from the list of Prescribed Substances has been issued.

  In fact, it is not for the first time that such Gazette Notification revising the list of Prescribed Substances was issued in 2006; rather in the past too, a similar notification was issued in the year 1995.

  The DAE Gazette Notification of January 20, 2006 which was given effect from January 2007, has a footnote stating that, “These items shall remain prescribed substances only till such time the Policy on Exploitation of BSMs notified vide Resolution number 8/1(1)/97-PSU/1422 dated 6th October 1998 is adopted/revised/modified by the Ministry of Mines or till the 1st January 2007, whichever occurs earlier and shall cease to be so thereafter”. Accordingly the notification came into effect from 1st January 2007, while the corresponding regulatory mechanism prescribed in the MMRD Act and Mineral Concession Rules, in respect of Atomic Minerals, remain in place and continue to be implemented.

  The change to the list of the Prescribed Substances notified by DAE in January 2006 has not removed these minerals out of the control of the Central Government. The State Governments have to obtain prior approval of the Ministry of Mines in all such cases of mining leases, since these items remain under the First Schedule of the MMRD Act. The Ministry of Mines continues to refer to DAE, even after January 2007, the applications received for mining lease for Beach Sand Minerals that were delisted vide the January 2006 Gazette Notification. Such applications received by DAE have been reviewed by the Atomic Minerals Directorate for Exploration and Research (AMD) and then cleared by the DAE.

  The requirement under the MMRD Act (1957) that the mining plan of all Atomic Minerals listed in the First Schedule needs to be approved by AMD, too, is being followed in true letter and spirit.

  In addition, vide DAE Notification of 2009, issued by the Atomic Energy Regulatory Board (AERB) under the Atomic Energy (Radiation Protection) Rules 2004, the Beach Sand Mineral (ilmenite, rutile, leucoxene, zircon, sillimanite, garnet and monazite) processing facilities have to procure a licence from AERB for radiological safety aspects.

  In that case main who is the main culprit?

 3. I appreciate your creativity in this article. Everything in this article is purely an imagination. Why you are stating the legally mined sand as illegal? This article clearly shows the bias of this author. Try ro think practically. V.V.Mineral is now having its own place in world market. Some competitors who cannot beat them directly is accusing them to close down their business. This website is also helping them.

 4. My father and mother are working in V.V.Mineral. Their wages are the only source of income for my family. I am doing B.SC and I have a younger brother who is studying in school. This sudden banning of mining activities created a threat to my family. Where should we go? The only source of Income in our area is fishing and beedi making. We are ready to do that but still we can’t earn enough money to run our family. Now our studies is also became a big question mark?????? Government should think from our point of view and they should do the needful for us.

 5. இந்திய,தமிழக கொலைக்கருவி கலாச்சாரங்கள் ! பிழவு பட்டிருக்கும் பிழைப்புவாத,சந்தர்ப்பவாத மனிதம் இன்று நம்மில் உற்ப்பத்தியை உருவாக்கும் உழைக்கும்வர்க்கம்,அவர்களின் அறிவற்றதன்மையை,உட்பிரிவுகளை வைத்துவையிறுவளர்க்கும் பணக்காரவர்க்கம் என்று இருந்தால் மட்டுமே.சமுதாயபிரட்சினைகள் தீர்வினை எட்டும்.மற்றபடி நீங்கள் குறிப்பிடுவதுபோல வைகுண்டனார்பரவர் எனவும் வைகுண்டர் அல்லாதபரவர் எனவும் புதிதாய் சாதியும்,வழிபாடும் முளைக்கும். மேலும் கடலில்கப்பலாம் கப்பல்நிறைய ஆK47 ணாம் ஏன்? கடற்கரையோர பெரியவூர்களில் ஆயுதமாம்?பெட்டிபெட்டியாய் பணமாம் ஏன்? இந்தியாவில்,தமிழகத்தில் இவை சரியான படித்த,நீதி,நிர்வாக,காவல்,கண்காணீப்பு மிகுந்த உயர்வான ஆட்சிமுறை?????

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க