privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபொதுப் போக்குவரத்திற்கு வேட்டு வைக்கும் உச்ச நீதிமன்றம்

பொதுப் போக்குவரத்திற்கு வேட்டு வைக்கும் உச்ச நீதிமன்றம்

-

“காலத்திற்கேற்ப சிந்திக்க வேண்டும், எப்போதும் ஒரே மாதிரி நீங்கள் (அரசு போக்குவரத்துக் கழகங்கள்) சிந்திக்கக் கூடாது, மானியம் இல்லாமல், ஏற்படும் எரிபொருள் செலவினத்தை சமாளியுங்கள், முடியவில்லையென்றால் மக்கள் மீது திணியுங்கள்” – சொன்னது திருவாளர் அலுவாலியாவோ, அல்லது திருவாளர் ப சிதம்பரமோ அல்ல – பிரச்சனைகளுக்கு இறைவனுக்கு ஒப்பாக இறுதிக் கட்ட தீர்வு என மக்கள் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிற உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஆர் எம் லோதா மற்றும் மதன் பி லோக்குர் ஆகியோரின் அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதி மன்றம்
உச்சநீதி மன்றம்

கடந்த 17 ஜனவரி 2013 நள்ளிரவு முதல் அறிவிக்கப்பட்ட டீசல் விலை உயர்வில் மொத்தமாக கொள்முதல் செய்யும் மாநில அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே, ராணுவம் போன்றவற்றிற்கு டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 61.67, அதே டீசல் தனியார் பெட்ரோல் விற்பனையகங்களில் லிட்டர் ஒன்றுக்கு ரூ 50.35 அதாவது மொத்தமாக வாங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ 11 அதிகம் என்பதை டீசல் விலை உயர்வு : அரசு பேருந்தை ஒழிக்கும் சதி ! என்கிற பதிவில்  சுட்டிக் காண்பித்து, இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை விளக்கியிருந்தோம். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களும் தொடர்ந்து 5 ஆண்டுகளாக கோடிகளில் லாபம் ஈட்டிய வண்ணம்தான் உள்ளது என்பதற்கான ஆதாரத்தையும் பதிவு செய்திருந்தோம். இது போன்ற இரட்டை விலைக்கொள்கை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தெளிவுபடுத்தி யிருந்தோம்.

நாம் ஐயம் தெரிவித்திருந்தபடி சில தினங்களிலேயே, அரசு பேருந்துகள் தனியார் டீசல் நிலையங்களில் கொள்முதல் துவங்கியது. கடந்த 9 மாத காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்டு மொத்த கொள்முதலுக்கு ரூ 66.80, தனியார் கொள்முதலுக்கு ரூ 55.37 என்றுள்ளது.

ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலிருந்தும் கொள்முதல் செய்யப்படும் டீசல் லிட்டருக்கு 35 பைசா போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனா், பொது மேலாளர், மற்றும் அமைச்சருக்கு செல்லத் துவங்கியது. சில கழகங்களில் தனியார் முதலாளிகள் நேரடியாக முழு லோடையும் கழக வளாகத்திற்குள் இருக்கும் பங்க்-ல் இறக்கி விடுகின்றனர். கமிஷ‌னுக்கு கமிஷ‌ன், தனியாருக்கு வேலைப்பளுவும் இல்லை

ஒவ்வொரு பேருந்திற்கும் ஒன்று முதல் இரண்டு லிட்டர் குறைவாகத்தான் போடப்படுகிறது (அதாவது 78 லிட்டர் போட்டு விட்டு, 80 லிட்டர் என எழுதிக் கொள்கிறார்கள்). இதற்கென பணி பார்க்கும் கழக ஏ.இ. மற்றும் சம்பந்தப்பட்ட கிளை மேலாளரின் டூ வீலருக்கு இலவச பெட்ரோல் போட்டு கவனித்துக் கொள்ளப்படுகிறது.

இது ஒரு புறம் என்றாலும் தமிழக அரசு மற்றும் மேற்கு வங்க அரசுகள் இந்த இரட்டை விலைக் கொள்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த விலை உயர்விற்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தாக்கல் செய்திருந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடத்தப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது.

தொழிற்சங்க நோட்டிஸ்இந்தியாவில் பெரும்பகுதி டீசல் விநியோகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் என்கிற மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து பயன்பாட்டிற்கான பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றும் பணியில் 40 சதவீதம் (ரிபைனரிஸ்) ரிலையன்ஸ் அம்பானி குழுமத்திடம் தான் உள்ளது. எனவே இன்றைய தாராளமயமாக்கல் சூழலில், ஓட்டுக்கட்சி அரசியல் சூழலில் எரிபொருள் விலையை அடிக்கடி உயர்த்த வேண்டும் என ஆளும் கட்சியின் கழுத்தில் கத்தியை வைப்பது இத்தகைய கார்ப்பரேட் பெரு முதலாளிகளே.

கோடிகளில் லாபத்தை காண்பித்துவரும் இந்நிறுவனங்கள் ஏன் நஷ்டம் என தெரிவிக்கிறார்கள் என்றால் ஒரு வருடத்திற்கு ஈட்ட வேண்டிய லாப குறியீடு (டார்கெட்) ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு அந்த அளவிலிருந்து லாபம் குறையும் போதெல்லாம் நட்டம் என அரசு கூச்சலிடுவதுதான் வேடிக்கையான மற்றும் நிதர்சனமான உண்மை.

இப்படிப்பட்ட சூழலில் பல நூறு வழக்குகள் நிலுவையில் இருக்கையில் அம்பானி போன்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடிய, மாநில அரசு பொதுத் துறை போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தொடர்ந்த இந்த வழக்கை மிக விரைவாக விசாரித்து இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஒரு தீர்ப்பை அளித்துள்ளனர். போக்குவரத்துக் கழகங்களின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், இது தொடர்பாக உயர்நீதிமன்றங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளையும் ரத்து செய்து உத்திரவிட்டிருக்கின்றனர்.

ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மட்டும் கார்ப்பரேட் முதலாளிகளுடன் கைகோர்த்து தனியார் மயத்திற்கு நாளும், பொழுதும் அயராது உழைக்கவில்லை, நீதித்துறையும் அந்த வரிசையில்தான் நிற்கிறது என்பது இதன் மூலம் மேலும் ஒரு முறை நிதர்சனமாகியிருக்கிறது. முக்கியமாக பொதுப்போக்குவரத்தை தகர்த்து விட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பிடியில் மக்களை தள்ளுவதற்கான வெளிப்படையான சதியே இது.

அரசின் கொள்கை முடிவு என எது வந்தாலும் ஆதரிப்பது, உன்னால் சமாளிக்க முடியவில்லையா, மக்கள் மீது திணியுங்கள் என சொல்வது – இதற்குப் பெயர் நீதிபரிபாலனமா? மக்கள்தான் சிந்தித்து ஒன்றுபட்ட போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும்.

– சித்ரகுப்தன்

மேலும் படிக்க