Saturday, April 17, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் டீசல் விலை உயர்வு : அரசு பேருந்தை ஒழிக்கும் சதி !

டீசல் விலை உயர்வு : அரசு பேருந்தை ஒழிக்கும் சதி !

-

டீசல் விலை“சமீபத்திய டீசல் விலை உயர்வு (17 ஜனவரி 2013 நள்ளிரவு முதல்) அறிவிப்பில் தனியார் முதலாளிகளுக்கு டீசல் ஒரு லிட்டருக்கு 55 பைசா உயர்வு! என்றும்- மொத்தமாக, அதிகமாக நேரடி கொள்முதல் செய்யும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே, ராணுவம், கப்பல் போக்குவரத்து போன்றவற்றிற்கு லிட்டருக்கு ரூ 11.67 விலை உயர்வு!! என்ற அறிவிப்பு மத்திய அரசின் மிகப்பெரிய அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது”

இந்தியாவில் பெரும்பகுதி டீசல் விநியோகம் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் என்கிற மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கச்சா எண்ணையை சுத்திகரித்து பயன்பாட்டிற்கான பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றும் பணி என்பது 80 சதவீதம் (ரிபைனரிஸ்) “ரிலையன்ஸ் அம்பானி குழுமத்திடம்” தான் உள்ளது. எனவே இன்றைய தாராளமயமாக்கல் சூழலில், ஓட்டுக்கட்சி அரசியல் சூழலில் எரிபொருள் விலையை அடிக்கடி உயர்த்த வேண்டும் என ஆளும் கட்சியின் கழுத்தில் கத்தியை வைப்பது இத்தகைய கார்ப்பரேட் பெரு முதலாளிகளே.

தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் உயர்வுகள் ஏற்படும் போதெல்லாம்

 • டீசல் பெட்ரோல் விலை உயருமா?
 • டீசல், பெட்ரோல் விலை உயர்வு பற்றி விவாதிப்பதற்காக கூடிய ஐக்கிய முற்போக்கு அரசின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை !
 • டீசல், பெட்ரோல் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை, என சம்மந்தமில்லாத துறை அமைச்சர் ஒருவர் எங்கோ நடக்கும் ஒரு விழாவில் பேசுவார்,
 • எண்ணை நிறுவனங்களின் நஷ்டத்தை சமாளிக்க விலை உயர்வு மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை – பெட்ரோலிய அமைச்சர்

என 4 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை செய்தி ஊடகங்களில் செய்தி வந்து நின்றபின் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு விடும். உடனே மத்திய நிதி அமைச்சரும், பெட்ரோலிய அமைச்சரும் இந்த விலை உயர்வு தவிர்க்க இயலாதது என்று அறிக்கை வாசித்துவிடுவார்கள். எதிர்கட்சிகள், வெகுஜன அமைப்புகள் அவரவர் இடங்களில் ஒரு ஆர்ப்பாட்டம் என்ற போராட்டத்துடன் அந்த விலை உயர்வு மறந்து போகச் செய்யப்படும்.

நமது தமிழகத்தைப் பொறுத்தவரை

 • திமுக குடும்பச் சண்டை,
 • இரண்டு பெண்டாட்டி புகார் – அமைச்சருக்கு கல்தாவா?
 • நடிகையின் விவாகரத்து
 • ஒரு திரைப்படம் வெளிவருமா வெளிவராதா?
 • யானைகளுக்கு குஜால் விழா

போன்ற ஏதேனும் ஒரு தலைப்புச் செய்தி வந்தவுடன் டீசல் விலை உயர்வு என்பது ஆணி முதல் அங்குசம் வரை, உணவுப்பொருட்கள், விளைபொருட்கள், துணி, என அனைத்தையும் விலை உயரச் செய்யும் ஒரு அம்சம் என்பதை சுலபமாக மக்களால் மறக்கப்படும்.

11 ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பர் 2011ல் தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டு, சாதாரண கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் அந்த சுமையிலிருந்து இன்னும் மீளாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத ஒரு புதிய நிகழ்வாக பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் பொதுத்துறை போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 61.67- அதே டீசல் தனியார் பேருந்துகள் வாங்கும் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் விலை ரூ 50.35 என்பதை செய்தித் தாள்களில் பார்த்தவுடன் பல பேருக்கு இதன் பொருள் இன்னும் விளங்கவில்லை, இப்படியும் இருக்குமா என்கிற கேள்விதான் எழுந்துள்ளது.

ஏனிந்த வித்தியாசம் ??

ஒரு பொருளை சில்லரையாக வாங்குவதை விட மொத்தமாக வாங்குபவருக்குத்தானே விலை மலிவாக கிடைக்கும். அதுவும் நேரடியாக ஆயில் நிறுவனங்களின் இடத்திற்கே சென்று கொள்முதல் செய்துவரும் கழகங்களுக்கு, ரயில்வேக்கு, ராணுவத்திற்கு ஏனிந்த வித்தியாச விலை உயர்வு? நேற்று வரை இது போன்ற கொள்முதலுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வந்தது. அந்த மானியத்தை மொத்தமாக அதிக அளவில் கொள்முதல் செய்பவர்களுக்கு முற்றிலுமாக நிறுத்த ஆளும் அரசு முடிவெடுத்ததால் இந்த அயோக்கியத்தனமான விலை உயர்வு திணிக்கப்பட்டுள்ளது. (ஆமாம் மதுரை – பொன்னமராவதி தடம் இயக்கும் கிரானைட் (கொள்ளை) புகழ் பிஆர்பிக்கு ஒரு லிட்டர் டீசல் 50-35க்கு கிடைக்கும், அதே தடத்தை இயக்கும் அரசு பேருந்திற்கு ஒரு லிட்டர் டீசல் விலை 61-67)

இதனால் நேரவிருக்கும் அபாயங்களை பார்ப்பதற்கு முன்பாக எண்ணை நிறுவனங்கள் ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளில் ஈட்டி வந்திருக்கும் லாப விபரங்களை பின்வரும் இணைப்பு சுட்டியில் ஒரு முறை பார்த்து விடுங்கள்.

கோடிகளில் லாபத்தை காண்பித்துவரும் இந்நிறுவனங்கள் ஏன் நஷ்டம் என தெரிவிக்கிறார்கள் என்றால் ஒரு வருடத்திற்கு ஈட்ட வேண்டிய லாப குறியீடு (டார்கெட்) ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு அந்த அளவிலிருந்து லாபம் குறையும் போதெல்லாம் நட்டம் என அரசு கூச்சலிடுவதுதான் வேடிக்கையான மற்றும் நிதர்சனமான உண்மை. மேலும் கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல் வாதிகள், அமைச்சர்கள் ஆகிய அனைவரும் மத்திய பொதுத் துறை எண்ணை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து வைத்திருப்பதால், அவர்கள் லாப பங்கு குறைய நேரிடும் என அஞ்சும் போதெல்லாம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்படுகிறது.

எதிர்கொள்ள இருக்கும் அபாயங்கள்

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அரசுப் பேருந்துகள் என்பவை மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளது. அதில் சில மாநிலங்கள் மேற்சொன்ன விலை உயர்வினை தொடர்ந்து இனிமேல் தினசரி கொள்முதலாக தனியாரிடம் பேருந்துகளுக்கு டீசல் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டதாக செய்திகள் வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைப் பொறுத்தவரை டீசல் விலை உயர்வு களுக்கேற்ப பேருந்து கட்டண உயர்வுகளை அவ்வப்போது தீர்மானித்துக் கொள்ள REGULATORY AUTHORITY என்ற அமைப்பு உள்ளதால் விரைவில் அங்கு பேருந்து கட்டண உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

நம்முடைய முதலாளித்துவ ஊடகமான புதிய தலைமுறை தொலைகாட்சி, இந்த செய்தியை சொல்லி தமிழகத்தில் 22000 பேருந்துகள் இயங்கி வருவதால் தனியாரிடம் டீசல் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது, என செய்தியை சொல்வது போல் தனியார் மயத்திற்கான பாதையை தனது விவாதத்தின் போது சுட்டிக் காண்பித்துள்ளது. ஏனினல் புதிய தலைமுறையின் முதலாளி பச்சமுத்து எஸ்.ஆர்.எம் டிராவல்ஸ் நடத்தி வருகிறார் என்பதுதான்.

22,406 அரசு பேருந்துகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. மேலும் இங்குதான் எந்த ஒரு மாவட்ட தலைநகரிலிருந்தும் எந்த ஊருக்கும் முதல் பேருந்து இத்தனை மணிக்கு, கடைசி பேருந்து இத்தனை மணியுடன் முடிந்துவிடும் என்கிற நிலைமையின்றி எந்த ஊருக்கும் 24 மணிநேரமும் செல்லலாம் என்கிற வகையில் மக்கள் சேவை என்பது நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தில் 2.3 கோடி மக்கள் பயணித்து வருகின்றனர். பள்ளிப்பிள்ளைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பாலிடெக்னிக் மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், மொழிப்போர் தியாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பலருக்கு இலவச பேருந்து சேவை என்பது அரசு பேருந்துகளால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நெடுந்தடத்திலும் வழிநடையில் எந்த மோட்டலில் நிறுத்த வேண்டுமென்பது அவ்வப்போதைய ஆளும் கட்சியின் போக்குவரத்து அமைச்சரால் முடிவெடுக்கப்படுகிறது. கேவலத்தின் உச்ச கட்டம் என்னவென்றால், அந்த மோட்டலில்தான் நின்று சென்றது என்பதை உறுதிப் படுத்தும் வகையில் அரசுத் துறை பேருந்து இன்வாய்சில் மோட்டலில் ஒப்பம் அல்லது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பெற்று வரவேண்டும் (அந்த முத்திரையை அங்கு டேபிள் துடைக்கும் பையன் வைத்துக் கொடுப்பார்) (இது தெரியாமல் பாடாவதி மோட்டலில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இலவசம் என்பதால் நிறுத்துகிறார்கள் என நம்மில் பலபேர் பயணத்தின் போது அந்த பஸ் தொழிலாளர்களின் மீது வசவு பொழிந்திருப்போம்)

 • தனியார் பெட்ரோல் பங்கில் அரசு பேருந்துகள் டீசல் போட்டுக் கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டால் எந்த விற்பனையாளரிடம் வாங்க வேண்டும் என்பதை “கவனிப்பினைப்” பொறுத்து துறை அமைச்சர் முடிவு செய்வார்
 • அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள், கழக அதிகாரிகள் முதல் இந்த நிர்வாக முடிவினை செயல்படுத்தலில் ஈடுபடும் அனைவரையும் தனியார் பெட்ரோல் பங்க் முதலாளி கவனிக்க வேண்டியிருக்கும் – கவனிப்பார்
 • 95 லிட்டர் நிரப்பிவிட்டு 100 லி என எழுதிக் கொள்வார்
 • படிப்படியாக கலப்படம் உள்ளே புகும்
 • ஒரிரு மாதங்கள் தனியார் பங்க் மூலம் டீசல் நிரப்பிவிட்டு, பின்னர் அந்த தனியார் முதலாளி என் பெயரில் பில் போட்டுக் கொண்டு கழக பணிமனைக்குள் இருக்கும் பங்கில் நிரப்பச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் பணியாளர்களை வைத்தே நிரப்பிக் கொள்ளுங்கள் – அதற்கு தனியாக கவனித்து விடுகிறேன் என்பார்.
 • தற்போது விழாக்காலங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு ஊருக்கு அதிகமான பயணிகள் சென்றபின், அதற்கு பயன்படுத்திய பேருந்துகள் திரும்பி வரும் போது வசூலின்றி குறைவான பயணிகளோடு திரும்பிவரும். அதனால்தான் தனியார் வாகனங்கள் அத்தகைய காலங்களில் இரட்டிப்பு கட்டணம் பெறுகின்றனர்.
 • இனிமேல் பயணிகள் அடர்வு குறைவான நடைகளை நிறுத்திவிட்டால் என்ன என்கிற எண்ணம் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு தோன்றும்

உலகம் முழுவதும் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வில் பொது வாகன பயன்பாட்டினை அதிகரித்து, இரு சக்கரம், நான்கு சக்கர சிறிய வாகனங்கள், மற்றும் தனியார் வாகனங்களை குறைக்க வேண்டும் என உரக்க சொல்லப்பட்டு வரும் இந்த நேரத்தில், மன்மோகன், அலுவாலியா, சீனா தானா கூட்டணி இந்த பொதுத துறைக்கான மானிய வெட்டை அறிவித்துள்ளது.

இதனை பாராட்டி மேல்தட்டு அறிவு ஜீவிக்கள் அரசின் மானிய வெட்டு நல்ல நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என பிசினஸ் டுடே யில் கட்டுரை எழுதியாயிற்று.

இந்த விலை உயர்வினை

 • செயல்பாட்டில் ஒரு சிறிய திருத்தம் (small correction) என்கிறார் மத்திய நிதி அமைச்சர்
 • இந்த விலை உயர்வு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும், இதனால் விலைவாசி உயராது என்கிறார் 36 ரூபாயில் ஒரு நாள் உயிர் வாழலாம் என சொல்லும் திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா (18ம் தேதி பிசினஸ் டுடே ஆங்கில நாளிதழ்)

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை. இதை எதிர்த்து பொது மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியது உடனடி தேவையாகும்

– சித்ரகுப்தன்

மேலும் படிக்க

 1. இப்போதாவது புரிகிறதா? நடப்பது முதலாளிகளின் கூட்டாட்சி. மக்களின் உயிரை எப்படியாவது பறிக்காமல் விடமாட்டார்கள்.

 2. பொதுமக்களை குறிப்பாக நடுத்தரவர்க்கத்தை பிச்சைக்காரர்களாக மாற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.ஏழைகள் ஏற்கனவே பிச்சைக்காரர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.Public Distribution System கல்லறைக்குள் செல்வதற்கு திட்டம் போட்டாகிவிட்டது.உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்.
  இப்போது Public Transport ய்யும் Railway யும் சிக்கலில் வைத்து நம்மை கையேந்தவைக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர்களும்,உயர் அலுவலர்களும் என்றேனும் பஸ்ஸில் பயணம் செய்வார்களா?
  Public Transport System and Railways சரியாக இருந்தால், ரோடுகளை சரி செய்தாலே டீசல் பயன்பாடுகள் குறையும்.சொந்த வண்டிகளை உபயோகப்படுத்துபவர்கள் கணிசமாக குறைவார்கள். Week endல் மட்டும் சொந்த கார்களை குடும்பத்துடன் உபயோகிப்பார்கள்.
  ஏன் இப்படியெல்லாம் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்.
  அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் அதிக நாள் உயிருடன் இருப்பார்களா? இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றி யோசித்தால் என்ன?

 3. கட்டுரையில் தோழர் அய்யப்பட்டது இன்று துவங்கிவிட்டது. இன்று பல போக்குவரத்துக் கழகங்களிலும் சென்னையிலிருந்து சொல்லப்பட்ட வாய்மொழி உத்திரவிற்கிணங்க 3 முதல் 5 பேருந்துகளுக்கு பரீட்சார்த்தமாக தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் பிடித்தாகிவிட்டது. நாளை முதல் பல தனியார் முதலாளிகள் “மேலே” சென்று சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து “கவனிப்பு” தொடர்பான குதிரை பேரங்கள் தொடங்கலாம்.

 4. //அதிகமாக நேரடி கொள்முதல் செய்யும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே, ராணுவம், கப்பல் போக்குவரத்து போன்றவற்றிற்கு லிட்டருக்கு ரூ 11.67 விலை உயர்வு!! //

  எப்படி இந்த அரசு போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என்ற இவைகளை எவளவு கேவலமாக நடத்தினாலும், அவற்றை மூடமுடியவில்லை எனவே இது தான் சரியான பாதை என்று நினைத்து விட்டார்கள் போலும்.

 5. காங்கிரஸ் தனது இளவரசர் ராகுல் பதவிக்கு வர எடுத்துள்ள முடிவாக இருக்குமோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க