privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்

மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்

-

குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி  !
டாடா – அம்பானிகளின் எடுபிடி !
இந்துமதவெறி பாசிஸ்ட் !
இந்தியாவின் ராஜபட்சே !

மோடியின் முகமூடியை கிழிக்கும்  பொதுக்கூட்டம்

22.09.2013 அன்று திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமை வகித்தார்.  ‘கோடானு கோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே’ என்ற பாடலை பாடி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி கூட்டம் தொடங்கியது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் சாருவாகன் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி நரேந்திர மோடியை விரட்டியடிப்போம் என்ற முழக்கத்தோடு கடந்த ஒரு வாரமாக திருச்சியில் பேருந்துகளில், பொது இடங்களில், குடியிருப்பு பகுதிகளில், இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த அனுபவத்தை தொகுத்து கூறினார். இளைஞர்களுக்கு மோடியும், பாஜகவும் செய்தது என்ன? கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராட்டம், சமச்சீர் கல்விக்காக போராட்டம், ஈழ இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டம் என்று இளைஞர்கள் சார்பில் போராடுவது புரட்சிகர அமைப்புகள் மட்டும்தான் எனவும் இத்தகைய பிரச்சினைகளில் பாஜகவினர் எதிராக ஆளும் வர்க்கங்களின் கைக்கூலியாக செயல்பட்டனர் என்பதையும் விளக்கி பேசினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் நரேந்திர மோடி குறித்த பிம்பத்தை திட்டமிட்டு உருவாக்குவதை அம்பலப்படுத்தினார். “குஜராத்தில் வளர்ச்சி, வளர்ச்சி என்கிறார்கள், அது என்ன வளர்ச்சி என்று யாருக்கும் தெரியாது. அப்படி திட்டமிட்டு உருவாக்கப்படும் முகமூடியை கிழிப்பதுதான் பொதுக்கூட்டத்தின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

“ஈழத் தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி லட்சக்கணக்கான பேரை கொன்று குவித்த ராஜபட்சேவுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல நரேந்திர மோடி. அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு எதிராக சங்க பரிவார் அமைப்புகள் கொலை வெறிக் குற்றங்களில் ஈடுபடும் போது காவல் துறை அதனைக் கட்டுப்படுத்தாமல் விட்டு விடுமாறு சொன்னவர் நரேந்திர மோடி.

கொலைகளை நாங்கள்தான் செய்தோம் என்று பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களே ஒப்புதல் வாக்குமூலமாக சொல்லியிருக்கிறார்கள், மோடி காவல் துறையை செயல்பட வேண்டாம் என்று தடுத்ததாக மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரியே சொல்லியிருக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குஜராத் நிர்வாகம் மீது நம்பிக்கை இல்லை, மோடி நவீன நீரோ மன்னன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், இதை எல்லாம் மறைப்பதற்கு மோடியைப் பற்றிய பிரச்சாரத்தை ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்வது போல செய்கிறார்கள். இதை முறியடிக்க தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக நடக்கும் இயக்கம் இந்தியா முழுவதற்கும் ஒரு முன்மாதிரியாக அமையும். ராஜபட்சேவை இனப்படுகொலைக்காக தண்டிக்க வேண்டும் என்று நாம் போராடுவது போல நரேந்திர மோடி முஸ்லீம் மக்களின் படுகொலைக்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார்.

“கேள்வி கேட்காமல் மோடிதான் தலைவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் பிறந்தான் என்று மசூதியை இடித்தார்கள். அது எங்கள் நம்பிக்கை. அதைக் கேள்வி கேட்கக் கூடாது. நாங்கள் மசூதியை இடிப்போம் என்றார்கள். அது போல மோடி திறமையானவர் என்பது அவர்களது நம்பிக்கை, அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது, அதை ஆராயக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம்.

‘இளம் தாமரை மாநாட்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களுக்குத் தெரியாத உண்மை உங்களுக்குத் தெரிந்து விட்டதா. லட்சக்கணக்கான இளைஞர்கள் மோடி பிரதமர் ஆவார் என்று நம்புகிறார்கள், உங்களுக்கு என்ன பிரச்சனை’ என்று கேட்கிறார்கள். இன்றைக்கு வரலாறு தெரியாத இளைஞர்களுக்காக பொய்யான செய்திகள், மோசடி இணைய பிரச்சாரங்கள் உருவாக்கப்படுகின்றன.”

“1992-ல் மனு தர்மத்தின் காவலன் ராமன் படம் எரிப்பு போராட்டம், 1993-ல் திருவரங்கத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் என்று பார்ப்பனிய இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் தமிழ்நாட்டில் இடையறாத விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனால், திராவிட இயக்கத்தின் வாரிசுகள் என்று சொல்லக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், அதிமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளோடு கூட்டணி வைத்துக் கொண்டு, தங்களுடைய பதவிக்காக, தங்களுடைய பிழைப்புக்காக அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரத்தை தேடிக் கொடுத்தார்கள்.

2002-ல் குஜராத்தில் மோடியால் முசுலீம் இனப்படுகொலை நடத்தப்பட்ட போது திமுக, மதிமுக கட்சிகள் அதே கூட்டணியில் இருந்தார்கள். வை கோபால்சாமி, தான் நாடாளுமன்றத்தில் மோடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதை பெருமையாக எழுதினார்.”

“பாரதிய ஜனதா கட்சி மதக் கலவரத்தை தூண்டும் போதுதான் தலையெடுக்க முடிந்தது. 1985-ல் இந்தியாவில் தனியார்மயம், தாராள மயம் அமலாக்கப்பட்ட பிறகுதான் மதவெறி அரசியல் தலையெடுத்தது. ராஜீவ் காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டு, நரசிம்மராவ் ஆட்சியில் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சியில் இந்த மறுகாலனியாக்க கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்பட்டன. இன்றைக்கு தனியார்மயத்தின் விளைவாக நடந்துள்ள காங்கிரசின் ஊழல்களை பற்றி குற்றம் சாட்டும் அருகதை பாரதிய ஜனதா கட்சிக்கு கிடையாது.

2004-ல் இந்தியா ஒளிர்கிறது என்று விளம்பரம் கொடுத்தார்கள், அதை எதிர்த்து சாதாரண மனிதனின் இந்தியா (ஆம் ஆத்மி) என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது. அப்போது மகத்தானவராக நிறுத்தப்பட்ட மன்மோகன் சிங் இப்போது இந்திய தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளின் தேவைகளை நிறவேற்றிக் கொடுப்பதில் திறமையாக செயல்படவில்லையாம். அதனால் இப்போது இந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஒரு பாசிஸ்ட் தேவைப்படுகிறான். அதுதான் மோடி. 2002 மதப் படுகொலை நடத்தியது போன்று இரக்கம் இன்றி மக்களை ஒடுக்கும் நபர்தான் அவர்களுக்கு தேவை. அதுதான் மோடி.”

“மேற்கு வங்காளத்தில் மக்கள் போராடி விரட்டியடித்த டாடா  நானோ கார் தொழிற்சாலையை மோடி வரவேற்று குஜராத்தில் இடம் கொடுத்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விவசாயிகளின் நிலத்தைப்  பிடுங்கி டாடாவுக்கு கொடுத்ததுதான் அவரது சாதனை. மாருதி தொழிலாளர்கள் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்படுவதை எதிர்த்து போராடிய போது, நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் சுசுகியை எதிர்த்த போது, சுசுகி நிறுவனத்தை குஜராத்துக்கு வரவேற்க ஜப்பானுக்கு போன கருங்காலி மோடி.”

“குஜராத் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்று சொல்கிறார்கள். இது உலக மகா பித்தலாட்டம், பொய். எந்த ஆதாரமும் இல்லாத மிகப்பெரிய மோசடி. புள்ளிவிபரங்களின் படி குஜராத்தில் மக்களுக்கு ஊட்டச் சத்து இல்லை, நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள்.  வளர்ச்சி என்பது முதலாளிகளுக்கு மட்டும்தான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன” என்பதை விளக்கும் புள்ளிவிபரங்களையும், தகவல்களையும் குறிப்பிட்டு விளக்கிப் பேசினார்.

(இந்த முக்கியமான உரை ஆடியோ பதிவாக இன்று மாலை வினவில் வெளியிடப்படும்.)

அதனைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்துமதவெறியை அம்பலப்படுத்தும் பாடல்கள், மதவேறுபாடுகளைக் கடந்து நாம் பாட்டாளியாக ஒன்றிணைவதை வலியுறுத்தும் பாடல்கள் எனப் பல்வேறு பாடல்களை தோழர் கோவன் தலைமையிலான மையக் கலைக்குழுத் தோழர்கள் ஆடலுடன் பாடினர். இந்த நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்துடம் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் மேடைக்கு முன் நாற்காலிகளில் அமர்ந்தும், சாலையின் மறுபுறம் கூடி நின்றும் உரைகளையும், கலை நிகழ்ச்சியையும் கேட்டனர். குறிப்பாக இசுலாமிய மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தோரும் வந்திருந்தனர். கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000 ஆகும். இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.

மிகக்குறுகிய காலத்தில் இந்த பிரச்சார இயக்கத்தை திருச்சி மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தோழர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த மூன்று தோழர்களை முப்பது பாஜக குண்டர்கள் சேர்ந்து தாக்க முயன்றனர். ஆனால் தமது அரசியல் மேலாண்மையால் அதை தடுத்து நிறுத்திய தோழர்களை பின்பு போலீசு கூட்டிச் சென்று அனுப்பியது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த தோழர்கள் பாஜகவின் நிர்ப்பந்தத்தால் போலீசால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இப்படி இந்து மதவெறியருடன் தெரு மோதல்களும் இந்த பிரச்சாரத்தில் நடந்தன. திருச்சி நகரமெங்கும் மோடி எனும் இந்துமதவெறி பாசிஸ்ட் மற்றும் கார்ப்பரேட் கைக்கூலியின் மோசடிகளை தோழர்கள் மக்களிடையே கொண்டு சேர்த்தனர்.

1. பிரச்சாரம், போஸ்டர்கள்

2. பொதுக்கூட்ட ஏற்பாடுகள்

3. மேடைக் காட்சிகள்

4. மக்கள் கூட்டம்

5. கலை நிகழ்ச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தோழர் ராஜு, தோழர் மருதையன் ஆகியோரின் உரைகளை விரைவில் தனியாக வெளியிடுகிறோம்.