Saturday, July 20, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்காசுமீரில் காசு கொடுத்து ஜனநாயகம் வழங்கும் இராணுவம்

காசுமீரில் காசு கொடுத்து ஜனநாயகம் வழங்கும் இராணுவம்

-

ந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி கே சிங், தொழில்நுட்ப சேவைப் பிரிவு (டெக்னிகல் சர்வீசஸ் டிவிஷன்) என்ற ரகசிய ராணுவ உளவு அமைப்பு மூலம் காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்தார் என்று பாதுகாப்புத் துறை விசாரணை ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசை கவிழ்க்க முயற்சித்ததாகவும் ராணுவ அதிகார மட்டத்தை மாற்றி அமைக்க முயற்சித்தாகவும் செப்டம்பர் 20, 2013 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தி வெளியானது.

வி கே சிங்
முன்னாள் தலைமைத் தளபதி வி கே சிங்

இப்போதைய தலைமை தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், தனக்கு முந்தைய தளபதியான வி கே சிங் கால கட்டத்தில் அமைக்கப்பட்ட அதி ரகசிய பிரிவின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் படி உத்தரவிட்டிருந்தார். அதன் படி அமைக்கப்பட்ட விசாரணை வாரியத்தின் உறுப்பினரான லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறார். இந்த அறிக்கை மார்ச் மாதம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அமைச்சகம் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரைத்திருக்கிறது.

வி கே சிங், ஹரியானாவில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்களின் கூட்டம் ஒன்றில் நரேந்திர மோடியுடன் மேடையேறியதால்தான் காங்கிரஸ் அவரை குறி வைக்கிறது என்று பாஜக புலம்பியது. “பாரதிய ஜனதா கட்சியில் சேர விரும்பும் பெரிய மனிதர்களை காங்கிரஸ் வேண்டுமென்றே பழி வாங்குகிறது.” என்கிறார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங். அதாவது, கிரிமினலாகவோ ஊழல்வாதியாகவோ இருந்தாலும், எங்க கட்சியில் சேர்ந்த பிறகு ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதுதான் ராஜ்நாத்தின் கவலை. கட்சியில் இல்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுப்ப்பதற்கு அவருக்கு தடையில்லை.

இதைத் தொடர்ந்து வி கே சிங் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். “அமைச்சர்களின் சொந்த பயன்பாட்டுக்காக பணம் கொடுக்கவில்லை, ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கும், தெருக்களில் கல்லெறிந்து போராடும் மாணவர்களை கட்டுப்படுத்தவும்தான் பணம் கொடுத்தேன். பணம் வாங்கிய தொண்டு நிறுவனம், இந்த வகையில் மிகச் சிறப்பாக பணியாற்றி 2011 உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவும், கல் எறிதல் போராட்டங்களை நிறுத்தவும் உதவி செய்துள்ளது. எனவே இது தேசபக்த செயல்” என்று இந்தியா காஷ்மீரில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் விவசாயத் துறை அமைச்சர் குலாம் ஹசன் மீர் மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு மாநிலத்தில் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ 1.19 கோடி கொடுத்ததாகவும், ஜம்மு காஷ்மீரில் மிகவும் தேசபக்தி நிறைந்த அரசியல்வாதிகளில் ஒருவர் மீர் என்றும் அவரது பணி மற்ற உளவு நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் வி கே சிங் தெரிவித்தார். மீர் போன்ற அரசியல்வாதிகளுடனும் இந்தியாவுக்கு ஆதரவான தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து பிரிவினைவாதிகளின் ‘இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை’ மழுங்கடிக்க முயன்றதாக கூறினார். காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு அரசு எந்திரம், ஊடகங்கள், எடுபிடிக்காக ஓமர் அப்துல்லாவின் மாநில அரசு, ராணுவம் இவற்றைத் தாண்டி காஷ்மீரில் இந்திய தேசியத்தை நிலை நாட்ட கைக் கூலி கொடுத்து ஆள் அமர்த்த வேண்டியிருக்கிறது.

“மீர் மட்டுமின்றி ஜம்மு காஷ்மீரின் பல அரசியல்வாதிகளுக்கு இந்திய ராணுவமும், உளவு நிறுவனங்களும் பணம் கொடுத்திருக்கின்றன. அதன் மூலம் தேசிய பணியை ஊக்குவித்து மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட முயற்சித்தன” என்கிறார் வி கே சிங். “என் பதவிக் காலத்தில் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரியும். இது இதற்கு முன்பு நடக்காத புதிய விஷயமில்லை. சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு பணப் பட்டுவாடா செய்து வந்திருக்கிறது. ” என்று இந்திய ஆட்சியாளர்களின் ஒட்டு மொத்த காஷ்மீர் ஊழலை போட்டு உடைத்திருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தவும், மக்கள் போராட்டங்களை முடக்கவும், நாட்டின் பிற பகுதிகளில் கார்ப்பரேட் முதலாளிகள், ஆற்று மணல் காண்டிராக்டர்கள், கிரானைட் கொள்ளையர்கள், தாது வள திருடர்கள் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்து விடுகிறார்கள். காஷ்மீரில் பாவம் அப்படிப்பட்ட வாய்ப்புகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. ஒரு தேர்தல் நடந்து ஒரு அரசு அமைந்தால்தானே இப்படி ‘ஜனநாயக’ சக்திகள் வலுப் பெறும். எனவேதான் அத்தகைய ஜனநாயகத்தை வேர் பிடிக்கச் செய்ய வி கே சிங், தேச பக்தியுடன் காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்துள்ளார்.

பரூக் - ஓமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவும், அவரது தந்தை பரூக் அப்துல்லாவும்.

இந்திய ராணுவத்தின் கைக்கூலிகள்தான் தம்மிடம் ஓட்டுக் கேட்க வரும் ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் என்பது காஷ்மீர் மக்கள் மத்தியில் அம்பலமானது அம்மாநிலக் கட்சிகளை கதி கலங்க வைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எங்களுக்கு பலத்த தொல்லைகளை ஏற்படுத்துகின்றன என்று கலங்கியிருக்கிறார். எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி, அனைத்து அரசியல்வாதிகள் மீதும் கரி பூசப்பட்டுள்ளதாகவும் ஆனால் எல்லா தலைவர்களும் புது தில்லியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுவதில்லை என்றும் கூறியிருக்கிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபை தலைவர் அருண் ஜெட்லியோ இத்தகைய ரகசியங்கள் வெளியில் வந்திருக்கவே கூடாது என்று கண்டிக்கிறார். இப்படி ரகசியமாக செயல்படும் ஒரு தேச பக்த அமைப்பைப் பற்றி எப்படி வெளியில் பேசலாம்? அது தேசத் துரோகம் இல்லையா? என்று எச்சரிக்கிறார்.

எதையும் சட்டப்படி செய்யக் கோரும் அரசியல் பார்வையாளர்கள் (ஞாநி போன்றவர்கள்) ராணுவம் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுப்பது சட்டப்படி தவறு. இது இந்திய ராணுவத்தை ஊழல் படுத்துவது என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள். “இந்திய ராணுவம் சிறப்பான பாரம்பரியங்களை பின்பற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு பெருமையுடன் சேவை செய்யும் அமைப்பு. அதன் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும்” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

“யாராவது தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் தவறு நடந்ததா என்று முதலில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும், அவர் சொல்வதை அப்படியே நாம் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அமெரிக்கா போகும் பிரதமருடன் விமானத்தில் பயணித்த ஒரு மூத்த அதிகாரி கூறியிருக்கிறார். இது தொடர்பாக வி கே சிங் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால் அவர் மேலும் அழுகிப் போன ரகசியங்களை வெளியில் விட்டு விடுவாரோ என்று ஆளும் வர்க்கம் அஞ்சி நடுங்குகிறது.

‘காஷ்மீரில் பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாதிகளை எதிர்த்து இந்திய ராணுவம் வீரத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது’ என்று மோடி முழங்கிக் கொண்டிருக்கும் போது அம்மக்களை ஒடுக்குவதற்கு இராணுவத்தை மட்டுமில்லை, தன் ஊழல் பலத்தையும் இந்திய அரசு இறக்கி விட்டிருக்கிறது என்று தெரிகிறது.

காஷ்மீரில் பல லட்சம் படையினரை குவித்து தனது பூட்சுக்கு அடியில் காஷ்மீர் மக்களின் உரிமைகளை நசுக்கி வரும் இந்திய அரசு பொதுத் தேர்தல் நடத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது, சட்ட சபை தேர்தல் நடந்து மாநில அரசு அமைவது, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது என்று இந்திய ‘ஜனநாயகம்’ காஷ்மீரிலும் செயல்படுவதாக காட்டிக் கொள்வதில் தீவிரமாக உள்ளது. ஆனால், காஷ்மீரிலிருந்து இன்னமும் ராணுவம் விலக்கப்படவும் இல்லை, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் தளர்த்தப்படவும் இல்லை.

பொம்மை முதலமைச்சர், பொம்மை மக்கள்  பிரதிநிதிகள் இவர்களை முன் வைத்து பின்னின்று ஆட்சி நடத்துவது இந்திய ராணுவம்தான் என்பதை இந்தத் தகவல்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

ஜெய் பாரத் மாதா! ஜெய் தேசபக்தி! ஜெய் இந்திய ராணுவம்!

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க