Saturday, May 3, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் : கானல்நீர் தாகம் தீர்க்காது !

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் : கானல்நீர் தாகம் தீர்க்காது !

-

தமிழ் தேசிய கூட்டமைப்புலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில் முடிவுகள் வந்தவுடன் அதில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பின்வரும் செய்தியுடைய அறிக்கை ஒன்றை வெளியிட்டது:

‘‘மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகவும் தெளிவானதாக உள்ளது. ஐக்கிய, பிளவுபடாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுயமரியாதையோடும், கௌரவமாகவும் போதிய சுயாட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, அபிலாசைகளை அடைய விரும்புகிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயல்படும்  அதே வேளையில், அரசாங்கமும் தனது பங்களிப்பை முழுமையாகச் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தேர்தலின் பெறுபேறுகள் – அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கின்றது.”

தேர்தலுக்கு முன்னும் பின்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதே கருத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்து விட்டார்கள். ‘தமிழீழத் தனியரசு  என்ற எங்களது நிலைப்பாடு மாறுதல் அடைந்துள்ளது. ஈழப் போரால் ஈழத்தைத் தர முடியபில்லை. எனவே, ஜனநாயக முறைப்படி அரசாங்கம் எதனைச் சட்டப்படியாக ஏற்றுக்கொள்கிறதோ, அதை முன்வைத்துத்தான்  மாநில சுயாட்சிக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் இனி போராட்டத்தை நடத்துவோம். இதில் பிரிவுக்கு இடமில்லை. ஒரே இலங்கையினுள் எங்களை நாங்களே ஆளும்விதமாக சம உரிமை என்னும் தீர்வைக் கொண்டுவரத்தான் முனைப்புக்காட்டி வருகிறோம்” என்று சொல்லி விட்டார்கள்.

இதையே முள்ளிவாய்க்காலுக்கு முன்பு இவர்கள் சொல்லியிருந்தால், அமிர்தலிங்கம் போன்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் போல இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டிருப்பார்கள். இன்றோ, ஆற்றாமையில் கிடந்து புரளும் புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் சிலர் ஈனக்குரலில் தமது எதிர்ப்பை இணையத் தளங்களில் புலம்புகிறார்கள். ‘தமிழக அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக ஈழ இனப் பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்கள்’ என்றும், ‘இனி ஈழப் பிரச்சினையில் தமிழகத் தமிழினவாதிகள் தலையிட வேண்டாம்; அது இலங்கை அரசுடனான இராணுவ வெளியேற்றம், ஈழத் தமிழருக்கான சம உரிமைப் போராட்டத்துக்கு ஊறு விளைவிக்கிறது’ என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சொல்லியும் கூட, தமிழகத் தமிழினவாதிகள் விளக்கெண்ணையில் வெண்டைக்காய் வறுப்பதற்கு எத்தனிக்கிறாரர்கள். 1962 – இல் பிரிவினை எதிர்ப்புச் சட்டம் வருவதாக மிரட்டியதும் திராவிடத்தைக் கைவிட்டு மாநிலச் சுயாட்சியைக் கையிலெடுத்தன, கழகங்கள். அந்நிலைக்குப் போய் விட்டது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இராஜபக்சேவையும், ஈழத் துரோகிகளையும் மாகாண சபைத் தேர்தல்களில் ஈழ மக்கள் தோற்கடித்து விட்டதைச் சொல்லித் தமிழகத் தமிழினவாதிகள் அனைவரும் வரவேற்கிறார்கள். இங்கிருந்து தொடங்குவோம், இந்த வெற்றியைத் தமிழீழத் தாகம் தீர்க்கப் பயன்படுத்துவோம் என்று நம்பச் சொல்லுகிறார்கள். கானல் நீரைக் குடித்து தாகம் தீர்க்கவோ, பொய் நெல்லைக் குத்திப் பொங்கவோ முடியாது. ஏற்கெனவே, சர்வதேச சமூகத்துக்கும் ஐ.நா. சபைக்கும் இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுப்பது என்ற தந்திரத்தின் கீழ் தமிழீழத் தீர்வைத் தமிழினவாதிகள் தள்ளி விட்டார்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமைக்கு நாம் எதிரானவர்கள் என்று தமிழகத் தமிழினவாதிகளும், புலி ஆதரவாளர்களும் நம் மீது வழக்கம் போல அவதூறுகளை அள்ளி வீசக்கூடும். ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமரச சரணடைவுக்கும் புலிகளின் பாசிச இராணுவவாதத்துக்கும் மாறாக, தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழான புதிய ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமை ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.

-தலையங்கம்
___________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
___________________________________________