privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !

சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !

-

ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டிருந்த பவானி சிங்கை நீக்கி கர்நாடகா அரசு கடந்த செப்.16 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதனை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு, அவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலம் செப்.30-ஆம் தேதியோடு முடிவடைவதால், இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.  பவானி சிங்கை நீக்கும் கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்தும்; கர்நாடகா உயர் நீதிமன்றம் கர்நாடகா மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து நீதிபதி பாலகிருஷ்ணாவிற்குப் பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தும் இவ்வழக்கில் செப்.30 அன்று தீர்ப்பளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

பாலகிருஷ்ணா, பவானி சிங்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலுக்கு சாதகமாக நடந்து கொண்ட நீதிபதி பாலகிருஷ்ணா மற்றும் அரசு வழக்குரைஞர் பவானி சிங்.

‘‘வழக்கை விசாரிக்க புதிய அரசு வழக்குரைஞரும் புதிய நீதிபதியும் நியமிக்கப்பட்டால், அவர்கள் 34,000 பக்கங்கள் கொண்ட  இந்த வழக்கின் சாட்சியங்களைப் படித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட காலம் எடுக்கும்; எனவே, பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என வாதிட்டது, ஜெயா கும்பல்.  இதே காரணத்தை வேறு வார்த்தைகளில், ”அசாதாரணமான சூழ்நிலையையும் பல தொகுதிகளைக் கொண்ட சாட்சியங்களையும்” கருத்தில் கொண்டு இத்தீர்ப்பை அளிப்பதாகக் கூறியிருக்கிறது, உச்சநீதி மன்றம். டான்சி வழக்கின் தீர்ப்பில் ஜெயாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்த உச்சநீதி மன்றம், சொத்துக்குவிப்பு வழக்கிலோ ஜெயாவின் மனம் எதை விரும்பியதோ, அதனையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.

‘‘18 ஆண்டு காலமாக நடந்துவரும் இவ்வழக்கு முடிவடையும் தருணத்தில், சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டிலுள்ள தனது அரசியல் எதிரிகள் தூண்டிவிட்டுத்தான் கர்நாடகா அரசு பவானி சிங்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது” என வாதிட்ட ஜெயா, இதன் மூலம் பவானி சிங்கைத் திரும்பப் பெற்றதைத் தனக்கு எதிராக நடத்தப்பட்ட சதியாகக் காட்டினார்.  ஆதாரமற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுக்களை வீசுவதில் கைதேர்ந்தவரான ஜெயா, தி.மு.க.வின் மேல் இப்படிபட்ட பழியைப் போட்டிருப்பது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல.  ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை, நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றுச் செல்வதற்கு முன்பே தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என ஜெயா கும்பல் பல சதிகளை அரங்கேற்றியதும், இதற்கு நீதிபதி பாலகிருஷ்ணாவும், வழக்குரைஞர் பவானி சிங்கும் ஒத்துழைப்பு கொடுத்து வந்ததும்தான் உண்மை.  உச்ச நீதிமன்றம் இந்த உண்மைகளைத் தெரிந்தே புறக்கணித்து, ஜெயாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்ட நாள் தொடங்கி கடந்த பதினேழு, பதினெட்டு ஆண்டுகளாகப் பல்வேறு சப்பையான, மோசடியான காரணங்களை முன்வைத்து மனுவிற்கு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்து வந்த ஜெயா கும்பல், பவானி சிங் அரசு வழக்குரைஞராகவும், பாலகிருஷ்ணா நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட பிறகு, வழக்கை இழுத்தடிப்பதையெல்லாம் கைவிட்டு, நல்ல பிள்ளையைப் போல நடந்து கொண்டது.  எலி காரணமில்லாமல் அம்மணமாக ஓடாதே! இந்த நிலையில்தான், ”அரசு வக்கீலுக்கு உதவத் தங்களையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் மனு போடப்பட்டு, அதற்கு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியும் பெறப்பட்டது.  அதன் பிறகுதான் நீதிபதி பாலகிருஷ்ணாவும் அரசு வழக்குரைஞர் பவானி சிங்கும் குற்றஞ்சாட்டப்பட்ட எதிர்த்தரப்பிற்குச் சாதகமாக நடத்தியிருக்கும் தகிடுதத்தங்கள் அம்பலத்திற்கு வந்தன.

பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டவுடனேயே, அரசு தரப்பு சாட்சியங்களான 259 பேர் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்வதற்குத் தனக்கு இரண்டு மாத அவகாசம் வேண்டும் எனக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.  ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா,கால அவகாசம் அளித்தால், தான் நீதிமன்றத்தில் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்க நேரும் என்ற மொன்னையான காரணத்தைக் கூறி, அவகாசம் அளிக்க மறுத்து விட்டார்.  பவானி சிங் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாப்பிருந்தும் அதனைப் புறக்கணித்தார்.  இதன் மூலம் ஆவணங்களைப் படித்துப் பார்க்காமலேயே இறுதி வாதங்கள் நடைபெறுவதை பவானி சிங்கும் பாலகிருஷ்ணாவும் கூட்டுச் சேர்ந்து அனுமதித்தனர்.

jaya-case-captionஜெயாவும் மற்ற மூவரும் தங்களது தரப்பில் 133 சாட்சியங்களை விசாரிக்க வேண்டுமெனக் கூறிவிட்டு, பிறகு அதனைத் திடீரென 99 ஆகக் குறைத்துக் கொண்டனர்.  இதற்கு பவானி சிங்கும் உடந்தையாக நடந்து கொண்டார் என்பதோடு, இந்த 99 சாட்சியங்களையும் அவர் முறையாக குறுக்கு விசாரணை செய்யவில்லை.  இதில் 99-ஆவது சாட்சியமாக இலஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சம்பந்தம் நிறுத்தப்பட்டார்.  அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க வேண்டிய டி.எஸ்.பி. சம்பந்தம் குற்றவாளிகளின் தரப்பில் சாட்சியம் அளித்ததையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக  ஆவணங்கள் அளித்ததையும் அரசு வழக்குரைஞர் மட்டுமல்ல, நீதிபதி பாலகிருஷ்ணாவும் அனுமதித்தார்.

தமிழக இலஞ்ச ஒழிப்பு துறைதான் இந்த வழக்கையே நடத்தி வருகிறது.  ஆனால், தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றவுடனேயே, இத்துறையைச் சேர்ந்த வழக்கு விசாரணை அதிகாரியான சம்பந்தம், ”இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்” எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயாவிற்குச் சாதகமாக மனு போட்டு, நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  எனவே, டி.எஸ்.பி.சம்பந்தத்தை ஜெயா தரப்பு சாட்சியமாக நீதிமன்றம் விசாரித்திருப்பது வழக்கையே குழிதோண்டி புதைக்கும் தீய உள்நோக்கம் கொண்டதாகும்.

இப்படியாக இவ்வழக்கு விசாரணை குற்றவாளிகளுக்குச் சாதகமான முறையில் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டித்தான், பவானி சிங்கை நீக்கக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் வழக்கு தொடுத்தார்.  இதன் அடிப்படையில்தான் பவானி சிங்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை கர்நாடகா அரசு எடுத்தது.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டதே முறைகேடாக நடந்திருக்கிறது.  இது இவ்வழக்கில் ஜெயாவிற்குச் சாதகமாக நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய மோசடியாகும்.

பவானி சிங்கிற்கு முன்பு இவ்வழக்கின் சிறப்பு அரசு வழக்குரைஞராக நீண்ட காலம் பணியாற்றிவந்த பி.வி. ஆச்சார்யாவிற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து, அவரைத் தாமே பதவியிலிருந்து விலகுமாறு செய்தது, ஜெயா கும்பல்.  அவரது பதவி விலகல் கடிதத்தை, அப்பொழுது கர்நாடகா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விக்ரமஜித் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்.  விக்ரமஜித் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்ற பிறகு, பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிறீதர் ராவ் என்பவர்தான் ஆச்சார்யாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டார்; ஆச்சார்யாவுக்கு அடுத்து வேறொருவரை நியமிக்க அரசு அளித்த பட்டியலில் இல்லாத ஒருவரை – பவானி சிங்கை – அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமித்திருக்கிறார்.  அப்பொழுது கர்நாடகாவை ஆண்டுவந்த ஜெயாவின் பங்காளியான பா.ஜ.க. அரசு இந்த முறைகேட்டைத் தெரிந்தே அனுமதித்ததோடு, பவானி சிங்கிற்கு ஒரு பெரும் தொகையைச் சம்பளமாகவும் நிர்ணயம் செய்திருக்கிறது.

பவானி சிங் சட்டவிரோதமான முறையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அம்பலமான பிறகும், அம்முறைகேடு குறித்து விசாரிக்காமல் ஒதுக்கித் தள்ளிவிட்டது உச்ச நீதிமன்றம். இன்னொருபுறம், பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்திருப்பதன் மூலம், அவரது முறைகேடான நியமனத்தையும் அவர் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டதையும் சட்டபூர்வமாக்கி விட்டது.  ஜெயாவைக் காப்பாற்றப் போய், இப்பொழுது நீதிமன்றமே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.  இனி, இந்த வழக்கில் நியாயமான முறையில் நீதி வழங்கப்படும் என எவரேனும் நம்ப முடியுமா?

-ஆர்.ஆர்.
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
_____________________________________

  1. வழக்கரிஞர் மாற்றப்பட்டால் 3400 பக்கங்களை படித்து வழக்கை முடிக்க மேலும் காலதாமதம் ஆகும் எனவே மாற்றக்கூடாது: ஜெயா..

    வழக்கை விரைந்து முடிக்கனும் என்ற எண்ணம் இருந்தால் ஏன் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்தாமேல் வாய்தா வாங்கினார் ஜெயா…?

  2. நல்ல காமெடி சார், 1996-2000 வரை திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட எல்லா வழக்குகளிலும் விடுதலை பெற்றதில் இருந்தே, இந்த வழக்கும் அப்படி தான் தீர்ப்பு வரும் என்று நன்றாக தெரிந்துவிட்டது. இத்தனை நாள் வழக்கு முதல்வர் ஜெயலலிதாவால் வேண்டும் என்று காலதாமதம் செய்யப்படுகிறது என்று கூறியவர்கள், இப்போது எங்கே நிரபராதி என்று நிறுபிக்கபட்டு முதல்வர் விடுதலை ஆகி விடுவரோ என்று காலதாமதம் செய்யப்பார்கிறார்கள். அது என்ன நீதிபதி நியமிக்கும் போதும், வக்கீல் நியமிக்கும் இந்த எதிர்ப்பும் கட்டாதவர்கள், அவர்கள் நியமிக்க பட்ட பிறகு 99 சாட்சிகள் விசாரிக்க பட்ட போது எதிர்ப்பும் கட்டாதவர்கள். எங்கே தேர்தல் வரும் போது தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தால் அது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயத்தில்

    1. எங்களை வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    2. வக்கீல் சரி இல்லை அவரை மாற்றவேண்டும் என்று கூறுகிறார்கள்.

    இப்படி வழக்கு போட்டதால் இப்போது நீதிபதி பதவி ஓய்வு பெற்றுவிட்டார். இனி அவர்கள் எண்ணம் போல் வழக்கு முடிய அதிக நாள் ஆகும். ஆனால் கண்டிப்பாக தமிழக மக்கள் இந்த முறையும் திமுக விற்கு தேர்தலில் கண்டிப்பாக படம் கற்று தருவார்கள்.

    ஓர் சிறிய சந்தேகம் இது நடந்து பல நாள் ஆன பிறகு வினவு இப்போது இதை பற்றி எழுதுவது ஏன்? விஷயம் ஒன்றும் கிடைக்கவில்லையா அல்லது ரொம்ப நாள் யோசித்து யார் மீது குற்றம் சொல்வது என்று தெரியாமல் நீதி மன்றத்தின் மீதே குற்றம் சுமத்துகிறதா.

    • சங்கர், உங்கள் வாதப்படி, கலைஞர் எந்த ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை. குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆகவே கலைஞர் ஊழல் செய்யாதவர் என்றால் ஒப்புக்கொள்வீர்களா? ஜெ. மீதான எந்த வழக்கிலும் அவர் நிரபராதி, பொய் குற்றச்சாட்டு என்று எந்த நீதிபதியாவது சொன்னாரா? டான்ஸி வழக்கில் கூட மனசாட்சிக்கு பதில் சொல்லவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பொய் வழக்கு என்றால் 130 வாய்தா வாங்கியது ஏன்? மாதம் 1 ரூபாய் சம்பளம். 5 வருட வருமானம் ரூ. 60 கோடிக்கு மேல். ஆனால் உங்களைப்பொறுத்தாரை நிரபராதியா? உங்கள் கணித ஆசிரியர் யார் என்று அறிய ஆவலாக உள்ளது.

      • புதியவன் ராஜ் சார், முதல்வர் ஜெயலலிதா அரசியளுக்கு வருவதற்கு முன் பிரபல நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் அவர் சம்பாதித்த சொத்துகளில் இருந்து அவர் சில நிறுவனங்கள் நடத்திவந்தார் என்பது உங்களக்கு தெரியாதா ? அவர் முதல்வராக இருந்த பொது ரூ 1 சம்பளம் வாங்கி கொண்டு 60 கோடி சொத்து சேர்த்தார் என்று சொல்லும் நீங்கள் இதை ஏன் வசதியாக மறந்து விட்டீர்கள். அதே போல் சர்க்காரிய கமிசன் அறிக்கையை எப்பிடி தங்களால் மறக்க முடிந்தது. மேலும் 1996-2000 திமுக ஆட்சி காலத்தில் முதல்வருடன் சேர்த்து பல பேர் மீது வழக்கு போடப்பட்டது அவர்களில் பெரும்பாலானோர் கட்சிதாவியது தெரியாதா? 130 வாய்த்த என்று கூரும் நீங்கள் ஒரு வழக்கு மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது அதன் ஆவணங்கள் சரியாய் மொழி மற்றம் செய்ய பட்டுள்ளத ஆவணங்கள் சரியாய் உள்ளத என்று பார்க்க குற்றம் சாட்ட பட்டவருக்கு தெரியபடுத்த வேண்டும் ஆது செய்யபடாத போது வழக்கு விசாரணை வரும்போது அதற்கு வாய்ப்புகேற்பது தவறு இல்லையே. நீங்கள் சொல்வது போல் எந்த வாழ்க்கை நேர்மை அற்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க நினைத்திருந்தால் அவரின் போன ஆட்சி காலத்திலேயே இந்த வழக்கு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும். அதேபோல் அவர் வழக்கிற்கு பயந்து ஒன்றும் மத்திய அரசிடம் சமரசம் ஆகவில்லை. இன்றும் தமிழகத்தின் நலனுக்காக, மீனவர் பிரச்னை, காவேரி பிரச்னை, முல்லை பெரியார் பிரச்னை, மின்சார பிரச்னை போன்ற பலவற்றில் மத்திய அரசிடம் குரல் எழுப்பி கொண்டுதான் இருக்கிறார் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? பல வழக்குகள் போட்டு இந்த பிரச்னை சிலவற்றில் வெற்றியும் கண்டு இருப்பதும் உங்களால் மறுக்க முடியுமா? இது எல்லாம் தெரியாது என்றல் முதலில் தெரிந்து கொண்டு வாருங்கள் பிறகு என்னுடைய கணித ஆசிரியர் யார் என்று அறிய விரும்பும் உங்கள் ஆவலை நான் பூர்த்தி செய்கிறேன்.

        • சங்கர் சார், வருமானத்திற்கு அதிகமான சொத்துகுவிப்பு என்றாலே, ஒருவர் அரசு பதவிக்கு வந்த பிறகு சேர்த்த சொத்துக்கள் தான் கணக்கில் எடுக்கப்படும். தன் கட்சி ஆதரவில் மத்தியில் பாஜக இருந்த கால கட்டத்தில் வழக்கில் இருந்து தப்பிப்பதற்கு எப்படி தொல்லை கொடுத்தார் என்று அப்போதைய பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். தனக்கு எதிராக தீர்ப்பு சொன்ன நீதிபதி மருமகன் மீது எல்லாம் கஞ்சா வழக்கு போட்டு மிரட்டிய கதை எல்லாம் உங்களுக்கு தெரியாது போல அதை எல்லாம் முதலில் தெரிந்து கொண்டு வாருங்கள்.

          • சார், பாப்போம் இந்த வழக்கிலும் முதல்வர் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று நிறுபித்து விடுதலை அடைவது நிச்சயம்.

        • அட சங்கர் நல்லா வாதாடுராறே அப்புரம் ஏன் ஜெயா பாவானி சிங் க புடுச்சு தொங்கனும் சங்கர் ஆஜாரகலமுல்லா

          • தாங்கள் என்னை நன்றாக வாதாடுவதாக கூறியதற்கு நன்றி சார் அனால் நான் வக்கீல் இல்லையே சார், நான் வக்கீலா இருந்திருந்தால் கண்டிப்பாக வாதாடி இறுப்பேன்.

  3. லல்லு ஜெயாவிடம் டுயூசன் படித்து இருந்தால் இந்நேரம் வெளியில் உலாவரலாம் !இருப்பினும் அவர் யாதவர் பிற்பட்ட வகுப்பு என்பதால் இந்திய தண்டணை சட்டம் வலைந்து கொடுக்காது .நீதிமன்றங்கள் உறுமும்.அவாளாய் இல்லாதது லாலுவின் குற்றத்தை மேலும் உறுதி படுத்துகிறது.பெருத்த தொந்தி இருந்தும் குறுக்கே நூலோட்டம் இல்லாததால் சட்டம் தன் கடமையை செய்தே தீரும்!

    • மன்னிக்கவும் யுவர் ஆனர்..
      இதுவரை எந்த மாடும் எனது கட்சிக்காரரை குற்றவாளி
      என்று சாட்சி சொல்லவில்லை…எனவே லொல்லு பண்ணாமல்,லல்லுவை வெளியே
      விடுமாறு வேண்டுகிறேன்….

  4. எல்லோருக்கும் சட்டை இருக்கு…
    சட்டைக்கு பையும் இருக்கு…
    பைக்கு பின்புறம் வயிறு இருக்கு….
    அம்மா தாயே….பிச்சை போடு தாயே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க