privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்குஜராத் : மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் !

குஜராத் : மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் !

-

குஜராத்தின் மிகப் பெரிய நகரமான அகமதாபாத்திலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள தலோட் நகரை ஒட்டியுள்ள ஹன்சால்பூரை இணைக்கும் பாதைகளை ஆகஸ்டு15 அன்று தடையரண்களோடு போலீசுப் படைகள் முற்றுகையிட்டிருந்தன. அத்தடைகளைக் கடந்து, கிராமப்புற கொடிவழிப் பாதைகளினூடாகத் திரண்டுவந்த பெண்கள், முதியோர் உள்ளிட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அன்று ஹன்சால்பூரில் கூடினர். ஒரு கம்பத்தை நட்டு அதில் மூவண்ணக் கொடியை ஏற்றினர்.

S.I.R திட்ட எதிர்ப்பில் தாய்மார்கள்
தங்களது மண்ணைப் பறித்து வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்க வந்துள்ள சிறப்பு மூதலீட்டு பிராந்திய திட்டத்தை எதிர்த்து கிராமங்களில் பிரச்சார ஊர்வலங்களை நடத்தும் தாய்மார்கள்.

அவர்கள் தேசியக் கொடியேற்றி ‘சுதந்திர’ தினத்தைக் கொண்டாடுவதாகக் காட்டிக் கொண்டு, மாருதியே வெளியேறு!” என்று முழக்கத்துடன் போராட்டத்தை நடத்தினர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, விவசாய நிலங்களைப் பறித்திடும் சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்திற்கான (S.I.R) அரசு அறிவிப்பையும், மாருதி காரின் உருவ பொம்மையுடன் மாருதி நிறுவனத்தின் விளம்பர பேனர்களையும் தீவைத்துக் கொளுத்தினர். அவர்களைச் சுற்றிவளைத்த போலீசு, தடையை மீறிக் கூடியதற்காகவும் மாருதி நிறுவனத்தின் பேனர்களைத் தீயிட்டதற்காகவும் முன்னணியாளர்களைக் கைது செய்து, பொய்வழக்கு சோடித்துச் சிறையிலடைத்துள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்புதான் ஹன்சால்பூரின் விவசாயிகளிடமிருந்து 600 ஏக்கர் நிலத்தைக் கட்டாயமாகப் பறித்து மாருதி நிறுவனத்துக்கு தாரை வார்த்தது, மோடி அரசு. இப்போது இந்தக் கிராமத்தையும் இதைச் சுற்றிலுமுள்ள 44 கிராமங்களையும் உள்ளடக்கிய மண்டல்-பேச்சராஜி சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்தை அமைக்கப் போவதாகவும், அதில் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் முதலானவை உருவாக்கப்படும் என்றும், இதற்காக இக்கிராமங்களின் 12,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

‘வளர்ச்சி’க்கான முதல்வர் எனச் சித்தரிக்கப்படும் மோடியின் அரசு, கார்ப்பரேட் முதலாளிகளின் நிலக்கொள்ளைக்காகவே சிறப்பு முதலீட்டுப் பிராந்திய சட்டத்தை 2009-ஆம் ஆண்டு உருவாக்கியது. ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கானவை என்ற பெயரில், ஏற்கெனவே உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சில நூறு ஏக்கர் பரப்பளவில் அடங்குகின்றன. ஆனால் சிறப்பு முதலீட்டுப் பிராந்தியங்களோ ஒரு வட்டத்தின் (தாலுகாவின்) அளவிற்கு விவசாய நிலங்களை விழுங்கக் கூடியவை. கார்ப்பரேட் முதலாளிகள் இங்கு எந்த வகையான தொழிற்சாலையையும் எவ்விதத் தடங்கலுமின்றி அமைத்துக் கொள்ளலாம். ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், போக்குவரத்துச் சாலைகள், கேளிக்கை விடுதிகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளை  அமைத்துக் கொள்ளலாம். ஜப்பானியக் கூட்டுடன் உருவாக்கப்படும் மண்டல்-பேச்சராஜி சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்தைப் போல மேலும் 12 பிராந்தியங்களை குஜராத்தில் உருவாக்கத் துடிக்கிறது மோடி அரசு.

மாருதிக்கு எதிரான குஜராத் விவசாயிகள் போராட்டம்
ஆகஸ்டு 15 அன்று ஹன்சால்பூரில் “மாருதியே வெளியேறு” எனும் முழக்கத்துடன் மோடி அரசின் சிறப்பு முதலீட்டு பிராந்திய திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகள்.

தரிசு நிலங்கள், குறைந்த அளவில் விவசாயம் செயப்படும் நிலங்கள் – என இப்பிராந்தியத்தில் வகைப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் அனைத்தும் சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்தில் சேர்க்கப்படும். பறிக்கப்படும் நிலத்தின் பரப்பளவில் 60 சதவீத அளவுக்கு மட்டுமே விவசாயிகளுக்கு அரசு இழப்பீடாக அளிக்கும். எஞ்சிய 40 சதவீதப் பரப்புக்குச் சமமான நிலம், இப்பிராந்தியத்துக்கு வெளியே மாநிலத்தின் ஏதாவதொரு இடத்தில் வழங்கப்படும். இதன்படி, ஹன்சால்பூரில் பரம்பரையாகச் சாகுபடியிலிருக்கும் நிலங்களை ‘தரிசு’ நிலம் என மோசடியாக வகைப்படுத்தி மாருதிக்கு தாரை வார்த்திருந்தது, மோடி அரசு.  தற்போது ஹன்சால்பூரின் ஒரு பக்கம் மாருதி நிறுவனத்தால் வேலியிடப்பட்டுள்ளது. மண்டல்-பேச்சராஜி சி.மு.பிராந்தியத்தால் இன்னொரு பக்கம் வேலியிடப்படவுள்ளதால் இக்கிராமம் பிற ஊர்களிலிருந்து துண்டிக்கப்பட உள்ளது.

இன்னொரு கொடுமை என்னவென்றால், பேச்சராஜி பகுதிவாழ் விவசாயிகள் நர்மதா அணைக்கட்டுத் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைத்துப் பாசனம் மேம்படும் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருந்தனர். தற்போது இப்பகுதியின் பாசனத்துக்கான கால்வாய்த் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. ஆனால், அந்தக் காத்திருப்பின் பலனை அனுபவிக்க அவர்களிடம் விளைநிலம் இனி இருக்கப் போவதில்லை.

பேச்சராஜி வட்டாரத்தில் சீரகம் பெருமளவு பயிரிடப்படுகிறது. இங்கிருந்துதான் குஜராத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரகம் விநியோகமாகின்றது. பேச்சராஜி பருத்தியும் தரம் வாந்தது. இவை தவிர, கம்பு, ஆமணக்கு, நெல், கோதுமை போன்றவையும் இந்த வட்டாரத்தில் விளைகின்றன. இப்பகுதியின் வளமான மேச்சல் நிலங்கள்தான் “மால்தாரி” எனும் கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட சாதியினருக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

தங்களது மண்ணைப் பறித்து வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்க வந்துள்ள சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தை எதிர்த்துப் போராட “ஜமீன் அதிகார் அந்தோலன் குஜராத்” எனும் அமைப்பின் கீழ் விவசாயிகள் ஒன்றுதிரண்டனர். கிராமங்களில் பிரச்சாரத்துடன் பேரணிகளை நடத்தினர். அரசிடம் மனு அளித்தல், வித்லபூர் முதல் காந்திநகர் வரை டிராக்டர் ஊர்வலம் – போன்ற அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்தனர். மக்களிடம் அதிருப்தியும் எதிர்ப்பும் வலுவடையத் தொடங்கியதும் ஆகஸ்ட் 14 அன்று, கையகப்படுத்தும் கிராமங்களின் எண்ணிக்கையை 44-இல் இருந்து 8-ஆகக் குறைத்தது,மோடி அரசு. விவசாயம், கால்நடை வளர்ப்பைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத இம்மக்களிடம் நிலமிழப்போருக்கு வேலை நிச்சயம் தரப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் அதன் வாக்குறுதியையோ, கையகப்படுத்தும் கிராமங்களின் எண்ணிக்கைக் குறைப்பு மாய்மாலங்களையோ நம்பி ஏமாற விவசாயிகள் தயாராக இல்லை.

“சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத் திட்டத்தை முழுமையாகக் கைவிடாவிட்டால், மாருதி நிறுவனத்தை இப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கும் போராட்டத்தைத் தொடர்வோம்!” என்று அறிவித்தனர் விவசாயிகள். கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அகமதாபாதிலிருந்து மெஹ்சானா வரை அனைத்து கிராமங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டி அச்சுறுத்திப் பார்த்தது மோடி அரசு. அதன் மீது காறி உமிழ்ந்துவிட்டு, “நிலப்பறிப்பைக் கைவிடு;  இல்லாவிட்டால் அதற்கான விலையை நீ கொடுத்தாக வேண்டும்!” என மோடி அரசை நோக்கி கிராமங்கள் தோறும் சுவரெழுத்துப் பிரச்சாரத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்தனர், போராடும் விவசாயிகள். அதை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் ஆகஸ்டு 15 அன்று பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு போராட்டத்தை வெற்றிகரமாக விவசாயிகள் நடத்தியுள்ளனர். மண்டல்-பேச்சராஜி மட்டுமல்ல, அடுத்து வரவிருக்கும் 12 சிறப்பு முதலீட்டுப் பிராந்தியங்களிலும் விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருகின்றனர். கார்ப்பரேட்டுகளின் நம்பகமான கூட்டாளியான மோடியின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டு விடாதிருக்க, மே.வங்கத்தின் சிங்கூர் பாணியில் பரவி வரும் இம்மக்கள்திரள் போராட்டங்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்வதுதான் மோடி அரசுக்கு இப்போது முக்கிய வேலையாகி விட்டது.

மோடியின் தலைமையிலான குஜராத்தின் ‘வளர்ச்சி’என்பது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் சூறையாடலுக்கானது; அம்மாநில விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரானது; விவசாயிகளின் பாரம்பரிய விவசாய நிலத்தையும் வாழ்வையும் பறித்து அவர்களை நாடோடிகளாக்கி மரணப் படுகுழியில் தள்ளுவதற்கானது – என்பதையே குஜராத்தில் சிறப்பு முதலீட்டுப் பிராந்தியங்களுக்கு எதிராகப் பற்றிப் படர்ந்துவரும் விவசாயிகளின் போராட்டங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

அழகு
____________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

____________________________________________