privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஓட்டுப் போடாதே, புரட்சி செய் ! - இங்கிலாந்தின் ரஸ்ஸல் பிராண்ட்

ஓட்டுப் போடாதே, புரட்சி செய் ! – இங்கிலாந்தின் ரஸ்ஸல் பிராண்ட்

-

“என்னது ஓட்டு போட மாட்டீங்களா? புரட்சிதான் தீர்வா? நடக்கிற வேலையை பேசுங்க சார்”

“இவங்க எப்பவுமே இப்படித்தான் ரியாலிட்டில இருந்து விலகி இருப்பவங்க, தேர்தலை புறக்கணித்து புரட்சி ஏற்படும் சூழல் உள்ளதாம்!”

என்று தமது சொகுசு அறைகளுக்குள் இருந்து கொண்டு சவடால் அடிக்கும் நடுத்தர வர்க்கத்தின் குடுமியைப் பிடித்து ஆட்டுகிறார் ரஸ்ஸல் பிராண்ட் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், அரசியல் ஆர்வலர்.

ரஸ்ஸல் பிராண்ட்
ரஸ்ஸல் பிராண்ட்

தான் பங்கேற்கும் அரங்குகளில் ஆளும் வர்க்கங்களால் கவனமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களை, தனது வர்க்க கோபத்தால் கலைத்து முன் இருப்பவர்களை நிர்வாணமாக்கி நிறுத்தும் ரஸ்ஸல் பிராண்ட் அக்டோபர் 25-31, 2013 தேதியிட்ட நியூ ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை இதழின் கௌரவ ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார்.

அதை ஒட்டி பி.பி.சி.யின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் தோன்றிய ரஸ்ஸல் பிராண்ட், “ஓட்டு போடாதே, புரட்சி செய்” என்று உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுப்பதையும், அவரை பேட்டி கண்ட ஜெரமி பேக்ஸ்மனின் போலி ஜனநாயக முற்போக்கு திரை கிழிந்து தொங்குவதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

பி.பி.சி யூடியூபில் பகிர்ந்த இந்த வீடியோவை அக்டோபர் 29 மாலை வரை 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். (http://www.youtube.com/watch?v=3YR4CseY9pk). கமென்டுகள் இடும் வசதியுடன்  பகிரப்பட்ட இன்னொரு வீடியோவை (http://www.youtube.com/watch?v=xGxFJ5nL9gg) 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள், 11,000-க்கும் மேற்பட்ட கமென்டுகள் இடப்பட்டிருக்கின்றன.

உரையாடலின் தமிழாக்கம் கீழே :

ஜெரமி பேக்ஸ்மன்

ரஸ்ஸல் பிராண்ட், ஒரு அரசியல் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆவதற்கு நீங்கள் யார்?

ரஸ்ஸல் பிராண்ட்

ம்ம்ம், என்னை ஒரு கவர்ச்சியான பெண் அன்பாக கேட்டார் என்ற வகையில் இருக்குமோ? ஒரு செய்தி பத்திரிகையின் ஆசிரியராவதற்கு என்ன தகுதி என்று எனக்குத் தெரியாது. எனக்கு செய்தி பத்திரிகை ஆசிரியர்கள் பலரை தெரியாது.  போரிஸ் [லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன்], ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார், இல்லையா? வேடிக்கையான தலை முடி, சிறந்த நகைச்சுவை உணர்வு இரண்டும் உடைய ஆள் நான். மேலும், எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது, நான் சரியான நபர்தான்.

ஜெரமி பேக்ஸ்மன்

ஆனா, நீங்க ஓட்டு போடுவது கூட இல்லை என்பது உண்மையா?

ரஸ்ஸல் பிராண்ட்

ஆமா, நான் ஓட்டு போடுவதில்லை

ஜெரமி பேக்ஸ்மன்

அப்படீன்னா, அரசியலைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

ரஸ்ஸல் பிராண்ட்

ம்ம்ம்…, ஏற்கனவே இருக்கும், குறுகலான ஒரு சிலருக்கு மட்டும் சேவை செய்யும் இந்த கருத்தாக்கத்திலிருந்து எனக்கான அதிகாரத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை. மனித குலத்துக்கு பலனுள்ளதாக இருக்கக் கூடிய மாற்றுகளை வேறு இடங்களில் நான் தேடுகிறேன்.

ஜெரமி பேக்ஸ்மன்

வேறு இடங்கள்னா?

ரஸ்ஸல் பிராண்ட்

ம்ம்ம், அதை இன்னும் நான் கண்டுபிடிக்கவில்லை, ஜெரமி. சென்ற வாரம் நான் ஒரு பத்திரிகையை தயாரிக்க வேண்டியிருந்தது. இப்போது நிறைய வேலைகளில் மூழ்கியிருக்கிறேன்.

ஆனால், எது எது இருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியும். இந்த பூமியை அழிக்கக் கூடாது. பெருமளவிலான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கக் கூடாது, மக்களின் தேவைகளை புறக்கணிக்கக் கூடாது.

இந்த நிலைமைகளுக்கு தாம் பொறுப்பு இல்லை என்று நிரூபிக்க வேண்டியது அதிகாரத்தில் இருப்பவர்கள்தான். என்னைப் போல ஒரு புதுமைக்காக பத்திரிகை ஆசிரியராக இருப்பவர்கள் இல்லை. 

ஜெரமி பேக்ஸ்மன்

அதிகாரத்துக்கு எப்படி வருகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

ரஸ்ஸல் பிராண்ட்

பல தலைமுறைகளாக பராமரிக்கப்பட்டு வரும் படிநிலை அமைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்…….

ஜெரமி பேக்ஸ்மன்

மக்கள் வாக்களித்து தேர்ந்தடுப்பதன் மூலம் அவர்கள் அதிகாரத்துக்கு வருகிறார்கள். அப்படித்தான் அவர்கள் அதிகாரத்தை அடைகிறார்கள்.

ரஸ்ஸல் பிராண்ட்

நீங்க அப்படி சொல்றீங்க, ஜெரமி,  ஆனா….

ஜெரமி பேக்ஸ்மன்

உங்களை ஓட்டு போடச் சொல்வதைக் கூட நீங்கள்  ஏற்றுக் கொள்வதில்லை.

ரஸ்ஸல் பிராண்ட்

ரொம்ப குறுகலான, வரையறுக்கப்பட்ட இந்த முறை ஏற்கனவே இருக்கும்…..

ஜெரமி பேக்ஸ்மன்

ஜனநாயகத்தில் அப்படித்தான் நடக்க முடியும்.

ரஸ்ஸல் பிராண்ட்

அப்படின்னா, இந்த பூமியே அழிக்கப்பட்டு வருவதையும், பெருமளவிலான பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருப்பதையும் பார்க்கும் போது அது அவ்வளவு சிறப்பாக நடக்கவில்லை என்று நினைக்கிறேன், ஜெரமி.

நீங்க என்ன சொல்ல வர்றீங்க, மாற்றே இல்லை என்றா? எந்த மாற்றுமே இல்லையா? இந்த அமைப்பு மட்டும்தானா?

ஜெரமி பேக்ஸ்மன்

இல்லை, நான் அப்படி சொல்லவில்லை, ஓட்டு போடக் கூட நீங்க தயாரா இல்லைன்னா, உங்க அரசியல் கருத்துக்களை நாங்க ஏன் காது கொடுத்து கேட்க வேண்டும்?

ரஸ்ஸல் பிராண்ட்

என்னுடைய அரசியல் கண்ணோட்டத்தை நீங்க கேட்க வேண்டியதில்லை. அக்கறை இல்லாததால் நான் ஓட்டு போடாமல் இருக்கவில்லை. பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் அரசியல் வர்க்கத்தின் பொய்கள், ஏமாற்று, மோசடிகளின் மீது முழுக்க  முழுக்க வெறுப்பினாலும், களைப்பினாலும் நான் ஓட்டு போடாமல் இருக்கிறேன். இந்த அரசியல் அமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத, பங்களிப்பு இல்லாத, விரக்திக்குள்ளான அடித்தட்டு வர்க்கத்தின் மத்தியில் இந்த அரசியல் மோசடிகள் இப்போது ஜூர வேகத்தில் இயங்கிக்  கொண்டிருக்கின்றன. ஓட்டு போடுவது என்பது இந்த அமைப்பை மறைமுகமாக அங்கீகரிப்பதற்கு இணையானது. அதை செய்ய நான் தயாராக இல்லை.

ஜெரமி பேக்ஸ்மன்

ம்ம், அப்போ நீங்க அதை மாற்ற வேண்டியதுதானே,

ரஸ்ஸல் பிராண்ட்

ம்ம், மாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன்.

ஜெரமி பேக்ஸ்மன்

ஓட்டு போடுவதிலிருந்து  ஆரம்பிக்கலாமே?

ரஸ்ஸல் பிராண்ட் (சிரிக்கிறார்)

அது வேலைக்கு ஆகாது என்று நினைக்கிறேன். மக்கள் ஏற்கனவே வாக்களித்திருக்கிறார்கள், அதுதான் இப்போதைய கருத்தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

ஜெரமி பேக்ஸ்மன்

நீங்கள் கடைசியாக எப்போது வாக்களித்தீர்கள்?

ரஸ்ஸல் பிராண்ட்

எப்போதுமே ஓட்டு போட்டதில்லை.

ஜெரமி பேக்ஸ்மன்(அதிர்ச்சியுடன்)

நீங்கள் எப்போதுமே, ஒரு போதுமே ஓட்டு போட்டதில்லையா?

ரஸ்ஸல் பிராண்ட்

இல்லை. அது உண்மையிலேயே மிக மோசம் என்று நினைக்கிறீர்களா?

ஜெரமி பேக்ஸ்மன்

அப்படீன்னா, 18 வயது ஆவதற்கு முன்பே இந்த வழியில் போக ஆரம்பித்தீர்களா, என்ன?

ரஸ்ஸல் பிராண்ட்

ம்ம்ம். அப்போ நான் ஒரு போதை மருந்து அடிமை வாழ்வில் மூழ்கியிருந்தேன். ஏனெனில், பெரிய கார்ப்பரேட்டுகளுக்காக நிர்வாகத்தை நடத்தி தமக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கும் ஒரு அமைப்பால் மோசமாக்கப்படும் சமூக சூழலிலிருந்து வந்தவன், நான்.

ஜெரமி பேக்ஸ்மன்

நீங்கள் போதை மருந்து அடிமையாக இருந்ததற்கு அரசியல் வர்க்கத்தின் மீது பழி போடுகிறீர்களா, என்ன?

ரஸ்ஸல் பிராண்ட்

இல்லை, இல்லை. தற்போதைய அரசியல் அமைப்பால் புறக்கணிக்கப்படும் ஒரு சமூக, பொருளாதார வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தேன் என்கிறேன். போதை மருந்து பழக்கம் அது உருவாக்கும் பிரச்சனைகளில் ஒன்று. சமூகத்தால் கவனிக்கப்படாத, வறுமைக்குள் தள்ளப்பட்ட பெருமளவிலான மக்கள் மத்தியில் போதை மருந்து பிரச்சனைகள் தோன்றுகின்றன. இந்த அமைப்பு அவர்களுக்கு உதவுவதில்லை என்பது பார்க்கும் போது  தற்போதைய அரசியல் அமைப்பை பற்றி கவலைப்படாத போக்கும் தோன்றுகிறது. என்ன செய்தாலும், தங்களுக்கு பலன் இல்லை என்பதை பார்க்கிறார்கள். அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை உணர்கிறார்கள். அதனால் அலட்சியம் ஏற்படுகிறது.

ஜெரமி பேக்ஸ்மன்

ஆமாமா, ஓட்டு போடக் கூட முயற்சி செய்யாதவர்களுக்கு இது பலனளிப்பதில்லைதான்.

ரஸ்ஸல் பிராண்ட்

என் அன்பான ஜெரமி, இந்த அலட்சியம் மக்களிடமிருந்து வருகிறது என்று நான் சொல்லவில்லை. இந்த அலட்சியம் அரசியல்வாதிகளிடமிருந்து வருகிறது. அவர்கள், மக்களது தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களது ஒரே நோக்கம் கார்ப்பொரேட்டுகளின் நலன்களுக்கு வேலை செய்வதுதான்.

இப்போது, டோரிக் கட்சியினர் ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்களே, எதற்காக? வங்கி போனஸ்களை கட்டுப்படுத்துவதை எதிர்த்து. வரலாற்றின் இந்த கட்டத்தில் நம் நாட்டில் அதுதானே நடக்கிறது? இல்லையா?

ஜெரமி பேக்ஸ்மன்

ஆமா, அது இருக்கிறது….

ரஸ்ஸல் பிராண்ட்

அப்போ,நான் என்ன செய்வது – அத்தோடு ஒத்துப் போவதா?

ஜெரமி பேக்ஸ்மன்

உங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. புரட்சிதான் வேண்டும், இல்லையா?

ரஸ்ஸல் பிராண்ட்

இந்த பூமி அழிக்கப்பட்டு வருகிறது, ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுக்க வாழும் ஏழை மக்களை நாம் சுரண்டுகிறோம். நமது அரசியல் வர்க்கம் பெரும்பான்மை மக்களின் நியாமான, உண்மையான பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஜெரமி பேக்ஸ்மன்

அது எல்லாம் உண்மையாக இருக்கலாம்.

ரஸ்ஸல் பிராண்ட்

அவை எல்லாம் உண்மை.

ஜெரமி பேக்ஸ்மன்

ஆனா, சரி அவற்றில் பலவற்றில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ரஸ்ஸல் பிராண்ட்

ம்மம். அப்படீன்னா, எனக்கு ஏன் உங்கள் மீது அவ்வளவு கடுப்பாக இருக்கிறது. உங்கள் தாடியினால் அந்த கடுப்பு வந்திருக்க முடியாது. அது அழகாகத்தான் இருக்கிறது.

ஜெரமி பேக்ஸ்மன்

ஒருவேளை….

ரஸ்ஸல் பிராண்ட்

டெய்லி மெயில் அதை வேண்டாம் என்று சொன்னால், எனக்கு வேண்டும். நான் அவர்களை எதிர்க்கிறேன், இன்னும் நீளமாக வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள கக்கத்து முடியோடு சிக்கிக் கொள்ளும் அளவுக்கு வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஜெரமி பேக்ஸ்மன்

அற்பமான ஆள் நீங்கள்.

ரஸ்ஸல் பிராண்ட்

நான் அற்பமான விஷயங்களை பேசுகிறேன் என்று நினைக்கிறீங்களா?

ஜெரமி பேக்ஸ்மன்

ஆமா.

ரஸ்ஸல் பிராண்ட்

ஒரு நிமிடத்துக்கு முன்பு நான் ஒரு புரட்சியை விரும்புவதாக என்னை குற்றம் சாட்டினீர்கள். இப்போது நான் அற்ப விஷயத்தை பேசுபவன். ஒரே நேரத்தில் எல்லாமுமாக நான் இருக்கிறேன்.

ஜெரமி பேக்ஸ்மன்

நீங்கள் புரட்சியை விரும்புவதை நான் குறை சொல்லவில்லை. பலர் புரட்சியை வேண்டுகிறார்கள். ஆனால், அது எப்படி இருக்கும் என்றுதான் நான் கேட்கிறேன்.

ரஸ்ஸல் பிராண்ட்

ம்ம், 300 அமெரிக்கர்களின் சொத்து மதிப்பு, 8.5 கோடி ஏழை அமெரிக்கர்களின் மொத்த சொத்து மதிப்புக்கு இணையாக இருக்கும் ஏற்றத் தாழ்வு உள்ளதாகவோ, சுரண்டப்படும், புறக்கணிக்கப்படும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருப்பதாகவோ, அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவோ, மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதாகவோ, காமரூனும், ஆஸ்போர்னும் வங்கி முதலாளிகள் தொடர்ந்து போனஸ் வாங்கும் உரிமைக்காக வழக்கு தொடர்வதாகவோ அது இருக்காது. நான் அவ்வளவுதான் சொல்கிறேன்.

ஜெரமி பேக்ஸ்மன்

என்ன திட்டம், அதைத்தான் நான் கேட்கிறேன். தெளிவில்லாமல் ஏதோ புரட்சி என்று பேசுகிறீர்கள். அது என்ன?

ரஸ்ஸல் பிராண்ட்

பெருமளவு சொத்துக்கள் மறு பங்கீடு செய்யப்படுதல், பெரு நிறுவனங்கள் மீது கடுமையான வரி விதிப்பு, சுற்றுச் சூழலை பாழ்படுத்தும் எரிசக்தி நிறுவனங்கள் மீதும் மற்ற நிறுவனங்கள் மீதும் கடும் பொறுப்புகள் சுமத்தப்படுதல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சோசலிச சமத்துவ அமைப்பு.

லாபம் என்ற கோட்பாடே பெருமளவு குறைக்கப்பட வேண்டும். லாபம் என்பது கெட்ட வார்த்தை இல்லை என்கிறார் டேவிட் காமரூன். லாபம் என்பது ஒரு அழுகி நாறும் வார்த்தை என்கிறேன் நான். ஏனென்றால், எங்கெல்லாம் லாபம் இருக்கிறதோ அங்கெல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த அமைப்பு தற்போது இந்த பிரச்சனைகளை கவனிப்பதில்லை. அப்படியிருக்கையில் எதற்காக நமக்கு அதன் மீது ஆர்வம் வரும்?

ஜெரமி பேக்ஸ்மன்

இந்த வரிகளை யார் விதிப்பார்கள்?

ரஸ்ஸல் பிராண்ட்

ஒரு மத்தியப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு வேண்டும் என்று நினைக்கிறேன்….

ஜெரமி பேக்ஸ்மன்

அரசு.

ரஸ்ஸல் பிராண்ட்

ஆமா, அதற்கு வேறு ஏதாவது பெயர் கூட கொடுக்கலாம். நிர்வாக வாரியங்கள்  என்று அழைத்துக் கொள்ளுங்கள்,அப்படியாவது அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியலாம்.

ஜெரமி பேக்ஸ்மன்

சரி, அவற்றை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?

ரஸ்ஸல் பிராண்ட்

ஜெரமி, ஒரு பாழாய் போன ஹோட்டல் அறையில் உட்கார்ந்து கொண்டு உங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது ஒரு உட்டோப்பிய அமைப்புக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீங்க. நான் சொல்வதெல்லாம் இப்போதைய அமைப்பு….

ஜெரமி பேக்ஸ்மன்

நீங்கள் ஒரு புரட்சிக்கு அழைப்பு விடுக்கிறீர்கள்!

ரஸ்ஸல் பிராண்ட்

ஆமா, சந்தேகமேயில்லாமல். சந்தேகமேயில்லாமல்  நான் மாற்றத்துக்கு அறைகூவல் விடுக்கிறேன். நேர்மையான மாற்றத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்.

ஜெரமி பேக்ஸ்மன்

பலர் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள்.

ரஸ்ஸல் பிராண்ட்

நல்லது!

ஜெரமி பேக்ஸ்மன்

இப்போதைய அமைப்பு பல தரப்பட்ட பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை. அதனால், அவர்கள் அக்கறை இழந்து, உண்மையிலேயே அக்கறை இழந்து விட்டிருக்கிறார்கள்.

ரஸ்ஸல் பிராண்ட்

ஆம்.

ஜெரமி பேக்ஸ்மன்

ஆனா, அவர்கள் நீங்கள் சொல்வதை மதித்து ஓட்டு போடாமல் இருப்பது….

ரஸ்ஸல் பிராண்ட்

ஆமா, அவர்கள் ஓட்டு போடக் கூடாது. ஓட்டு போட வேண்டாம் என்று அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நிலைமை ஒரு குறிப்பிட்ட மட்டத்தை அடைந்து விட்டது. இதுக்கு மேல தாங்காது, போதும் என்ற நிலையை எட்டுகிறது.

ஓட்டு போடுவதை நிறுத்துங்கள். நடிப்பதை நிறுத்துங்கள், தூக்கத்திலிருந்து கண் விழியுங்கள். நிஜ உலகத்துக்கு வாருங்கள். நிதர்சனத்தை பார்க்க வேண்டிய நேரம் இது. எதற்கு ஓட்டு போட வேண்டும்?
அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை, ஏற்கனவே நமக்குத் தெரிந்ததுதான் அது.

ஜெரமி பேக்ஸ்மன்

அது மாற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

ரஸ்ஸல் பிராண்ட்

அதாவது, வெஸ்ட் ஹேம் யுனைட்டட் அணிக்கு நான் ஆதரவு தெரிவிப்பது போல. எனது ஆதரவு இருந்தும் அவர்கள் போய் நகர அணியிடம் தோற்றுப் போனாங்க, பாவம்!

ஜெரமி பேக்ஸ்மன்

இப்போ நீங்க கிண்டல் பண்றீங்க.

ரஸ்ஸல் பிராண்ட்

கிண்டல் செய்வது, சீரியசாக பேசும் அதே அளவுக்கு பலனுள்ளது. சீரியசாக பேசுவதே பலனளித்து விடும்  என்று நினைக்கும் தவறை நீங்கள் செய்கிறீர்கள்…..

ஜெரமி பேக்ஸ்மன்

கிண்டலடிப்பதன் மூலம் உலகின் பிரச்சனைகளை நீங்கள் தீர்த்து விடப் போவதில்லை.

ரஸ்ஸல் பிராண்ட்

இப்போதைய அமைப்பின் மூலமும் அவற்றை தீர்த்து விட முடியாது. கிண்டலடிப்பது வேடிக்கையாகவாவது இருக்கிறது.

ஜெரமி பேக்ஸ்மன்

சில  சமயம்.

ரஸ்ஸல் பிராண்ட்

ஆமா, ஆமா, சில சமயம். அதனால் கேளுங்கள, இதை நம்பிக்கையோடு அணுகுவோம். உங்கள் பணியில் இவ்வளவு காலம் நீங்கள் அரசியல்வாதிகளை கிண்டல் செய்தும், விமர்சித்தும் வந்திருக்கிறீர்கள். என்னைப் போல ஒரு காமெடியன், “அவனுங்க எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவனுங்க, அவர்களோடு அரசியல் செய்வதில் என்ன பொருள் இருக்கிறது” என்று சொல்லும் போது நீங்கள் என்னை குற்றவாளியாக்குகிறீர்கள். ஒரு வேளை நான் ஏழையாக இல்லாமல் இருப்பதாலா? அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க…

ஜெரமி பேக்ஸ்மன்

அதை வைத்து நான் உங்களை குற்றம் எல்லாம் சாட்டவில்லை. நான் கேட்பதெல்லாம், நீங்கள் சொல்வது குறிப்பாக இல்லாமல் இருக்கும் போது அதை நான் ஏன் கவனிக்க வேண்டும் என்று கேட்கிறேன்.

ரஸ்ஸல் பிராண்ட்

என்னை மதித்து கேட்க வேண்டிய….. சரி, சரி. என்னை மதித்து கேட்டீர்கள் என்றால் நான் வருத்தப்பட மாட்டேன். நான்  சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், கூடவே கொஞ்சம் கிண்டலடிப்பதற்கும் இங்கு வந்தேன்.

என்னை விட பல மடங்கு அதிகம் தகுதியுடையவர்கள் இருக்கிறார்கள் என்கிறேன். இன்னும் முக்கியமாக, இந்த பிரச்சனைகளை தீர்க்காமல் இருக்கும் இப்போது அந்த வேலையைச் செய்பவர்களை விட பல மடங்கு அதிக தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இப்போது ஆள்பவர்கள் பெரும்பான்மை மக்களை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்கள். காலநிலை மாற்றம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அலட்சியமானவை, அவை பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை.

ஜெரமி பேக்ஸ்மன்

ஒருவேளை, இந்த பிரச்சனையின் பிரம்மாண்டத்தின் முன்பு மனிதர்கள் மலைத்துப் போய் விட்டிருக்கிறார்களோ?

ரஸ்ஸல் பிராண்ட்

அப்படி இல்லை, ஒருவேளை அப்படியும் இருக்கலாம், அவர்கள் மலைத்துப் போயிருக்கிறார்களா அல்லது அமைப்பை பாதுகாக்க தொடர்ந்து தூக்கிப் பிடிக்கிறார்களா என்பதெல்லாம் வார்த்தைகளில் விளையாடுவதுதான்.

நான் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு போயிருந்தேன். ஈடன் எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கிறதோ அதே போல, ஆக்ஸ்ஃபோர்ட் போல அதுவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு வகையான நபர்கள் அங்கு போய், “ஓ, இது என்னை கலக்கப்படுத்துகிறது” என்கிறார்கள். இன்னொரு வகையினர் போகும் போது, “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுமுகிறார்கள். அது மாறப் போகிறது என்கிறேன்.

தவறான, மோசடி அமைப்புகளை நாம் இனிமேலும் வைத்துக் கொள்ள முடியாது. இந்த பூமியையும் அதில் வாழும் மக்களையும் சேவை செய்யும் அமைப்புகள் மட்டுமே பிழைத்திருக்க அனுமதிக்க வேண்டும். மேட்டுக் குடியினரை, அரசியல் மற்றும் கார்ப்பரேட் மேட்டுக் குடியினருக்கு மட்டும் சேவை செய்யும் அமைப்பு தேவை இல்லை. அதுதான் இப்போது இருக்கிறது.

ஜெரமி பேக்ஸ்மன்

நீங்கள் உண்மையிலேயே இதை நம்பவில்லை.

ரஸ்ஸல் பிராண்ட்

ஓ, நான் அதை முழுக்க முழுக்க நம்புகிறேன். உங்கள் ஓய்வறையில் பைப் புகைத்துக் கொண்டு சலிப்பாக பார்ப்பது போல என்னை பார்க்காதீர்கள்.

ஜெரமி பேக்ஸ்மன்

எட் – எட் மிலிபேண்ட் (தொழிலாளர் கட்சித் தலைவர்) மேட்டுக் குடியைச் சேர்ந்தவர் இல்லை.

ரஸ்ஸல் பிராண்ட்

அவரும், போரிஸ் போன அதே பள்ளிக்குப் போனார், இல்லையா?

ஜெரமி பேக்ஸ்மன்

ஆனால், பிறகு அவர் வடக்கு லண்டனில் உள்ள பள்ளிக்கு போனார்.

ரஸ்ஸல் பிராண்ட்

அப்போ சரி, அது எல்லாம் சரிதான். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், இப்போதைய கட்டமைப்பில் மாற்றம் போதுமான அளவு இல்லை. புரட்சிகரமானதாக இல்லை. உண்மையான மாற்றங்கள் இல்லை, உண்மையான மாற்றுகள் இல்லை எனும் போது மக்கள் போராடுவதையும், அவர்களது அதிருப்தியையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். உண்மையான ஒரு மாற்று வரும் போது, உண்மையான ஒரு தேர்வு வரும் போது அப்போது அதற்கு ஓட்டு போடுங்கள். அது வரை, கவலைப்படாதீர்கள். எதற்கு நடிக்க வேண்டும்? எதற்காக இந்த முட்டாள்தனமான மாயையுடன் ஒத்துழைக்க வேண்டும்.

ஜெரமி பேக்ஸ்மன்

ஏனென்றால், அப்படி நீங்கள் சொல்வது போல நமது வாக்குகளை அளிக்க தகுதியான ஒருவர் வரும் போது, காலம் கடந்து விட்டிருக்கலாம்.

ரஸ்ஸல் பிராண்ட்

நான் ஏன் அப்படி நினைக்கவில்லை என்றால், இதுதான் அந்த நேரம். இந்த இயக்கம் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. தகவல் தொடர்பு உடனடியாக நடக்கக் கூடிய காலத்தில் வாழ்கிறோம். உலகெங்கிலும் பல சமூகங்களில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பு இயக்கம் வேறு எதையும் சாதிக்கவில்லை என்றாலும் குறைந்த பட்சம், 1%த்துக்கும் 99%-க்கும் இடையேயான போராட்டம் என்பதை பொது உரையாடலில் கொண்டு வந்தது. ஒரு தலைமுறையில் முதன் முறையாக பெருமளவிலான கார்ப்பரேட் மற்றும் பொருளாதார சுரண்டலை உணர்ந்திருக்கிறார்கள். இது எல்லாம் வெறும் பிதற்றல் இல்லை, ஆனால், அவற்றை இந்த அமைப்பு சரிப்படுத்தப் போவதில்லை.

வரி ஏய்ப்பு மையங்களை பற்றி யாரும் எதுவும் செய்யவில்லை, டோரிக் கட்சியின் அரசியல் தொடர்புகளையும், நிதி தொடர்புகளையும் பற்றி யாரும் எதுவும் செய்யவில்லை. இந்த விஷயங்களை சரி செய்ய ஆரம்பிப்பது வரை நான் ஏன் கிண்டலடிப்பவனாக இருக்கக் கூடாது? நான் அதை ஏன் உண்மையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? எந்த வகையிலும் அக்கறை இல்லாமல் இருக்கும் இளம் தலைமுறையினை ஏன் ஓட்டுப் போட நான் ஊக்குவிக்க வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்?

உங்களுக்கு போர் அடிக்கவில்லையா? பல ஆண்டுகளாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அவர்களது பொய்களை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களது முட்டாள்தனத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் இவர் வருகிறார், பின்னர் அவர் வருகிறார், ஆனால் பிரச்சனைகள் தொடர்கின்றன? இந்த நாடகத்துக்கு நாம் ஏன் பங்களிக்க வேண்டும்?

ஜெரமி பேக்ஸ்மன்

இது குறித்து இவ்வளவு கோபப்படும் நீங்கள் எப்படி கிண்டலடிப்பவராக இருக்க முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ரஸ்ஸல் பிராண்ட்

ஆமா, நான் கோபமாகத்தான் இருக்கிறேன். எனக்கு கோபம் பொங்குகிறது. ஏனென்றால், இது எனக்கு நிதர்சனம். இது ஏதோ, சர்ச் விழாவுக்குப் போகும் போது மட்டும் கண்ணில் படுகிற ஏதோ முக்கியமில்லாத விஷயம் இல்லை. என்னை பொறுத்த வரை இங்கிருந்துதான் நான் வந்திருக்கிறேன், இதைப் பற்றித்தான் நான் அக்கறைப்படுகிறேன்.

ஜெரமி பேக்ஸ்மன்

உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?

ரஸ்ஸல் பிராண்ட்

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், ஆமா. முழு நம்பிக்கை இருக்கிறது. புரட்சி நடக்கவிருக்கிறது. அது நிச்சயம் நடக்கப் போகிறது. எனக்கு இம்மியளவு கூட சந்தேகம் இல்லை.

உங்கள் மூதாதையர்களை பற்றி பேசும் நிகழ்ச்சியில் உங்களை பார்த்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. உங்கள் பாட்டி அவர் வேலை செய்யும் இடத்தின் சொந்தக்காரர்களான பிரபுக்கள், தேவைப்படும் போதெல்லாம் அவரை பாலியல் உறவுக்கு பயன்படுத்த தயாராக இருக்க வேண்டியதைப் பற்றிப் பேசும் போது நீங்கள் கண்ணீர் விட்டு அழுதீர்கள். ஏனென்றால் அது அநீதியானது, அநியாயமானது என்று உங்களுக்குத் தெரிந்திருந்தது. அது எப்போது? ஒரு நூற்றாண்டு இருக்குமா?

இப்போது அது, மக்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது போல நடத்தப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து நான் வருகிறேன். இது போன்று நடத்தப்பட்ட ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு வருகிறேன். தொலைக்காட்சியில் உணர்ச்சிகளை கொட்டி, பார்ப்பவர்களுக்கு உணர்ச்சி போர்னோ காட்டுவதை விட அந்த உணர்ச்சியை அங்கீகரித்து, மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அது ஏன் அப்பாவித்தனமாக தெரிகிறது.

நான் ஒரு நடிகனாக இருப்பதால் எனக்கு அந்த உரிமை இல்லையா? நான் அந்த உரிமையை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு அந்த உரிமையை தரத் தேவையில்லை. யாரிடமிருந்தும் எனக்கு அந்த உரிமை தேவையில்லை. நான் அதை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

– தமிழாக்கம்: அப்துல்