Saturday, August 20, 2022
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் தருமபுரி தலித் கிராமங்கள் எரிப்பு : முதலாம் ஆண்டு நினைவு

தருமபுரி தலித் கிராமங்கள் எரிப்பு : முதலாம் ஆண்டு நினைவு

-

நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் எரிப்பு, சூறையாடல் : முதலாம் ஆண்டு நினைவு நாள் !

ருமபுரி அருகே உள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய 3 தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் கிராமங்கள் நவம்பர் 7, 2012 அன்று வன்னிய சாதிவெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஊரைக் கூட்டிப் பேசி மக்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். இதற்காக பிரசுரம் பேனர் தயாரித்து தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் ஊர் முக்கியஸ்தர்களை வரவழைத்து மாவட்ட ஆட்சியர் ‘‘உண்ணாவிரதம் இருக்கக் கூடாது’’ என்று பேசினார். மேலும் பல சலுகைகளை செய்து தருவதாகவும், நடந்து கொண்டிருக்கும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நைச்சியமாக அவர்களிடம் பேசியுள்ளார். பின்னர் ஊர் மக்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரும் மனு ஒன்று அவரிடம் கொடுக்கப்பட்டது. ‘‘144 தடை உத்திரவு உள்ளது. இதனை ஏற்க முடியாது’’ என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். ஆனால் ஊர் முக்கியஸ்தர்கள் ஆட்சியர் கூறியதை ஏற்காமல் ஊருக்குத் திரும்பினர்.

நவம்பர் 5-ம் தேதியே CPI(M) கட்சியினர் 144 தடை உத்திரவைக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று முடிவு செய்ததால் நத்தத்தில் உள்ள CPI(M) கிளை உறுப்பினர்கள் ‘’நாங்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடியாது’’ என ஊரில் அறிவித்து விட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் வன்னியர்களின் ஓட்டுக்களைப் பெற முடியாமல் போய்விடும் என்று அவர்கள் ஓட்டுக் கணக்கு போட்டதை நத்தம் அண்ணா நகர் மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டனர். அண்ணா நகரில் பொறுப்பாளர் ஆனந்தன் “144 தடையுத்திரவு உள்ளது. நக்சல்பாரிகள் உங்களை சிக்கலில் இழுத்து விட்டு விடுவார்கள். பிறகு அனுபவிப்பது நீங்கள்தான். கைதானால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்” என்று மிரட்டும் தொனியில் பேசினார். ஆனால் அவர்கள் அவரை எதிர்த்து “நாங்கள் கைதானால் நக்சல்பாரித் தோழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று பேசி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

முதல் நாள் இரவே தாசில்தார் போலீசுடன் நத்தத்திற்கு வந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி அந்த நாளை நினைவுபடுத்தினால் மீண்டும் சாதிப்பூசல் வரும். எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். தோழர்கள் வந்திருக்கிறார்களா என்று விசாரித்தார். அவரிடம் கோபப்படாமல் தகுந்த பதில் அளித்து மக்கள் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு சுமார் 9 மணிக்கு RDO பத்து போலீசுடன் ஊருக்கு வந்து மிரட்டும் தொனியில் பேசினார். “நாங்கள் ஓராண்டு நினைவு என்ற வகையில்தான் செய்கின்றோம்” என்று ஊர் முக்கியஸ்தர்கள் கூறியதால் அவர்கள் சென்று விட்டனர்.

பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே இப்போராட்டம் குறித்து வி.வி.மு தோழர்கள் ஊர் முக்கியஸ்தர்களுக்கும், சில அரசியல் சக்திகளுக்கும் இப்போராட்டத்தை சிறப்பாக நடத்துவதற்காக ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். இதனை பயன்படுத்தி உழைக்கும் மக்களை விடுதலை செய்யும் வர்க்க அரசியலை இம்மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று வி.வி.மு தோழர்கள் திட்டமிட்டு செயல்பட்டனர்.

அதன்படி விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய இரண்டு அமைப்புகளின் பெயரில் 400 சுவரொட்டிகளை அச்சிட்டு அதனை ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, பெண்ணாகரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக ஒட்டினர். தருமபுரி நகரத்தில் சுவரொட்டி ஒட்டி முடிக்கும் தருவாயில் உளவுப்பிரிவினர் தோழர்கள் சரவணன், முனியப்பன் ஆகிய இரு வி.வி.மு தோழர்கள் மீது 5 பிரிவுகளில் பொய்வழக்கு போட்டுள்ளனர். போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபடாமல் இருந்த தோழர் கோபிநாத் (வி.வி.மு) மீது அதே பிரிவுகளில் வழக்கு போட்டுள்ளனர்.

இன்னொருபுறம் உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்த தங்களது பங்களிப்பை செய்வது என்ற முறையில் தோழர்கள் செயல்பட்டனர். செஞ்சட்டை அணிந்து கொண்டு சுமார் 50 தோழர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் நவம்பர் 7 அன்று காலை எட்டு மணிக்கு துவங்கியது. அப்பகுதியில் போஸ்டர்களை ஒட்டி விட்டு, வி.வி.மு-வின்  துண்டு பிரசுரங்களை நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் ஆகிய மூன்று கிராமங்களுக்கும் சென்று விநியோகித்தனர். வி.வி.மு பிரசுரம் சிறப்பாக உள்ளது என்று அப்பகுதி இளைஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

நத்தத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் உரையாற்றினர். இதில் வி.வி.மு தோழர் ஆம்பள்ளி முனிராஜ் பேசுகையில், “சாதிவெறித் தாக்குதலில் முக்கிய பங்காற்றிய கன்பார்ட்டி முருகன், புரட்சிகர இயக்கத்தில் இருந்தபோது தலித் பகுதிகளில் மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தவன். அவன் உடம்பில் ஓடும் இரத்தம் முழுக்க மாட்டுக்கறி ரத்தம்தான் அதிகம் இருக்கும். மாட்டுக்கறி குழம்பு எடுத்துக் கொண்டு வரும்போதே கறி அனைத்தையும் எடுத்து சாப்பிட்டு விடுவான். அப்படிப்பட்டவன் இன்று சாதி வெறியனாக மாற்றப்பட்டுள்ளான்” என்பதை விளக்கிப் பேசியது மக்களை சிந்திக்கத் தூண்டுவதாகவும், அவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது.

தோழர் பரசுராமன் (பு.ஜ.தொ.மு – ஓசூர்) பேசும்போது, “ஓசூர் தொழிற்சாலைகளில் பிறப்பால் வன்னிய தொழிலாளிகள் பாதிக்கப்பட்ட போது நக்சல்பாரி தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு தான் முதல் குரல் கொடுத்து நீதி பெற்றுக் கொடுத்தது. அப்பகுதியில் இருந்த பா.ம.க.வினர் சம்பவ இடத்திற்கு வந்தும் கையாலாகாமல் விட்டுச் சென்று விட்டனர். அதே போல தமிழகத்தில் பெரிய அளவில் தலித் மக்களைத் திரட்டி வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் சில தலித் அமைப்புகளால் இளவரசன் – திவ்யா தம்பதியினரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் சாதிமறுப்பு திருமணம் செய்து வைத்தற்காக என்னை ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்தது சேலம் போலீசு. அத்துடன் இரவு பகலாக அடித்தனர்” என்றும் குறிப்பிட்டார். இது போன்று பல சாதிமறுப்பு திருமணங்களை புஜதொமு, விவிமு நடத்தி வைத்துள்ளதையும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருவதையும் நினைவு கூர்ந்து பேசினார். வர்க்க உணர்வூட்டும் வகையிலும், சாதிவெறியர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும் அவரது பேச்சு இருந்தது.

மேலும், தலித் மக்களுக்கு குரல் கொடுப்பதாக பேசி வரும் சில கட்சிகள், குழுக்கள் தங்களை இந்த நிகழ்வில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டதும் நிகழ்ந்தது. குறிப்பாக இளவரசன் மரணமடைந்த போது அது தற்கொலை என்று பேசிய வி.சி.க பொதுச்செயலர் சிந்தனைச்செல்வன் இந்த நினைவுக் கூட்டத்தில் அதனை திட்டமிட்ட படுகொலை என்று சந்தர்ப்பவாதமாக பேசினார். அப்போது அவருக்கு எதிரான சலசலப்பு மக்களிடையே ஏற்பட்டது. மக்கள் ஜனநாகய இளைஞர் கழகம் (ம.ஜ.இ.க) அமைப்பு தனது போஸ்டரில் நவம்பர் 7 தருமபுரி சாதிக் கலவர நாள் என்று அச்சிட்டு இருந்ததைக் கண்டு மக்கள் ஆத்திரமடைந்தனர். சாதிவெறித் தாக்குதலை மாற்றி இரண்டு தரப்பும் கலவரம் செய்ததாக காட்டும் வகையில் அச்சிட்டு ஒட்டியிருந்ததால் நத்தம் கிராமத்தில் சுவரொட்டிகளை இளைஞர்களே கிழித்து விட்டனர்.

ம.க.இ.க-வின் மைய கலைக்குழுத் தோழர்களுடன் வி.வி.மு தோழர்கள் இணைந்து நடத்திய கலை நிகழ்ச்சி இவற்றை சிறப்பிக்கும் வகையில் இருந்தது. புரட்சிகர இயக்கம் மீண்டும் இப்பகுதியில் வளர வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

அண்ணா நகரில் நடந்த உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டு தோழர்கள் பேசினார்கள். கொண்டாம்பட்டியில் தோழர் ஆம்பள்ளி முனிராஜ் சென்று உரை நிகழ்த்தினார். மூன்று ஊர்களிலும் வி.வி.மு தோழர்களின் பங்களிப்பு இருந்ததால்தான் நிகழ்ச்சியை நடத்த முடிந்த்தாக ஊர் மக்கள் தெரிவித்தனர். வர்க்கப் போராட்டமே தீர்வு என்பதை உணர்த்தும் வகையில் தோழர்களின் உரைகள் இருந்தன.

தாசில்தார், காவல்துறை ஆய்வாளர், கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆகியோர் வந்து நிகழ்ச்சிக்கு பல நிபந்தனைகளை விதித்தனர். மைக் வைத்து பேசக் கூடாது என்றனர். ஆம்பள்ளி முனிராஜ் சாதிவெறியர்களை அம்பலப்படுத்தி பேசிய போது, கிராமம் எரிக்கப்பட்டதை மட்டுமே பேச வேண்டும் என்றனர். நாங்கள் ஊமையாக இருக்க முடியாது என பெண்கள் பதிலுக்கு கூறினர். இப்படி பல தடைகளைத் தாண்டிதான் உண்ணாவிரதம் மூன்று கிராமங்களிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி நக்சல்பாரி இயக்கத்தின் மீது அப்பகுதி மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமைப்பின் செல்வாக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தியுள்ளது. அப்பு, பாலன் காலத்தில் இருந்த வர்க்க ஒற்றுமையை கட்டியமைக்கும் முயற்சியில் வி.வி.மு தோழர்களின் பணி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

144 தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீது தருமபுரி காவல்துறை வழக்கு தொடுத்திருக்கிறது.

தகவல் :

செய்தியாளர், புதிய ஜனநாயகம், தருமபுரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க