Sunday, May 26, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தமிழகமெங்கும் நவ 7 புரட்சி தின கொண்டாட்டங்கள் !

தமிழகமெங்கும் நவ 7 புரட்சி தின கொண்டாட்டங்கள் !

-

96-வது ரஷ்யப் புரட்சி நாள் விழா நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

1. ஆவடி – அம்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம் ! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம் !

-என்கிற முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆவடி – அம்பத்தூர் பகுதிக் குழுவும், காஞ்சிபுரம் மாவட்டக் குழுவும் இணைந்து நவம்பர் புரட்சி நாள் விழாவை சென்னையின் புறநகர்ப் பகுதியான பட்டாபிராம் பகுதியில் நடத்தினர்.

7.11.2013 அன்று மாலை 5.45 மணிக்குத் துவங்கிய இக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் ஆ.கா.சிவா தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சுமார் 380 தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, தங்களது குடும்ப விழாவாக மாற்றினர். விழாவுக்காக அறிவிக்கப்பட்டிருந்த மாறுவேடப் போட்டி, பாட்டுப்போட்டி, ஒவியப் போட்டிகளில் தொழிலாளர்களது பிள்ளைகள் 15 பேர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பாட்டுப் போட்டியின் போது சிறுவர்கள் பாடுவதை பார்த்த 6 வயது சிறுவன் ஒருவன், நானும் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து , கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருடம் அனுமதி பெற்று, பாடலை பாடினான். சிறுவர்களின் பாட்டுப் போட்டி சமூக அவலங்களையும் , அடிமைத் தனத்தையும் அம்பலப்படுத்தியது. இது வந்திருந்தவர்களுக்கு உணர்வூட்டியது.

மாறுவேடப் போட்டியில் வீரபாண்டிய கட்ட பொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார் வேடமிட்டு வந்த சிறுவர்கள், மறுகாலனியாக்கத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் , மழலை மொழியில் பேசியது பார்வையாளர்களை ஈர்க்கும்படி இருந்தது.

சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள் அரங்கத்தின் முகப்பில் வைக்கப்பட்டன. இந்த ஒவியங்கள் மறுகாலனியாக்கத் தாக்குதலையும் , இந்து மதவெறிப் பாசிசத்தையும் அம்பலப்படுத்துவதாக இருந்தது. நாடு மீண்டும் இதற்கெதிரான போராட்ட வேண்டியதன் உணர்வை தூண்டியது.

கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தாங்கள் தொழில்முறை கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தனர். முதலாளித்துவம் தொடுத்த அடக்கு முறைகள் அவர்களை புரட்சிகர கலைஞர்களாகவும் மாற்றியது. தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவ ஒடுக்குமுறையும், உரிமை பறிப்புகளையும் அம்பலப்படுத்தி வர்க்கமாக இணைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் அவர்களது கவிதை இருந்தது.

இதையடுத்து நடந்த புரட்சிகர கலைநிகழ்ச்சியானது, முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியும் , நம் நாடு பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக் காடாக மாற்றப்பட்டு இருக்கும் மறுகாலனியாக்க சூழலில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிதிரளவேண்டிய அவசியத்தை உணர்த்தியும் முத்திரை பதித்தது.

அதை தொடர்ந்து, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் நவம்பர் புரட்சி தின சிறப்புரையாற்றினார்.. சிறப்புரையின் உள்ளடக்கம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

”ரசியத் தொழிலாளி வர்க்கம், தான் அனுபவித்து வந்த முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கும், அனைத்து விதமான உரிமை பறிப்புகளுக்கும், வறுமை – சுரண்டலுக்கும் நவம்பர் புரட்சியில் முடிவு கட்டியது. பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் தலைமையில் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சி, முதல் சோசலிச அரசை நிறுவி, மனித குலம் இதுகாறும் காணாத வகையில் அந்நாட்டின் தொழிலாளர்களுக்கும், ஏனைய உழைக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்தது.

மனிதன் மனிதனை சுரண்டும் இழிநிலையிருநது ரசிய பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொண்டது. தொழிலாளிகளால் உலகை ஆள முடியும் என்பதை உலகிற்கு பறைசாற்றிய நாள் நவம்பர் 7. உலகின் ஏனைய ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் ரசியப் புரட்சி விடிவெள்ளியாக வழிகாட்டியது..முதலாளிகளே திறமையாளர்கள் என்று அறிவாளிகள் பீற்றிக் கொள்வது ஒரு பித்தலாட்டம். சமூகத்தைச் சுரண்டியும், அழித்தும் தான் முதலாளிகள் உல்லாச வாழ்க்கையை நடத்துகின்றனர். முதலாளித்துவம் உலகெங்கும் உழைக்கும் மக்களை வேலையின்மையிலும் வறுமையிலும தள்ளி உள்ளது .

இந்தியாவில் திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கையானது , வேலைபறிப்பு – தற்கொலைகள் – ஆலைச்சாவுகளைத் தீவிரமாகியுள்ளது. ரசியத் தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதன் மூலம் தங்களது துயரங்களுக்கு முடிவு கட்டினர். இந்திய பாட்டாளி வர்க்கமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே, தங்களது துயரங்களுக்கு முடிவு கட்ட முடியும். இதனை ஓட்டுச் சீட்டு அரசியல் மூலமோ, சாதி – மத- இனவாத அமைப்புகள் மூலமோ முன்னெடுக்க முடியாது. புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே அதனை சாதிக்க முடியும். நக்சல்பாரி பாதையில் தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட , அனைத்து ஒடுக்கபட்ட வர்க்கங்களும் ஒன்றிணைந்து புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி முடிப்போம், வாரீர்” என்று அறைக்கூவல் விடுத்தார்.

சிறப்புரையில் முதலாளித்துவ அடக்குமுறையை பற்றி பேசிய போது தொழிலாளர்கள் காட்டிய அதே ஆர்வத்தை மறுகாலனியாக்க அரசியலை அம்பலப்படுத்தி பேசிய போதும் வெளிப்படுத்தினர் .தொழிலாளர்களை நமது அரசியலை பற்றிக் கொண்டு வருவதை இது உணர்த்தியது.

மேலும், ரஷ்ய புரட்சிக்கு முன் ஜாரிச மன்னனால் உழைக்கும் மக்கள் பாதிக்கபட்டதையும் , இதற்கெதிராக ரஷ்ய மக்கள் போராட்டத்தை நடத்தி புரட்சியை சாதித்ததையும் , உலகம் முழுவதும் நடந்து வரும் முதலாளித்துவ சுரண்டல் முறையை அம்பலப்படுத்தியும் , அதற்கெதிராக மக்கள் போராட்டத்தை பற்றியும் பிளாக்ஸ் பேனர்கள் மண்டபத்தின் முகப்பில் வைத்தது பார்வையாளர்களை ஈர்த்தது. HR அதிகாரிகளை அம்பலபடுத்தி வைத்த போட்டோக்கள் தொழிலாளர்களை கவர்ந்தது.

பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டி, ஒவியப்போட்டி ஆகியவற்றில் பங்கேற்ற சிறுவர்களுக்கும், கவிதை வாசித்த தோழர்களுக்கும் மற்றும் பறை இசைத்த சிறுவனுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தின் கடைசி நிகழ்ச்சியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தோழர் ஜெயராமன் நன்றியுரையாற்றினார்.

இப்பகுதியில் முதல் முதலாக நடைபெற்ற இவ்விழா, தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி உள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ஆவடி, அம்பத்தூர் பகுதி
8807532859, 9445368009

2. ஒசூர்

வம்பர் 7 ரசியப் புரட்சி நாள் விழாவை ஒட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கமாஸ் வெக்ட்ரா ஆலை வாயிலில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமாஸ் வெக்ட்ரா துணைத் தலைவர் தோழர்.ஆனந்த் தலைமை தாங்கினார்.

பு.ஜ.தொ.மு. மாவட்டத் தலைவர் தோழர்.பரசுராமன் கொடியேற்றி, சிறப்புரையாற்றினார். இன்று தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ உரிமைகள் பறிக்கப்படுவதை அம்பலப்படுத்தி பேசினார். ஒசூரில் பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படுவதை சுட்டிக் காட்டினார். குறிப்பாக, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். முதலாளிகளுக்கு கோடி கோடியாய் இந்த அரசு வரிச் சலுகை வழங்குவதையும் முதலாளிகளுக்கு பக்க பலமாக இருப்பதையும் அம்பலப்படுத்தி இந்த அரசு முதலாளிகளுக்கான அரசு என்பதை உணர்த்திப் பேசினார்.

முன்னதாக தோழர். வேல்முருகன் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு ஆலைக்குள் நடத்தப்படுவதன் வரம்பு என்பது முடிவடைந்து விட்டது. இனி தொழிற்பேட்டை முழுவதற்குமான போராட்டங்களாக வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அந்த வகையில் தொழிலாளர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நவம்பர் 7 ரசியப் புரட்சிநாள் என்பதன் மூலம் இதனை நாம் உணர வேண்டிய அவசியம் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஓசூரில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. போன்ற பிழைப்புவாத போலி கம்யூனிஸ்ட் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு நவம்பர் 7-ன் முக்கியத்துவத்தை உணர்த்தாமல் தவிர்த்து வருவதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

பொதுவாக, சட்டத்தை மீறினால், தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் கிரிமினல்களைப் போல தண்டிக்கின்றது அதிகார வர்க்கம். கரண்ட் பில் கட்டவில்லை என்றால், பீஸ் புடுங்குகின்றனர் அதிகாரிகள். வண்டியை (டூவிலர்) லோனுக்கு வாங்கி தவணையைக் கட்டவில்லை என்றால், ரவுடிகளை வைத்து வண்டியை தூக்கிச் செல்கின்றனர். ஆனால், முதலாளிகள் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு உரிய சட்டவிதிகளைக் கடைப்பிடிப்பதில்லை. தொழிலாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொல்கின்றனர். ஆலையில் உள்ள எந்திரங்களின் தன்மையை மாற்றி அதிக உழைப்பை உறிஞ்சுகின்றனர். பயிற்சி தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி கசக்கி பிழிகின்றனர். அரசிடன் லோன் வாங்கி கட்டுவதே இல்லை. இவர்களை இந்த அரசு பாதுகாக்கிறது. ஆனால், இந்தப் போக்கை மாற்றி அமைக்க வேண்டுமென்றால் தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்தாத முதலாளிகளுக்கு கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும். அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். இது சாத்தியமல்லாத விசயமல்ல. ஒசூரில் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர்கள் ஒற்றுமையாகப் போராடியதால் அந்த ஆலையில் எச்.ஆர். அதிகாரிகள் உள்ளிட்ட 4பேர் கிரிமினல் குற்றங்களின் கீழ் கைது செய்யபட்டடுள்ளனர். ஆகையால், இந்த கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நவம்பர் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
பு.ஜ.தொ.மு. – ஒசூர்
97880 11784

3. சிவகங்கை

மக்கும் வேண்டும் நவம்பர் 7 – என்ற தலைப்பில் 96-வது ரசிய சோசலிசப் புரட்சி நாள் கொண்டாட்ட விழா சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. மூத்த தோழர் வேலு அவர்கள் செங்கொடியை ஏற்றினார். அதன் பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டன. தோழர் கணேசன் தலைமை வகிக்க, தியாகிகளுக்கு வீர வணக்கம் பாடப்பட்டது. அதன்பின்னர் இந்தியாவிலும் நவம்பர் 7-ஐக் கொண்டு வருவோம் என்றும் போலிக் கம்யூனிஸ்ட்டுக் கடைகளை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதன்பின்னர், “நமக்கும் வேண்டும் நவம்பர் 7” என்கிற தலைப்பில் தோழர் ஆனந்த் பேசியபோது, புரட்சிக்கு முந்தைய ரசிய நிலையையும் இன்றைய இந்திய நிலையையும் ஒப்பிட்டுப்பேசி, நவம்பர் 7 –ன் தேவையை வலியுறுத்தினார்.

அதன்பிறகு, “முப்பெரும் தமிழகக் கொள்ளயர்களும், முப்பெரும் இந்தியக் கூட்டாளிகளும்” என்கிற தலைப்பில் சிவகங்கை, இராமநாதபுரம் பு.ஜ.தொ.மு மாவட்டஅமைப்பாளர் தோழர் நாகராசன் பேசிய போது, கிரானைட் கொள்ளயன் பி.ஆர்.பழனிச்சாமி, ஆற்று மணல் கொள்ளையன் ஆறுமுகச்சாமி, தாது மணல் கொள்ளையன் வைகுந்தராஜன் ஆகிய மூன்று தமிழகக் கொள்ளையர்களையும், அவர்களின் முப்பெரும் இந்தியக் கூட்டாளிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஃப்.எஸ் அதிகார வர்க்கத்தினரையும் தோலுரித்துக் காட்டினார்.

அடுத்ததாகப் பேசிய தோழர் மணிமேகலை, ரசியாவில் புரட்சிக்கு முந்தைய பெண்கள் நிலையையும், புரட்சியில் அவர்களின் பங்களிப்பையும், புரட்சிக்குப் பின்பு நிர்வாகத் துறையில் அவர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் சுட்டிக் காட்டி, புரட்சிகர அமைப்புகளில் பெண்கள் சேர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

“மோடியா? மோசடியா?” என்கிற தலைப்பில் அடுத்தாகப் பேசிய தோழர் குருசாமி மயில்வாகனன், இந்திய நீதிமன்றங்கள் சரியாக இயங்குமேயானால் மோடிக்குக் கிடைக்கக் கூடிய தண்டனை தூக்குதான், அதிலிருந்து மோடி தப்பிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முன்னோடிகளில் ஒருவனான ஹிட்லரைப் போன்று தற்கொலை செய்து கொள்வதுதான். ஆனால் நாம் அதற்கு அனுமதிக்கக் கூடாது, அவர்களின் இன்னொரு முன்னோடியான முசோலினிக்கு இத்தாலி மக்கள் கொடுத்த தண்டனையான தெருவிலே அடித்து இழுத்து வந்து முச்சந்தியிலே தூக்கிலிட்டது போல இந்திய மக்களும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக, “முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” எனும் தலைப்பில் பேசிய பு.ஜ.தொ.மு வின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன், மூலதனமானது தனக்குள் போட்டியிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வது முதலாளித்துவத்தின் இயல்பு. ஆனாலும் அந்த அழிவினால், முதலாளிகள் அழிவதில்லை. மீண்டும் வருவார்கள். ஆனால், தொழிலாளி வர்க்கமோ அந்த அழிவினால் பாதிக்கப்படுகிறது. லாபம் கிடைத்தாலும், நட்டம் கிடைத்தாலும் பாதிப்பு தொழிலாளிக்குத்தான் என்பதை விளக்கி முதலாளித்துவத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்தினார்.

தோழர் மாணிக்கம் நன்றியுரையாற்றினார். இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தோடு விழா நிறைவுற்றது.

சிவகங்கையின் எம்.எல்.ஏவாக தொடர்ந்து இரண்டு முறையிருப்பது இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி எனும் கடை. நகராட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சி எனும் கடை. அவர் ஊழல் குற்றச்சாட்டால் கடையிலிருந்து விரட்டப்பட்டு தற்போது ஆர்.பி.எம் எனும் கடையைத் தொடங்கியுள்ளார்.

இருப்பினும் நவம்பர் புரட்சி நாளை இவர்கள் எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டதில்லை. மாறாக நவம்பரில் தீபாவளி வரும் காரணத்தால் வளர்ச்சி நிதி மட்டும் ஆண்டு தோறும் வசூலிக்கத் தவறுவதில்லை. இந்த ஆண்டு பு.ஜ.தொமுவின் சுவரொட்டிகளும், பிரசுரங்களும், நிகழ்ச்சியும் போலிக் கம்யூனிஸ்ட்டுக் கடைகளிலுள்ள நல்லவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக சில நல்லவர்கள் கூறியிருக்கிறார்கள். தலைகுனிவு மட்டுமல்ல தலைகுப்புற வீழ்த்தாமல் விட மாட்டோம் என்பதுதான் புரட்சிகர அமைப்பின் வேலை என்பதை அந்த நல்லவர்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை

4. திருச்சி

96 வது நவம்பர் 7 ரசிய சோசலிசப் புரட்சி நாள் வாழ்க!

ரசியாவில் 1917 ஆம் ஆண்டு உழைக்கும் மக்கள் தங்களை அழுத்தி சிதைத்துக் கொண்டிருந்த ஜார் ஆட்சியை மாமேதை தோழர்.லெனின் தலைமையில் தூக்கியெறிந்த நாள், “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” என்று முழங்கி பாட்டாளிகளின் சர்வாதிகாரம் நிறுவிய நாள்.

இந்த எழுச்சிகரமான நாளை, திருச்சியில் விழாவாக கொண்டாடியது, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகள். காலை 8.30 மணிக்கு BHEL ஆலையில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பாக டிரைனிங் சென்டரில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் ம.க.இ.க.தோழர்கள் கொடியேற்றி மக்களிடையே நவம்பர் 7 புரட்சியினை விளக்கி நாமும் அம்மக்களை போல் போராட முன் வரவேண்டும் என றை கூவல் விடுத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி இந்நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினார்.

புத்தூர் சண்முகா திருமண மண்டபத்தில் மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை நவம்பர் புரட்சிதின விழா சிறப்பாக நடைபெற்றது.

தலைமையேற்ற பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் சுந்தர்ராஜ், “தொழிலாளி வர்க்கத்துக்கு உரிமையை வழங்கிய புரட்சிதினம், மிதிபட்டு, நசிபட்டு கிடந்த உழைப்பாளி வர்க்கத்தை தலை நிமிர வைத்த நாள், உழைப்பாளியின் வியர்வையே தேசத்தின் முகவரி என முதலாளி வர்க்கத்தின் செவிப்பறையில் அறைந்து கூறிய நாள், ஆனால் இன்று முதலாளித்துவ கொடூர சுரண்டல் என்றுமில்லா வண்ணம் ஒவ்வொரு துறையிலும் தன் ராட்சத கரங்களை அகல விரித்து தொழிலாளியின் கழுத்தை லாப வெறி கொண்டு இறுக்குகிறது, தொழிலாளர்கள் விடுதலையை நோக்கி தமது கரங்களை இணைக்கும் சுழல் தோன்றியுள்ளது. புரட்சியின் தேவையை முன்மொழிகிறது. இதற்கான வேலைத்திட்டம் நமது கரங்களில் உள்ளது, நடைமுறையில் இறங்குவோம், புரட்சியை நடத்துவோம்” என்றார்.

“நிலப்பிரபுத்துவ பிற்போக்கு பண்பாட்டுக்கெதிராக பாட்டாளி வர்க்க பண்பாட்டின் தேவை” எனும் தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி தோழர். பவானி பேசினார், “இன்று உழைக்கும் மக்களின் வாழ்க்கையை ஆக்ரமித்துள்ள பிற்போக்கு திருவிழாக்கள், பண்டிகைகள் கணப்பொழுது சந்தோசத்தை கொடுக்கிறது, ஆனால் அதன் பின்னே படும் வேதனை சொல்லி மாளாது, நரகாசுரனை கொன்று மக்களை பட்டாசு வெடித்து கொண்டாட சொல்லும் பார்ப்பனியத்தின் மோசடியை உணராமல் அசுரர்கள் நாம் இதில் மூழ்கி உள்ளோம்.

ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களின் பாக்கெட்டை காலிசெய்யும் படிதான் வருகிறது, முதலாளிகளின் கொழுத்த லாபத்துக்காக உழைக்கும் மக்கள் பலியாகிறோம், டாஸ்மாக் மூலம் லாப இலக்கை உயர்த்துகிறது ஜெயா அரசு, உண்மையில் தாலியறுக்கும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது என்பதுதான் கொடுமை, ஆனால் ரசிய சோசலிச புரட்சி உழைக்கும் மக்களின் நிறைவான வாழ்க்கையை மட்டும் கணக்கில் எடுத்து, பெண்களை சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக உயர்த்துவதற்கு ஏற்க அனைத்து அடிமைத் தனத்திலுருந்தும் விடுவித்தது. அது போன்ற நாள் இங்கு வர நாம் அமைப்புகளில் இணைந்து போராட வேண்டும்” என்றார்.

“ஏகாதிபத்திய சீரழிவு பண்பாட்டிற் கெதிராக பாட்டாளி வர்க்க பண்பாடு” என்கிற தலைப்பில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர். ஓவியா பேசினார், “புரட்சி நாள் நம்மை ஏங்க வைக்கிறது அப்படி ஒரு நிறைவான நாள் இங்கும் தேவை என்பதை உணர்த்துகிறது.

இன்றைய இளைய சமுதாயம் எதை நோக்கிப் போகிறது? நாட்டுப்பற்றோ மக்கள் மீதான அக்கறையோ இன்றி வெறும் என்ஜாய் பண்ணும் விட்டேத்தி தனத்தில் மூழ்கி உள்ளது.

செல்போன், இன்டர்நெட், வீடியோ கேம், பேஸ்புக், இதில் நுழைந்து ஆதியில் இருந்து அந்தம் வரை பூந்து விளையாடுகின்றனர், தமது பிள்ளைகள் நன்றாக வளர்கிறார்கள் என பெற்றோர்கள் கனவில் மூழ்கி உள்ளனர். ஆனால் எந்த விசயத்தில் வளர்ச்சி என பார்க்கும் போது அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது, நடுத்தர வர்க்கம் பிள்ளைகளை தனி ரூம் ஒதுக்கி அவன் நடத்தையை கவனிக்காமல் கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கிறான் என கற்பனையில் இருப்பது அவனின் சீரழிவு கலாச்சாரத்துக்கு பச்சைக் கொடி காட்டுவதே,

பெண்கள் மீதான பாலியல் வன்முறை, அதிகரித்து ஒட்டுமொத்த பெண்னினமும் பாதுகாப்பற்று நிற்கும் நிலையை இந்த ஏகாத்திபத்திய சீரழிவு உருவாக்கியுள்ளது. இதை வெட்டியெறிந்து இங்கும் ஒரு புரட்சியை சாதிக்காமல், சீரழிந்து நிற்கும் இளைய சமூதாயத்தை மீட்டெடுக்க முடியாது, அந்தக் கடமை நமது தோளில் சுமத்தப்பட்டுள்ளது, வாருங்கள்” என அறை கூவினார்.

இடையில் கலாச்சார போட்டி என புதிய இளந் தோழர்களின் பறை முழக்கங்கள், புரட்சிகர பாடல்கள், கவிதைகள் அரங்கேறின. வருங்கால புரட்சியின் கொழுந்துகளான சிறு குழந்தைகள் பகத்சிங், விவசாயி, பறை இசைப்பவர், நாடோடிகள் போன்ற மாறுவேடமிட்டு பார்வையாளர்களை ஈர்த்தனர். புரட்சிகர உற்சாகத்தை பார்வையாளர்களுக்கு ஊட்டினர். பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது. பெவிமு தோழர். சுமதியின் சிலம்பாட்டம் பார்வையாளர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியது.

இறுதியில் மைய கலைக்குழுவினர் பாடிய புரட்சிகரபாடல்கள் அனைவருக்கும் புரட்சிகர உணர்வை மேலும் அதிகப்படுத்தியது. ம.க.இ.க தோழர். சரவணனின் நன்றியுரையுடன்… சர்வதேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : –
ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., திருச்சி.

  1. நூறு வருடம்கூடத் தாக்குப்பிடிக்காத புரச்சி என்ன புரச்சி? ருஷ்யாவே மறந்த இந்த விஷயத்தை இங்க கொண்டாடி என்ன பயன்?

    • His Feet,
      பிரெஞ்சுப் புரட்சி பத்து வருடம் கூட தாக்குப்பிடிக்காத புரட்சிதான். ஆனால் எந்தக் கொம்பனாலும் சமூகம் அடுத்த கட்டத்துக்குப் போவதை தடுக்க முடியவில்லை. வரலாற்றை சரியாக படியுங்கள். இல்லையானால் வெறும் புலம்பல்தான் மிஞ்சும்…

  2. பிஜெபி 14 நாள் மட்டும் ஆட்சி செய்தவர்கள் இருக்கும் நாட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!!!!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க