privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஓசூர்: தொழிலாளர் நல அலுவலரா, முதலாளி நல அலுவலரா ?

ஓசூர்: தொழிலாளர் நல அலுவலரா, முதலாளி நல அலுவலரா ?

-

கமாஸ் வெக்ட்ரா ஆலை நிர்வாகத்தின் சட்டவிரோத செயலுக்கு துணை போகின்ற தொழிலாளர் நல அலுவலர் லக்சுமிநாரயணனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

னரக வாகனங்களைத் தயாரித்து வரும் பன்னாட்டு நிறுவனமான கமாஸ் வெக்ட்ரா ஆலை ஓசூரில் இயங்கி வருகிறது. இவ்வாலைத் தொழிலாளர்கள் அனைவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளைச் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சங்கம் அமைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ள சூழ்நிலையில் கடுமையாகப் போராடி ஓசூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் போராதரவுடன் சங்கத்தை அங்கீகரிக்க வைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப்பந்தமும் போடப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தை தலைநிமிர வைத்த வரலாற்று சம்பவம் ஏற்கனவே ஓசூர் மக்கள் அனைவரும் அறிந்ததே.

hosur-lo-1தற்போது, கடந்த காலத்தில் போடப்பட்ட சட்டபூர்வமான 12(3) ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் அனைவரும் மதித்து பின்பற்றி வருகின்றனர். ஆனால், நிர்வாகமோ அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் அலட்சியப்படுத்தி சங்க நிர்வாகிகள், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதும், வெளி மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்வதும், மேலும் ஒப்பந்த சரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார பலன்களை தராமல் ஏமாற்றியும் வருகிறது. அது மட்டுமின்றி ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஏற்றுக் கொண்ட உற்பத்திக்கு மேல் உற்பத்தி போடச் சொல்லி தொழிலாளர்களை மிரட்டி வருகிறது ஆலை நிர்வாகம். தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டு சங்கம் சார்பாக புகார் கடிதம் 2K வழக்குகள், பிரிவு 29-ன்கீழ் ஒப்பந்தமீறல் நடவடிக்கை மேற்கொள்ள தொழிலாளர் நல அலுவலரிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தொழிலாளர் நல அலுவலர் திரு. லக்சுமிநாரயணன் அவர்கள் இவை எதற்கும் சிறிதளவும் இதுரையிலும் செவி சாய்க்கவில்லை. மாறாக, நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மக்களின் வரிப் பணத்திலிருந்து சம்பளம் பெறும் தொழிலாளர் நல அலுவலர் சட்டபூர்வமான அவரது கடமையை நிறைவேற்ற மறுத்து சட்டவிரோத கிரிமினல் ஆலை நிர்வாகத்திற்கு துணை செல்லும் போக்கை மக்களிடையே அம்பலப்படுத்தும் முகமாக 11.11.2013 காலை 11.30 மணியளவில் கையில் செங்கொடிகளை உயர்த்திப் பிடித்து முழக்கமிட்டபடி தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கமாஸ் வெக்ட்ரா ஆலைத் தொழிற்சங்கத்தின் தலைவர் தோழர்.செந்தில் தலைமை தாங்கினார். டி.வி.எஸ் அரிதா ரப்பர் நிறுவனத்தினால் வேலை நீக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளி திரு. கோபால கிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். இவரது பிரச்சினையிலும் கூட தொழிற்தாவா எழுப்பி நீதி கேட்டுப் போராடி வந்துள்ளார். 45 நாட்களில் சட்டப்படி முடிக்கப்பட வேண்டிய பிரச்சினையை முடிக்காமல் டி.வி.எஸ் நிர்வாகத்திற்கு சார்பாக இழுத்தடித்து இழுத்தடித்து மனஉளச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார் என அம்பலப்படுத்தி கண்டன உரையாற்றிப் பேசினார்.

புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். இறுதியாக, கமாஸ் வெக்ட்ரா ஆலையின் தொழிலாளி தோழர் மதன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் கூடி நின்று ஆதரித்துச் சென்றனர். நூற்றுக்கணக்கில் சுவரொட்டியும், ஆயிரக்கணக்கில் துண்டறிக்கையும் வெளியிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரத்தை கண்ணுற்ற தொழிலாளர்கள் இப்படித்தான் போராட்டம் செய்யவேண்டும் என கருத்து தெரிவித்து தங்களது ஆதரவைப் பதிவுசெய்துச் சென்றனர்.

———————————————————————————————-

பிரச்சாரத்தின்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் :

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே!

hosur-lo-noticeஓசூரில் கனரக வாகனம் லாரி உற்பத்தி செய்யும் கமாஸ் வெக்ட்ரா எனும் பன்னாட்டு கம்பெனி இயங்கி வருகிறது. ஊதிய உயர்வு கோரி கோரிக்கை எழுப்பி கடந்த 2010-ல் 6 மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆலையின் போர்டு ஆப் டைரக்டர்களின் ஒப்புதல் பெற்று கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலர் முன்பு சட்டபூர்வமான முத்தரப்புப் பேச்சு வார்த்தையின்மூலமாக 12 (3) ஒப்பந்தம் போடப்பட்டது. ஏறக்குறைய இந்த ஒப்பந்தத்தின் பலனாய் கடந்த மூன்றரை ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட லாரிகளை 560 கோடிக்கு விற்று ரூபாய் 168 கோடி சம்பாதித்துள்ளது நிர்வாகம்.

இதற்கு அடிப்படையாக வேர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி இளந்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ரூ.7,000, போனஸ் ரூ.8,400,பரிசுப் பொருள் ரூ 5,000 உள்ளிட்ட பொருளாதார பலன்களை தராமல் ஏமாற்றி வருகிறது நிர்வாகம். அது மட்டுமின்றி ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டுள்ள இரண்டு லாரிகளுக்கு பதிலாக மூன்று லாரிகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தினந்தோறும் மிரட்டி வருகிறது நிர்வாகம். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்பாகவே போடப்பட்ட ஒப்பந்தப்படி நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டுமென தொழிற்சங்கம் கோரியது.

அதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தை கழிவறை காகிதமாய் கருதி தொழிற்சங்கத்தை உடைக்கவும், நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டவும் கண்மூடித்தனமாக தாக்குதலில், கமாஸ் வெக்ட்ரா நிர்வாக அதிகாரிகள் ராஜு , ஆறுமுகம்(எச். ஆர்.ஜி.எம்) ஜேக்கப் லியாண்டர் (ஐ.ஆர்.ஏ.ஜி.எம்) ஈடுபட்டு வருகின்றனர். 13 தொழிலாளர்கள் சஸ்பெண்ட், 5 தொழிலாளர்கள் வட மாநிலங்களுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இதில் 5 தொழிலாளர்களுக்கு இன்றளவும் விசாரணை என்ற பெயரில் வேலை தராமல் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். உச்சகட்டமாக இரண்டு சங்க நிர்வாகிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். ஆக ஆலை நிர்வாகமும், அதிகாரிகளும் சொகுசாக இருக்கின்றனர். தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் 12 (3) ஒப்பந்தப்படி நடக்காமலும் சம்பள உயர்வு தராமலும், சஸ்பெண்ட், வேலைநீக்கம் செய்து தொழிலாளர்களை கொலைப்பட்டினிப் போட்டு தாக்கும் கமாஸ் வெக்ட்ரா நிர்வாகத்தின் மீது தொழில் தகராறு சட்டம் பிரிவு29-ன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் தொழிலாளர் நல அலுவலர் திரு. லக்சுமி நாரயணன். ஆலை முதலாளியும், அதிகாரிகளும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதும், தொழிலாளர்களின் மீது சட்ட விரோதமாக தாக்குவார்கள் என்பதும் உலகறிந்த உண்மையாகும். இதிலிருந்து மீட்கத்தான் தொழிலாளர் நலத்துறை உள்ளது. ஆக சட்டபூர்வ உரிமைகளை பாதுகாத்து தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய தொழிலாளர் அலுவலர் லக்சுமிநாரயணன் யாரிடமோ தொலைபேசியில் ஆலோசனை நடத்தி விட்டு வழக்கு நடத்தாமல் வாய்தா போட்டு தொழிலாளர் உரிமைகளுக்கு சமாதி கட்டுகிறார்.

hosur-lo-2சட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்க கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலகத்தை நாடும் டி.வி.எஸ் ஹரிதா ரப்பர், கார்போரண்டம், மீல் ஆட்டோ, உள்ளிட்ட பல ஆலைத் தொழிலாளர்களின் கழுத்தையும் நெறிக்கிறார் லக்சுமிநாராயணன். சட்டத்தை மதிக்காத முதலாளிகளும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக செயல்படுகின்றனர். ஆக நம் முன்னால் இரண்டு வழிகள்தான் உள்ளது. ஒன்று ஏ.பி.எல், உமாமகேஷ்வரி, இண்டிகார்ப் தொழிலாளர்களைப்போல் தற்கொலை செய்து கொள்வதா? மற்றொன்று, தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட மரபுப்படி உரிமைகளைக் காக்க போராடுவதா? முதலாளிகளின் அடக்குமுறை, தொழிலாளர் நல அலுவலர் லக்சுமிநாரயணன் போன்றோரின் துரோகத்தைக் கண்டு நாம் சாகமுடியாது. நமது மரபுப்படி தொழிலாளர்களை ஒன்று திரட்டுவோம். போராடுவோம். அந்தவகையில் போராடும் கமாஸ்வெக்ட்ரா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவுத் தாரீர்!

தொழிலாளர் நலத்துறையே!

ஐ.டி ஆக்ட் 12(3) ஒப்பந்தத்தை மதிக்காத கமாஸ்வெக்ட்ரா நிர்வாகத்தின்மீது பிரிவு 29-ன்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்திரவுப்போடு !

கிரிமினல் முதலாளிகள் அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் கிருஷ்ணகிரி தொழிலாளர் நல அலுவலர் லக்சுமிநாரயணன்மீது நடவடிக்கை எடு.

தொழிலாளர்களே!

வர்க்கமாய் அணிதிரள்வோம்!

உரிமைப் பறிப்பு, அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்!!

முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!!!

————————————————————————————————————————–
தொடர்புக்கு :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, செல்-9788011784.
————————————————————————————————————————

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க