privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவீடியோ : போதையின் பிடியில் ரியோ டி ஜெனிரோ - ஆவணப்படம்

வீடியோ : போதையின் பிடியில் ரியோ டி ஜெனிரோ – ஆவணப்படம்

-

லகில் எங்கெல்லாம் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன? ஈராக்கில், ஆப்கானிஸ்தானில், சிரியாவில் நடக்கும் போர்கள் ஊடகங்களின் பன்னாட்டு தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கின்றன. இவற்றுடன் காஷ்மீரிலும், தண்டகாரண்யாவிலும், ஈழத்திலும் தம் நாட்டு மக்களுக்கு எதிராக அரசுகள் நடத்தும் ஆயுதம் தாங்கிய போர்களைப் பற்றியும் செய்திகள் வெளியாகின்றன.

ரியோ-டி-ஜெனிரோ
அழகு கொஞ்சும் ரியோ-டி-ஜெனிரோ

இவற்றைத் தவிர உழைக்கும் மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல், அவற்றுக்கு எதிராக போராடும் மக்களை வன்முறையால் நசுக்குவது என்ற அரசுகளின் போர்கள் உலகெங்கும் நடந்து வருகின்றன. இத்தகைய போர்களில் ஒருவகை பெருநகரங்களில் நடந்து கொண்டிருப்பவை; பல கோடி ரூபாய் விலை கொடுத்து வீடு வாங்கக் கூடிய சில நூறு மேட்டுக் குடியினரின் நலன்களுக்கும், லட்சக் கணக்கான மக்களின் உரிமைகளுக்கும் இடையேயானவை. சென்னை போன்ற மாநகரங்களில் குடிசைகளுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டு, மக்களை புறநகர்களைத் தாண்டி பொட்டல் காடுகளுக்கு துரத்தி விடுகிறது, அரசு. அந்த இடங்களில் பணக்காரர்களுக்கு சேவை செய்ய 7 நட்சத்திர விடுதிகளும், 7 நட்சத்திர குடியிருப்புகளும் புதிது புதிதாக முளைக்கின்றன.

மும்பையின் தாராவி போன்ற பகுதிகளில் அரசு எந்திரத்துக்கு அப்பாற்பட்ட சுயேச்சையான சுரண்டும் நிர்வாக அமைப்புகள் உள்ளுக்குள்ளேயே நிலவுகின்றன. போதை மருந்து விற்பனை, சூதாட்டம், பாலியல் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் நடத்துதல், நேரடியாக மிரட்டி பாதுகாப்பு பணம் வசூல் என்று தாதாக்கள் மக்களை சுரண்டுகிறார்கள். உள்ளூர் போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் தங்களுக்கு வர வேண்டியதை பெற்றுக் கொண்டு இத்தகைய நகரங்கள் இயங்க அனுமதிக்கிறார்கள்.

செல்வமும் வறுமையும் - அக்கம் பக்கத்தில்
செல்வமும் வறுமையும் – அக்கம் பக்கத்தில்

இந்த மாதிரியின் மிகப்பெரும் உதாரணம் பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ மாநகரம். ஃபவேலாக்கள் என்று அழைக்கப்படும் ரியோவின் பிரம்மாண்டமான சேரிகளைப் பற்றிய ஆவணப் படம் : “கடவுளரின், துப்பாக்கிகளின், தாதாக்களின் நகரம் (City of Gods, Guns and Gangs)”.

வெண்மணல் கடற்கரைகளும், பசுமை போர்த்த மலைகளும் சூழ்ந்த ரியோ-டி-ஜெனிரோவின் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் விண்ணை முட்டும் பல்லடுக்கு, ஆடம்பர சொகுசு குடியிருப்புகள் பளபளக்கின்றன. பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த மேட்டுக்குடி குடியிருப்புகளிலிருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் ஃபவேலா என்று அழைக்கப்படும் சேரிகள் விரிந்திருக்கின்றன. மலைச்சரிவுகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் தீப்பட்டிகள் போல அடுக்கப்பட்டிருக்கின்றன.

ரியோ-டி-ஜெனிரோவில் 600 சேரிகள் உள்ளன. நகர மக்கள் தொகையில் 5-ல் ஒரு பகுதியினர் ஃபவேலாக்களில் வசிக்கின்றனர். சேட்டிலைட் டிஷ் ஆன்டெனாக்கள், நவீன மோஸ்தர் டி-சட்டைகள், அரைக்கால் சட்டைகள் என்று 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்ட இந்த ஃபவேலாக்களில் சில ஏக்கர் நிலத்துக்குள் இலட்சக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் குழந்தைகள் படிக்கிறார்கள். மருத்துவ சேவையும், சுகாதார சேவைகளும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

குழந்தைகளும் ஆயுதம் ஏந்திய காவலரும்
குழந்தைகளும் ஆயுதம் ஏந்திய போலீசும்

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 47.7% வெள்ளை இனத்தவரும், 43.1% கலப்பு இனத்தவரும் இருக்க 7.6% மட்டுமே உள்ள கறுப்பின மக்கள் இந்த ஃபவேலாக்களின் மக்கள் தொகையில் 70 சதவீதம் இடம் பிடிக்கின்றனர். ஃபவேலாக்களில் வசிக்கும் அனைத்து இன மக்களும் ஒன்றாக கலந்து சுக துக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். குழந்தைகள் சேர்ந்து விளையாடுகிறார்கள்.

போதை மருந்து விற்பனை, சூதாட்ட விடுதிகள், இவற்றை பாதுகாக்க ஆயுதம் ஏந்திய படைகள் என்று ஒவ்வொரு ஃபவேலாவிலும் ஒரு நிழல் அதிகார அமைப்பு செயல்படுகிறது. இளைஞர்கள் போதை மருந்து பழக்கத்தில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். குழந்தைகள் துப்பாக்கிச் சண்டைகளின் நடுவில் உயிரை விடுகிறார்கள். சிறுவர்கள் போதை மருந்து கும்பல்களுக்குள் இழுக்கப்படுகிறார்கள். முகத்தைத் துணியால் மூடிக் கொண்டு, கையில் இயந்திர துப்பாக்கியுடன் போதை மருந்து கும்பல் தலைவர் தெருமுனையில் உட்கார்ந்திருக்க ஒரு பாட்டியும், பேரனும் அவரைக் கடந்து இயல்பாக நடந்து போகிறார்கள். வீடுகளின் சுவர்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த துளைகள் நிரம்பியிருக்கின்றன.

அரசு அவ்வப்போது போலீஸ் படைகளை அனுப்பி, துப்பாக்கிச் சண்டை நடத்தி போதை மருந்து வியாபாரிகளை பிடிக்க முயற்சிக்கிறது. கீழ்மட்ட விற்பனையாளர்கள் கைது, ஒரு சிலர் சுட்டுக் கொலை என்று புள்ளிவிபரங்களாக அது முடிகிறது. படையினரை எதிர்கொள்ளும் இளைஞர்கள், தமது சட்டை, பனியனை மேலே உயர்த்தி கைகளை தூக்கி விட வேண்டும், ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று நிரூபிப்பதற்கு. இல்லை என்றால் அவர் யாராயிருந்தாலும் கொல்லப்பட்ட போதை மருந்து கும்பலின் புள்ளிவிபரத்தில சேர்க்கப்பட்டு விடுவார்.

கால்பந்து உலகக் கோப்பை
கால்பந்து உலகக் கோப்பைக்கான தயாரிப்பு

அமெரிக்காவில் போலீசாரால் 37,000 பேர் கைது செய்யப்பட்டால் 1 நபர்  கொல்லப்படுகிறார். ரியோவில் 23 பேர் கைது செய்யப்பட்டால் ஒருவர் போலீசாரால் கொல்லப்படுகிறார். ஒவ்வொரு நாளும் 3 பேர் போலீசால் கொல்லப்படுகின்றனர். சில சமயங்களில் சிறு குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர். பிரேசில் உலகத்திலேயே கொலை வீதம் அதிகமான நாடு, போலீசால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இப்படி, சீவி சிங்காரித்த முகமும், அழுகி நாறும் அடிவயிறும் கொண்ட ரியோவில் 2014-உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளும், 2016-ல் ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளன. அதற்காக பல பத்தாயிரம் கோடி செலவில் புதிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகின்றன. சாலைகள் போடப்படுகின்றன.

வெளிநாட்டு சீமான்கள் வரும் போது, ஃபவேலாக்களை என்ன செய்வது? பளபளக்கும் நட்சத்திர விடுதிகள், கேளிக்கை அரங்குகள், உயர்குடி வீடுகள் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு சேரிகளில் வசிக்கும் 20 லட்சம் மக்களை கண்ணுக்குத் தெரியாமல் அகற்றி விட முடியாத நிலையில், அவற்றை ‘அமைதி’ப்படுத்தும் போலீஸ் படை ஒன்றை உருவாக்கியிருக்கிறது பிரேசில் அரசு. ஃபவேலாக்களின் போதை மருந்து வளையங்களை உடைப்பது இவற்றின் நோக்கம். 2014-ம் ஆண்டுக்குள் 40 ஃபவேலாக்களை அமைதிப்படுத்த திட்டமிட்டிருக்கிறது அரசு. ஃபவேலாக்களில் வாழும் மக்களுக்கு கௌரவமான வேலை வாய்ப்புகள், முறையான வாழ்விடம், குழந்தைகள் படிக்க பள்ளிகள், மருத்துவமனைகள் ஏற்படுத்துவதற்கு காசில்லாத அரசு, உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டி மைதானங்களையும் சிறப்பு ஆயுதப் படைகளையும் உருவாக்க செலவிடுகிறது.

அதிரடி ஆயுதப் படை
அதிரடி ஆயுதப் படை

BOPE – பாப்பி என்ற நகர்ப்புற போர்ப் படை உருவாக்கப்பட்டிருக்கிறது. கத்தியால் துளைக்கப்பட்ட மண்டை ஓடும், துப்பாக்கிகளும் கொண்ட சின்னம் பொறித்த தொப்பியுடன் துப்பாக்கிகளையும், கொலை வெறி ஆயுதங்களையும் சுமந்து கொண்டு ஃபவேலாக்களுக்குள் குதிக்கின்றனர் இவர்கள். ஈராக்கில் அமெரிக்கப் படை குவிப்பைப் போல பெருமளவிலான ஆயுதப் படையினர் ஃபவேலாக்களை ஆக்கிரமிக்கின்றனர். ஆடிப் பாடிக் கொண்டு போகும் குழந்தைகளையும், பேத்தியுடன் உட்கார்ந்திருக்கும் பாட்டியையும் தாண்டிச் சென்று,  அவர்களுக்கு நடுவே போதை மருந்து கும்பல்களை வேட்டையாடுகின்றனர். இதன் மூலம் ஃபவேலாக்களை போதை மருந்து கும்பல்களிடமிருந்து மீட்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது அரசு.

வேட்டையாடப்படும் போதை மருந்து கும்பல்களில் யார் உள்ளனர்? துப்பாக்கி ஏந்திய, அரைக் கால்சட்டை போட்ட, சட்டை போடாத மார்பில் துப்பாக்கியை கட்டிக் கொண்டிருக்கும் இளைஞர்கள். அவர்கள் கையிலிருக்கும் துப்பாக்கிகள் எங்கிருந்து வருகின்றன? “மேட் இன் அமெரிக்கா” முத்திரையை காட்டுகின்றனர். எப்படி வருகின்றன? கடத்தல் மற்றும் நகர போலீஸ் மூலம். போதை மருந்துகள் எங்கிருந்து வருகின்றன என்று கேட்கக் கூடாது.

போதைப் பொருள் கும்பல்
போதைப் பொருள் கும்பல்

அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு ஜிகாதி பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து, பின்னர் உலகெங்கிலும் ஜிகாதி பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆயுதங்களையும், போர்த் தொழிலையும் ஏற்றுமதி செய்வது போல, இன்றைய முதலாளித்துவ உலகம் தென் அமெரிக்க நாடுகளுக்கு போதை மருந்து ஏற்றுமதியையும், ஆயுத ஏற்றுமதியையும் ஒருங்கே செய்கிறது.

ஃபவேலாக்களின் வீதிகளில் போதை மருந்துகள் வாழைப்பழம் போல விற்பனையாகின்றன. அவற்றை வாங்கி புகைத்து தெருமுனையிலோ, கேளிக்கை அறைகளிலோ மயங்கிக் கிடக்கின்றனர் இளைஞர்களும் இளம்பெண்களும். ஆண்டுக்கு 40 கோடி டாலர் (சுமார் ரூ 2,400 கோடி) மதிப்பிலான போதை மருந்துகள் ரியோவின் ஃபவேலாக்களில் விற்பனையாகின்றன என்று மதிப்பிடப்படுகிறது.

போதை மருந்து விற்பவர்களை மட்டும் பிடித்து விட்டால் போதுமா? வறுமையையும், புறக்கணிப்பையும், சுரண்டலையும் மறக்க போதை மருந்து இல்லா விட்டால், வேறு என்ன கொடுக்க முடியும்? ஆம், மத குருக்களும் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். போதை மருந்து உட்கொண்டு மயக்கத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு பேய் விரட்டும் முழக்கங்கள் எழுப்பி விடுவிக்க முயற்சிக்கின்றனர். போதை மருந்துக்கு அடுத்தபடியாக, செழிக்கும் நடவடிக்கை மத குருக்களின் பேய் விரட்டும் தொழில்தான்.

பராக் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

ஆவணப் படத்தின் இறுதியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பிரேசில் வருகை காட்டப்படுகிறது. ‘பிரேசில் உலகின் முக்கியமான நாடாக வளர்ந்து வருகிறது, பயம்  பீடித்த பகுதிகளில் நம்பிக்கை திரும்புகிறது. ஒவ்வொரு நாளும் பிரேசிலில் மேலும் மேலும் தீர்வுகள் உருவாகின்றன’ என எழுதிக் கொடுக்கப்பட்ட உரையை தனக்கே உரிய மோசடி குரலில் பேசுகிறார் ஒபாமா.

2014-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும், 2016-ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும். ஃபவேலாக்களில் வாழும் 20 லட்சம் மக்களின் வாழ்க்கை அப்படியே தொடரும், இன்னும் மோசமாகும், இன்னும் அதிகமான மக்கள் அவர்களது அணியில் தள்ளப்படுவார்கள்.

பிரேசிலில் நடக்கும் போர் நம் மத்தியிலும் நடந்து கொண்டிருக்கிறது. சுரண்டப்படுபவர்களின் தரப்பு பலவீனமாக இருப்பதால் அதை பளீரென்று நாம் உணர்வதில்லை. ஆனால், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவுகளாக சுரண்டல்கள் தீவிரமடைந்து, சுரண்டப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

சென்னையின் மெட்ரோ ரயில் பெட்டிகள் பிரேசிலில் இருந்துதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உலகின் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் முக்கியமான நாடாக கருதப்படும் பிரேசிலில் ஏழைகளின் வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கின்றது. இங்கே மக்கள் தமது வருமானத்தை டாஸ்மாக்கில் தொலைப்பது போல அங்கே போதை பொருளில் தொலைக்கிறார்கள். கூடவே ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் குணத்தையும் !

Part 1

Part 2