Saturday, June 15, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதாது மணல் குவாரிகளை மூடு! - தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் !

தாது மணல் குவாரிகளை மூடு! – தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் !

-

தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன்
துணைபோகும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!
தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடு!

பொதுக்கூட்டம்
கலை நிகழ்ச்சி

இடம்
தூத்துக்குடி
அண்ணாநகர் மெயின் ரோடு

நாள்
23-11-2013
சனி மாலை 5 மணி

தலைமை
வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன், உயர்நீதிமன்றம், மதுரை
மாவட்ட துணைச்செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

கருத்துரை

திரு எஸ். சேவியர் வாஸ்
தலைவர், தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு

திரு. எஸ்.வி.அந்தோணி
உவரி மு. ஊராட்சி மன்றத் தலைவர்

திரு எஸ்.ஏ.ஜோசப்
தலைவர், திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு

திரு கான்சீயூஸ்
ஊர் கமிட்டி தலைவர், பெரியதாழை.

திரு. ராஜன் வாய்ஸ்
ஊர் கமிட்டி தலைவர், பெரிய தாழை

திரு. லிபோன்ஸ்
ஊர் கமிட்டி தலைவர், பெரியதாழை

திரு சார்லஸ் பட்சேக்
கீழ வைப்பாறு

திரு எல்.எஸ். ஜானி பூபால ராயர்
லயன்ஸ் டவுன், தூத்துக்குடி

வழக்கறிஞர் சுப. இராமச்சந்திரன்
மா. செயலாளர், ம.உ.பா மையம், தூத்துக்குடி.

வழக்கறிஞர் கொ. அரிராகவன்
மாவட்ட தலைவர், ம.உ.பா.மையம், தூத்துக்குடி

வழக்கறிஞர் செ. தங்க பாண்டியன்
மா. அமைப்பாளர், ம.உ.பா மையம், திருநெல்வேலி

வழக்கறிஞர் க. சிவராச பூபதி
மா.அமைப்பாளர், ம.உ.பா.மையம், நாகர்கோவில்

சிறப்புரை

வழக்கறிஞர் சி. ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

தோழர் மருதையன்,
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

நன்றியுரை
திரு ஜோவர்
, மாவட்ட பொருளாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி

புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழுவினர்

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் –  தமிழ்நாடு

தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி
944352761, 9442339260, 9486643116
சென்னை கிளை தொடர்புக்கு வழக்குரைஞர் மில்டன் 98428 12062

 

தூத்துக்குடி நோட்டிஸ் - முன்புறம்

தூத்துக்குடி நோட்டிஸ் - பின்புறம்

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க  படத்தின் மீது கிளிக் செய்யவும்]

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்து வரும் தாது மணல் கொள்ளை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து சட்டப் பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ககன்தீப்சிங் பேடி குழு அறிக்கையின் அடிப்படையில் பெருங்கனிம குவாரிகள் பற்றி கொள்கை முடிவு எடுக்கப்படும்” என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனை வைத்து வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். தாது மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தப் போகிறது. மக்கள் கோரிக்கை நிறைவேறப் போகிறது என்னும் பொய்ப் பிரச்சாரம் திட்டமிட்டு மக்களிடம் பரப்பப்படுகிறது.

ஜெயா அரசு வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்குமா?

ஜெயா - வைகுண்டராஜன்
ஜெயலலிதா – வைகுண்டராஜன்

தமிழக சட்டப் பேரவையில் நீண்ட உரையாற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடலோர மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளாக வரைமுறையற்று நடந்து வரும் தாது மணல் கொள்ளை குறித்தோ, மூன்று மாவட்டக் கடற்கரையைச் சிதைத்து பல லட்சம் கோடி கொள்ளையடித்த வைகுண்டராஜன் மீதான நடவடிக்கை குறித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு நடத்தி பேடி குழு சமர்ப்பித்த அறிக்கையின் விவரங்களையும் தெரிவிக்கவில்லை. தி.மு.க ஆட்சியில் வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 19.04.2007-ல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஜெயலலிதாவோ வைகுண்டராஜன் மீதான நடவடிக்கை ஜெயா டிவியை முடக்கும் சதி எனப் பேட்டியளித்தார்.

தாது மணலையொத்த மதுரையின் கிரானைட் ஊழலில் கிரானைட் முதலாளிகள் கைது செய்யப்பட்ட பின்பே விரிவான ஆய்வு நடந்தது. கிரிமினல் வழக்குகள்,  கைதுகள் ஒருபுறம் – ஆய்வு மறுபுலம் என இரண்டும் சேர்ந்தே நடந்தது. ஆனால், தாது மணல் கொள்ளையில் தடயங்களை அழித்து, கடலோரங்களில் கலவரத்தைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைத்து வரும் வைகுண்டராஜனின் நிழலைக் கூட தமிழக அரசின் காவல்துறை தீண்டவில்லை. குளத்தூர் வி.ஏ.ஓ. கொடுத்த புகார் மீது கூட வழக்கு பதியப்படவில்லை. தமிழக முதல்வரிர் சட்டசபை அறிக்கை வைகுண்டராஜனை காப்பாற்றும் நோக்கத்தோடு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீனவ சமூக மக்களின் ஓட்டுக்களை குறி வைத்துப் பேசப்பட்டதே.

மணல் குவாரிகளை அரசு ஏற்றால் மக்கள்  பிரச்சினை தீருமா?

தாது மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்தினால், வி.வி மினரல்ஸ் வைகுண்டராஜனின் அடியாட்கள் தொல்லை ஒழியும், கடலோர கிராமங்களில் அமைதி திரும்பும் எனச் சிலர் கருதுகின்றனர். மணல் குவாரிகளை யார் நடத்தினாலும் கதிர்வீச்சு, மீன்வளம் அழிப்பு, கடலரிப்பு, கடற்கரை மேடாவது, புற்றுநோய், கல்லடைப்பு போன்ற மக்கள் மீதான பாதிப்புகள் தொடரவே செய்யும். கடற்கரையில் மக்கள் சுதந்திரம் பறிபோன நிலையில் எவ்வித மாற்றமும் வராது. அரசுதான் அணு உலையை நடத்துகிறது என்பதற்காக அதை நாம் அனுமதிக்க முடியுமா? அரசு நடத்தினாலும் – தனியார் நடத்தினாலும் கதிர்வீச்சு விபத்தால் சாகப் போவது மக்கள்தான்.

உண்மையில் தாது மணல் சுரங்கங்களை இயக்கப் போதிய உட்கட்டமைப்பு வசதி அரசிடம் இல்லை. மணல் பிரிப்பு இயந்திரங்கள், தொழில்நுட்பம், வேலை ஆட்கள், தாது நிலங்கள், வாகனங்கள், எல்லாம் வி.வி.யின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் பலநூறு ஏக்கர் நிலங்கள் வி.வி.க்கு 20,30 ஆண்டுகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு வேளை அரசாங்கம் தாது மணல் குவாரிகளை எடுத்தால் அதை நீதிமன்றம் சென்று தடுக்கும் வாய்ப்பு உள்ளது. மாறா, ஜெயாவும் வி.வி.யும் இரகசியக் கூட்டு வைத்துக் கொண்டு, தற்போது ஆற்று மணல் குவாரிகளை அரசின் பெயரால் தனியார்கள் நடத்துவது போல், தாது மணல் குவாரிகளையும் நடத்தலாம். ஆற்று மணல் குவாரிகளை சில இடங்களில் போராடித் தடுத்த மக்கள், அரசு ஏற்று நடத்தும் போது போராடவே விடாமல் ஒடுக்கப்பட்டனர். தாது மணல் குவாரிகளை அரசு எடுத்தாலும், கடற்கரையிலும் இதே நிலைமைதான் வரும். அரசு எடுப்பதென்பது வைகுண்டராஜனை பாதுகாப்பதே தவிர மக்களுக்கு ஆதரவானதல்ல. வழக்கம் போல் வைகுண்டராஜனின் சாம்ராஜ்யம் தொடரத்தான் செய்யும்.

ககன்தீப்சிங் பேடி குழு விசாரணை – அரச நாடகத்தின் ஓர் அங்கம்!

தாது மணல் கொள்ளை மக்கள்  போராட்டமாக உருவெடுத்த சூழலில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை வெளியிடாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடந்த இரண்டாம் கட்ட ஆய்வு மக்களுக்கு தெரிவிக்காமல் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது. அதிகமாக மணல் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களை காட்டச் சென்ற மக்களை காவல்துறை தடுத்து உள்ளது. ஆனால், மணல் கம்பெனி ஆட்கள் ஆய்வுக் குழுவோடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பஞ்சல் கிராமத்திற்கு ஆய்வுக் குழு வந்த போது, வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களில்தான் ஆ்யவுக் குழு உபகரணங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. பேடியுடன் வரும் பெரும்பாலான அதிகாரிகள் வைகுண்டராஜனின் கொள்ளையில் இன்றுவரை கூட்டாளிகள்தான். பாதிக்கப்பட்ட இடங்களைக் காண பேடியை மக்கள் அழைத்த போது, எல்லா இடங்களையும் என்னால் பார்க்க முடியாது; இரண்டு நாட்களில் நாங்கள் டார்கெட் முடிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார் பேடி. இதுதான் பேடி குழு ஆய்வின் லட்சணம். இதன்பின் குமரி மாவட்டத்திலும் மிகவும் விரைவாக ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணை, நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு என தாது மணல் கொள்ளை வழக்கு தமிழக அரசின் கையை விட்டு போய் விடக் கூடாது என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

ஒழிக்கப்பட வேண்டிய வைகுண்டராஜனின் ஊழல் சாம்ராஜ்யம்!

வைகுண்டராஜனிடம் மாதம் ரூ 5,000 முதல் ரூ 10,000 வரை பெற்றுக் கொண்டு கம்பெனிக்கு அடியாள் வேலை, தரகு வேலை மட்டும் பார்ப்பவர்கள் தவிர வருவாய், பொதுப்பணி, காவல், அணுசக்தி உள்ளிட்ட மத்திய-மாநில அரசின் அனைத்துத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், என்ற அடித்தளத்தில்தான் வைகுண்டராஜனின் ஊழல் சாம்ராஜ்யம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. 15 ஆண்டுகளால வைகுண்டராஜன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்காததுடன், கடந்த தி.மு.க ஆட்சியில் பெயரளவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வைகுண்டராஜனுக்கு மணல் கொள்ளை தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய அறிவிக்கைப் கூட ரத்து  செய்தது நீதிமன்றம். தூத்துக்குடி பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் வைகுண்டராஜனிடம் விலை போனதுடன் கொடைக்கானலுக்கு உல்லாசப் பயணம் சென்று வந்துள்ளனர்.

தாது மணல் கொள்ளை – கடலோர மக்களின் தனித்த பிரச்சினையல்ல!

தமிழகத்தில் கிரானைட், ஆற்று மணல், தாது மணல் என சூறையாடல் நடத்தப்படுவதைப் போல ,நாடு முழுவதும் இயற்கை வளங்கள் வரைமுறையின்றி கொள்ளையிடப்படுகிறது. இக்கொள்ளைக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் கொள்கைதான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கை. இம்மக்கள் விரோதக் கொள்கைதான் விவசாயிகளை நிலத்தை விட்டு, தொழிலாளர்களை வேலையை விட்டு, பழங்குடியினரை காட்டை விட்டு, மீனவர்களை கடலை விட்டு, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டால் சிறு வியாபாரிகள் தொழிலை விட்டு, பணக்காரர்கள் கல்வியை விட்டு விரட்டுகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் போலீசு, பொய் வழக்கு, கைது, சிறை என எதற்கும் அஞ்சாமல் நாட்டுப் பற்றுடன் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருகின்றனர்.

தாது மணல் கொள்ளை, அணு உலைப் பிரச்சினையில் கடலோர மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டாலும், உண்மையில் இவை ஒட்டுமொத்த நாட்டு மக்கள் பிரச்சினை. அனைத்து மக்களுக்கும் சொந்தமான இயற்கை வளங்கள் கொள்ளை போவது, இயற்கைச் சமநிலை சீர்குலைக்கப்படுவது, சமூக அமைதி கெடுவது, எதிர்காலத் தலைமுறைகள் பாதிக்கப்படுவது என அனைத்தும் மக்கள் சார்ந்ததாக உள்ளன. மாபெரும் சக்கரவர்த்திகள், உலகை அச்சுறுத்திய சர்வாதிகாரிகள் எல்லாம் மக்கள்  போராட்டத்தின் முன் மண்டியிட்டதே வரலாறு.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அமெரிக்கா, ரசியா, இந்தியா வல்லரசுகளின் கொள்கையையே எதிர்த்து அர்ப்பணிப்போது ஒற்றுமையாக போராடி வரும் கடலோர மக்கள், வைகுண்டராஜன் போன்ற கிரிமினல்களை வீழ்த்த முடியும். தாது மணல் கொள்ளைக்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றியடைந்தால், அது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை உற்சாகத்துடன் முன்னெடுத்துச் செல்லும். மேலும் கூடங்குளம் அணு உலையை மூடுவதும், மேலும் நான்கு அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட முயலும் மத்திய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தும்.

தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட நமது போராட்ட உணர்வை, அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வழக்கறிஞர்கள் முன்முயற்சியில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்திற்கு திரளாக அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்! உங்கள் பங்களிப்பாக போராட்ட நிதியும் தாருங்கள்!

வைகுண்டராஜனின் கொள்ளை மீண்டும் தொடரவே,
தாது மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்து என்ற கோரிக்கை!

வி.வி.யைப் பாதுகாக்கவே மக்கள் பங்கேற்பில்லாத பேடி குழு விசாரணை!

வி.வி உள்ளிட்ட தாது மணல் மாபியாக்கள், துணை போன அதிகாரிகள், அரசியல்வாதிகளை தேசிப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!
அவர்களது ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

தாது மணல் கொள்ளை பற்றி சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்து!

தொழில் இழந்த மீனவர்கள், புற்றுநோய், கல்லடைப்பு, கருப்பை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை, இழப்பீடு வழங்கு!

சொந்த நாட்டு மக்களின் வாழ்வைச் சூறையாடும்
தனியார்மயக் கொள்கையை ரத்து செய்!

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

    • ஆமாமா வைகுண்ட ராசன் தான் கடந்த 20 வருசமா தென் வாட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுபோக அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கிறார்…அம்மா கூட அதுபத்தி ஆவய்வு செய்யத்தான் கமிட்டி வைத்துள்ளார்….

  1. இயற்கைச் சீரழிவை தோற்றுவிக்கும் எவரது செயலும் ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.சக மனிதனுக்கு ஒரு இழப்பென்றால் இயற்கையையே எதிர்த்து நிற்கும் மனிதன் முன்பு,மனித விரோதிகள் அழிக்கப் பட வேண்டிய குற்றவாளிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க