Thursday, June 20, 2024
முகப்புஉலகம்ஐரோப்பாவரியா, போராட்டமா – நெருக்கடியில் சிக்கிய பிரெஞ்சு அரசு

வரியா, போராட்டமா – நெருக்கடியில் சிக்கிய பிரெஞ்சு அரசு

-

டுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பிரான்சு அரசு மக்கள் மீது தீவிரமாக புது வரிகள் விதித்தபடி உள்ளது. புதிய வரிகள் போதாது, மக்கள் நலத் திட்டங்களுக்கு இன்னும் நிதியை வெட்டு என அலறுகிறது பன்னாட்டு நிதியாயம், மேலும் வரி என்றால் மக்கள் அரசை தூக்கி எறிவார்கள், வரியை ரத்து செய் என்கிறது அரசு பாதுகாவலர்களின் ரகசிய அறிக்கை. முட்டுச் சந்தில் தவிக்கிறது பிரான்சு முதலாளித்துவம்.

பிரெஞ்சு மக்கள் போராட்டம்
பிரெஞ்சு மக்கள் போராட்டம்

பிரான்சு கடனை திருப்பிச் செலுத்தும் உத்திரவாதம் குறைந்துள்ளதால், அதன் கடன் வாங்கும் தகுதியை குறைத்துள்ளது ஸ்டான்டர்ட் அன்ட் பூர். அதன் கணிப்புப்படி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பிரான்சு அதிலிருந்து மீள வரி விதிப்பை மாத்திரம் நம்பி உள்ளது. மேலும், பன்னாட்டு நிதியாயம், உலக வங்கியைச் சேர்ந்த முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி பிரான்சு அரசு கடுமையான சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடும் நிதியை வெட்ட வேண்டும்.

பிரான்சு அரசு தன் தலையை காப்பாற்றிக் கொள்ள போராடி வருகிறது. இந்தியாவைப் போலவோ அல்லது பிற மூன்றாம் உலக நாடுகளைப் போலவோ நினைத்த நேரத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்கு வெட்டு செய்ய முடியாது. அப்படி செய்தால் உடனடியாக பிரான்சு மக்கள் வீதியில் போராட வந்து விடுவார்கள் அதனால், கொஞ்சம் மக்களை ஏமாற்றி மாற்று வழியாக வரிகளின் மூலம் மேலும் நிதி சேர்க்கலாம், சிக்கன நடவடிக்கைகளை மெதுவாக செய்யலாம் என்பது பிரான்சு அரசின் திட்டம்.

சென்ற மாதம் வடக்கு பிரான்சில் உள்ள பிரித்தானி பகுதியில் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் மீது சுற்றுச் சூழல் வரி அறிவிக்கப்பட்டதும் மக்கள் பொங்கி எழுந்து விட்டனர். மக்களின் எழுச்சி அரசின் வரி விதிப்பு அறிவிப்பை தற்காலிகமாக திரும்பப் பெற வைத்தது.

அதை தொடர்ந்து பிரான்சில் அரசை பிரநிதித்துவப் படுத்தும் ப்ரிஃபெக்ட்டுகள் எனும் உள்ளாட்சி அமைப்புகளின் பாதுகாவல் படை தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.”பிரான்சு சமூகம் முழுவதும் ஒருவித நிலையற்ற தன்மை நிலவுகிறது. மக்கள் கடும் கோபத்திலும், கிளர்ச்சி மன நிலையிலும் உள்ளனர்” என அரசை எச்சரித்துள்ளது உள்ளாட்சி அமைப்புகளின் பாதுகாவல் படையினரின் அறிக்கை. நாட்டின் 101 பகுதிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை தொகுத்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், “மக்கள் வரிகள் விதிக்கப்படுவதன் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். மக்கள் மத்தியில் நிலவும் உள்ளார்ந்த அதிருப்தியும், விரக்தியும் எந்த நேரத்திலும் வன்முறை போராட்டங்களாக வெடிக்கலாம்” என்று சொல்லப்பட்டுள்ளது.

“அரசு புதிய வரி விதிப்புகளை தவிர்க்க வேண்டும்” என்றும் “சுற்றுச் சூழல் வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை மக்கள் அடித்து நொறுக்கி விடுவதற்கு முன்பு கலைத்து பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் அறிக்கை கூறியுள்ளது.

வரி விதிப்பிற்கே இந்த நிலைமை என்றால் பன்னாட்டு நிதியம் முன் வைக்கும் சிக்கன நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தினால் ஏற்படப் போகும் விளைவை நினைத்து பார்த்தாலே பிரான்சு அரசுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.

பிரெஞ்சு பிரதமர்
மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து வரி விதிப்பை முறைப்படுத்தப் போவதாக சொல்கிறார் பிரெஞ்சு பிரதமர் – ஜோமாக் எய்ரூ

கொதிக்கும் தண்ணீரின் ஆவியை வலுக்கட்டாயமாக அடைக்க முனைந்தால் அது பொங்கி வெளிவர பாத்திரத்தை உலுக்கும், மீறி அழுத்தினால் வெடிக்கும் என்பது விஞ்ஞானம். இதே நிலைமை தான் பிரன்சிலும். அவர்களின் வரலாறு அப்படி.

பிரான்சு மக்கள் பிரெஞசு புரட்சியின் போதே நிலப்பிரபுத்துவ உறவுகளை ரத்தக் களரியோடு தூக்கி எறிந்தவர்கள். அப்பொழுது முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான விவாதங்கள், கருத்து சுதந்திரம் முதன்மைக்கு வந்தது. அன்று முதல் வீதியில் எந்நேரமும் வந்து போராட அவர்கள் தயங்கியதே இல்லை. சுருக்கமாக ஐரோப்பிய மக்களின் பண்பே அது தான்.

1917 ரஷ்ய புரட்சிக்கு பின், இந்த போராடும் பண்பு கொண்ட மக்கள் கிளர்ந்தெழக் கூடாது என முதலாளித்துவ அரசுகள் திட்டமிட்டு உருவாக்கியது தான் இந்த மக்கள் நல அரசு திட்டங்கள். இவை அனைத்தும் மக்களின் போரட்டங்களையும், கிளர்ச்சியையும் மட்டுப்படுத்தியது உண்மை தான்.

சோசலிச முகாமின் வீழ்ச்சிக்குப் பிறகு, ‘வரலாறு முடிவுக்கு’ வந்து வெற்றி பெற்றதாக தலை விரித்து ஆடியது முதலாளித்துவம். உலகளாவிய நிதிக் கும்பலின் சூதாட்ட லாப வெறிக்கு ஒட்டு மொத்தமாக இரையாக்கப்பட்ட ஐரோப்பிய பொருளாதாரங்கள் 20 ஆண்டுகளுக்குள் திவால் நிலையை எட்டின. முதலாளித்துவத்தின் லாப வெறி அதிகமாகி மொத்த பணத்தையும் சுருட்டியதன் விளைவு, மக்களின் அடிப்படைகளுக்கு செலவு செய்யக் கூட பணமில்லை, அரசு நிதி நிலையும் திவால்.

மக்கள் நலத் திட்டங்களுக்கு வெட்டு, வரி உயர்வு இவற்றை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் வெடிக்கின்றன. சென்ற வாரம் திங்கள் கிழமை (நவம்பர் 11, 2013) இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் அதிபர் பிரான்சுவா ஹோலண்டை பதவி விலகக் கோரும் முழக்கங்களால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். வேலை நாட்களை நீட்டிக்கும் திட்டத்தை எதிர்த்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம், 1 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமான புதிய வரிகளால் நசுக்கப்படுவதாக சிறு வணிகர்கள் ஆர்ப்பாட்டம், விற்பனை வரி உயர்வை எதிர்த்த ஆர்ப்பாட்டம், சம்பள உயர்வு கேட்டு குழந்தைப் பேறு மருத்துவர்கள் போராட்டம் என்று போராட்டங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இதற்கிடையில் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 0.1 சதவீதம் சுருங்கியிருக்கிறது என்கின்றன புள்ளிவிபரங்கள். வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 32.9 லட்சத்தை எட்டியிருக்கிறது.

நாட்டின் பொருளாதார நிலைமையை சரி செய்ய கடன் பெற வேண்டும், கடன் பெற உலக வங்கி சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளச் சொல்லும், மக்கள் நலத் திட்டங்களை வெட்டி குறைக்கச் சொல்லும். அதைச் செய்தால் மக்கள் கிளர்ந்தெழுவார்கள். திருடனுக்கு தேள் கொட்டிய நிலை இது தான்.

முதலாளித்துவ அமைப்பு மேலும் முட்டுச் சந்துக்குள் சிக்கி விட்டது, அதை நம்பிப் பயனில்லை அதைத் தூக்கி எறியத் தான் வேண்டும். இனி மக்கள் கையில் தான் முடிவு உள்ளது.

மேலும் படிக்க

  1. முதலாளித்துவம் காலாவதியாகிவிட்டது…. மீண்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் உழைக்கும் மக்களுக்கானது என்று மக்கள் உணரத்தொடங்கி விட்டனர்.

  2. இஸ்ரேல் தற்பொழுது பிரெஞ்சு நாட்டில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளது…இதன் காரணமாக தான் ஈரானிய அணுசக்தி விவகாரத்தில் தற்பொழுது தீவிரவாத இஸ்ரேலிய அரசுக்கு பிரெஞ்சு அரசு ஆதரவாக செயல்பட்டதும், பாலஸ்தீனர்களுக்கு சொந்த நாடு திரும்ப உரிமை இல்லை என்று பிரெஞ்சு அரசு அதிகார்பபூர்வ அறிவிப்பு வெளியானதும். பாட்டாளி வர்க்க அரசுக்கு பதிலாக மறுபடியும் ஆப்பிரிக்க நாடுகளையோ அல்லது அராபிய நாடுகளையோ ஆக்கிரமித்து தாகம் தீர்க்கும்…இந்த முறை அது சிரமம் தான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க