privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா - அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள்

ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா – அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள்

-

ந்திய கடற்படையில் விக்கிரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர்க் கப்பல் கடந்த 16-ம் தேதி முறைப்படி இணைக்கப்பட்டது. பழைய ரஷ்ய போர்க் கப்பலான இது சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு (Remodel) வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இருக்க்கும் ஐ.என்.எஸ் விராட் என்ற விமானம் தாங்கி கப்பலுடன் இதுவும் இணைந்து இந்தியப் பெருங்கடலில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை கொண்ட ஒரே நாடாக இந்தியா இருக்கும்.

ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா
ரூ 15,000 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா

1987 டிசம்பரில் இயங்கத் துவங்கிய ‘கீவ்’ வகையை சேர்ந்த இந்த கப்பல் ஆரம்பத்தில் பக்கு என்ற பெயரில் இயங்கியது.  பின்னர் 1991-ல் பனிப்போர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அட்மிரல் செர்ஜேய் கோர்ஷ்கோவ் பெயர் சூட்டப்பட்டது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த கப்பலை இயக்குவதற்கு கட்டுப்படியாகவில்லை என்று ராணுவத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டது. ரஷ்யாவால் தீனி போட்டு மாளாது என்று திரும்பப் பெறப்பட்ட இந்த கப்பலை வாங்குவது என்று இந்தியா முடிவு செய்தது. இதற்கான பேச்சுவார்த்தை 1998-ல் ஆரம்பபிக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 2004 ஜனவரியில் $947 மில்லியன் டாலர் செலவில், ஒரு ஆண்டிற்குள் புதுப்பித்து தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் 2009-ல் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு கட்டணம் $2.3 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டது. விலை உயர்த்தப்பட்டது மற்றும் கால தாமதத்திற்கு முக்கிய காரணம் கேபிள் வேலைகள் அதிகமானதுதான் என்று கூறப்பட்டது.

மூன்று கால்பந்து மைதானம் அளவிற்கு பரந்து விரிந்ததாகவும், 44,400 டன் எடை, 284 மீட்டர் நீளம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போர்க் கப்பல் இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர்க் கப்பலாகும். 56 கிமீ வேகத்தில் பயணம் செய்யக் கூடிய இதில் 8 கொதிகலன்களும், 4 விசைமுடுக்கிகளும் உள்ளன. இதில் 34 விமானங்களை நிறுத்தலாம். 24 மிக்-29 ரக விமானங்களையும், 10 கமோவ்-31, கமோவ்-28 ஹெலிகாப்டர்களையும் தாங்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தயாரிப்பாக ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பல்,  கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. 500 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு என்று  திட்டமிட்டு, தற்போது ஆயுதங்களும், விமானங்களும் இல்லாமலே 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ 13,000 கோடி) செலவு ஆகும், அவை இணைக்கப்பட்டால் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ 31,000 கோடி) வரை ஆகலாம் என செலவு உயர்ந்திருக்கிறது.

இந்திய பாதுகாப்பு ஒதுக்கீடு
பழைய பண்ணையார் இங்கிலாந்தை விஞ்சவிருக்கிறது இந்திய பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு.

2013-ல் 44 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ 2.7 லட்சம் கோடி) இருக்கும் இந்திய பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு 2020-ல் 66.3 பில்லியன் டாலராக (ரூ 4.1 லட்சம் கோடி) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னாள் உலக மேலாதிக்க வல்லரசான இங்கிலாந்தின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை விட அதிகமாகும். இங்கிலாந்தின் பட்ஜெட் 2020-ல் 59.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் அதிக குழந்தைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலகவங்கி அறிக்கை தெரிவிக்கிறது. உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது, குறியீட்டு எண் 22.9-ல் இருந்து 23.7 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வணிக நலன்கள் கடலைச் சார்ந்து இருப்பதாகவும், இந்தியாவின் கடல்சார் நலன்களை பாதுகாப்பது தேசிய பாதுகாப்புக் கொள்கையின் மையமான கூறு என்று இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பாதுகாப்பது, தேசபக்தி, சீன அபாயம் என்ற பல பெயர்களில் செய்யப்படும் இந்த ஆயுதக் குவிப்புகள் இந்திய ஆளும் வர்க்கத்தின் வல்லரசு கனவுக்காகத்தானே தவிர இந்திய மக்களின் பாதுகாப்புக்காக அல்ல என்பதற்கு தினம் தினம் தமிழக மீனவர்கள் மீது சிங்கள் இராணுவம் தொடுக்கும் தாக்குதலும், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் இந்திய கடற்படையும் தான் சான்று.

ஐ.என்.எஸ். விக்ராந்த்
பல பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் கொச்சியில் கட்டப்பட்டு வரும் ஐ.என்.எஸ். விக்ராந்த்

மக்கள் மீதான் தாக்குதலை தடுக்கத் தவறும் இந்திய இராணுவம், இந்திய ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்க நலன்களுக்காக,  மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலும், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும், அமைதிப்படை என்ற பெயரில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்துவருகிறது.

இது மட்டுமல்லாமல் இந்த இராணுவ தளவாடங்கள், போராடும் மக்கள் மீதும் உபயோகப்படுத்தப்படும் என்பதற்கும் சான்று உள்ளது. கூடங்குளம் போராட்டத்திற்கு கடல் வழியாக மக்கள் திரண்ட போது அவர்களை மிரட்டுவதற்கு இந்திய கடற்படை கடல் வழியாக முற்றுகை இட்டதும், விமானப் படையினர் மிகத் தாழ்வாக பறந்து சகாயம் என்ற மீனவரை கொன்றொழித்ததும் இதற்கு  தக்க உதாரணங்களாகும்.

அமெரிக்கா தன்னுடைய கவனத்தை ஆசியா மற்றும் தெற்காசிய பகுதியில் திருப்பி சீனாவை சுற்றி வளைக்கும் தன்னுடைய திட்டத்தின் அடியாளாக இந்தியாவை பயன்படுத்த திட்டமிட்டிருப்பது குறித்தும், அமெரிக்காவின் பதிலியாக இந்தியாவை சீனாவுடன் மோத வைக்கும் திட்டம் குறித்தும், அது இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஏற்கனவே வினவில் செய்தி வெளியாயிருந்தது.  அதனுடன் இதை பொருத்தி பார்ப்பது அவசியம்.

மேலும் இந்த விமானந்தாங்கி கப்பல்கள் இராணுவ தளம் இல்லாத பகுதிகளில் தாக்குவதற்கென்றே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் இன்று அமெரிக்கா ஒற்றைத் துருவ வல்லரசாக மாறிய பிறகு அதற்கென்றே உலகின் எல்லா பகுதிகளிலும் இராணுவ தளங்கள் இருப்பதால் அதன் பயன் பெரிய அளவில் இல்லை. மேலும் முதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்டநேரம் பறக்கும் விமானங்கள் இல்லாத போது இத்தகைய விமானந் தாங்கிக் கப்பல்களுக்கு ஒரு தேவை இருந்தது. தற்போது அமெரிக்காவின் பி.52 விமானங்கள் ஒரு முறை போட்ட எரிபொருளோடு பல்லாயிரம் கிலோமீட்டர் நிற்காமல் பறக்கக் கூடியது.

எது எப்படியோ இந்தியா போன்ற நாட்டிற்கு அப்படி ஒரு கப்பல் வைத்துக் கொள்வதற்கு எந்த அவசியமும் இல்லை. இத்தகைய கப்பல் இல்லாமலே கூட பாகிஸ்தான் இந்தியா முழுவதையும் தாக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. மேலும் வல்லரசு நாடுகளில் இருக்கும் விமானந் தாங்கிக் கப்பல்களின் எடையும், போர்த்திறனும், வேகமும் நமது கப்பல்களை விட சில மடங்கு அதிகம். காயலான் கடைக்கு போக வேண்டிய திறமை படைத்த இத்தகைய விமானந் தாங்கிக் கப்பல்களால் இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று வெட்டி பந்தாவாக பேசிக் கொள்ளலாம். ஆனாலும் அதற்கென்றே சில பல ஆயிரம் கோடிகளை செலவிடுகிறார்கள்.

அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள் என்று ஒரு சொலவடை உண்டு.  ஆளும் வர்க்கத்தின் கையில் இருக்கும் இந்த ஆயுதங்கள் மக்களுக்காக அறுக்காது, மக்களைத் தான் அறுக்கும்.

மேலும் படிக்க