Thursday, May 30, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்சிவகங்கை சாராய ஆலையை எதிர்த்து பு.ஜ.தொ.மு போராட்டம்

சிவகங்கை சாராய ஆலையை எதிர்த்து பு.ஜ.தொ.மு போராட்டம்

-

மண்ணைக் கெடுத்து, மக்களை நோயாளியாக்கும் ஈ.ஐ.டி பாரி –யை இழுத்து மூடு!

சிவகங்கை சாராய ஆலையை எதிர்த்து பு.ஜ. தொ.மு போராட்டம்.

1780-ம் ஆண்டு சென்னைக்கு வந்த வேல்ஸ் நாட்டின் சாதாரண வியாபாரிகளில் ஒருவன் தாமஸ் பாரி. 1788-ம் ஆண்டு ஜூலை 17 -ம் தேதி அவன் வங்கித் தொழில் செய்யவும், பொருள்களை வாங்கி விற்கவும் தனது கடையைத் தொடங்கினான். 1819–ல் ஜான் வில்லியம் டேர் என்பவனோடு இணைந்து பாரி அண்டு டேர் எனும் கம்பெனியைத் தொடங்கினான். 1908-ல் அது ஈ.ஐ.டி பாரியாக மாற்றமடைந்தது. சென்னையில் வளர்ந்து வந்த இந்த நிறுவனம் பின்னாளில், தான் கம்பெனி நடத்திய தெருவிற்கே பாரீஸ் கார்னர் எனும் பெயர் வைக்கும் அளவிற்கு வளர்ந்தது.

1981-ல் முருகப்பா குழுமம் எனும் தமிழகத் தரகு முதலாளிகளின் கும்பல் இதோடு இணைந்தது. இந்தியாவில் ஏழு பெரிய சர்க்கரை ஆலைகள், உள்ளிட்ட பல துணைத் தொழில்களை நடத்துகிறது. உரத் தயாரிப்பு, குளியலறைச் சாதனங்கள், சர்க்கரைத் தொழில், காப்பீடு, கல்வி, மின்சாரம், மின்னணுவியல் மற்றும் வங்கி, உள்ளிட்ட துறைகளில் மக்களிடம் சுரண்டிச் சேர்த்ததையே முதலீடு செய்து இன்று பல நூறு கோடிகளை லாபமாகச் சம்பாதித்திருக்கும் ஈ.ஐ.டி பாரி இன்று ஒரு பன்னாட்டு நிறுவனம். உலகெங்கும் இதற்குத் தொழில்களும் சொத்துக்களும் உள்ளன.

1990-களிலிருந்து இதுபோன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பலகோடி ரூபாய்களுக்கான இடம், வரிச் சலுகைகள், வசதிகள், வங்கிக் கடன்கள் வழங்கி ஊக்கப்படுத்துவதை இந்திய அரசு தனது கொள்கையாகக் கொண்டதால், பல பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு வகைகளில் இந்திய வளங்களைச் சூறையாடத் தொடங்கின. நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்திய மக்களின் தொழிலும் வாழ்வும் அழிந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நாசகரமான வேலையைச் செய்கின்ற பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றுதான் ஈ.ஐ.டி பாரி.

சிவகங்கை மாவட்டம் உடைகுளம் ஆலையில், தனது மற்ற சர்க்கரை ஆலைகளில் தயாரிக்கப்படும் கரும்புச் சாற்றின் அழுக்குக் குவாலையைக் கொண்டு வந்து, அதிலிருந்து தூய சாராயத்தைத் (ஆல்கஹால்) தயாரிக்கிறது. (இந்த அழுக்கிலிருந்துதான் காஃபிபைட், கேரமில்க், எக்லர்ஸ், லேக்டோகிங் போன்ற சாக்லேட்டுகளைத் தயாரித்து விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்கிறது.) சிவகங்கையின் மிக மேடான பகுதியாகிய உடைகுளம் கண்மாய்க்கரைப்பகுதில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த சாராய ஆலை இன்று இப்பகுதியில் மிகப்பெரும் அழிவினைச் செய்து வருகிறது.

உடகுளம், செங்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுமார் 30 கிராம மக்களுக்கும் சாராயஆலை உண்டாக்கியுள்ள ஆபத்துக்கள் மிகவும் பயங்கரமானவை. துவங்கிய பத்தாண்டுகளிலேயே அதன் ஒன்பது (9) ராட்சத ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரை அதல பாதாளத்திற்கு அனுப்பி விட்டன. இதனால் சுமார் 200 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன, விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் விளை நிலங்கள் அனைத்தும் தரிசாகவதைத் தவிர வேறு வழியில்லை. இப்போதே இதை எதிர்பார்த்து ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், பிளாட் போட்டு விற்பனை செய்வதற்காக பிசாசுகளைப் போல இப்பகுதியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆலையின் ரசாயனக் கழிவுநீர் கண்மாயில் கலந்து தேங்கி நிற்கிறது. ஆலையின் உள்ளே கழிவு நீரைத் தேக்கி வைத்து, மழைக் காலங்களில் அதைக் கண்மாயில் திறந்து விடுகிறார்கள். அதைக் குடிக்கும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில இறந்தும் போயுள்ளன. நிலத்தடி நீரும் ரசாயனத் தன்மையானதாகி விட்டது. உள்ளூர்க் கிணறுகளில் தண்ணீர் அடியாழத்திற்குப் போய்விட்டது. செங்குளத்திலுள்ள வற்றாத ஊரணி இப்போது வற்றிப் போயிருக்கிறது.

நள்ளிரவில் ஆலை வெளியிடும் ரசாயன விஷப்புகையைச் சுவாசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். கர்ப்பிணிப் பெண்களின் கருவிலுள்ள சிசுவும் குழந்தைகளும் இளமையிலிருந்தே இதைச் சுவாசிப்பதால் இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதி மக்கள் அனைவருமே நிரந்தர நோயாளிகளாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று அரசும் ஓட்டுக்கட்சிகளும் புளுகினாலும், அழிவும் நோயும்தான் இந்த சாராயத் தொழிற்சாலையால் இப்பகுதி மக்களுக்குக் கிடைத்த பலன். ஆலையில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பது ப.சிதம்பர ரகசியமாக உள்ளது.

ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு ஓட்டுக்கட்சிகளிலும் உள்ள இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அதற்காக அவ்வப்போது அரசு அதிகாரிகள் வந்து விசாரிப்பது போல் “சீன்” போடுகிறார்கள், நிர்வாகத்தையும் கிராமத்தையும் வைத்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். நிர்வாகமோ, கிராமங்களிலுள்ள சிலருக்கும், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அவ்வப்போது எலும்புத் துண்டை வீசுகிறது. அவர்களும் வாலை ஆட்டிக்கொண்டே அதைக் கவ்வுகிறார்கள். இதன் மூலம் மக்களின் போராட்டத்தை முடக்க நினைக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்த சிறு சுவரொட்டியை பு.ஜ.தொ.மு. வெளியிட்டது. கிராம மக்களைச் சந்தித்துப் பேசியது. ஆனாலும் ஆலை நிர்வாகத்தின் எலும்புத் துண்டை எதிர்பார்த்திருந்த சிலரால் அது தடுக்கப்பட்டது. இப்போது செங்குளம் பகுதி மக்கள் நேரடியாக அதன் பாதிப்பை உணர்ந்துள்ளனர். அவர்கள் இப்போது ஆட்சியர் அலுவலகத்தையும் வீட்டையும் முற்றுகையிடுகின்றனர்.

இந்த ஆலையை நாம் இனியும் அனுமதிக்க முடியாது. ஆகவே, போராடியாக வேண்டும். இந்த சாராய ஆலைக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இதை மூடுவதால், ஈ.ஐ.டி பாரியோ, முருகப்பா குழும முதலாளிகளோ ஒரு மயிரையும் இழக்கப் போவதில்லை. ஆனால், தொழிலையும் வாழ்க்கையையும் இழக்கப் போவதென்னவோ நாம்தான்.

எனவே, “ஈ.ஐ.டி பாரியை இழுத்து மூடு!” என்கிற போராட்ட முழக்கத்தோடு பு.ஜ.தொ.மு களம் இறங்கியுள்ளது. மக்களிடம் ஆதரவு கோரி வருகிறது. இணையத்தில் உலவும் சிவகங்கைப் பகுதி மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்.

மக்கள் அணி திரண்டு போராடத் துவங்கிவிட்டால் அனைத்தையும் சாதிக்கமுடியும். போராடுவோம்! வெற்றிபெறுவோம்! இதைத் தவிர வேறு குறுக்குவழி ஏதும் இல்லை! எனும் அறிவிப்போடு மக்களைச் சந்தித்து வருகிறது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு
சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்கள். – நவம்பர் 2013
தொடர்புக்கு: 9443175256 – 9487407648 – 9488154962
ndlfsivaram@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க