Thursday, June 20, 2024
முகப்புஅரசியல்ஊடகம்மோடி கண்காணித்த பெண்

மோடி கண்காணித்த பெண்

-

செப்டம்பர் மாதம் திருச்சியில் நடந்த பாஜக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, “மத்திய அரசு பலவீனமாக இருப்பதால்தான், நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று பேசினார். மோடி பிரதமர் ஆனால், குடிமக்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்பதற்கான ஆதாரங்கள் மோடியின் ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்திலிருந்து வெளியாகியிருக்கின்றன.

இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜி எல் சிங்கால் என்ற ஐபிஎஸ் அதிகாரி, சி.பி.ஐ-யிடம் கொடுத்த பென் டிரைவில் அடங்கிய தொலைபேசி உரையாடல்களில் இது அடங்கியிருக்கிறது.

குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, 2009 ஆகஸ்ட் மாதம் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து கண்காணிக்கும்படி சிங்காலுக்கு உத்தரவிடுகிறார். 2003 முதல் 2010 வரை மோடியின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக, மோடியின் மூன்று தேர்தல் பிரச்சாரங்களை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த அமித் ஷா, இப்போது சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு, குஜராத்துக்குள் போகக் கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கிறார். கொலைக் குற்றம் சாட்டப்பட்டதால், குஜராத்துக்குள்தானே போக முடியாது, குஜராத்தில் செய்த வேலைகளை வேறு இடத்தில் தொடருங்கள் என்று அவரை உத்தர பிரதேசத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக அனுப்பியிருக்கிறது பாஜக.

சிங்கால்-அமித் ஷா தொலைபேசி உரையாடலை வெளியிட்ட கோப்ரா போஸ்ட்- குலேல் ஆகிய செய்தி இணைய தளங்கள் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட அந்த ‘பயங்கரமான’ பெண் யார் என்ற விபரத்தை முதலில் வெளியிடவில்லை.

“எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்று சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தையின் அறிக்கையை மோடியின் சார்பில் பாஜக வெளியிட்டது. “என் பெண்ணின் பாதுகாப்புக்காக, நான்தான் முதலமைச்சர் மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதை ஒட்டித்தான், என் மகளை பின் தொடர்வதற்கு மோடி ஏற்பாடு செய்தார்” என்கிறார் பிராண்லால் சோனி என்ற அந்த தந்தை. அதாவது, அமித்ஷா – சிங்கால் உரையாடலில் குறிப்பிடப்படும் பெண் பிராண்லால் சோனியின் மகள், அந்த கண்காணிப்புக்கு உத்தரவிட்டது நரேந்திர மோடி என்பதை பாஜக உறுதி செய்தது.

சோனி குடும்பம்
சோனி குடும்பம்

மோடியோ இதை மறுக்கவில்லை, “இது மாதிரி விஷயங்களை கிளப்பி ஆதாயம் தேட முயற்சிக்காதீர்கள். வளர்ச்சியின் அடிப்படையில் போட்டி போட வாருங்கள்” என்று மட்டும் காங்கிரசுக்கு சவால் விடுத்தார். பாஜகவோ, “எங்கள் விவகாரங்களை இது போல வெளியில் விட்டால், காங்கிரஸ் கட்சியின் இது போன்ற நிழல் உள் விவகாரங்களை நாங்கள் அம்பலப்படுத்த நேரிடும், பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று காங்கிரசை எச்சரித்தது. “நாம இரண்டு பேருமே அயோக்கியனுங்கதான்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். என் கோல்மால்கள நீ வெளியில சொல்லாதே, நான் ஒன்னைப் பத்தின விஷயங்களை அடக்கி வாசிக்கிறேன்” என்று உடன்பாடுதான் அது.

பிராண்லால் சோனியின் மகள் கட்டிடக் கலை வடிவமைப்பாளர், பெங்களூருவில் வசிப்பவர். 2005-ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நடந்த குஜராத் அரசின் வருடாந்திர குளிர்கால திருவிழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருக்கிறார். மாநில அரசுடன் எந்த அதிகாரபூர்வ உறவும் இல்லாத அவரது பெட்ரோல் செலவும், மொபைல் கட்டணமும் அரசு கணக்கில் எழுதப்பட்டிருக்கின்றன. அப்போது கட்ச் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா, ‘இந்த பெண்ணுக்கும் மோடிக்கும் இடையேயான தொடர்பு பற்றி தனக்கு தெரிந்திருந்ததால்ழி வாங்ககபடுவதாக’ இன்னொரு வழக்கில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

2010-ம் ஆண்டு காந்தி நகரில் உள்ள மாநில தலைமை செயலகத்தில் ஸ்மார்ட் கிரிட் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தம் இந்நிறுவனத்திற்கு கிடைக்கிறது. தலைமைச் செயலகத்தை நிர்வகிக்கும் பொது நிர்வாகத் துறை மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பைத் தொடர்ந்து பல முன்னணி கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டது ஈகோபிலிரியம். 2012-13ம் ஆண்டில் அதன் மொத்த வருமானம் ரூ 1.36 கோடி, லாபம் ரூ 80 லட்சம். கடந்த மே மாதம் இன்ஃப்யூஸ் கேபிடல் மற்றும் உலக வங்கியின் பிரிவான இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவை $1.5 மில்லியன் (சுமார் ரூ 9 கோடி) ஈகோபிலிரியம் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் 2009-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் இயக்குநரான பெங்களூரை சேர்ந்த பெண்ணை மோடி பின் தொடர்ந்து உளவு பார்த்ததை பார்க்க வேண்டும். இது தொடர்பாக கோப்ராபோஸ்ட் மற்றும் குலேல் இணைய தளங்கள் வெளியிட்டிருக்கும் கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்.

தன்னை குஜராத் அரசு பின் தொடர்ந்ததைப் பற்றி விசாரணை நடத்த வேண்டாம் என்று தன் மகள் விரும்புவதாக பிராண்லால் சோனி தேசிய பெண்கள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ‘சம்பந்தப்பட்ட ஆட்களே விட்டு விடச் சொல்லிட்டாங்க, இத்தோடு மேட்டரை முடித்துக் கொள்ளலாம்’ என்று மோடியும், பாஜகவும், அவரது ரசிகர் பட்டாளங்களும் கெஞ்சுகின்றன.

தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்பணி அதிகாரி பிரதீப் ஷர்மா, நரேந்திர மோடி மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

மோடி பிரதமரானால் 100 கோடி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க எத்தனை கோடி உளவுத் துறை போலீசாரை நியமிப்பார் என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.

ளியவர்களையும் பலகீனமானவர்களையும் ஓட்டுச் சீட்டுகளின் மூலம் அதிகாரத்தைப் பிடித்தவர்கள் காக்க வேண்டும் என்பது ஜனநாயக அமைப்பில் முக்கிய நியதி. எனவே தான் இந்த அமைப்பு ஒரு நிர்பயாவைக் காக்கத் தவறும் போதோ, ஒரு ஜெஸ்ஸிகாவுக்கு அநீதி இழைக்கப்படும் போதோ, நித்தாரியின் குழந்தைகள் காப்பாற்றப்படாமலிருக்கும் போதோ நம்மிடையே இருக்க கூடிய கடும் சமரசவாதி கூட தெருவிலிறங்கிப் போராடுகிறார். அதனால் தான் தில்லி கூட்டு வல்லுறவைத் தொடர்ந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களையும் உடனடி தண்டனைகளையும் கோருகிறோம். எனினும், இந்தக் கதையானது இவ்வமைப்பின் போதாமை குறித்ததோ அல்லது பாராமுகம் குறித்ததோ அல்ல. இது ஒரு மாநில அமைச்சர் தனது மாநில காவல்துறையின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பின் தொடர்ந்து அவரைத் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தது பற்றிய கதை.

பின் தொடர்பவர்கள்
பின் தொடர்பவர்கள்

இஷ்ராத் ஜஹான் போலி மோதல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் குஜராத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.எல் சிங்கால் தன்னிடமிருந்த நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை சி.பி.ஐயிடம் ஒப்படைத்துள்ளார். இந்த உரையாடற் பதிவுகள் குஜராத் காவல் துறையின் மூன்று முக்கியமான பிரிவுகளான மாநில உளவுத் துறை, தீவிரவாத தடுப்ப்புப் பிரிவு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவு ஆகியவை தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி திருமணமாகாத இளம் பெண் ஒருவரை பின் தொடர்ந்துள்ள விவரங்களை வெளிப்படுத்துகிறது. பெங்களூரைச் சேர்ந்த அப்பெண்ணின் பெற்றோர் குஜராத்தில் வசிக்கிறார்கள்.

குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ‘சாஹிப்’ என்றழைக்கப்பட்ட அவரது எஜமானருக்காக இந்தக் கண்காணிப்பு மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் நடவடிக்கைகள் மொத்தமும் 2009ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எந்தவிதமான சட்டப்பூர்வ அங்கீகாரமும் இன்றி வெறும் வாய்மொழி உத்தரவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சட்டவிரோத உளவுபார்க்கும் வேலை அமித்ஷாவின் உத்தரவின் பேரில் 2009 ஆகஸ்டு மாதம் துவங்கி பல வாரங்கள் நடந்ததாக அதில் முக்கியமாக ஈடுபட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சிங்கால் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள 267 ஒலிப்பதிவுகளில் அமித்ஷாவுக்கும் அந்த சமயத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவின் எஸ்.பியாக பொறுப்பு வகித்து வந்த சிங்காலுக்கும் இடையிலான உரையாடல்களே பிரதானமாக இடம் பெற்றுள்ளன. அரை டஜனுக்கும் மேலான உரையாடல்களில் அமித்ஷா தனது ‘சாஹிப்புக்கு’ அந்தப் பெண்ணின் மேல் விசேஷ அக்கறை இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார். அந்தப் பெண்ணைப் பற்றிய உளவுத் தகவல்களை நிமிடத்திற்கு நிமிடம் அமித் ஷா தனது சாஹிப்புக்கு தெரிவித்து வந்திருக்கிறார் என்பதை அந்த உரையாடல்களை அவதானித்தால் புரிந்து கொள்ள முடிகிறது. நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவரான அமித்ஷா, குஜராத்தின் உள்துறை அமைச்சராக 2003-லிருந்து 2010 வரை பொறுப்பு வகித்துள்ளார். அமித்ஷாவுக்கு முன் தனது முதலமைச்சர் பொறுப்போடு சேர்த்து உள் துறையை மோடியே 2001-ம் ஆண்டிலிருந்து கவனித்து வந்திருக்கிறார். 2010-ம் ஆண்டு சோராபுத்தீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அமித்ஷா, தற்போது பிணையில் வெளியே வந்து பாரதிய ஜனதாவின் உ.பி மாநில தேர்தல் பொறுப்பாளராக பதவி வகிக்கிறார்.

புலனாய்வுச் செய்தித் தளமான குலேல் மற்றும் கோப்ராபோஸ்ட்டிடம் ஒட்டு மொத்த உரையாடல் பதிவுகளும் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு சி.பி.ஐயிடம் கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம் வரையில் சிங்கால் அளித்துள்ள மூன்று வாக்குமூலங்களின் நகல்களும் கிடைத்துள்ளன. சிங்காலிடமிருந்து தொலைபேசி உரையாடல் பதிவுகளைப் பெற்றுக் கொண்ட சி.பி.ஐ, அதன் பின் தயாரித்துள்ள 10 பக்க விசாரணை அறிக்கையும் எமக்குக் கிடைத்துள்ளன. அனைத்து உரையாடல்களும் அமித்ஷாவுக்கு அந்த சமயத்தில் நெருக்கமாக இருந்த சிங்காலால் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், இஷ்ரத் ஜகான் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட பின்னரே அமித்ஷா இதைப் பற்றி வாய் திறந்து சி.பி.ஐயிடம் ஒத்துழைக்கத் துவங்கியிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நாங்கள் அவரது பெயரையோ தற்போதைய வெளிப்படுத்தப் போவதில்லை. எனினும், இந்தச் சம்பவங்களை விவரிப்பதன் பொருட்டு அவரது பெயரை நாம் ‘மாதுரி’ என்று வைத்துக் கொள்வோம்.

மாதுரியுடன் குஜராத்தைச் சேர்ந்த பிரதீப் ஷர்மா என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சட்டவிரோத கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

”2009ம் ஆண்டின் இறுதியில், நான் தீவிரவாத தடுப்புப் பிரிவின் எஸ்.பியாக நியமிக்கப்பட்டிருந்த போது, திரு அமித்ஷா என்னிடம் பவ்நகர் முனிசிபல் கமிஷனராக இருந்த பிரதீப் ஷர்மாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு பலமுறை உத்தரவிட்டிருக்கிறார். மேலும், மாதுரி என்கிற இளம் பெண்ணின் மேலும் ஒரு கண் வைத்திருக்குமாறு கேட்டிருந்தார். அமித்ஷா கேட்டுக் கொண்டபடி குற்றப்பிரிவு போலீசார் சிலரை (அப்போது தீவிரவாத தடுப்புப் பிரிவில் ஆள் பற்றாக்குறை நிலவியது) அந்தப் பணியில் ஈடுபடுத்தினேன்” சி.பி.ஐயிடம் 2013ம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று சிங்கால் அளித்திருக்கும் வாக்குமூலத்திலிருந்த சில வரிகள் இவை. இதன் நகல் ஒன்று நம்மிடம் கிடைத்துள்ளது. 2013 மே மாத இறுதி வாரத்தில் சிங்கால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2013 ஜூன் மாதம் 9ம் தேதி தன் வசமிருந்த தொலைபேசி உரையாடல் பதிவுகளை சிங்கால் சி.பி.ஐயிடம் ஒப்படைத்துள்ளார். “17.4.2013 அன்று நான் அளித்திருந்த வாக்குமூலத்தின் தொடர்ச்சியாக, நான் இன்று பின்வருவனவற்றை உங்களிடம் ஒப்படைத்துள்ளதாக அறிவிக்கிறேன் : 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் (04.08.2009 துவங்கி 10.09.2009 முடிய) எனக்கும் திரு அமித்ஷாவுக்கும் இடையேயான உரையாடல்களைப் பிரதானமாகவும் மற்றும் எனக்கும் திரு ஏ.கே ஷர்மாவுக்குமிடையிலான உரையாடல்கள் சிலவும் மேலும் எனக்கும் திரு வைஷ்ணவ் (டெபுடி எஸ்.பி சி.ஐ.டி உளவுப்பிரிவு) அவர்களுக்குமிடையேயான உரையாடல்கள் சிலவும் மேலும் எனக்கும் திரு ராஜேந்திர அசாரி (பாவ்நகர் எஸ்.பி) அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் சிலவும் கொண்ட, மொத்தம் 267 உரையாடல் பதிவுகள் சேமிக்கப்பட்ட பென் டிரைவை ஒப்படைக்கிறேன். இந்த உரையாடல்கள் மாதுரி என்கிற இளம் பெண்ணையும் திரு பிரதீப் ஷர்மாவையும் வேவு பார்த்தல் தொடர்பானது”

ஜூலை 9 2013ல், சி.பி.ஐ தயாரித்துள்ள விசாரணை அறிக்கையின் 8-ம் பக்கத்தின் இறுதிப் பத்தியில் காணப்படுவது : “மேற்கண்ட கோப்புகளில் தனக்கும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த திரு அமித்ஷாவுக்கும் இடையே 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அநீதியான முறையில் சட்ட்த்திற்கப்பாற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நடந்த உரையாடல் பதிவுகள் இடம் பெற்றுள்ளதாக திரு ஜி.எல். சிங்கால் தெரிவித்துள்ளார்” சிங்காலின் வாக்குமூலங்களும் தொலை பேசி உரையாடல் பதிவுகளும் தற்போது இஷ்ராத் ஜஹான் போலி மோதல் கொலை வழக்கின் ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவுகள் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேல் குஜராத் மாநில போலீசார் தமது வரம்பற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மாதுரியின் ஒவ்வொரு தனிப்பட்ட அசைவுகளையும், ஒவ்வொரு தனிப்பட்ட உரையாடல்களையும் தினசரி நடமாட்டங்களையும் வேவு பார்த்துள்ளதை உறுதி செய்கின்றன. இந்த உளவு நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் வாய்மொழி உத்தரவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் சிங்கால் சி.பி.ஐயிடம் தெரிவித்துள்ளார். ஷாப்பிங் மால்கள், உணவு விடுதிகள், ஐஸ்க்ரீம் பார்லர், உடற்பயிற்சிக் கூடம், திரையரங்கம், ஓட்டல்கள், விமான நிலையம் என்று மாதுரி சென்ற அனைத்து இடங்களிலும் விடாமல் பின் தொடரப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரைச் சந்திக்கச் சென்ற போதும் கூட வேவு பார்க்கப்பட்டுள்ளார். அவர் அகமதாபாதிலிருந்து விமானப் பயணம் மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் கூட அவரது நடவடிக்கைகளை நெருக்கமாக கண்காணிக்க விமானத்திலேயே போலீசு ஒற்றர்களை அனுப்பியுள்ளனர். அவரைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பவர்களின் விவரங்களைத் தோண்டித் துருவியிருக்கிறார்கள்.

மாதுரி சந்திக்கும் ஆண்கள் பற்றிய தகவல்களை அமித்ஷா அக்கறையுடன் விசாரித்ததோடு, அந்த நபருடன் அகமதாபாத் ஓட்டலில் அவர் தனியே தங்கியிருக்கிறாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். மாதுரியின் தொலைபேசி மட்டுமின்றி அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தகவலும் நேரலையாக அமித்ஷாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது; தான் அதே தகவல்களை தனது ‘சாஹிபுக்கு’ தெரியப்படுத்திக் கொண்டிருப்ப்பதாக அமித்ஷா தெரிவிக்கிறார். இந்த உரையாடல்களைக் கேட்கும் போது அமித்ஷா குறிப்பிடும் ‘சாஹிப்’ யார் என்பதைக் குறித்து நமக்கு எந்த சந்தேகமும் எழவில்லை.

குஜராத் மாநில காவல்துறையின் உயரதிகாரிகள் பலரையும் தனிப்பட்ட முறையில் ஈடுபத்தும் அளவுக்கு ஒரு பெண்ணின் தனிப்பட்ட அசைவுகளை வேவு பார்க்கும் இந்த உளவு வேலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. தீவிரவாத தடுப்புப் பிரிவின் எஸ்.பியாக இருந்த சிங்கால் தவிர்த்து, உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த ஏ.கே ஷர்மா, சி.ஐ.டியின் துணை எஸ்.பியான டி.பி வைஷ்ணவ் மற்றும் குற்றப் பிரிவின் துணை கமிஷனர் அபய் சுதாசாமா உள்ளிட்ட முக்கியமான உயரதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசின் இணை கமிஷனராக ஷர்மா பொறுப்பில் இருக்கிறார். சோராபுத்தீன் போலி மோதல் கொலை வழக்கில் சுதாசாமா கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்; வைஷ்ணவ் ஓய்வு பெற்றுள்ளார்.

அமித் ஷா
உளவு பர்க்கும் அமித் ஷா

சி.பிஐ வசமுள்ள தொலைபேசி உரையாடல் பதிவுகளில் சிங்காலுக்கும் அமித்ஷாவுக்குமான உரையாடல்களே பிரதானமாக இடம்பெற்றுள்ளன. ஒரு சில உரையாடல்கள் சிங்காலுக்கும் மற்ற போலீஸ் உயரதிகாரிகளான ஷர்மா, வைஷ்ணவ் மற்றும் அப்போதைய பாவ்நகர் எஸ்.பி ராஜேந்திரா அஸாரிக்கும் இடையில் நடைபெற்றுள்ளன. இவையனைத்தும் ஆகஸ்ட் 4, 2009 மற்றும் செப்டம்பர் 6, 2009-க்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்காலால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த உரையாடலின் பல இடங்களில், சிங்காலின் ஆட்கள் சரியாக வேலை பார்க்கவில்லையென்றும், ‘சாஹேப்’ தனது சொந்த முறையில் நியமித்துள்ள தனியார் உளவாளிகளிடமிருந்து சீக்கிரமாக தகவல்கள் சென்று விடுகின்றன என்றும், அவரது தனியார் உளவு மற்றும் தகவல் வலைப்பின்னல் போலீசை விட வேகமாக இருப்பதாகவும் அமித்ஷா சிங்காலிடம் கடிந்து கொள்கிறார்.

உதாரணமாக, ஆகஸ்டு 9 அன்று அமித்ஷா அலறிப் புடைத்துக் கொண்டு சிங்காலை அழைக்கிறார், “ நான் சாஹிப்பிடம் பேசினேன்; அவர்கள் இரண்டு முறை வெளியே சென்றிருக்கிறார்கள் என்ற தகவல் எவர் மூலமாகவோ அவருக்குக் கிடைத்திருக்கிறது. நமது ஆட்கள் சரியாக கண்காணிக்கவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் இன்னும் அங்கேயே இருக்கிறார்கள். அவர்கள் ஷாப்பிங் போய் விட்டு அவளைப் பார்க்க வந்த பையனுடன் வெளியே போயிருக்கிறார்கள்”
சிறிது நேரத்தில் ஷா மீண்டும் சிங்காலை அழைக்கிறார், “இன்று அவர்கள் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடப் போகிறார்கள். சாஹிப்புக்கு இது பற்றி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவள் வெளியாருடன் செல்வதால் கவனமாக கண்காணிக்கணும். அந்தப் பையன் தான் இவளைப் பார்க்க வருகிறான். கவனமா இருங்க. விஷயம் என்னன்னா, சாஹிப்புக்கு எல்லா தகவலும் வந்திடுது. நாம் எங்காவது ஓட்டை விட்டோம்னா அவர்ட்ட மாட்டிக்குவோம்”

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் ஷர்மாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு அவர் மாதுரியைச் சந்திக்கிறாரா என்பதையும் கண்காணிக்கச் சொல்லி அமித்ஷா உத்தரவிட்டுள்ளதை தொலைபேசி உரையாடல்கள் உணர்த்துகின்றன – இதை சி.பி.ஐயிடம் சிங்கால் ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வாறான உரையாடல் பதிவுகள் இருப்பதை அறியாத பிரதீப் ஷர்மா, மே 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சுயேச்சையான ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். குஜராத் அரசு தன்னை போலியான ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்க வைத்துள்ளதாகவும் அதற்கு ஒரு இளம்பெண்ணோடு முதலமைச்சர் மோடிக்கு இருக்கும் தொடர்பு தான் காரணமென்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அமித்ஷாவின் உத்தரவின் பேரில் சிங்காலின் ஆட்களால் கண்காணிக்கப்பட்ட பெண்ணின் பெயரும் ஷர்மாவின் உச்சநீதிமன்ற மனுவில் சொல்லப்பட்டுள்ள பெண்ணின் பெயரும் ஒன்று தான் என்பது தற்போது கிடைத்துள்ள உரையாடல் பதிவுகளின் மூலம் உறுதிப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உரையாடலின் பல இடங்களில் அமித்ஷாவும் சிங்காலும் அந்தப் பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.

மோடி
உளவு பார்க்கும் மோடி

இந்தப் பெயர்களின் ஒற்றுமை தற்செயல்தானா அல்லது நாம் காண்பதற்கும் அப்பால் வேறு ஏதேனும் உள்ளதா?

மாதுரியைச் சந்திக்கும் நபரை சிறையில் தள்ளுமாறு சிங்காலிடம் அமித்ஷா உத்தரவிடுவது குறிப்பிட்ட உரையாடல் பதிவொன்றில் இடம் பெற்றுள்ளது. ஷா அந்த மனிதரைச் சிறையில் வைக்கச் சொல்லும் கால அளவு தற்போது போலி மோதல் கொலைகளுக்காக 2007-ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.ஐ.ஜி வன்சாரா சிறையில் கழித்த காலத்தை விட அதிகமானது. ஷாவுக்கும் சிங்காலுக்கும் இந்த உரையாடல் நடந்த கால கட்ட்த்திலேயே வன்சாரா இரண்டு வருடங்களைச் சிறையில் கழித்திருந்தார். இதில் குறிப்பிடத் தக்க்கது என்னவென்றால், இந்த உளவு நடவடிக்கைகள் நடந்ததற்கு மூன்று மாதங்களுக்குள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 2010-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியின் அகால நேரத்தில் ப்ரதீப் ஷர்மா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தற்போது அம்பலமாகியிருக்கும் சிங்கால்-ஷா உரையாடல் பதிவுகள் பல அசௌகரியமான கேள்விகளை எழுப்புகின்றன. மாதுரியைக் கண்காணிக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது, ஏன் இருந்தது? ஏன் மாதுரியும் ஷர்மாவும் ஒரே நேரத்தில் வேவு பார்க்கப்பட்டார்கள்? இந்த உளவு நடவடிக்கைகள் நடந்து மூன்றே மாதங்களில் பிரதீப் ஷர்மா ஊழல் புகாரின் கீழ் கைது செய்யப்பட்டது வெறும் தற்செயல் தானா?

மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டிய தீவிரவாத தடுப்பு பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவு போலீசார், சட்டம் ஒழுங்கிற்கு எந்த குந்தகமும் விளைவிக்காத – எந்த வழக்கிலும் தேடப்படாத இளம் பெண் ஒருவரை வேவு பார்க்க வேண்டிய காரணம் என்ன? தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் சட்ட விரோதமான முறையில் அத்துமீறி நுழையும் நடவடிக்கையை அதில் ஈடுபட்ட அதிகாரிகள் ஒருவரும் ஆட்சேபிக்கவில்லை. ஒட்டு மொத்த உளவு நடவடிக்கையும் சட்ட விரோதமானது தான் என்று சிங்கால் சி.பி.ஐயிடம் ஒப்புக் கொண்டிருப்பது கவனத்திற்குரியது. ஷாவின் ’சாஹேப்’ பற்றிய விளக்கங்களே சிங்கால் போன்ற உயரதிகாரிகள் மந்தைகளைப் போல் பின் தொடரப் போதுமானது. எனில், யார் அந்த சாஹேப்? அவரது உள்நோக்கம் என்னவென்பதே கேள்வி.

பல்வேறு முக்கியமான வழக்குகளில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் அத்துமீறப்பட்டிருப்பதை இந்த ஒலிப் பதிவுகள் உணர்த்துகின்றன. எந்த விதமான சட்டப்பூர்வ உத்தரவுகளோ எழுத்துப்பூர்வ வேண்டுகோளோ இன்றி குஜராத் போலீசுக்கு உதவியிருக்கும் தொலைபேசி நிறுவனங்களும் சந்தேக வளையத்தில் வருகிறார்கள்.

தனது அறிக்கையில், ஷாவைப் போன்ற அரசியல்வாதிகளைக் குற்றம் சாட்டும் சிங்கால், தனது குற்றங்களையும் ஒப்புக் கொள்கிறார். இஷ்ராத் ஜகான் மற்றும் மூவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கு ஏற்பாடு செய்ததில் தனக்குள்ள பங்கை ஒப்புக் கொள்கிறார். இஷ்ராத் ஜகான் கொலையில் தமது பங்கு மறைக்கப்படும் என்கிற உறுதியை “சஃபேதும்” ”காலியும்” வழங்கியுள்ளதாக வன்சாரா தன்னிடம் தெரிவித்ததாக சொல்கிறார் சிங்கால். சஃபேது மற்றும் காலி என்கிற புனைப்பெயர்கள் முறையே மோடி மற்றும் அமித்ஷாவைக் குறிப்பதற்காக வன்சாரா பயன்படுத்தியுள்ளார் என்கிற குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட வேண்டியதாகும்.

சுமார் 70 நிமிடங்களுக்கு ஓடக்கூடிய உரையாடல் ஒலிப்பதிவு ஒன்றையும் சி.பி.ஐயிடம் கையளித்துள்ளார் சிங்கால். குஜராத் மாநில அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதியும் மோடியின் அமைச்சரவையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களான ப்ரதாப்சிங் ஜடேஜா(சட்டத்துறை அமைச்சர்) மற்றும் பிரஃபுல் பட்டேல் (உள்துறை) ஆகியோர் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னால் கேபினெட் அமைச்சர் பூபேந்தர் சுதாசாமாவும் கலந்து கொண்ட்டிருக்கிறார். மேற்படி கூட்டத்தில் இஷ்ராத் ஜஹான் வழக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் சிங்காலையும் அவரது சகாக்களையும் தப்புவிக்க மாநில அரசின் சார்பில் எல்லாவித சட்ட ரீதியிலான உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் மாநில உயரதிகாரிகளான ஜி.சி முர்மு (முதல்வரின் செயலாளர்), பி.பி பாண்டே (இஷ்ராத் வழக்கில் முக்கிய அக்யூஸ்டான இவர் போலீசின் துணை டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்தவர்), ஏ.கே ஷர்மா (அகமதாபாத் இணை கமிஷனர்) மற்றும் சிங்கால் ஆகியோருக்கு விலையுயர்ந்த என்க்ரிப்டட் செல்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான இந்த தொலைபேசி லைனில் பல்வேறு என்கவுண்டர் வழக்குகளைக் கையாள்வது பற்றிய விவாதங்கள் நடந்துள்ளன.

சோராப்புத்தீன் போலி மோதல் கொலை வழக்கில் ஷாவுக்கு எதிரான சாட்சிகள் இருவரை மிரட்ட தான் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் சிங்கால் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகரும் முன்னால் அமைச்சருமான பூபேந்தர்சிங் சுதாசாமாவின் முன்னிலையிலேயே அவ்விரு சாட்சிகளும் மிரட்டப்பட்டுள்ளனர். “திரு பூபேந்தர்சிங் சுதாசாமா அவர்கள் முதல்வர் உங்கள் இருவரையும் பிறழ் சாட்சிகளாக மாற வேண்டுமென்றும் அதற்கு பதிலாக தேவைப்படும் பாதுகாப்பை தானே தருவதாகவும் சொல்லியிருக்கிறார்” என்று சி.பி.ஐயிடம் 2013ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் சிங்கால் அளித்த வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது.

ஷா மற்றும் சுதாசாமா போன்றோர் தொடர்ச்சியாக தங்களது செயல்களுக்கு மோடியின் ஆசீர்வாதம் உண்டு என்பதை திரும்பத் திரும்ப உறுயளித்ததன் விளைவாக சிங்கால் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ”நான் சட்டத்தின் நடவடிக்கைகளை பாதிக்கக் கூடிய சில நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்பட்டேன் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். சட்டவிரோதமான, அறமற்ற இந்த செயல்களைச் செய்ய நான் மறுக்கவில்லை. ஏனென்றால் இந்த விவகாரத்தில் நான் கடும் அழுத்தத்தில் இருந்தேன். மேலும் நான் மற்றும் எனது சக அதிகாரிகள், எமது செயல்களின் விளைவுகளில் இருந்து அமித்ஷாவாலும் முதல்வராலும் காப்பாற்றப்படுவோம் என்று அமித்ஷாவால் உறுதியாக நம்ப வைக்கப்பட்டோம்” என்று சி.பி.ஐயிடம் குறிப்பிட்டுள்ளார் சிங்கால். இந்த சமயத்தில் குலேல் மற்றும் கோப்ராபோஸ்டிடம் இந்த குற்றச்சாட்டுகளை சுயேச்சையான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை.

சிங்காலின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் நிற்குமோ நிற்காதோ – என்றாலும் இவை மோடி அரசின் குலைநடுங்க வைக்கும் செயல்பாட்டு முறைகளை வெளிப்படுத்துகிறது. மோடியின் பெயரால் அமித்ஷா இடும் கட்டளைகளை நிறைவேற்றவும் எல்லா வித சட்டவிரோதச் செயல்களைச் செய்யவும் சிங்கால் போன்ற அதிகாரிகள் தயாராகவே இருக்கிறார்கள். இவையெல்லாம் மோடிக்குத் தெரியாமலா நடந்திருக்கும்? மாதுரி மட்டும் தான் சட்டவிரோத இரகசியக் கண்காணிப்புக்கு உள்ளானவரா? இன்னும் அரசியல் எதிரிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்சிகள், காவல்துறை அதிகாரிகள் என்று எத்தனை பேர் இது போன்ற கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தனர்? ஷாவுடனான உரையாடலை ஒருமாத காலத்திற்கு மட்டும் சிங்கால் பதிவு செய்திருப்பது ஏன்? அந்தப் பெண்ணைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?

இது உள்வட்டங்களில் இருந்து தான் வெளிப்பட்டாக வேண்டும். சிங்கால் அதை ஒரு சிறிதளவுக்கு உடைத்திருக்கிறார். ஒருவேளை பல ஆண்டுகளாக குஜராத்தில் நடந்து வரும் சட்டவிரோத உளவு நடவடிக்கைகள் முழுவதுமாக வெளிப்படாமலே கூட போகலாம்.

மூலக் கட்டுரை: நன்றி கோப்ரா போஸ்ட் – குலேல்

தமிழாக்கம் : தமிழரசன்

மேலும் படிக்க

  1. பங்காரு லக்ஷ்மண், யெடியூரப்பா, கட் காரி, இப்போது மோடி! இந்த வரிசையில் இன்னும் எத்தனை கேடிகளோ! இந்த லட்ஷணத்தில் ஊழலை ஓழிக்க கிளம்பி விட்டார்கள்! காங்கிரசைபோலவே பினாமிகளைக்கொண்டு ஊழல் செய்யும் இவர்கள், காங்கிரசுக்கு தாங்களே சரியான மாற்று என் கிரார்கள்! ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்! என்ன செய்வது, மக்களை திசை திருப்பவே மதவாதம் என்ற போர்வை! எல்லாவற்றிற்கும் பின்னணியில் பார்ப்பன அரசியல்! பார்ப்பன ஆதிக்க கும்பலால், கடிவாளம் இடப்பட்ட, நொண்டியடிக்கும் ஜனனாயகம் ! பலே!பலே!

  2. ஆஹா..இதுதான் உளவு பார்க்கும் படமா? இப்படித்தான் உளவு பார்ப்பாங்கலா? சூப்பருய்யா..!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க